Monday, May 4, 2020

திருப்பாத தரிசனம் - 31


திருமறைக்காடு (வேதாரண்யம்) – ஸ்ரீரத்ன சிம்மாசன ஹம்ஸ நடன 

புவனி விடங்கர் _-1




திருக்கதவம் அடைக்க திறக்கப் பாடிய தலம் 


இத்தலத்தின் மற்றொரு பதிவைக் காண இங்கு செல்லவும் :  திருமறைக்காடு- 2   


சப்தவிடங்கத்தலங்களில் அடுத்து நாம் தரிசிக்க இருக்கின்ற தலம் திருமறைக்காடு ஆகும். திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவிலும் வேதாரண்யம் அமைந்துள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் அகத்தியம்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது.


ஒதுவார் தம்மை நன்னெறிக்கு உய்க்கும் இறைவன் உறையும் தலங்களும் அப்பரும், சம்பந்தரும் திருமுறை பாடி அற்புதம் நிகழ்த்திய தலம். இனிய வயல்கள், நெடிய உப்பங்கழிகள், படர்நெறிக்காடு, மடல்விரி தாழைகள், வேதமாக்கடல் சூழ அமைந்த தலம். கடலோரத்தில் அமைந்த தலம் என்பதால் மருத நிலத்தின் வளமையைக் காண இயலாது.  

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஐந்தும், திருஞானசம்பந்தர் பதிகம் நான்கும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 10 பதிகங்கள் உள்ளன. சுந்தரருடன் சேரமான் பெருமாளும் வழிபட்ட தலம்.  தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது. வேதாரண்யம், வேதவனம், ஆதி சேது, தென் கயிலாயம், பரமயானம், ஞானபூமி, திருமறைக்காடு என்றும் அறியப்படுகின்றது.

அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கையோடு திகழ்தரு சடையில் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே – என்று பாடிய அப்பர் பெருமான் அடைபட்ட திருக்கதவினை திறப்பிக்கவும், சம்பந்தப்பெருமான் திருக்காப்பிடப்படவும்  இனிய தமிழால் பாடிய தலம். இராமர், இராவணனை கொன்ற வீரஹத்தி தோஷம் தீர வழிபட்ட தலமாகையால்  கோடிக்கரை என்றும் அழைக்கப்படுகின்றது

திருக்கோவிலில்களில் விளக்கிடுவதின் சிறப்பை உணர்த்திய தலம். திருமாலினுடைய  வாமன அவதாரம் மாவலி சக்கரவர்த்தியை அடக்குவதற்காக ஏற்பட்டது. அத்தகு மாபலி எவ்வாறு  மாவலியைப் பெற்றான் என்பதற்கான வரலாறு. ஒரு நாள் இரவு அர்த்தயாமம் முடிந்து திருமறைக்காடு ஆலயக்கதவு திருக்காப்பிடப்பெற்றது. அப்போது கருவறையில் இருந்த மங்கத்தொடங்கியது. அவ்விளக்கை தூண்டி எரியச் செய்பவர்களுக்கு இம்மையில் அரச பதவியையும் மறுமையில் சிவகதியையும் அளிப்பேன் என்று அப்பன் அம்மையிடம் கூறினார். திருக்கதவங்கள் அடைபட்டபின் யார் வந்து விளக்கைத் தூண்டப்போகிறார்கள் என்று அம்மை நகைத்தாள்! எங்கிருந்தோ ஒரு எலி  பசியால் உந்தப்பட்டு  இக்கோவிலில் எரியும் விளக்கின் நெய்யை உண்ண வந்தது. ஆனால் அணையும் நிலையில் இருந்த திரியை தன் மூக்கால் தூண்டிவிட்டதால், மறு பிறப்பில் மாவலி சக்கரவர்த்தியாக  பிறந்து பெருமாளுக்கு தானம் வழங்கிய பெருமை பெற்றார். இவ்வரலாற்றை அப்பர் பெருமான் திருகுறுக்கை தேவாரத்தில்
நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாம்
குறைவறக் கொடுப்பர்போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொருள் : வேதங்கள் பூசித்த திருமறைக்காட்டில் நீண்டு எரியும் திறத்ததாகிய விளக்கினைக் கறுத்த நிறத்தை உடைய எலி தன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம்,  தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார் என்று பாடிப்பரவுகின்றார்.




