Thursday, May 7, 2020

திருப்பாத தரிசனம் - 32


திருமறைக்காடு (வேதாரண்யம்) – ஸ்ரீரத்ன சிம்மாசன ஹம்ஸ நடன 

புவனி விடங்கர் _-2






இத்தலத்தின் மற்றொரு பதிவைக் காண இங்கு செல்லவும் :  திருமறைக்காடு- 1   


தல புராண வரலாறு:  ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து, இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் தொடங்குவதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்று உணர்ந்த வேதங்கள், கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக, ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலுக்குள் சென்று வந்தனர்.




ஒருமுறை, திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டுக்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விவரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்ததாகக்  கூறினர். இந்நிலையை போக்குவதற்காக சம்பந்தப்பெருமான்  வேண்டுதற்படி  அப்பர்   கதவம்   திறப்பிற்பதற்காக



 என்று பாடத்தொடங்கி பதிகமாகத் தொடர்ந்தது. இறுதிப் பாடலில்  அப்பர் இறைவனை ’இரக்கமொன்றிலீர்’ என்று ஊடல் கொள்ள இனியும் சோதித்தல் தகாது என்று கதவை திறக்க செய்தார். திறந்த கதவை மூடவேண்டும் அல்லவா? திருஞானசம்பந்தர்  

 என்று ஒரு பாடல் பாடியவுடன்  

திருக்கதவம் சார்த்திக்கொண்டது. இவ்வாறு தமிழால் பாடி கதவை திறக்கவும், மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு. அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி, இத்தலத்தில் பிரம்மோற்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.



புனலில் ஏடெதிர் செல்லென செல்லுமே புத்தனார் தலை தத்தெனத் தத்துமே
கனலில் ஏடிடப் பச்சென்று இருக்குமே கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே
பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே பழைய என்பு பொற்பாவை யதாக்குமே
சிவனராவிடம் தீரென தீருமே செய்ய சம்பந்தர் செந்தமிழ் பாடலே

தலை கொள் நஞ்சமு தாக விளையுமே; தழல்கொள் நிறு தடாகமதாகுமே
கொலை செய் ஆனை குனிந்து பணியுமே; கோள ராவின் கொடு விடம் தீருமே;
கலை கொள் வேத வனப்பதி தன்னிலே கதவு தானும் கடுகத்திறக்குமே;
அலை கொள்வாரியிற் கல்லும் மிதக்குமே அப்பர் போற்றும் அருந்தமிழ் பாடலே.

வெங் கரா வுண்ட பிள்ளையை நல்குமே; வெள்ளை யானையின் மீதேறிச்  செல்லுமே:
மங்கை பாகனை தூது நடத்துமே; மருவியாறு  வழிவிட்டு நிற்குமே:
செங்கலாவது தங்கமதாக்குமே; திகழும் ஆற்றிட்டு செம்பொன் எடுக்குமே;
துங்க வன் பரி சேரர்க்கு நல்குமே ; துய்ய நாவலூரர்ச் சுந்தரர் பாடலே

பெருகும் வைகைதனையடைப் பிக்குமே ;பிரம்படிக்கும் பிரானடி கன்றுமே;
நரியெலாம் பரியாக நடத்துமே; நாடி மூகைதனை பேசுவிக்குமே;
பரிவிற் பிட்டுக்கு மண் சுமப்பிக்குமே; பரமன் ஏடெழுத கோவை பாடுமே;
வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே; வாதவூரர் வழங்கிய பாடலே - என்ற இப்பாடல்கள் எம்பெருமானின் அருளால் நால்வர்கள்  பதிகம் பாடி சப்த விடங்கத்தலங்களிலும் மற்ற தலங்களிலும்  செய்த அற்புதங்களைப் பட்டியலிடுகின்றது.

