Showing posts with label சங்காபிஷேகம். Show all posts
Showing posts with label சங்காபிஷேகம். Show all posts

Friday, May 1, 2020

திருப்பாத தரிசனம் - 30

      திருநள்ளாறு – உன்மத்த நடன நக விடங்க செண்பகத் தியாகேசர் - 2







இத்தலத்தின் மற்றொரு பதிவைக் காண இங்கு செல்லவும் :  திருநள்ளார்  -1



திருநள்ளாற்றின் சிறப்புமிகு தீர்த்தங்கள்: ஆதி காலத்தில் திருள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் இருந்தன என்று தலபுராணம் கூறுகின்றது. பிரம்மன், கலைமகள், அன்னப்பறவை, இந்திரன், திசைபாலர் எண்மர் தத்தம் திசைகளில் லிங்கமும் தீர்த்தமும் அமைத்தனர். மேலும் திருமால், காசிபன், வாயு, நளன், அகத்தியன் உருசி, போஜன், பாஞ்சாலன் ஆகியோரும் நள்ளாறரை வழிபட்டுள்ளனர்.  இத்தலத்தின் தீர்த்த நீர் பட்டாலே வினை போம் என்பது  ஐதீகம். 

மஹா விஷ்ணு வழிபட்ட போது அவர் பெயரால் உருவாக்கியது விஷ்ணு தீர்த்தம். பிரம்மனுக்கு விரும்பிய வரத்தை அளித்து சிருஷ்டிகர்த்தாவாக மீண்டும் நியமித்தார் எம்பெருமான். எனவே பிரம்மன் தன் தண்டாயுதத்தால் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு உருவாக்கிய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகும். இது கோயிலுக்கு நேர் கிழக்கில் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராட பிரம்மபதம் கிட்டும் என்பது ஐதீகம். பிரம்மனோடு கூட நாமகளாம் சரஸ்வதியும் சிவபூஜை செய்து நலம் பல பெற்றாள். சரஸ்வதி(வாணி) தீர்த்தம் அம்மன் சன்னதிக்கு எதிரே மதிலை ஒட்டி அமைந்துள்ளது. இதில் நீராடுபவர்களுக்கு அனைத்து கலை ஞாங்களும் கிட்டும். பேச்சுதிறன் பெற  வாணி தீர்த்தம் ஆடுக என்கிறது தலபுராணம். 

பிரம்மனின் வாகனமான அன்னப்பறவையும் சிவபூஜை செய்து சிறப்புகளை அடைந்தது. ஹம்ஸ தீர்த்தம் ஆலயத்திற்கு வடக்கில் அமைந்துள்ளது. அன்ன தீர்த்தம் பசுக் கொலை பாவமும் தீர்க்கும். ஆவணி பௌர்ணமி மூழ்க குறைகள் நீங்கும்.  இத்தலத்தின் மற்ற தீர்த்தங்கள் தெற்கு மட விளாக குளம் மற்றும் நள தீர்த்தம் ஆகும். நள தீர்த்தத்தில் நீராட சகலவிதமான துன்பங்களும் அனலிடைப்பட்ட மெழுகு போல் மறைந்து விடும். அருகில் நளனுக்காக சிவபெருமான் தன் சூலாயுதத்தால் கங்கையை வரவழைத்த நளகூபம் அமைந்துள்ளது. இதில் யாரும் நீராடுவதில்லை. இறைவன் அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.