திருவிளையாடற்புராணம் அருளிய பரஞ்சோதி முனிவரின் அவதாரத்தலம். அவரே இத்தலத்தின் தலபுராணத்தையும் இயற்றியுள்ளார்.
காசியில் இறக்கமுத்த கமலையிற் பிறக்கமுத்தி
தேசுறு சிதம்பரத்தைத் தெரிசிக்க முத்தியாகும்
மாசிலா மேன்மை பூண்ட மறைசையம் பதியோ கூறில்
ஆசறு தீர்த்தம் தன்னில் ஆடவே யளிக்குமுத்தி – என்று இத்தலத்தின் சிறப்பைப் பாடுகின்றார் அவர். கமலை ஞானப்பிரகாசரின் வழியில் வந்த  அகோரசிவத் தியாகராச பண்டாரம் என்றும் அழைக்கப்பட்ட அகோர முனிவர் இயற்றிய இன்னொரு தல புராணமும் உள்ளது. தாயுமானவ சுவாமிகளும் திருமறைக்காட்டில் பிறந்தவர். திருச்சியை ஆட்சி செய்த விஜயரங்க சொக்கநாதரிடம் அமைச்சராக இருந்தார். சைவ சித்தாந்தம் அத்வைதம் ஆகிய இருநிலைகளிடையே ஒருவகை சமரசம் கண்டவர்.  தேவாரத்திருத்தலங்களில் காவிரி தென் கரைத்தலங்களுள் 125வது தலம் ஆகும். சக்தி பீடங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்த சுந்தரி பீடத்தை பெற்று விளங்கும் தலம். நடராசரின் பதினாறு சபைகளுள் பன்னிரண்டாவது  தேவ பக்த  சபை எனப்படும் தலம்.


இத்தலத்தின் மையத்தில் யாழைப்பழித்த மென்மொழியாள் உடனாய திருமறைக்காட்டு மணவாளர் (வேதாரண்யேஸ்வரர்) ஆலயம் பெருங்கோயிலாகத் திகழ்கின்றது. இந்த ஆலயத்தில் கருவறைக்கு இணையாகக் கிழக்கு நோக்கியவாறு பெரிய மகாமண்டபம் உள்மண்டபம் ஆகியவற்றுடன் பெரிய தூண்களைக் கொண்டுள்ள மிகப்பெரிய தியாகராஜரின் தனி ஆலயம் உள்ளது. இதில் 'புவனி விடங்கர்' என்ற பெயரில் தியாகராஜர் எழுந்தருளியுள்ளார்.

இவருடைய சந்நதியில் 'புவனி விடங்கர்' என்ற மரகதலிங்கம் எழுந்தருளி வைக்கப் பட்டுள்ளது. உயர்வகை ஜாதி மரகதக் கல்லால் அமைந்த இந்த லிங்கம் விலை மதிப்பற்றதாகும். இவ்விடங்கருக்கு அனுதினமும் காலையிலும் மாலையிலுமாக இரண்டு வேளைகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாசி மகத்தை தீர்த்த நாளாகக் கொண்டு வசந்த விழா நடைபெறுகின்றது, ஒரு காலத்தில் ஐந்து மரத்தேர்கள் இருந்தன அவை பழுதடைந்து விட்டதால் பல வருடங்கள் தேரோட்டம் நடைபெறவில்லை, பின்னர் 2017ம் ஆண்டு புதிய மரத்தேர் செய்யப்பட்டு ஹம்ஸநடன புவனி விடங்கத் தியாகேசர் தேரில் எழுந்தருளி அருள் பாலித்தார். பின்னர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தியாகராஜருக்குரிய ஆறு அபிஷேகங்களும் கிரகண புண்ணிய கால அபிஷேகங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன.




