Sunday, May 17, 2020

திருப்பாத தரிசனம் - 34

திருவாய்மூர் – ஸ்ரீகமல நடன   நீல விடங்கர்




அடுத்து நாம் தரிசிக்க இருக்கின்ற தலம் திருவாய்மூர் ஆகும். எங்கும் நிறை பரபிரம்மான சிவ பரம்பொருள் பல தலங்களில் எண்ணற்ற திருவிளையாடல்கள் புரிந்துள்ளார். இவ்வாறு மண்ணுலகில் அப்பெருமான்  திருவிளையாடல் (லீலை)  புரிந்த தலமாக போற்றப்படுகிறது  லீலாஹாஸ்யபுரம் என்னும் திருவாய்மூர். வாய்மையூர் என்பதே வாய்மூர் என்று மருவியது என்பர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இத்தலம்  124ஆவது தலமாகும். திருநாவுக்கரசருக்கும், திருஞானசம்பந்தருக்கும்  திருக்கயிலாயக் காட்சி நல்கிய தலம். கயிலாய மலை நந்தியெம்பெருமான் மற்றும் சர்ப்ப வாகனத்தில் இரண்டு தென் முகக்கடவுள் அருள் பாலிக்கும் தலம். வடக்கு நோக்கிய கல்யாண துர்க்கை அருளும் தலம். அமர்ந்த கோல முருகன், கேது  மனித ரூபத்தில் உள்ள தலம்.  இத்தலத்திற்கு அப்பர் பெருமானின் இரு பதிகங்களும், சம்பந்தப்பெருமானின் ஒரு பதிகமுமாக மூன்று பதிகங்கள் உள்ளன. சுந்தரரும் திருவாய்மூர் மணாளர் என்று பாடியுள்ளார்.

காசிப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்த புதல்வர்களில் ஒருவன் பலா மரத்தடியில் லிங்கப் பரம்பொருளைப் பூசித்துப் பரமன் திருவருளால் வாயு மண்டலத்திற்கு அதிபதியாய் வாயு தேவன் ஆனதால் வாயூர் என்று பெயர் பெற்று வாய்மூர் என்று ஆயிற்று. தட்சிணா மூர்த்தியின் நெற்றிக் கண் பொறியால் திருமால் மைந்தன் மன்மதன் எரிந்து உடலும் எஞ்சாமல் பிடி சாம்பலானது கண்டு லிங்கப் பரம் பொருளை வழிபட்டுத் தொழுத இரதிதேவிக்கு அருளிச் செய்ததற்கு ஏற்ப மன்மதனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வாழ வைத்த மகேசுவரனின் வாய்மை காரணமாக வாய்மையூர் என்று பெயர் பெற்று வாய்மூர் என்று ஆயிற்று.

திருவாரூர் – வேதாரண்யம் பேருந்து மார்க்கத்தில் திருவாரூரில் இருந்து 25 கி.மீ தூரத்திலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து 13 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.  திருக்குவளைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது . நாகப்பட்டினம்  திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள சீரா வட்டம் பாலம் என்ற இடத்தில் இருந்து  2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சாலையோரத்தில் கிழக்கு நோக்கியவாறு திருக்கோயில் அமைந்துள்ளது. ஆலயத்தில் முன்புறம் பாவ விமோசன பிரசண்ட தீர்த்தம் என்ற பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. ஒரே பிராகாரம் கொண்ட இக்கோயிலில் கருவறைக்கு இணையாகத் தெற்குப் பிராகாரத்தில் தியாகராஜரின் மண்டபம் அமைந்துள்ளது.  இதில் அழகிய பெரிய  மஞ்சத்தினுள் அமைந்த இரத்தின சிம்மாசனத்தில் அல்லியங்கோதை அம்பாள் உடனுறை நீலவிடங்கர் என்ற பெயரில் தியாகராஜர் கொலு வீற்றிருக்கின்றார்.  ஐப்பசி மாதப்பிறப்பன்று இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது.

மேலும் இவருடைய சன்னதியில் அரிய நீல ரத்தினக் கல்லால் ஆன சிவலிங்கம் விடங்கராக வைத்துப் பூஜிக்கப்படுகின்றது. இவர் ஏனைய விடங்கர்களை விட அளவில் சிறியவர். உயர்ந்த வகை ஸ்படிகலிங்கம் ஒன்றும் உள்ளது.     தினமும் இரு முறை விடங்கருக்கு பால், சந்தனம், பன்னீர் முதலிய திரவியங்களினால் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது.