பாராய்க் கனலாய் நீராகிப் பகரும் காலாய் வானாகிச்
சீரார் தருப்பை வனமூலம் சிறந்த முளையாய்ச் செழுங்கனியாய்
வேராய் வித்தாய் அடங்காத வெவ்வே ருவாய் உருவாகிப்
பேராய் என்நா வினில்ஊறும் பெம்மான் எனவும் பிறப்பறுமே -  என்று பாடல் பெற்ற இத்தலத்தின் மகிமையைப்பற்றி கூறும் புராணம் ஒன்று தமிழில் உள்ளது.  அதில் உள்ள சில வரலாறுகள். அசுவமேத யாகம் செய்த கலிங்க நாட்டு அரசனைக் காண அந்தணன் ஒருவன் சென்றார். விதி வசத்தால்  அவர்  காத்திருப்பதை அரசன் மறந்துவிட்டான். வெகு நேரம் காத்திருந்த அந்தணர் கோபமுற்று அரசனும் அவனது மனைவி மக்களும் காட்டு யானைகளாக மாற சாபம் கொடுத்தார். மன்னனும், மனைவி மக்களும் காட்டு யானைகளாக  காட்டில் திரிந்து கொண்டிருந்தனர். நாரதமுனிவர் அவர்களை சந்தித்து உண்மை நிலைமையை  உணர்த்தி, சாப விமோசனம் பெற  திருநள்ளாறு செல்ல  பணித்தார் அவர்களும்  திருநள்ளாறு சென்று மாசி மக  நாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி  இறைவனை துதித்து  சாப விமோசனம் பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தனர்.

கோதாவரி நாட்டு மன்னன் தூயகண்டவர்மன் புத்திர காமேஷ்டி யாகம் செய்து மகப்பேற்றை அடைந்தான். அதற்காக அவன் அந்தணர்களுக்கு பல்வேறு தானங்கள் செய்தான். அப்போது இரு அந்தணர்களுக்கிடையே ஏற்பட்ட பூசலில் ஒரு பசு மாட்டை கொன்று விட்டனர். அதனால் அவர்களுக்கு கோஹத்தி பாவம் ஏற்பட்டு கானகத்தில் அலைந்து கொண்டிருந்தனர்.   உரோசம முனிவர் திருநள்ளாறு வந்து ஆங்கு காலனை காலாலுதைத்த முக்கண் கவுளை வணங்குமாறு அறிவுரை கூறினார். அவர்கள் திருநள்ளாறு வந்து  கோவிலின் அருகில் நின்று கொண்டிருந்தனர். தீர்த்தங்களில் நீராடி வருபவர்களின் சிரசிலிருந்து வீழ்ந்த நீர் அவர்களின் மேல் பட அவர்களின் பாவம் நீங்கியது.  அவர்கள்  அத்தீர்த்தங்களில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி அவரின்  திருவருள் பெற்று சிவலோகம் அடைந்தனர்.

ஒரு சமயம் அவந்தி நாட்டு மன்னன் உருசிராஜன், பாரத்வாஜ முனிவரை அணுகி வணங்கி, தானங்களில் சிறந்தது எது என விளக்குமாறு வேண்டினான். அதற்கு அவர் தானங்களில் சிறந்தது அன்னதானம். அதைவிடச் சிறந்தது காலமறிந்து அன்னதானம் அளித்தல், அதைவிடச் சிறந்தது காவிரி நதி தீரத்தில் அன்னதானம் அளித்தல். அதைவிட உயர்ந்தது சிவாலயத்தில் அன்னம் பாலித்தல், அச்சிவாலயங்களுள் திருநள்ளாறு ஆலயத்தில் அன்னதானம் அளித்தால் அதுவே உலகில் உயர்ந்தது என்றார். அத்தலத்தில் முசுகுந்தர் விடங்கப்பெருமானை நிறுவியுள்ளார், அவரை வணங்கி பின்னர் கோபுரத்து சனி பகவானை பூசை செய் உன் வினை தீரும் என்றார்.  அவ்வாறே உருசிராஜனும் திருநள்ளாறு சென்று தனுர் மாத பௌர்ணமியில் அன்னதானங்களோடு அடியவர்களுக்கு  வேண்டுவன கொடுத்து இறைவனைத் துதித்தான்.  இறைவனும் மகிழ்ந்து பல்வேறு வரங்கள் தந்து மறைந்தான்.

காம்பீலி நாட்டில் வாழ்ந்த ஒரு வணிகனின் இரு மைந்தர்கள் விதி வசத்தால் பரத்தையர் பால் சென்று செல்வம் எல்லாம் இழந்து, களவாடி பிடிபட்டு சிறை சென்று, அங்கிருந்து தப்பி கானகம் சென்று அலையும் காலத்தில் ஒரு அந்தணர் அவர்களுக்கு நற்புத்தி கூறி திருநள்ளாறு செல்லுமாறு அறிவுறுத்த அவர்களும் திருநள்ளாறு வந்து முக்குளத்தில் நீராடி மூன்று மாதம் நள்ளாற்றில் தங்கி அங்கேயே மரணமடைய, திருநள்ளாற்றில் வழிபட்டு இறந்தால் நற்பேறு பெற்றனர். இரண்டாம் பிரகாரத்தின் மதில் சுவற்றில் இவ்வரலாறுகள் எல்லாம் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.