இத்தலத்தில்தான், திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடி அருளினார்.
சம்பந்தர் வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த அரசன் நெடுமாறன், சைவ சமயத்தை விட்டு விலகி சமண மதத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்தான். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று பாண்டிய நாட்டு மக்களும் சமண மதத்தை சார்ந்து வாழ்ந்து வந்தனர். அவன் மனைவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். மன்னர் சமண மதத்தை ஆதரித்து சைவத்தை புறக்கணிப்பது குறித்து கவலைப்பட்ட அரசி, அமைச்சருடன் கலந்து ஆலோசித்தார்.

சம்பந்தரைப் பற்றி விவரம் அறிந்திருந்த அமைச்சர், அரசியிடம் அவர் பற்றி எடுத்துச் சொல்ல, திருமறைக்காட்டில் தங்கியிருந்த சம்பந்தருக்குப் பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி, பாண்டிய நாடு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் சொல்லிவிட்டுப்போக சம்பந்தர் வந்தார். சமணர்களால் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாகியிருந்த அப்பர் பெருமான், சம்பந்தரிடம் மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும், தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்றும் சொல்லி அவரை மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அப்போது சிவபெருமான் அடியார்களுக்கு நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று சம்பந்தப்பெருமான் பாடிய பதிகம் தான் கோளறு பதிகம், பின்னர் மதுரை சென்று திருஆலவாயான் அருளால் திருநீற்றுப் பதிகம் பாடி அரசனது வெப்பு நோயையும் தீர்த்து கூன் பாண்டியனாக இருந்தவனை நின்ற சீர் நெடுமாறனாக்கி, அவனை சைவனாக்கினார். சமணர்களை அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் வென்று சைவ சமயத்தின் பெருமையை நிலை நாட்டினார்.

இத்தலத்தில் தினசரி ஆறுகால பூசை நடைபெறுகின்றது. நித்திய பூசை வேதாரண்யேச்வரரிடமிருந்தே தொடங்குகிறது. பின்னர் புவனி விடங்கருக்கும், பிற தெய்வங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும், அம்பாளுக்கும், நிறைவாக வீரஹத்தி விநாயகருக்கும் பூசைகள் நடைபெறுகின்றன.  பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள புவனி விடங்க லிங்கத்திற்கு  காலை சந்தி மற்றும் சாயரட்சை ஆகிய இரு வேளைகளில் மட்டும் நைவேத்தியத்துடன் அபிஷேக ஆராதனை நடைபெறுகின்றது.




இனி இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி காணலாம். சித்திரை மாதப்பிறப்பன்று புவனி விடங்கருக்கு அபிஷேகம். சித்திரை பரணியன்று சிறுத்தொண்ட நாயனாரிடம் பிள்ளைக் கறி கேட்ட பிக்ஷாடணர் விதி உலா. சித்திரை வளர்பிறை சப்தமி மணக்கோல விழா அன்று அகத்தியன் பள்ளியிலிருந்து அகத்தியர் திருமறைக்காடு எழுந்தருளி சிவசக்தியின் மணக்கோலம் கண்டருளுகின்றார். சதயத்தன்று திருநாவுக்கரசர் குருபூசை அர்த்தமண்டபத்தில் அப்பர் பெருமானை இரவு முழுவதும் வைத்திருக்கின்றனர். வைகாசியில் பத்து நாள் வசந்த விழா கல்யாண சுந்தர்ர் மாலை பிரகார வலம் வந்தருளுகின்றார். பத்தாம் நாள் தீர்த்தவாரியின் போது ந்ந்திக்கு ஏற்பட்ட மீன் சாபத்தை போக்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. வைகாசி மூலத்தன்று சம்பந்தர் திருக்கல்யாணமும் சிவசோதியில் கலக்கும் நிகழ்வும் நடைபெறுகின்றது.