இவருடைய நடனம் கமல நடனம் எனப்படுகின்றது. மருத நிலப்பகுதி அல்லவா?  ஐயனும் அப்பகுதியின் இரத்தினமான தாமரை மலர் ஆடுவது போல் ஆடுகின்றார். தண்ணீர் நிறைந்த குளத்தில் தாமரை மலர் தென்றல் வீசுவதற்கேற்ப ஆடுவதுபோல இவர் ஆடுதலின் இவருடைய நடனம் கமலநடனம்  எனப்பட்டது.  தினமும் மாலையில் சிறப்பு வழிபாடும் அவ்வேளையில் வடையும், புட்டும் நிவேதனம் செய்யப்படுகின்றன. இவருடைய கோயில் பொற்கோயில் என்றழைக்கப்படுகிறது.

திருநாவுக்கரசர் திருவாரூரில் தியாகராஜப்பெருமான் பவனி வரும் அழகைக் கண்டு பரவசமடைந்து 'ஆதிரை நாளால்' அது வண்ணம் என்று பாடியது போலவே வாய்மூர் அடிகளான தியாகேசர் பவனி வந்த அழகையும் கண்டு களித்துப் 'பாட அடியார் பரவக்கண்டேன்' என்ற பதிகத்தினை அருளிச் செய்துள்ளார்.  அப்பதிகத்தில் மெல்லியலும்  விநாயகனும் தோன்றக்கண்டேன் என்று பாடியுள்ளதால், திருவாரூர் விழாவில் பக்தர்கள் பாடியாடி சித்தர்கள் சூழ்ந்து நிற்க, பதினெண் கணங்கள் உடன்வர, விநாயகரும், பார்வதியும் உடன்வர பக்தர்கள் கழல் வலங்கொண்டு உடன்வர, பெருமான் வலம் வந்தது போலவே இங்கும் வலம் வந்த அழகைக் கண்ணாரக் கண்டு களித்துவாய்மூர் அடிகளை நான் கண்டவாறேஎன்று பாடுவது படித்து இன்புறத்தக்கதாகும்.

தளிரிள வளரென வுமைபாடத் தாளம் மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருணல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொருள் : தளிர்களோடு கூடிய இளங்கொம்பு போல , உமையம்மை அருகிருந்து பாடவும் , தாளம் இடவும் ஒப்பற்ற தழலை உடைய கையை வீசி, விளங்கும் மாணிக்க மணியை உடைய பாம்பை இடையிலே கட்டி ஆடும் பொய்வேடத்தை உடையவர். தம்மை விரும்பும் பருத்த தனபாரங்ளை உடைய மகளிர்க்கு அருள் நல்கித் திரு நீறுபூசி, முடிமேல் பிறையணிந்து காட்சி தருபவர். திருவாய்மூர் அடிகளாகிய அவர் வருவார் காணீர் என்று சம்பந்தப்பெருமான் தான் சிவ பெருமானை கண்ட கோலத்தை பதிகத்தில் பாடியுள்ள இத்தலத்தின் 

இறைவன்: வாய்மையர், வாய்மூர் நாதர், வாய்மூர் அடிகள்

அம்மை:   க்ஷீரோப வசனி  -  பாலின் ன்மொழியாள்

தல விருட்சம்: பலா

தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

வழிபட்டோர்: பிரம்மன், சூரியன், தேவேந்திரன், நவகோள்கள், வால்மீகி முனிவர்.

தியாகேசர்: நீல விடங்கர்.

திருநடனம் : கமல நடனம்.

தேவாரப் பாடல்கள்: தளிரிள வளரென வுமைபாடத்- திருஞானசம்பந்தர்,  எங்கேயென்னை இருந்திடந்தேடி – அப்பர்.