மூவராலும் பாடல் பெற்ற தலம்:
சிட்டமர்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ண வெண்ணீறாடுதன்றியும் போய்
பட்டமர்ந்த சென்னி மேலோர் பால் மதியஞ்சூடி
நட்டமாடும் நம் பெருமான் மேயது நள்ளாறே !
என்று திரிபுர அசுரர்களின் அழியாத கோட்டைகள் மூன்றனையும் தனது நெற்றிக் கண்ணினால் எரித்த, பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறாடி, செஞ்சடையிலே இளமதியஞ் சூடிய எம்பெருமான் உன்மத்த நடனம் செய்யும் தலம் திருநள்ளாறே என்று ஞான சம்பந்தப் பெருமானாலும், மற்றும் அப்பர், சுந்தராலும் பாடல் பெற்றது இத்தலம். தேவாரத்தலங்களில் காவிரி தென் கரை தலங்களில் 52வது தலம். சம்பந்தர் நான்கு பதிகங்களும், வாகீசர் இரண்டு பதிகங்களும் சுந்தரர் ஒரு பதிகமுமாக மொத்தம் ஏழு பதிகங்கள் பெற்ற தலம்.'

கோவில் அமைப்பு:                     
திருநள்ளாற்றுக் கோவில் அழகும், அருளும் நிறைந்த ஓர் கலைக்கோவிலாகும். கோவிலில் நுழையும் போது இப்போது புது ஏழு நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கின்றது. இந்த இராஜ கோபுரத்திற்கும் அடுத்துள்ள இரண்டாம் கோபுரத்திற்கும் இடையில் உள்ள மண்டபத்தின் தூண்களில் டராஜப்பெருமானின் பல்வேறு ஆடற்கோலங்கள் எழிலார் சுதைச் சிற்பங்களாக மிளிர்கின்றன.  இம்மண்டபத்தைக் கடந்து சென்றால் மூன்று நிலை ராஜ கோபுரத்தின் வழியாக கோவிலுக்குள் நுழைகின்றோம் இவ்வாயில் இடப வாயில் என்றும் அழைக்கப்படுகின்றது. நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் தியாகரை தனது நெஞ்சில் வைத்து வழிபடும் மஹாவிஷ்ணுவின் பள்ளி கொண்ட திருக்கோலத்தை தரிசிக்கின்றோம். வெளி பிரகாரத்தின் மதில் சுவர்களில் நளனுடைய சரித்திரமும் மற்றும் இத்திருக்கோவிலுக்கு சம்பந்தப்பட்ட மற்ற வரலாறுகளும் ஓவியமாக வரையப் பட்டுள்ளன. வெளிப்பிரகாரத்தில் நந்தவனம், இளவேனில் மண்பம், அருள்மிகு காளத்தியப்பர் சன்னதி ஓரு சிற்றாலயமாக எழிலுற அமைந்திருக்கிறது. காளத்தியப்பர் சிவஜோதியாக வீற்றிருக்கிறார், கற்பக விநாயகர் ஆலயமும் இச்சுற்றில் அமைந்துள்ளது. சனி பகவானுக்கு எள் விளக்குப் போடும் இடமும் உள்ளது. இத்தலம் சனி பகவானுக்கு மட்டுமில்லாமல் ராகு, கேது இவர்களுக்காகவும் வழிபட வேண்டிய தலமாகும்.



ஸ்ரீசனிபகவான் சன்னதி இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்து. பொதுவாக சனிபகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும்.  உக்ரமூர்த்தியாகிய சனீஸ்வரன் இங்கு அனுக்கிரக தேவதையாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகின்றார். ஏனைய நவக்கிரகங்கள் இத்தலத்தில் தனியாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பதும் இவருடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.

