திருக்காறாயில் (திருக்காரவாசல்)
– ஸ்ரீகனக சிம்மாசன சுவேத சாமந்தி புஷ்பாலங்கார குக்குட நடன ஆதிவிடங்கர்
கலையானே கலைமலி செம்பொற்
கயிலாய
மலையானே மலைபவர் மும்மதின் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே
மலையானே மலைபவர் மும்மதின் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே
பொருள்: எண்ணெண் கலைகளின் வடிவாய் விளங்குபவன். கலைகளின் பயனாய்ச் சிறந்த
சிவந்த பொன்மயமான கயிலாய மலைக்கு உரியவன். தன்னோடு மலைந்த அசுரர்களின்
முப்புரங்களை மாய்த்த வில்லை உடையவன். புகழ்மிகுந்த திருக்காறாயில் என்னும் தலத்தை
நிலையாகக் கொண்டவன் என்று இவ்வாறு போற்றுபவர் மேல் வினைகள் நில்லா என்று ஆளுடையப்பிள்ளை பாடிய, சப்த விடங்கத்தலங்களுள் ஒன்றான திருக்காறாயில் தலம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி
சாலையில் திருவாரூரிலிருந்து 12
கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவாரூர்
– நாரண மங்கலம் – திருநெல்பேர் – பின்னவாசல் வழியாக திருக்காரவாசலை அடையலாம்.
பூர்வசன்ம பாபம் நீக்கும் இத்தலம்
சாலையோரத்திலேயே அமைந்துள்ளது. ஆதியில் இவ்விடம் கறுப்பு அகில் மரங்களால் நிறையப்பெற்றிருந்ததால் திருக்காரகில் என
அழைக்கப்பட்டது என்றும் அதுவே பின்னாளில் திருமுறைகளில் திருக்காறாயில் என
வழங்கப்பட்டதென்றும் கூறுகின்றனர். இந்நாளில் அப்பெயர்
திரிந்து 'திருக்காரவாசல்' என
வழங்குகிறது.
இத்திருக்காறாயில் தலம் தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத்
தலங்களில் 119வது
தலம் ஆகும். தேவதாருவனம், கபாலபுரம், பிரம்மபுரம்,
பித்தவனபுரம் என்ற நாமங்களும் இத்தலத்திற்கு உண்டு. சம்ஸ்கிருதத்தில் 'பனசாரண்யம்', 'காளாகருவனம்' என்று பெயர். கபித்தவன் என்பவன் தொண்டு செய்து
வாழ்ந்த தலம் என்பதால் பித்தவனபுரம். கபால முனிவர்க்கு
இறைவன் காட்சி கொடுத்த தலம் என்பதால் கபாலபுரம். அகத்தியருக்கு காட்சி
தந்த தலம். திருஞானசம்பந்தர் இத்தலத்தின் பதிகம் பாடியுள்ளார்.
சேஷதீர்த்த நீரைப் பருக தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.
இவ்வளவு
சிறப்புகள் பெற்ற இத்தலத்தின்
இறைவன்: கண்ணாயிரநாதர், கண்ணாயிரமுடையார் (சகஸ்ர நேத்ரேஸ்வரர்)
அம்மை : கயிலாய நாயகி.
தீர்த்தம்: சேஷ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் :பலா/அகில்
தியாகேசர்: ஆதி விடங்கர்
திருநடனம் : குக்குட நடனம்
தேவாரம்: திருஞானசம்பந்தர் - நீரானே நீள்சடை மேலொர்நி
ரைகொன்றைத்
இறைவன்
அபராத சகேஸ்வரர் (குற்றம் பொறுத்த நாதர்) என்றும் அழைக்கப்படுகின்றார். இத்தலத்தின் அருகில் திருநெல்லிக்கா, திருக்கைசினம், திருக்கோளிலி ஆகிய
தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் அமைந்துள்ளன.
பிரம்மாவிற்கு ஒரு சமயம் தான் எல்லாரையும் விட பெரியவர்
என்று கர்வம் வந்தது அதனால் சிவபெருமானையும் வழிபட மறந்தார். எனவே சிவபெருமான் அவரது
கர்வத்தை அடக்க, படைப்புத் தொழிலை அவரிடமிருந்து பறித்தார்.