இத்திருவாய்மூர்ப் பெருமானை பிரம்மனும், சூரியனும் ஒன்பது கிரகாதிபதிகளும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இங்கு வருடத்தில் கதிரவன் ஒளி சிவலிங்கத்தின் மீது விழுவதால் அப்போது சூரிய பூஜை நடை பெறுகிறது. சூரிய பூஜை செய்வதால் நேத்திர ஸ்தலமாக விளங்குகிறது. பிறவியிலேயே கண் தெரியாத இளைஞர் ஒருவர் நந்தியாவட்டை பூவை 48 நாட்கள் சிவன் மீது வைத்து பூஜை செய்து அதை அவர் கண் மீது வைத்துக் கொண்டதால் மூன்று மாதங்களில் கண் ஒளி பெற்றார். மூலவருக்கு இத்தலத்தில்  அபிஷேகம் உண்டு. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினாலும், வாய்மூர்நாதர் மேல் வைத்த சந்தனம், விபூதி இவற்றைப் பூசிக் கொண்டாலோ இவர் மருந்தாய்ப் பிணி தீர்க்கிறார். “ருத்ராட்ச பந்தலின் கீழ் அருளுகின்றார் திருவாய்மூர்நாதர்.

 

வடக்கு பிரகாரத்தில் அம்பாள் பாலின் நன் மொழியாள் சிவ பூசைக்காக மலரும்  ருத்ராட்ச மாலையும் தாங்கிய கோலத்தில் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றாள். அம்மனுக்கு வாகனமாக நந்தி இருப்பது ஒரு சிறப்பு. அம்பாளை தேவேந்திரனும், தியாகேசப்பெருமானை வால்மீகி முனிவரும்  வழிபட்டுள்ளனர்.

 

சூரியன் - சாயா தேவியின் புதல்வர்களான யமனுக்கும்,  சனி பகவானுக்கும் இடையே ஒரு சமயத்தில் பகை உண்டானது. சனிக்கு யமன் சாபமளிக்கின்றார். தன் தாய் சாயாதேவியின் ஆலோசனையின் பேரில் சனி பகவான்,  கால பைரவாஷ்டமி தினமான கார்த்திகை மாத தேய் பிறை அஷ்டமியன்று  திருவாய்மூர் வந்து அஷ்ட பைரவரை வழிபடுகின்றார். எனவே அவருக்கு ஈசன் அருளால் கிரகப்பதவி கிட்டியது. எனவே இத்தலம் காசிக்கு இணையான தலமாக  கருதப்படுகின்றது.


அஷ்ட பைரவர்

ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர், ஸ்வர்ண பைரவர் என்று எட்டு பைரவர்கள் வீற்றருளும் தலமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. அஷ்ட பைரவர்களில் அகோர பைரவர் நல்ல பதவியைக் கொடுப்பார். ஆனந்த பைரவர் திருமணத்தடை நீக்குவார். பாதாள பைரவர் மனைக்கட்டு பிரச்சினைகள் தீர்த்து வைப்பார். கால பைரவர் வியாதிகள் தீர்ப்பார்; யம பயம் நீக்குவார். ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் செல்வத்தைக் கொடுப்பார். ஈஸ்வர பைரவர் எதிரிகள் நீக்குவார். உத்தண்ட பைரவரை வழிபட்டால் வழக்குகள் வெற்றி பெறும். பால பைரவர் மழலைச் செலவம் அருளுவார். இங்கு அஷ்ட பைரவரை வேண்டிக்கொண்டு நம்முடைய விண்ணப்பத்தை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அவரிடம் வைத்து விட்டால் நம் வேண்டுதல் நிறைவேறியவுடன் பால் அபிஷேகம் செய்து நம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். தற்போது ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர் மற்றும் பால பைரவர் ஆகிய நான்கு மூர்த்தங்கள் மட்டுமே உள்ளன. மற்ற மூர்த்தங்களுக்கு பதிலாக சுக்குமா தண்டங்கள் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

பைரவரின் அருளால் சாபம் நீங்கப்பெற்ற இந்திரனின் மகன் ஜயந்தன் இத்தலத்தில் சித்திரை மாதம் முதல் வெள்ளியன்று வழிபடுகின்றார்களோ அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். இறைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள் புரிந்தார். இன்றும் சித்திரை மாத முதல் வெள்ளியன்று ஜயந்தன் பூசை நடைபெறுகின்றது. ஞாயிற்று கிழமையன்று பைரவர்களுக்கு ருத்ராபிஷேகம் அல்லது விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட, தோஷங்களினால் தடைபட்ட திருமணம் கூடி வரும். வெள்ளிக் கிழமைகளில் வில்வ பத்திரத்தினால் அர்ச்சனை செய்ய வறுமை நீங்கி வளம் பெறலாம். சனிக்கிழமைகளில் சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி மூலம் வரும் தொல்லைகள் நீங்கும். மற்றும் இத்தல பைரவர்களை வழிபட இழந்த சொத்துக்களை திரும்பக் கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும்.