நளச்சக்கரவர்த்தியை துன்புறுத்தி கொண்டிருந்த ஸ்ரீசனிபகவான் நளன் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரை வந்து வணங்கி தரிசித்தவுடன் விலகி விடுகின்றார். பின்பு எம்பெருமானுடைய அருளாணையின் வண்ணம் பக்தர்களுக்கு அருள் வழங்கும் அனுக்ரக மூர்த்தியாக ஈஸ்வரப்பட்டம் பெற்றுக்கொண்டு துவார தேவதையாக இரண்டாவது கோபுர வாயிலில் விளங்குகின்றார்.

ட்பிரகாரத்தில் தியாகருக்கு எதிராக நகவிடங்கப் பெருமாளை வணங்கும் சுந்தர மூர்த்தி நாயனார் சன்னதிதெற்கு பிரகாரத்தில் அறுபத்து மூவரின் திருவுருவச் சிலைகளும், நளன் வழிபட்ட நள லிங்கம், கலி நீங்கப்பெற்ற நளன் ஆகியோரை தரிசனம் செய்யலாம்மேற்குப் பிரகாரத்தில் சொர்ண விநாயகரின் சன்னதியும், சப்த விடங்கத் தலங்களின் சிவலிங்கங்ளின் சன்னிதியும், அருணகிரி நாதரால் பாடல் பெற்ற சிங்கார வேலவரின் சன்னதி உள்ளதுதேவியர் இருவருடன் எழிலாக அருட்காட்சி தருகின்றான் முத்துக்குமரன், இவரை

நச்சு வெண்பட மீதணை வார்முகில் பச்சை புய னார் கரு டாசனர்
      நற்க ரந்தநு கோல்வளை நேமியர் மருகோனே-
நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் பெருமாளே.என்று  அருணகிரி நாதர் திருப்புகழில் பாடியுள்ளார். அடுத்து  திருமகள் சன்தியை தரிசிக்கின்றோம், வடக்கு பிரகாரத்தில் தியாகர் எண்ணைக் காப்பு கண்டருளும் எண்ணைக் காப்பு மண்டபம் அழகிய சிறிய சிற்பங்களுடன் கூடிய தூண்களுடன்  அமைந்துள்ளது. மேலும் தல விருட்சமான தர்ப்பையும் உள்ளது. இப்பிரகாரத்தின் இறுதியில் தெற்கு நோக்கி ஆடல் வல்லானின் சன்னதி அமைந்துள்ளது. ஈசான மூலையில் பெரிய உருவில் பைரவர் அருள் பாலிக்கின்றார். கிழக்கு சுற்றில் மேற்குப் பார்த்தபடி சூரியன் சன்னதி உள்ளது.

ஐயனின் கோட்டத்தில் ஆலமர் செல்வனும், சிறிய மஹா விஷ்ணு, பிரம்மா உருவங்களுடன் லிங்கோத்பவரும், பிக்ஷாடணரும், துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர். கருவறையின் வடபால் கருணை வடிவமாக துர்க்கை விளங்குகிறாள்.  துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளி, நவராத்திரி, பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் சப்த ரிஷிகள் பூசித்த லிங்கங்கள் மற்றும் சப்த விடங்க தலங்களின்  லிங்கங்களுடன் மொத்தம் 17 சிவலிங்கங்களை தரிசிக்கலாம். சோழர் காலத்திய கல்வெட்டுகள்  இவ்வாலயத்தில் உள்ளன.

கோவிலை இவ்வாறு வலம் வந்தபின் கொடி மரத்தின் முன் நாம் நிற்கின்றோம். பலி பீடம் சற்று விலகியுள்ளதைக் காணலாம். தியாகர் மற்றும் தர்ப்பாரண்யேஸ்வரரின் சன்னதிகள் உயரமாக அமைந்துள்ளன. மற்ற விடங்கத்தலங்களைப் போலவே தர்ப்பாரண்யேஸ்வரருக்கு வலப் பக்கத்திலே தியாகரின் சன்னதியும் அவருக்கு நேர் எதிரே பரவையார் உடனாய சுந்தர மூர்த்தி நாயனாரின் சன்னதியும் அமைந்துள்ளது. மரகத விடங்கர் இரும்புப் பெட்டியிலே வைத்து பாதுகாக்கப்படுகின்றார். அபிஷேக காலங்களில் மட்டுமே அவரது தரிசனம் கிடைக்கும்.