ஆகையால் விஷ்ணுவின் ஆலோசனைப்படி பிரம்மன் காவிரிக்கரையில்
காரைவனத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்தார். பிரம்மனின்
தவத்திற்கு மகிழந்த சிவபெருமான் ஆயிரம் கண் கொண்ட கண்ணாயிரப் பெருமானாக
பிரம்மனுக்குக் காட்சி அளித்துப் படைப்புத் தொழிலை திருப்பி அளித்தார்.
எனவே இத்தலத்தின் மூலவர் கண்ணாயிரநாதர் என்றழைக்கப்படுகிறார்.
பிரம்மாவைத் தவிர இந்திரனும், இலக்குமியும், கபால
முனிவரும், பதஞ்சலி முனிவரும் கண்ணயிரநாதரை தங்கள் பழி தீர
வழிபட்டுள்ளனர் என்பது ஐதீகம். திருவாரூர் கமலாலயக்
குளத்தில் புனித நீராடுபவர்கள் இந்திரன் ஆவதை பொறுக்க முடியாமல் இந்திரன்
கமலாலயக்குளத்தை தூர்க்கக் கூறிய பழி தீர இத்தல இறைவனை வழிபாடு செய்து தன் பாவம்
நீங்கப் பெற்றான். மகாலக்குமிதானே அழகி என்றும், தன் கணவன் மகாவிட்டுணுவே முழுமுதற் கடவுள் என்றும், தன்
மைந்தன் மன்மதனே சிறந்த அழகன் என்றும் பெருமை பேசி வந்த பழி பாவம் தீர இத்தல
இறைவனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றாள் என்பது ஐதீகம்.
.நீரானே நீள்சடை மேலொர்நி ரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் றான்றொழும்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே யென்பவ ரூனமி லாதாரே.
தாரானே தாமரை மேலயன் றான்றொழும்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே யென்பவ ரூனமி லாதாரே.
பொருள்: நீண்ட சடைமுடிமீது ஒப்பற்ற
கங்கையை அணிந்தவன். வரிசையாகத் தொடுக்கப்பட்ட கொன்றை மாலையைச் சூடியவன்.
தாமரைமலரில் எழுந்தருளிய பிரமனால் வணங்கப்படும் புகழாளன். சீர்விளங்கும் திருக்காறாயில்
எனப்படும் ஊரினன். இவ்வாறு அவனைப் போற்றிக் கூறுவார் குற்றம் இலராவர். என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய கண்ணாயிரநாதப் பெருமான் இத்தலத்தில்
சுயம்பு சிவலிங்கமாக கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் அருள் பாலிக்கின்றார்.
அம்பாள் கைலாயநாயகி அக்கமாலை தாமரை மலர் தாங்கி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றாள்.
கமல பஞ்சாவரண யந்திரம் என்னும் மஹா யந்திரத்தின் பிந்து ஸ்தான நாயகி
ஷமாவதித் தாயார் (பொறுமை நாயகி) என்றும் அம்பாளை அழைக்கின்றனர். ஒரே சமயத்தில் ஐயனையும் அம்மையையும் தரிசிக்க
முடியும்படியான அற்புதமான அமைப்பு. மூலவருக்கு
அபிஷேகம் நடைபெறும் சப்தவிடங்களுள் ஒன்று இத்தலம். ஐயனின் சன்னதிக்கு முன்னர் துவாரபாலகர்கள் அருள் பாலிக்கின்றனர்.
ஐயன் மற்றும் அம்மன் சன்னதிகளின் முகப்பில் அருமையான ஓவியங்களை காணலாம்
மற்ற சப்த விடங்கத் தலங்களைப் போலவே இத்தலத்திலும் கயிலாயநாயகி
உடனாகிய கண்ணாயிரநாதர் கோயிலில் கருவறைக்கு இணையாகத் ஆதி விடங்க தியாகராஜர்
சன்னிதி அமைந்துள்ளது.
இச்சன்னிதியில்
விதானத்துடன் கூடிய உயர்ந்த மேடை மீது சிம்மாசனத்தில் நீலோத்பலாம்பாள் உடனுறை “கனக சிம்மாசன சுவேத சாமந்தி
புஷ்பலங்கார குக்குட நடன ஆதி விடங்க தியாகேசர்” எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். முன்புறம் வீர, ஞான
கட்கங்களைக் காண்கிறோம். (இவருடைய சன்னிதியில் இருந்த மரகதலிங்கம் திருட்டுப் போனது 17 ஆண்டுகளுக்குப்பின் தற்போது திரும்ப கிடைத்துள்ளது.) தியாகராஜருக்குரிய ஆறு அபிஷேகங்கள் கிரகண
புண்ணிய கால அபிஷேகங்கள், யாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. இத்தியாகராஜர்
'ஆதிவிடங்கர்' என்றழைக்கப்படுகிறார், அநாதியான
சிவபெருமான் உலகத் தோற்றத்தின் ஆதியாகவும் இருப்பதையே இப்பெயர் உணர்த்துகிறது.