 

தோரண வாயிலுடன் அமைந்துள்ளது ஆலயம். எதிரே அழகு மிளிர, பரந்து விரிந்து காணப்படுகின்றது தல தீர்த்தமான பாவ விமோசன பிரசண்ட தீர்த்தம். பிரம்மா முதலான தேவர்கள், தாரகாசுரனுக்கு பயந்து பறவை வடிவெடுத்து சஞ்சரிக்கும் போது, இத்தலம் அடைந்து இத்தீர்த்தத்தில் நீராடி, திருவாய்மூர் நாதனை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்ற பெருமை உடையது. இக்குளக்கரையில் திருக்குள வினாயகர் சன்னதி அமைந்துள்ளது.  ஊருக்கு மேற்கு திசையில் சூரியனால் உண்டாக்கப்பட்ட சூரிய தீர்த்தமும், இவ்வாலயத்திற்கு தெற்கே பாயும் அரிச்சந்திரா நதியும் தீர்த்தமாக திகழ்கின்றன.

இராஜகோபுரத்திற்கு வெளியே   வினாயகப்பெருமானுடன் கூடிய  பலிபீடம்,  கொடிமரம்,  நந்தி மண்டபம் அமைந்துள்ளது ஒரு தனி சிறப்பு. ஒரு காலத்தில் இரண்டு பிரகாரங்கள் இருந்திருக்கலாம்.  அடுத்து  மூன்று நிலை இராஜ கோபுரம் ஐந்து  கலசங்களுடன் எழிலாக அமைந்துள்ளது

உள்ளே தென்புறம் மடப்பள்ளி, வடபுறம்   அஷ்ட பைரவர்கள் சன்னதி.  கிழக்கு நோக்கி தியாகர், திருவாய்மூர் நாதர்,  அப்பருக்கு காட்சியளித்த வேதாரண்யேஸ்வரர் என்று மூன்று  சன்னதிகள் மஹா மண்டபம் மற்றும் அந்தராளத்துடன் அமைந்துள்ளன. திருவாய்மூர் நாதர் சுயம்பு, சற்று இடப்புறம் சாய்ந்த வண்ணம் அருள் பாலிக்கின்றார். இவர் சன்னதியில் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கின்றனர். பங்குனி மாதம் 12, 13 நாட்களில் சூரியனின் கதிர்கள் சுவாமி, அம்பாள் திருமேனியைத் தழுவுகின்றன.

மூலவருக்கு தென்புறம்  நீலோற்பலாம்பாள் உடனுறை நீலவிடங்க தியாகேசர், அனைத்து சப்த விடங்கத்தலங்களைப் போலவே ஐயனுக்கு  முன்னே வீர, ஞான கட்கங்கள் மற்றும் நின்ற கோல செப்பு நந்தி அமைந்துள்ளது.  ஐயனுக்கு வலப்புறம் வேதாரண்யேஸ்வருக்கு தனி சன்னதி உள்ளது.  மஹா மண்டபத்தில் தெற்கு நோக்கி ஆடல் வல்லான்  புதுமையான உன்னத கோணத்தில் அட்டாணிக்கால் இட்டு சாந்தமே வடிவாக அருட்காட்சி அளிக்கின்றார். அருகே  தியாகேசப்பெருமானுக்கு கட்டுப்பட்டு வகிரகங்கள் ஒரே வரிசையில் காட்சி அருள்கின்றனர்.