போகமார்த்த பூண் முலையாள் அம்பாள் சன்னதி முதல் பிரகாரத்தில் சோபன மண்டபத்தில் அமைந்துள்ளது. சனீசுவர பகவான் சன்னதி கிழக்கு முகமாய் அம்பாள் சன்னதிக்கு முன்புறம் அமைந்துள்ளது. திருமறைக் காட்டிலிருந்து மதுரைக்கு சென்று  வெப்பு நோயால்  அவதிப்பட்ட கூன்பாண்டியனை திருநீற்றுப் பதிகம் பாடி அவனது வெப்பு நோயை நீக்கி, அவனை நின்றசீர் நெடுமாறனாக்கிய பின்னும் சமணர்கள் அனல் வாதத்திற்கு அழைத்த போது இப்பச்சைப் பதிகம்  வேகாமல் அப்படியே நின்றது. இவ்வாறு சைவ சமயத்தின் புணருத்தாரணத்திற்கு பிராணனாக இருந்த இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் அம்பிகை பிராணேஸ்வரி, பிராணாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றாள். அத்திர நயனி என்றொரு திருநாமமும் அம்பாளுக்கு உண்டு. அம்மையின் தனி சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது, அதற்கு அடுத்து பள்ளியறையும் அமைந்துள்ளது. பள்ளியறை முழுதும் பல கோணங்களில் அமைந்துள்ள கண்ணாடிகளில் அம்மையின் முழு உருவத்தையும் காண முடிகின்றது.


கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்:

மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமல னைஅடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை யருளித் தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொருள்:  உமையம்மைக்கு உடம்பின் இடப் பக்கத்தைக் கொடுத்தவனும், மாணிக்கம் போன்றவனும், தன்னைப் பணிகின்றவர்களது வினையை அழிக்கின்ற, வேத முதல்வனாய் உள்ளவனும், வேதத்தின் வழி வேட்கின்ற வேள்வியை உடையவர்கள் வணங்குகின்ற தூயவனும், அடியேனுக்கு எளிமையாய்க் கிடைத்த தூதனும், தன்னை எனக்குத் தோழமை முறையினனாக அளித்து, அடியேன் செய்த குற்றங்களைப் பொறுக்கும் தலைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன். ஒன்றையும் நினையேன் என்று வன்தொண்டர் பாடிய இத்திருக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜை நடைபெறுகின்றது.  காலையில் சூரிய பகவானுக்கு பூஜை நடந்தபின் ஐயனுக்கு திருப்பள்ளியெழுச்சியுடன் மற்ற பூஜைகள் தொடங்குகின்றன.

இத்திருக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் முதல் நாள் தியாகருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. வைகாசி மாதம் வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. முதல் ஐந்து நாட்கள் வினாயகர் உற்சவமும் அடுத்த ஐந்து நாட்கள் முருகர் உற்சவமும் அதற்கடுத்த 4 நாட்கள் அடியார் உற்சவமும் நடைபெறுகின்றது. பின் செண்பக தியாகரின் உற்சவம், ஐந்தாம் திருநாள்  பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர தரிசனம் (தெருவடைச்சான் சப்பரம்)  சேவை தந்தருளுகின்றனர். தங்க ரிஷப வாகனத்தில் அருட்காட்சி அருளுகின்றார் எம்பெருமான். ஏழாம் நாள் திருத்தேரோட்டம், பஞ்ச மூர்த்திகளுக்குமாக ஐந்து தேர்கள் வலம் வருகின்றன.
இரவே சொர்ண விநாயகர், வள்ளி – தேவசேனா சமேத முருகர், சண்டிகேஸ்வரர்களுடன்  சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு உன்மத்த நடனத்துடன் எழுந்தருளும் தியாகர் மற்றும் நீலோத்பலாம்பாள்  மறு நாள் அதிகாலை வடம் பிடிக்கபட்டு தேரோட்டம் முடித்து, எண்ணெய்க் காப்பு மண்டபம் எழுந்தருளி பிராயச்சித்தாபிஷேகம் கண்டு யதாஸ்தானம் திரும்புகின்றனர். பாரத் மின் மிகு நிறுவனத்தினரின் மூலம்  திருத்தேர்கள்  இரும்பு சக்கரங்கள் மற்றும் ஹைட்ராலிக் பிரேக்குகளுடன் புதிக்கப்பட்டதால் தற்போது தேரோட்டம் ஒரே நாளில் முடிந்து விடுகின்றது. திருநள்ளாறா தியாகேசா என்று பக்தர்கள் தேர்களை இழுக்கும் நாமும் அவர்களுடன் கலந்து கொண்டு தேரை இழுப்பதே ஒரு இனிமையான அனுபவம்.