நாடொறும் காலையில் இச்சந்நிதியில் விடங்க
லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. மற்ற சப்த விடங்கத்தலங்களைப் போலவே இத்தலத்திலும் நந்தியெம்பெருமான் நின்ற
கோலத்தில் அருள் பாலிக்கின்றார்.
குக்குட நடனம்: இவர் ஆடும் திருநடனம் குக்குடநடனம்
எனப்படுகின்றது. இது போருக்குச் செல்லும் கோழியானது இடமும்
வலமும் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துப் பார்த்து முன்னேறியும் சற்று
நிதானித்தும் சுழன்றும் தாக்குவது போல் ஆடும் நடனமாதலின் குக்குட நடனம் எனப்பட்டது.
வைகாசி விசாகத்தில் பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. பழைய கோயிலை முழுவதுமாகப் பிரித்தெடுத்துவிட்டு நல்ல கருங்கல்லால் கலை
வேலைப்பாட்டுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் அஜபா நடனத்தைக் கண்டு களித்த பதஞ்சலி முனிவர்
அனைத்து நடனங்களையும் காட்டி அருள வேண்ட தியாகேசர் அவருக்கு சப்த நடனங்களையும்
காட்டி அருளினார். பரவை உடனாய சுந்தரர் சன்னதி தியாகரின் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ளது.
இவ்வூர்த் தலபுராணம் வடமொழியில் அமைந்திருந்தது அதனை
தேவகோட்டை வித்துவான் சொ.வேலுசாமிக் கவிராயர் மொழி பெயர்த்து எழுதியுள்ளார். இது
1924ம் ஆண்டில் அச்சிட்டு
வெளியிடப்பட்டுள்ளது. இதன் முன்பகுதியாக உள்ள தோத்திரப்பாக்கள் தேவகோட்டை வித்துவசிகாமணி
சிதம்பரஞ் செட்டியாரால் பாடப்பெற்றுள்ளன. இதில் நைமிசாரண்ய
சருக்கம் தொடங்கி நாற்பது சருக்கங்களில் இத்தலவரலாறு கூறப்பட்டுள்ளது.
இந்நூலில் முசுகுந்தன் தியாகராஜரை இத்தலத்தில் பிரதிஷ்டை
செய்தது அவருடைய சிங்காதனச் சிறப்பு.
அவருக்குச் செய்ய வேண்டிய அபிஷேக முறை, தியாகராஜ
ரகசியம் ஆகியன விளக்கமாகத் தனித்தனிச் சருக்கங்களில் கூறப்பட்டுள்ளன. இதில் விடங்கப் பெருமானுக்குச் செய்ய வேண்டிய உபசாரங்கள் விரிவாகக்
குறிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக தியாகராஜருக்கு
அணிவிக்கப்படும் தியாகப்பரிவட்டம் என்னும்
துணிகளை விவரிக்கும் பகுதியைக் கூறலாம்.
இதன்படி சதுரவடிவான பூமி தத்துவ பூந்துகில் நான்கும், அரைவட்ட வடிவாயுள்ள
நீர் தத்துவ ஆடை ஐந்தும், முக்கோண வடிவான அக்னி, தத்துவ ஆடை மூன்றும், அறுகோண வடிவாயுள்ள வாயு தத்துவ
ஆடை மூன்றும் ஆக இருபத்தியொரு ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்று குறித்திருப்பது சிறப்பு.
அனைத்து சப்த விடங்கத்தலங்களிலும் தியாகேசரின் திருமேனி இவ்வாறு 21 பரிவட்டம் கொண்டே
மறைக்கப்படுகிறது. மேலும் காறாயில் ஆதிவிடங்கர்
வெள்ளைச் செவ்வந்தி மலர்களைச் சிறப்பாக சூடுகின்றார் என்றும் இந்நூல்
குறிக்கின்றது.