இத்தலத்தில் தியாகேசர் ஆடும் நடனம் ஹம்ஸபாத நடனம் ஆகும். இறைவன் ஒயிலாக நடந்து வரும் ஒரு அன்னப்பறவையானது மெல்ல மெல்ல அன்ன நடைபோல் அடிபெயர்ந்து ஏற்ற இறக்கத்தோடு ஆடுவதுபோல் ஆடுவது  என்பது ஒரு விளக்கம். இதன் தத்துவம் என்ன என்பதை காஞ்சி மஹாப் பெரியவர் இவ்வாறு விளக்கியுள்ளார்.. மூச்சை உள்ளுக்கு இழுத்து  வெளியில் விடும் போது “ஹம்”, “ஸ்” என்ற ஒலிகளைப் போலவே சப்த சலனம் அமையும். இதுவே  “ஹம்ஸ” மந்த்ரம் என்பது. அதோடு “அஹம் ஸ:என்பதற்கு “நான் அவன்”, அதாவது, “ஜீவாத்மாவான நானே ஈச்வரன், அதாவது பரமாத்மா” என்று அர்த்தம். ‘நானே அவன்’ என்று மாத்திரம் நிறுத்திவிட்டால் ஜீவாத்மாதான் ஈச்வரன் என்று குறுக்கிவிட்டதாக விபரீத அர்த்தமும் செய்து கொள்ளலாமல்லவா? அதனால், “(பரமாத்மாவான) அவனே நான்” என்று சேர்த்துச் சொன்னதால்தான் முழுசாகச் சொன்னதாகும். “அவனே நான்” என்பது “ஸ: அஹம்”. ஸந்தியில் இது “ஸோஹம்” என்றாகும். “ஹம்ஸ:” என்பதோடு “ஸோஹம்” என்பதையும் சேர்த்துச் சொல்வதுதான் ஹம்ஸ மந்திரம். நாம் புத்தி பூர்வமாக உத்தேசித்து மற்ற மந்திரங்களைப் போல இந்த ஹம்ஸ மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டே போனால், அந்த சப்த சலனங்கள்தான் இயற்கையாகவும் சாந்த மாதிக்கு அழைத்துப் போகும் ப்ராண ஸஞ்சாரத்திற்கு உரியதாக இருப்பதால், ஜீவாத்மா பரமாத்மாவுடன் அபேதமாயிருக்கும் சாந்த நிலைக்கு இந்த சாதனை அழைத்துப் போகும்போது ஒரு கட்டத்தில் ஜபம் நின்று “அஜபா”வாகும்; சுவாசம் தன்னால் ஹம்ஸ மந்த்ரம் என்று சொல்வதுடன் நடக்க ஆரம்பிக்கும். ‘ஸோஹம்’ என்பதிலுள்ள ‘ஸ’வும் ‘ஹ’வும் தேய்ந்து தேய்ந்து ஒடுங்கிப்போய் ‘ஓம்’ என்ற பிரணவம் மட்டும் நிற்கும். அது அப்படியே போய் துரீயம் என்பதான உத்தம ஸ்திதியில், ஆத்மாவில் ஐக்கியப்படுத்திவிடும்.  அந்த ஓங்கார நாதத்தில் ஞ்சரிக்கும் ஹம்ஸமே சிவசக்தியாகும்.  அதை உணர்த்தும் பொருட்டு வேதநாயகனான சிவனார்  வேதாரண்யத்தில்  ஹம்ஸ நடனமாடுகிறார். ஹம்ஸ நடனமே அஜபா நடனமுமாகும்.

இவருடைய சந்நதிக்கு நேர் எதிரில் நின்ற இடபம் உள்ளது. அதற்குப் பின்னணியில் அமைந்த விமானத்தில் இவரைத் தொழுது நிற்பவராக பரவையாரூடன்  சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அமைந்துள்ளார். திருவாரூரில் நடப்பது போலவே 29 நாள் மாசி மாதப் பெருந்திருவிழாவில் சந்திரசேகருக்குப் பட்டம் கட்டும் 'பட்டோற்சவம்' சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

புவனி விடங்கருக்கு பின் புறம் இராமர் பூசித்த இராமநாதர் சன்னதி அமைந்துள்ளது. இவரது மண்டபத்தில் வீரபத்திரர் அருள் பாலிக்கின்றார். காசியைப் போல விசுவநாதர், விசாலாட்சி, காலபைரவரை இத்தலத்தில் தரிசிக்கலாம். இக்கோயில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றது.