                       

யோக தட்சிணாமூர்த்தி 

திருவாய்மூர்ப்பெருமானின் கருவறைச் சுவற்றில் நான்கு தூண் மண்டபத்தில் வேதமும் வேதப் பொருளும் உரைத்த  ஞான தட்சிணா மூர்த்தியும், தியாகேசர் கருவறைச் சுவற்றில் முழந்தாள் மீது கரம் வைத்து நந்தியின் மேல் அமர்ந்துள்ள  காம தகனராகிய யோக தட்சிணா மூர்த்தியும் காட்சி தருகின்றனர். முயலகன் மாறியுள்ளான். யோக தட்சிணா மூர்த்தி கூரை கூம்புக் கூரையாக அமைந்துள்ளது. திருவாய்மூர்ப் பெருமான்  கருவறைப் பின்புறச் சுவற்றில் அடிமுடி காண இயலா லிங்கோற்பவரும்,  தியாகர் கருவறைப் பின்புறச்  சுவற்றில் மகா விஷ்ணுவும் அருள் பாலிக்கின்றனர். தெற்கு கோஷ்டத்தில்  வினாயகர் இரு பக்கமும் அடியார்கள் வணங்ர்த்தன கோலத்தில் எழுந்தருளியுளார். வட கோஷ்டத்தில் துர்க்கை வித்தியாசமான கோலத்தில் திருக்கரத்தில் ஒலை சுவடி ஏந்தி, சிம்ம வாகனத்துடன் எழிலாக அருள் பாலிக்கின்றாள். பிரதான கணபதி சன்னதி தென்மேற்கிலும், மேற்கில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதியும், வடமேற்கில் கஜலக்ஷ்மி சன்னதியும் அமைந்துள்ளன. அம்பாள் சன்னதி ஐயனுக்கு இடப்புறம் அமைந்துள்ளது.

பல சித்தர்கள் வாய்மூரை வழிபட்டுப் பூசித்துள்ளனர். வாய்மூர்ப் பெருமானாகிய வாய்மூர் நாதரையும் நீல விடங்கரையும் வழிபட்ட வால்மீகிச் சித்தர் என்பவர் பிரதிட்டை செய்து பூசித்த லிங்க சன்னதி பிரகாரத்தில் உள்ளது. வால்மீகிச் சித்தர் சிவ பூசை செய்யும் காட்சி வாய்மூர் நாதர் கருவறைச் சுவற்றில் காணப்படுகிறது. சிவ பூசைக்காக சித்தர் உண்டாக்கிய கிணறு சித்தர் கூபம், சித்தர் தீர்த்தம் என்ற பெயரில் பிரகாரத்தில் உள்ளது.


திருவாய்மூருக்கு ஒன்றாக வந்து தீர்த்தம் உண்டாக்கி சிவ பூசை செய்த  சூரியன் முதல் கேது வரையிலான  கிரக தேவர்கள் பிரகாரத்தில் வரிசையாக உள்ளனர். இவர்கள் பிரதிட்டை செய்து தொழுது வழிபட்ட லிங்க மெய்ப் பொருள் பிரகாரத்தில் உள்ளது. அருகே சூரியனும் சந்திரனும் உள்ளனர். அப்பருக்கும் சம்பந்தருக்கும் காட்சி கொடுத்த ஆடல் வல்லான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இவரது வாசலில் வியாக்ரபாதர், பதஞ்சலி சுதை சிற்பங்கள் அருமை. வல்லப கணபதி, துவார கணபதி மற்றும் காட்சி கொடுத்தார்  வாயிலில் விரல் காட்டி விநாயகர் கணபதி அருளுகின்றார். நாராயணி வழிபட்ட லிங்கம் அருகில் சங்கு சக்கரத்துடன் நாராயணி அருளுகின்றாள். சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன, வைகாசியில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. 

அல்லிய மலர்புல்கு விரிகுழலார் கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச் சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே

பொருள்: அடுக்கடுக்கான இதழ்களை உடைய மலர்களைச் சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம் திருவடிகளைப் பரவ நள்ளிரவில் அனலேந்தி ஆடும் அவ்விறைவர் அம்மகளிரது பரவுதலை ஏற்றருளுபவர். வேதங்களைப் பாடிக்கொண்டு, இளமதி சூடி ஒரு காதில் தோடணிந்து புலித்தோலுடுத்தி வருவார். அவ்வாய்மூர் இறைவரைக் காணீர்  என்பதில்  மகா சங்கார தாண்டவத்தைப் பல்வேறு கூறுபாடுற்ற சத்திகள் ஒருங்கு சேர்ந்து காணும் உண்மை உணர்த்தியுள்ளார்  தம்முடைய பதிகத்தில் ஆளுடையபிள்ளையார். இனி அப்பர் பெருமானுக்கும், சம்பந்தப்பெருமானுக்கும் தமது தரிசனத்தை இறைவன் நல்கியதைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.