இந்நூலில் உள்ள சிங்காசன விதிச்சருக்கம் தியாகராஜரின் சிம்மாசனத்தைப்
பற்றிய விரிவான விளக்கத்தைக் கூறுகிறது.
அதன்படி இச்சிம்மாசனம் நல்ல சந்தன மரத்தால் செய்யப்பட்டு
தங்கத்தகடுகளால் கவசமிடப்பட வேண்டும். சந்தன மரத்திற்குப்
பதிலாகத் தேவதாரு மரத்தையும் பயன்படுத்தலாம். அது மத்திம பலனைத் தருவதாகும். தங்கத் தகடுகளால் கவசம் அமைப்பது உத்தமம் என்றும் வெள்ளியால் அமைப்பது
மத்திமம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் நான்கு கால்களும்
நான்கு வலிய சிங்கங்களால் தாங்கப்பட வேண்டும். இதன் எட்டு
திக்கிலும் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அமைய வேண்டும். நான்கு
பக்கமும் கற்பவிருட்சம், காமதேனு, இடபங்கள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். நடுவில் மலர்ந்த தாமரையும் அதன் மீது ஸ்ரீசக்கரம் அமைந்திருக்க அதன்
நாற்புறமும் பிரம்மா, விஷ்ணு உருத்திரன் மகேசன் முதலிய
தேவர்களின் உருவங்கள் அமைந்திருக்க வேண்டும். இது பிருத்வி
பிரஸ்தாரத்தின் வடிவமாகும். இதன் மீது அமர்த்தியே தியாகராசரைப்
பூசிக்க வேண்டும். இவ்வமைப்பில் தான்
திருவாரூர் பெருமாளின் சிம்மாசனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தியாகராஜ வழிபாட்டினை விளக்கும் பல அரிய விரிவான செய்திகளை இந்நூல்
குறிப்பிடுகின்றது. வாருங்கள் இனி இத்திருக்கோவிலை வலம் வந்து தரிசிக்கலாம்.
இராஜகோபுரம் இல்லை.
கொடி மர விநாயகர், கவசம் பூண்ட கொடிமரம், பலிபீடம், உயரத்தில் நந்தி சன்னதி. இரண்டாவது நுழைவாயிலில் மூன்று நிலை கோபுரம் உள்ளது. பிரகாரத்தில் எம்பிரான் தோழர் சுந்தரர்,
உற்சவமூர்த்திகள் சன்னதியில் விநாயகர், சோமாஸ்கந்தர், ஆடிப்பூர
அம்பாள், சந்திரசேகரர், பிக்ஷாடணர், ஆடல் வல்லான், காட்சி கொடுத்தார், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பிடாரி,
நால்வர், சேக்கிழார் சண்டிகேஸ்வரர் உற்சவ மூர்த்திகளை தரிசிக்கலாம். தியாகராஜர் சபை, கன்னி மூல கணபதி, பிச்சைத்தேவர், அகத்தீஸ்வரர், கௌதமேஸ்வரர், இந்திரபுரீஸ்வரர், விஸ்வநாதர்,
விசாலாட்சி, மாரியம்மன், ஆறுமுகசுவாமி,
கஜலட்சுமி, நாகர், சரஸ்வதி,
கஜலட்சுமி, பைரவர், நால்வர்-சேக்கிழார், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள.
கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி (ஞானமகாகுரு), மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைச்
சந்நிதிகள் உள்ளன. ஞானமகாகுரு தலையில் குண்டலினி
சக்தியுடன் அருள் பாலிப்பது சிறப்பு. ஞான மகாகுரு
எதிரில் அகத்தியரை சுவடி படிக்கும் கோலத்தில் தரிசிக்கலாம்.
நவக்கிரகங்கள் வழக்கமான முறையில் அமைந்துள்ளன.
மூலவருக்கு முன்புறம் நடராஜசபை மண்டபத்தின்
தூண்களிலும் கலை நுணுக்கம் மிகுந்த சிற்பங்களைக் கண்டு களிக்கலாம். ஆடல் வல்லானுடன், காட்சி தந்த நாயனார் உற்சவர் மிகவும்
அழகு, நந்தி மேல் ஒயிலாக சாய்ந்த நிலையில் உமையம்மையுடன்
எழிலாக தரிசனம் அளிக்கின்றார். தாசி ஒருத்திக்கு காட்சி
தந்தவர் ஆதலின் இப்பெருமானுக்கு 'காட்சி தந்த நாயனார்'
என்று பெயராம். நடராசர் சன்னதியின் முகப்பில் உள்ள
கற்சிற்பங்கள் மிகவும் அருமை. பதஞ்சலியும், வியாக்ரபாதரும் அப்படியே தத்ரூபம். மண்டபத்
தூண்களிலும் கலை நுணுக்கம் மிகுந்த அற்புத சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கூரையிலும்
வண்ண மயமான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.