யாழைப் பழித்தன்ன மொழி மங்கை ஓர் பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம்பேணில்
தாழைப்பொழில் ஊடேசென்று பூழைத்தலை நுழைந்த வாழைக்கனி
கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே - 

என்று தம்பிரான் தோழர் சுந்தரர் பாடிய திருமறைக் காட்டின்
இறைவர்: திருமறைக்காடர்,வேதாரண்யேஸ்வரர்,வேதவனநாதர்,
இறைவி: வேதநாயகி, யாழினும் இனிய மொழியாள், வீணா விதூஷிணி
தல மரம் :வன்னிமரம், புன்னைமரம்,
தீர்த்தம் :
 வேததீர்த்தம்(எதிரிலுள்ள கடல்), மணிகர்ணிகை
வழிபட்டோர் :அகத்தியர், வசிஷ்டர், கௌதமர், விசுவாமித்திரர், நாரதர், மாந்தாதா, முசுகுந்த சக்கரவர்த்தி, ஸ்ரீராமர்,
தேவாரப் பாடல்கள் :சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர்,


இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர்  பெரிய சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். மறைக்காட்டு மணாளர் என்றும் அழைக்கப்படுகிறார். கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. கருவறை அதனையொட்டி அர்த்த மண்டபம், மகா மண்டபம், தியாகேசர் மண்டபம் முதலியன உள்ளன. கருவறையைச் சுற்றி திருச்சுற்று மாளிகை உள்ளது. மகா மண்டபத்தின் கூரையை  இராசி மண்டலம்  அலங்கரிக்கின்றது.  இத்திருச்சுற்றில் கருவறைக்கு நேர் கிழக்காக சிறிய கோபுரம் ஒன்று உள்ளது. இக்கோபுரத்தை ஒட்டி நீண்ட தூண் மண்டபம் உள்ளது. இரண்டாம் திருச்சுற்றில் வடக்கே அம்பாள் ஆலயம் உள்ளது. கோவிலைச் சுற்றி பெரிய மதிலும், கிழக்கும், மேற்குமாக இரண்டு கோபுரங்களும் உள்ளன. ஆலயம் முழுவதும் பல இடங்களில் திருமுறைப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. உள் திருச்சுற்று சுவற்றில் பெரிய புராண ஓவியங்கள் எழிலாக வரையப்பட்டுள்ளன.  தட்சிணா மூர்த்தி தவிர வேறு கோஷ்ட மூர்த்திகள் இல்லை.

எம்பெருமான் அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டி அருளிய கோலத்தை மறைக்காட்டு மணாளர் கோலமாக கண்டு தரிசிக்கலாம். கருவறை சுவரோடு இணைந்த சிற்பமாக இல்லாமல் சுவருக்கு சிறிது தள்ளி இலிங்கப்பெருமானுக்கு பின்னால் அம்மையப்பர் சிற்பம் அமைந்துள்ளது. மணவாளரின் இடத்திருக்கரமும், அம்மையின் வலத்திருக்கரமும் கோர்த்த பாவனையில் உள்ளது. கல்யாண சுந்தரர் போல நின்ற கோலம் அல்ல, அமர்ந்த கோலம், இடையில் ஸ்கந்தர் இல்லை. ஐயனின் வலத்திருக்கரம் அபய கரமாகவும், அம்மையின் இடது திருக்கரம் வரத கரமாகவும் உள்ளது.