                                             

வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில், மறைக்காட்டு நாதர் ஆலயத்தின் அடைக்கப்பட்ட திருக்கதவங்களை தனது கெஞ்சு தமிழால் பாடித்திறக்க வைத்தார் திருநாவுக்கரசப் பெருமான்.  மீண்டும் அக்கதவங்கள் மூடித் திறக்கும் படியாக கொஞ்சு தமிழில் பாடினார் அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப்பிள்ளையான திருஞானசம்பந்தர்,  ஒரு பாடல் பாடியவுடனே கதவங்கள் அடைபட்டன.  வாகீசப்பெருமான் பத்து பாடல்களைப் பாடிய பின்னரே கதவுகள் திறந்தன. ஆனால் ஆளுடையப்பிள்ளை ஒரு பாடல் பாடிய உடனே கதவுகள் அடைபட்டன  இதை எண்ணி நெஞ்சுருகி  நின்றார் அப்பர் பெருமான். தனது பாடலில் இனிமை குறைந்ததோ என்று எண்ணிக் கலங்கி தமது திருமடத்தில் கண் மூடிப்படுத்திருந்த அப்பர் பெருமான் முன் தோன்றிய சிவபெருமான் “திருவாய்மூருக்கு  வா என்னோடு” என்று அழைத்துச்சென்றார்.  தமது பதிகத்தில் அப்பர் பெருமான் இத்திருவிளையாடலை இவ்வாறு பாடுகின்றார்

எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாள மருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனா ரதென்கொலோ.

பொருள்: தென்னை மரங்ள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர். என்னை எங்கே என்று தேடி, இருந்த இடத்தைக் கண்டு கொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர், திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்ன?  மேலும்

மன்னு மாமறைக் காட்டு மணாளனார்

உன்னி யுன்னி யுறங்குகின் றேனுக்குத்

தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி

என்னை வாவென்று போனார தென்கொலோ?

பொருள்: எம்பெருமானையே நினைந்து நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமையுடைய மறைக்காட்டுறையும் மணவாளர் தன்னை வாய்மூர் இறைவனும் ஆனதை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்ன? என்று வியந்து கனத்த இருட்பொழுதில் ஈசன் மின்னொளி காட்டி முன் செல்ல பின்னே சென்றார். அப்பரைக் காணாத சம்பந்தப்பெருமான் இருளில் அவர் அவர் தனியாகச் செல்வதை உணர்ந்து அவர் பின்னே தானும் சென்றார். வழிகாட்டிச் சென்ற ஒளிச்சுடர் திருவாய்மூர் பொற்கோவில் அருகில் சென்றவுடன் மறைந்து விட்டது. ஆளுடையப்பிள்ளையாரும் வந்து சேர்ந்தார். அப்போது வாகீசப்பெருமான்

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.

பொருள்: வேதங்களாற் பூசிக்கப் பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும், செந்தமிழ்ப் பாடலை உறுதியுடன் பாடி அடைப்பித்தவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் தோ நின்றார்; திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ? இவர் பித்தரேயாவர் காணீர் என்று பாடியவுடன் பரமன் உமையுடன் கூடி இடபத்தின் மேல்  திருடனமாடியபடி இருவருக்கும் திருக்காட்சி அளித்தார். அம்மையப்பரை தரிசனம் செய்த ஆனந்தத்தில் சம்பந்தப்பெருமான்  

சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

 

பொருள்: பிறை சூடியவராய், சுடர் முடியவராய், திருநீறு பூசியவராய் மழுவேந்தியவராய், கொன்றை மாலை சூடியவராய், பாம்பும் முப்புரி நூலும் அணிந்தவராய், காந்தள் போன்று முகிழ்த்த கையினராகி, தாருகாவன முனி ன்னியர் பலி பெய்யுமாறு பிரம்ம கபாலத்தை ஏந்தியவராய் திருவாய்மூர் இறைவர் வருவார் என்று பதிகம் பாடி அருளினார். அப்பர் பெருமானும்

பாட அடியார் பரவக் கண்டேன் பத்தர் கணம்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன் அங்கை அனல்கண்டேன் கங்கையாளைக்
கோடல் அரவார் சடையில் கண்டேன்கொக்கினிதழ் கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே!!