பிராயச்சித்தபிஷேகத்தின் போது மரகத விடங்கரையும் எண்ணைக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்கின்றார். அப்போது அவரை நாம் நீண்டநேரம் தரிசிக்கலாம். மிகவும் விஸ்தாரமாக அபிஷேகம் நடக்கின்றது. காணக்கொடுத்து வைத்திருக்க வேண்டும். அடியேனுக்கு பலமுறை ஐயனின் தேரோட்டத்தையும் அபிஷேகத்தையும் தரிசிக்கும் பாக்கியத்தை இறைவன் அருளினார் என்பது அவரது கருணையே.

மறு நாள் பிரம்ம தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடைபெறுகின்றது. தெப்போற்சவம் முடிந்தவுடன், சனி பகவான் தங்க காக வாகனத்தில் வீதி உலா வருகின்றார். அன்றுதான் நளனுக்கு சனி நீங்கியதாக ஐதீகம். மறு நாள் தியாகர் இடையனுக்கு காட்சி கொடுத்த லீலை நடைபெறுகின்றது. வைகாசி விசாகத்தன்று காலை நடராஜர் பிரம்ம தீர்த்ததிற்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்க  பிரம்மோற்சவம் நிறைவடைகின்றது.



தியாகேசர் – நீலோத்பலாம்பாள் திருத்தேர்கள்


ஆனி மாதம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடி மாதம் எம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி நாயனாரின் உற்சவம் நடைபெறுகின்றது. புரட்டாசி மாதம் பௌர்ணமி அன்று தியாகருக்கு "நிறைபணி விழா" மிக சிறப்பாக நடை பெறுகின்றது. பிராணேஸ்வரிக்கு 9 நாட்கள் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றது. ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டி உற்சவம். கார்த்திகை சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும் நிறை வாரம் 1008 சங்காபிஷேகமும் நடை பெறுகின்றது. கார்த்திகை தீபத்தன்று பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளி சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது. மார்கழி மாதம் பத்து நாள் "ஆருத்ரா தரிசன" திருவிழா நடை பெறுகின்றது தினமும் இரவு மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இசைக்கப்படுகின்றது. திருவாதிரை நாள் அருணோதய காலத்தில் ஒரே சமயத்தில் தியாகருக்கும் சிவகாம சுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கும் ஏக காலத்தில் அபிஷேகம் நடை பெறும் அது மற்ற எக்கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சி. மாசியில் மஹாசிவராத்திரியன்று இரவு நான்கு ஜாம அபிஷேகம் மட்டுமல்லாமல், சந்திரசேகரர்  தங்க ரிஷப வாகனத்தில் அருட்காட்சி அருளுகின்றார். மேலும் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

எல்லாரோலும் நன்கு அறியப்பட்ட இத்தலத்தின்  திருவிழா சனிப் பெயர்ச்சியாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது இத்திருவிழா கொண்டாடப்படுகின்றது. சனி பகவானுக்கு விசேஷ ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றது. பின்னர் அவர் தங்க காக வாகனத்தில் காட்சி தருகின்றார். சனிப் பெயர்ச்சியின் போது இந்தியாவெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வருகின்றனர்.


உள்ளா றாததோர் புண்டகரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை கமழ் சடை
நள்ளா றாஎன நம் வினை நாசமே!