திருக்கயிலையில் அம்மையப்பரின் திருமணத்திற்காக சகல ஜீவராசிகளும் கயிலையில் கூடிய போது வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. உலகை சமன் படுத்த குள்ள முனி  அகத்தியரை தென் திசைக்கு இறைவன் அனுப்பினார். அப்போது அகத்தியர் வேண்டிக்கொண்டபடி திருமணக்கோலத்தை இறைவன் பல் வேறு தலங்களில் காட்டி அருளினார்  இத்தலத்தில் சித்திரை மாதம் வளர்பிறை சப்தமியன்று கணங்கள் புடைசூழ அம்மையுடன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே சித்திரையில் திருமண விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. சஷ்டியன்று மறைக்காட்டு மணாளருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது அன்றைய தினம் அம்மையப்பரின் முழு அழகையும் கண்டு களிக்கலாம். அபிஷேகத்திற்குப் பின்னர் அம்மையப்பருக்கு சந்தனக் காப்பு சாத்துகின்றனர். இச்சந்தனப்பூச்சு பின்னர் அடுத்த வருடம்தான் களையப்படுகின்றது. தினமும் வஸ்திரமும், மாலைகளும் மற்றுமே மாற்றப்படுகின்றது.  அகத்தியருக்கு கல்யாணக் கோலம் காட்டியதால் இத்தலம் தென் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் உள்ள இறைவி, யாழினும் இனிய மொழியாள் என்று அழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தைவிட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால், இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் தரிசனம் அருளுகின்றாள். துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். பட்டீஸ்வரத்தில் உள்ளது போல சிம்ம வாகனத்துடன் அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள்.  சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். கஜலட்சுமி சுதை வடிவமாக தனி சன்னதியில் அருள் புரிகின்றாள். இவ்வாறு முப்பெரும் தேவியரையும் இத்தலத்தில் தரிசனம் செய்யலாம்.


இவ்விடத்தில், இராமர் சமுத்திர ஸ்நானம் செய்து ராவணனைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. ராமர் பூஜித்த ராமநாதர் சந்நிதியும் புவனி விடங்கர் சன்னதிக்கு பின் புறம் அமைந்துள்ளது. ராவணனைக் கொன்றதால் ராமனுக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால், இத்தலத்திலுள்ள விநாயகர், வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி, கோயிலின் மேற்கு வெளிப் பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது. இவர் சன்னதிக்கு எதிரே பிரம்மஹத்தி மேடை அமைந்துள்ளது.  இச்சந்நிதிக்குக் கொடிமரமும் உள்ளது. சுவாமி அம்பாள் விநாயகர் ஆகிய மூவருக்குமாக மூன்று கொடி மரங்கள் இத்தலத்தில் உள்ளன. விநாயகர் சந்நிதிக்கு அருகில் மேலக்குமரன் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தில் உள்ள இந்த முருகப்பெருமான் அருணகிரிநாதரால்
வாலஇ ளப்பிறை தும்பை யாறுக டுக்கை கரந்தை
      வாசுகி யைப்புனை நம்பர்  தருசேயே
மாவலி யைச்சிறை மண்ட ஓரடி யொட்டி யளந்து
      வாளிப ரப்பியி லங்கை   யரசானோன்
மேல்முடி பத்தும ரிந்து தோளிரு பத்தும ரிந்து
      வீரமி குத்தமு குந்தன்    மருகோனே-
மேவுதி ருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
      வேதவ னத்தில மர்ந்த     பெருமாளே .
என்று  திருப்புகழில் பாடப்பெற்றவர்.


இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்க்கோட்டில் காட்சி அளிக்கின்றன.  அம்மையப்பரின் திருமணக்கோலத்தை தரிசிக்க இவ்வாறு உள்ளன என்பது ஐதீகம். இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர், பிரம்ம ரிஷி ஆக வேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக்கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.