பொருள்: அடியார்கள் பாடிப் பரவவும் பத்தர் கணம் சூழ்ந்து நிற்கவும் பூத கணங்கள் நெருங்கவும் ஆடற்கேற்ற முழவம் முழங்கவும் அழகிய திருக்கரத்தில் அனல் ஏந்தியவரும், காந்தட்பூவும்,   அரவமும் பொருந்திய சடையில் கங்கையைத் தரித்தவரும், கொக்கிறகைச் சூடியவரும், கொன்றை மாலையை அணிந்தவரும்,  பிரம்மனின் உலர்ந்த தலையோட்டினைக் கையில் கொண்டவரும் ஆக வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்  என்று தான் கண்ட கோலத்தை அற்புதமாகப் பாடுகின்றார்.

                             

அப்பர் பெருமானுக்கு இறைவன் முதன் முதலாக தரிசனம் அளித்த தலம் என்பதால் மற்ற தலப்பதிகங்களிலும் க்ஷேத்திரக் கோவையிலும் திருவாய்மூரைப் போற்றிப் பாடியுள்ளார். திருவாய்மூர் பெருமானை “பரிந்தேத்தும் அன்பருக்குத் தக்க பரிசளிப்பார்” என்று அருளுகிறார். சம்பந்தப்பெருமானோ எத்துன்பத்தில் ஒருவர் இருந்தாலும் “திருவாய்மூர் நாதா என்று நினைத்தால், உடனே வந்து அருள் புரிவார் என்று அறுதியிடுகின்றார். பட்டினத்தாரும், இராமலிங்க வள்ளலாரும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். வள்ளலார் தம் பாடலில் “காய்மூர்க்கரேனும் கருதிற் கதி கொடுக்கும் வாய்மூர்க் கமைந்த மறைக்கொழுந்தே” என்று போற்றுகிறார்.



நிதி பற்றாக்குறை காரணமாக பல வருடங்களாக  இங்கு பெருந்திருவிழாக்கள் நடைபெறுவதில்லை. வைகாசி பெருந்திருவிழா ஏகதின உற்சவமாகக் கொண்டாடப்படுகின்றது.  அன்று பகலில் சந்திரசேகரர் தீர்த்தம் கொடுப்பதும் இரவில் பஞ்சமூர்த்தி விழாவும் நடைபெறுகின்றன.  மார்கழித் திருவாதிரையன்று தியாகராஜர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றார்.

பல்லவ, சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்ட இவ்வாலயத்தில் சோழர் கால முப்பதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பராந்தக சோழன் இத்தலத்தில் சதய ட்சத்திரத்தில் திருவாய்மூர் நாதருக்கு திருமஞ்சனம் நடத்திய பின்னரே மகுடம் சூட்டிக்கொண்டான். திருவாய்மூரில் நீல விடங்கரை தரிசித்த நாம் அடுத்து திருக்கோளிலியில் பிரம்ர நடன அவனி விடங்கரை தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.

திருப்பாத தரிசனம் தொடரும் . . . ..

2 comments:

கோமதி அரசு said...

//சம்பந்தப்பெருமானோ எத்துன்பத்தில் ஒருவர் இருந்தாலும் “திருவாய்மூர் நாதா” என்று நினைத்தால், உடனே வந்து அருள் புரிவார் என்று அறுதியிடுகின்றார்.//


இந்த துன்பமான காலத்தை கடக்க திருவாய்மூர் நாதன் அருள்புரிய வேண்டும்.

விரிவான விளக்கமான பதிவு. படங்கள் அருமை. சப்தவிடங்கன் தலங்களை பார்த்து இருக்கிறோம்.

S.Muruganandam said...

இடையில் கணனி பழுதாகிவிட்டதால் இவ்வளவு காலம் பதிவிடமுடியவில்லை. இப்போது மறுபடியும் தொடர்கிறேன். மன்னியுங்கள் அம்மா.

//இந்த துன்பமான காலத்தை கடக்க திருவாய்மூர் நாதன் அருள்புரிய வேண்டும்.//

அடியேனும் அவ்வாறே சிவபெருமானிடம் வேண்டுகிறேன்.