முப்பொழுதுகளான காலை,
பகல், இரவு வணங்க மூன்று பைரவர்கள் இத்தலத்தில்
அருள் பாலிக்கின்றனர். இவர்கள் முறையே காலை
பைரவர், உச்சிக்கால பைரவர், அர்த்தஜாம
பைரவர் – சொர்ணகர்ஷண பைரவர் என்றழைக்கப்படுகின்றனர். பைரவர் சன்னதி இலக்குமி சன்னதிக்கு
எதிரே அமைந்திருப்பதால் சொர்ணகர்ஷண பைரவரை வழிபட இழந்த பொருளை திரும்பப் பெறலாம்
என்பது ஐதீகம்.
மேற்கு
பிரகாரத்தில் பிரமோத விநாயகர் எழுந்தருளியுள்ளார். பிரமோதம் என்றால் பெருமகிழ்ச்சி
என்று பொருள். இவரை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும் அதன் மூலம் பெரு மகிழ்ச்சி
ஏற்படும் என்பதால் இவருக்கு இத்திருநாமம்.
தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே யாயநல் லன்பர்க் கணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே
- என்று சம்பந்தப்பெருமான் பாடிய மூர்த்தி, தலம் கீர்த்தி என்ற முச்சிறப்புகளையும்
கொண்ட இத்தலத்தில் இரண்டு தீர்த்தங்கள் உள.
வடக்குப்பிரகாரத்தில் உள்ள சேஷதீர்த்தம் ஒரு கிணறு ஆகும். ஆதிசேஷன் (பதஞ்சலி) இக்கிணற்றின் வழியாக வந்து இறைவனை
வழிபட்டதால் இத்தீர்த்தத்திற்கு இப்பெயர். புரட்டாசி மாதம்
பௌர்ணமியன்று இந்திரன் சேஷதீர்த்தத்தில் நீராடி இத்தல கடுக்காய் பிள்ளையாரை தரிசிப்பதாக
ஐதீகம் எனவே இந்திரதீர்த்தம் என்றும்
அழைக்கப்படுகின்றது. இத்தீர்த்தம் மருத்துவ குணம் மிகுந்தது,
பௌர்ணமி அன்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு
வழங்குகின்றனர். இதனால் நாள்பட்ட நோய்கள் குறிப்பாக
சருமநோய்கள் குணமாகின்றன. கண் நோய்
உள்ளவர்கள் இங்கு தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து, தீர்த்தத்தில் நீராடி, பிரசாதமாக தரும் தேனில் ஊற
வைத்த அத்திப்பழத்தை பிரசாதமாக பெற்று சாப்பிட்டு வந்தால் கண் நோய் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம். மற்றொரு தீர்த்தமான
பிரம்ம தீர்த்தம் கோவிலுக்கு வெளியே உள்ள குளம் ஆகும்.
இத்தலப்
பிள்ளையார் கடுக்காய் பிள்ளையார் என்று அழைக்கப்படுதற்கான வரலாறு. வணிகன்
ஒருவன் வர்த்தகத்திற்காக செல்லும் போது பிரம்ம தீர்த்தக்கரையில் இளைப்பாறினான்.
அவன் வண்டியில் ஜாதிக்காய்கள் இருந்தன. அவனுடன்
விளையாட வினாயகர் ஒரு சிறுவனாக வந்து மூட்டைகளில் என்ன இருக்கின்றது என்று
வினவினார். வணிகனும் பொய்யாக கடுக்காய் என்று கூறினான்.