நடராசர் தூண்கள் கொண்ட மண்டபம் உடைய உயரமான தனி சன்னதியில் அருள் புரிகின்றார். இவரது சன்னதி வாசலில் பதஞ்சலி, வியாகிரபாதர் சிற்பங்கள் எழிலாக அமைந்துள்ளன. மண்டபக்கூரையில் ஒவ்வொரு ஊழியிலும் படைப்புக்காலம் முதல் முடிவு வரை நடராசர் ஆடும் பல்வேறு நடனங்கள் வண்ண ஓவியங்களாக மிளிர்கின்றன. மூன்று கால் மூன்று திருக்கரங்கள், மூன்று திருமுகங்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள் பாலிக்கின்றார்.

காட்சி கொடுத்த நாயகர் சன்னதியில் இரண்டு  சுழலும் தூண்கள் அமைந்துள்ளன. பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் இத்தூண்களை சுற்றினால் மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். பலர் சுற்றியதால் ஒன்று கீழே விழுந்து விட்டது. மற்றது விழும் நிலையில் உள்ளது.

முசுகுந்தன் ஸ்தாபித்த சோழ லிங்கம், மகாபலி ஸ்தாபித்த சேர லிங்கம், உக்கிரகுமாரனாக தோன்றிய முருகன் பூசித்த பாண்டிய லிங்கம் பிரகாரத்தில் அருள் பாலிக்கின்றனர். சப்த மாதர்கள் குளக்கரை லிங்க சன்னதியிலும், பிடாரி, விஸ்வாமித்திரர், பதஞ்சலி வன்னி மரத்தடியிலும், விசுவாமித்திரர் புன்னை மரத்தடியிலும் அருள் பாலிக்கின்றனர்.

இக்கோவிலில் இரண்டு பிராகாரங்களும், வன்னி மரம், புன்னை மரம் என்று  இரண்டு தல விருட்சங்களும் உள்ளன. இவற்றுள் வன்னி மரத்தில் ஒரு புறம் காய்கள் நீளமாகவும் முட்கள் உடையதாகவும் மறு புறம் உருண்டையானதாகவும் முட்கள் இல்லாமலும் இருக்கின்றன என்பது சிறப்பு. வன்னி மரத்தடியில் நாகர் மேடை அமைந்துள்ளது. பெரிய ஆதிசேஷன் உருவம் அமைந்துள்ளது. அடியோங்கள் இந்த யாத்திரை சென்ற சமயம் மழை வேண்டி நந்தியெம்பெருமானுக்கு தண்ணீர் நிரப்பி வைத்திருந்தனர்.

முதல் பிராகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்னேஸ்வர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும், திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்துதான், இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக்கரிக்க, ஆலயத்தின் உள்ளே இருக்கும் இக்கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம்.

கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே, கிழக்கே கடல் உள்ளது. இதை வேத தீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக்கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால், 100 முறை சேதுவில் நீராடுவதற்கு சமம்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சந்நிதிக் கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் - இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகவும் விசேஷமாகவும் கருதப்படுகிறது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்றுவிடும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

உலகம் வியக்கும் அழகு வாய்ந்த செப்புத்திருமேனிகள் இத்தலத்தில் அமைந்துள்ளன. நடராசர், சிவகாமி அம்மன், அம்பாளுடன் ரிஷபத்தில் சாய்ந்த கோலத்தில் காட்சி கொடுத்தார், சண்டிகேஸ்வரர், பிக்ஷாடணர், கல்யாண சுந்தரர், மற்றும் அதிகாரநந்தி  செப்புத்திருமேனிகள் இத்தலத்தில் எழிலாக விளங்குகின்றன.

                                                                                                           திருமறைக்காடு தரிசனம் தொடரும் ......

2 comments:

கோமதி அரசு said...

தியாகேசர் ஆடும் நடனம் ஹம்ஸபாத நடனம் ஆகும். இறைவன் ஒயிலாக நடந்து வரும் ஒரு அன்னப்பறவையானது மெல்ல மெல்ல அன்ன நடைபோல் அடிபெயர்ந்து ஏற்ற இறக்கத்தோடு ஆடுவதுபோல் ஆடுவது என்பது ஒரு விளக்கம். //

ஹம்ஸபாத நடன விளக்கம் மிக அருமை.

S.Muruganandam said...

மிக்க நன்றி அம்மா.