ஆனி மாதத்தில் மாணிக்க வாசகர் குரு பூசை நடராசர் சன்னதியில் நடைபெறுகின்றது. ஆனி உத்திரத்தன்று சிவகாமியம்மையுடன் நடராசர் திருவீதியுலா. ஊடல் உற்சவம். ஆடிப்பூரத்தை ஒட்டி அம்பாள் உற்சவம் கொடியேற்றத்துடன் நடைபெறுகின்றது. தினமும் காலையும் மாலையும் அம்பாள் கணபதியுடன் திருவீதி வலம் வந்தருளுகின்றாள். காலை புறப்பாடு கேடயத்திலும், மாலை காமதேனு, அன்ன வாகனம், இந்திர விமானம், பூத வாகனம், சிம்ம்ம், யானை, ரிஷபம், கைலாச வாகனம் முதலிய வாகனங்களில் எழுந்தருளுகின்றாள். ஒன்பதாம் நாள் இரதோற்சவம். பத்தாம் நாள் இரவு ஆடிப்பூரத்தன்று இரண்டாம் காலத்தில் தோஷம் கழிப்பு, புஷ்பப் பல்லக்கு.  ஆடி சுவாதியன்று சுந்தரரும், சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் ஏகும் விழா.

ஆவணியில் வீரஹத்தி விநாயகருக்கு கொடியேற்றத்துடன் பத்து நாள் உற்சவம். ஆவணி மூலத்தன்று புட்டுத்திருவிழா கல்யாண சுந்தரர் மாணிக்கவாசகருக்கு அருளுகின்றார். புரட்டாசி பௌர்ணமியன்று சாயரட்சையில் தியாகேசருக்கு தேவேந்திர ஆராதனை. நவராத்திரியில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், கொலுக்காட்சி தருகின்றாள் அம்பிகை. விஜயதசமியன்று அம்பு போடல்.

ஐப்பசி முதல் நாளன்று தியாகருக்கு சிறப்பு அபிஷேகம். பௌர்ணமியன்று உச்சி காலத்தில் அன்னாபிஷேகம். கந்தர் சஷ்டித் திருவிழா. கார்த்திகை சோமவாரத்தன்று சாயரட்சையில் 1008 சங்காபிஷேகம். திருக்கார்த்திகையன்று சொக்கப்பனை. மார்கழியில் திருவெம்பாவை உற்சவம் திருவாதிரையன்று நடராசர் திருவீதி வலம் வந்தருளுகின்றார். மார்கழி வியதியபாதத்தன்று இத்தல வரலாற்றை அடிப்படையாக்க் கொண்ட நான்கு வேதங்களுக்கு  காட்சி அளிக்கும் விழா.

தை மாதசங்கராந்தியன்று புவனி விடங்கருக்கு அபிஷேகம். மாட்டுப் பொங்கலன்று அம்பாள் மணிகர்ணிகையில் தீர்த்தவாரி. மட விளாகம் உலா.   தைப்பூசத்தன்று  வீரஹத்தி விநாயகர்  தேவாமிர்த தீர்த்தவாரி. பிரம்மோற்சவ பத்திரிக்கை சுவாமி சன்னதியில் வாசிக்கப்பெறுகின்றது. சுந்தரர் அகத்தியன் பள்ளி எழுந்தருளி அகத்தியரை வெற்றிலை பாக்குடன் பிரம்மோற்சவத்திற்கு அழைத்து விட்டு வருவார்.

மாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் திருக்கதவம் திறக்கவும், அடைக்கவும் செய்த விழா. அர்த்தநாரீசுவரர், காட்சி கொடுத்த நாயகர், சந்திர சேகரர், புவனி விடங்கர் ஒவ்வொரு நாளும் திருவீதி வலம் வந்து thiஅருளுகின்றனர். இத்திருவிழாவின் போது சந்திரசேகரர்  கோடியக்காடு  மோடி மண்டபம்  சென்று வருகின்றார். புவனி விடங்கர் ஹம்ஸபாத நடன தரிசனம் தந்தருளுகின்றார். மஹா சிவராத்திரியன்று நான்காம் காலத்தில் கண்ணப்பருக்கு அனுக்கிரகம் அளித்தல். வில்வ மரத்தில் இருந்து இறைவனை மிருகங்கள் கொல்லுமோ என்று கண் விழித்து காத்திருந்து வில்வ தளங்களை பறித்து போட்டுக்கொண்டிருந்த கண்ணப்பருக்கு இறைவன் அருட்காட்சி அருளுகின்றார். பங்குனி உத்திரத்தன்று கங்கைக்கு பாவ விமோசனம் நல்கிய விழா. அன்றைய தினம் மணிகர்ணிகையில் கங்கை எழுந்தருளுவதாக ஐதீகம். கங்கைக்கு சிவப்பு வஸ்திரம், திருமாங்கல்யம் சமர்ப்பித்து பாவ விமோசனம் அருளுகின்றார் பெருமான்.

திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, மன்னார்குடி மதிலழகு, வேதாரண்யம் விளக்கழகு என்றபடி, எலி அறியாமலே விளக்கைத் தூண்டி மறு பிறவியில் மன்னனாகும் பேறு பெற்றதால், இத்தலத்தில் விளக்கேற்றம் மிகவும் சிறப்பு. மூலவர் சன்னதியில் இறைவனை நோக்கி செல்லும் ஒவ்வொரு படி நிலையிலும் அடுக்கடுக்காக மாடங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல் மாடம் தொடங்கி, இறுதி மாடம் வரை செல்ல செல்ல அகலம் குறைந்து ஒவ்வொரு விளிம்பும் மற்றொன்றின் தொடக்கமாக அமைந்துள்ளது. தை அமாவாசையன்று இத்தலத்தில் இலட்ச தீபம் ஏற்றப்படுகின்றது. மேலும் திருக்கார்த்திகை, தீபாவளியன்றும் மாடம் முழுவதும் தீபமேற்றப்படுகின்றது.

புயல் காலத்தில் அனைவருக்கும் அபயம் அளிக்கும் பிரம்மாண்ட ஆலயமாக திருமறைக்காடர் ஆலயம் அமைந்துள்ளது. அடியோங்களுக்கு அன்னம் பாலித்த பெருமான் இவர். அக்கதையை பின்னர் வரும் ஒரு பகுதியில் காணலாம். உப்பு சத்தியாகிரகம் தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் நடந்தது. வேதாரண்யம் உப்பிற்கும், புகையிலைக்கும் புகழ் பெற்றது. திருமறைக் காட்டில் ஹம்ஸபாத நடன புவனி விடங்கரின் தரிசனம் பெற்றோம் அடுத்து குக்குட நடன திருக்காறாயில் ஆதி விடங்கரை தரிசிக்கலாம் அன்பர்களே.



திருப்பாத தரிசனம் தொடரும் . . . . .

4 comments:

கோமதி அரசு said...

திருமறைக் காட்டின் சிறப்பும், அப்பர், சம்பந்தர் கதவை மூடியும் திறந்தும் அற்புதம் நிகழத்திய பாடல்கள், கோவிலின் சிறப்புகள், அங்கு நடக்கும் விழாக்கள் எல்லாம் மிக விரிவாக சொன்ன பதிவு அருமை.

கோவிலை பல ஆண்டுகளுக்கு முன் பார்த்து இருக்கிறேன்.
மீண்டும் உங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்தேன்.

கோமதி அரசு said...

புவனி விடங்கர் தரிசனத்திற்கு நன்றி.

S.Muruganandam said...

//கோவிலை பல ஆண்டுகளுக்கு முன் பார்த்து இருக்கிறேன்.
மீண்டும் உங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்தேன்.//

எல்லாம் அவன் அருள் அம்மா.

S.Muruganandam said...


//புவனி விடங்கர் தரிசனத்திற்கு நன்றி.//

சப்த விடங்கர்களின் தரிசனத்தைத் அடுத்து தொண்டை மண்டல உப விடங்கர்களின் தரிசனமும் உள்ளது. தொடர்ந்து வந்து தரிசியுங்கள் அம்மா.