வினாயகர் புன்னகை புரிந்து அப்படியே ஆகுக என்று அருளினார். சந்தையை அடைந்த வணிகன் மூட்டைகளைத் திறந்து பார்க்க அனைத்தும் கடுக்காயாக
மாறி இருப்பது கண்டு திகைத்தான். அழுது கொண்டே தான் செய்த
குற்றத்திற்காக மன்னிப்பு கேட்டு இறைவனிடம் இறைஞ்சினான். வினாயகர்
அவன் முன் தோன்றி அவன் பிழை பொறுத்து கடுக்காய்களை ஜாதிக்காய்களாக மாற்றியருளினார்,
இவர் சன்னதி பிரம்ம தீர்த்தக் கரையில் அமைந்துள்ளது.
ஒரு சமயம் இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடந்த
போது பார்வையற்ற பெண்ணொருத்தி, பக்கத்தில் உள்ள 'வெள்ளையாறு' என்னுமிடத்தில் நின்று பார்த்துக்
கொண்டிருந்தாள். கும்பாபிஷேகத்தின் போது கூட்டத்தினர்
எழுப்பிய குரலொலி கேட்டுத் தன்னால் பார்க்க
அதைக் காண முடியவில்லையே என்று சிவபெருமானை உருக்கமுடன் பிரார்த்திக்க, இறைவன் அப்பெண்ணுக்குக் கண்பார்வை தந்து, அப்பார்வையும்
நம் பார்வையைப் போல் சதாரணமாக இல்லாமல் ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகுமாறு ஒளி தந்து
அருளும் புரிந்து, அவளும் பார்த்து மகிழுமாறு செய்தாராம்.
இதனால் இறைவனுக்குக் 'கண்ணாயிரநாதர்' என்று பெயர் வந்தது என்றோர் ஐதீகமும் உண்டு.
இத்தலத்தில் வில்வமரத்தில் மூன்று தளமாக இல்லாமல் கொத்துக் கொத்தாக இலைகள் அமைந்துள்ளது ஒரு
சிறப்பு. கோவிலுக்கு
வெளியே வசந்த மண்டபம் அமைந்துள்ளது. சமீபத்தில் புது திருத்தேரை
தியாகேசப்பெருமானுக்கு அர்ப்பணித்துள்ளனர்.
திருஞானசம்பந்தரரின் பதிகம் இரண்டாம் திருமுறையில்
தொகுக்கப்பட்டுள்ளது. இப்பெருமானை உள்ளன்போடு துதிப்பவர்கள் வினையாவும் தீர்ந்து விடும்,
காராயிலில் இறைவன் இருக்கின்றார் என்று நினைத்தாலே வாழ்க்கையில் முன்னேறுவர் என்று தமது பதிகத்தில் பாடியுள்ளார் ஆளுடைப்பிள்ளையார். தமது
பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் மேல் வினை நில்லாவே என்று பாடியுள்ளார்.
நாடொறும் ஆறுகால வழிபாடுகள்
நடைபெறுகின்றன. வைகாசியில் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
திருவாரூர் போலவே வசந்த விழாவாக சிறப்பாக நடைபெறுகின்றது. கொடியேற்றம், பின்னர்
சந்திரசேகருக்கு பட்டம் கட்டுகின்றனர். அடுத்து ஆதி விடங்கப்பெருமான் குக்குட
நடனத்துடன் கோவிலுக்கு வெளியே உள்ள வசந்த
மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார். தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா.
மாலையில் பூதம், கற்பக விருட்சம், யானை, வெள்ளி ரிஷபம், திருக்கயிலாயம் என்று பல்வேறு வாகனங்களில் வீதியுலா. தியாகேசர் திருத்தேரோட்டம் கண்டருளி வைகாசி
விசாகத்தன்று தீர்த்தவாரி நடைபெறுகின்றது திருப்பாத தரிசனம் தநதருளுகின்றார். மேலும் தமிழ் மாதப் பிறப்பு, தியாகராஜர் அபிஷேகம், நடராஜர் அபிஷேகம், பிரதோஷம், சங்கடஹர
சதுர்த்தி, வியாழன் தோறும் குரு வழிபாடு, கார்த்திகையில் முருகன் வழிபாடு, காலாஷ்டமி பைரவர்
பூஜை, அமாவாசை, பவுர்ணமி ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்வாலயத்தில் பல
கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டில் இப்பெருமானின் பெயர் 'காறாயில்
மகாதேவர்' என்று குறிக்கப்பெற்றுள்ளது. ஆதி விடங்கரின் தரிசனத்திற்குப் பின் திருக்கோளிலி அவனி
விடங்கரை தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.
திருப்பாத தரிசனம் தொடரும் . . . . .
No comments:
Post a Comment