பொருள்: சோதி வடிவாக விளங்குகின்ற தாமரைப் பாதங்களை உடைய கொன்றை மாலை சூடிய நள்ளாற்றின் சிவபெருமானே என்று நாம் கூற நம் விணைகள் அனைத்தும் அழிந்துபடும் என்று அப்பர் பெருமானின் கூற்றுக்கிணங்க நாமும் திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரையும், பிராணாம்பிகையையும், நக விடங்க செண்பக தியாகரையும், சனீஸ்வரரையும் வழிபட்டு நம் வினைகள் நீங்கி நலம் பெறுவோமாக. அடுத்து புவனி விடங்கராக எம்பெருமான் அருள் பாலிக்கும் திருமறைக்காடு திருத்தலத்தை தரிசிக்கலாம் அன்பர்களே.

                                                              திருப்பாத  தரிசனம் தொடரும் . . . . .


Sunday, November 27, 2016

கார்த்திகை சோமவார விரதம்


 
அம்மையப்பர் 

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா இராசியில் நீச்சம், கார்த்திகை மாதத்தில் நீச்சம்  மாறி உச்சம் ஆகிறார் எனவே தான் அக்னி ரூபமான உண்ணாமுலையம்மை உமையாளுடன் உடனாகிய   அண்ணாமலையார்        சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுதும் வழிபடுகிறோம். சிவ பெருமானின் ஐந்து முகங்களான சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், ஈசானம், அகோரம் இவற்றுடன் கீழ் நோக்கிய அதோ முகம் என்னும் ஆறு  முகங்களின்  நெற்றிக்க்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகளே சரவணப் பொய்கையில்  ஆறு குழந்தைகளாக முருகப்பெருமானாக மாற அந்த அறுவரையும் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் இதற்காக அவர்கள் அறுவரும் நட்சத்திரமாக விளங்குகின்றனர். அந்த கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை 'அக்னி'. கிருத்திகா ப்ரதமம்  என்று வேதத்தில்  கிருத்திகை நட்சத்திரம்  முதலாவதாக கூறப்படுள்ளது



இந்த கார்த்திகைப் மாதத்தின் கார்த்திகை நட்சத்திரம்  மற்றும் பௌர்ணமி இனைந்த அந்த  திருக்கார்த்திகை   நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக எம்பெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே   வணங்குகின்றோம். கிருத யுகத்தில், மலையரசன் தன் பொற்பாவை உமையம்மையுடன்  பரமேஸ்வரன்  "திருக்கயிலையில்" அக்னி ரூபமாகத்தான் மகரிஷிகளுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்ததாகவும், உமா மஹேஸ்வரர்களின் உண்மையான திவ்ய தரிசனத்தைக் காண்பதற்காக , அம்மாமுனிவர்கள்  கடும் தவமியற்றியதாகவும், அப்போது அவர்கள் தவத்திற்காகப் பிரம்மதேவரால் தனது மனதிலிருந்து படைக்கப்பட்டதே மானசரோவரம் என்னும் தெய்வீகத்தடாகம் என்றும் புராண நூல்கள் கூறுகின்றன.


காஞ்சி வரதராஜப் பெருமாளும் பிரம்ம தேவர் இயற்றிய   அஸ்வமேத வேள்வியின் அக்னியிலிருந்து தோன்றியவர்தான். பகவான் ஸ்ரீமந்நாராயணின் பத்து அவதாரங்களில் அளவற்ற வீரியம் கொண்ட ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த மாதமும் கார்த்திகையே. எனவேதான் சோளிங்கரில் எழுந்தருளியுள்ள யோக நரசிம்மரை கார்த்திகை ஞாயிறன்று வழிபட அந்த  ஸ்ரீ நரசிம்மன் கேட்டவற்றை எல்லாம் பக்தர்களுக்குத் தந்தருள் புரிவான் என்பது காலம் காலமாக கண்டுவரும் அனுபவமாகும்.

இவை தவிர நாம் புண்ணிய காலங்களிலும், திதி தினங்களிலும்  செய்யும் பித்ரு பூஜையின் பலனைப் பித்ரு தேவதைகளின் மூலமாக, நமது முன்னோர்களிடம் சேர்ப்பிப்பவரும் அக்னிதேவரே ஆவார், ஆதலால் தான் கார்த்திகை மாதத்தில், தினமும் அக்னியை மானசீகமாக பூஜித்து, வீடுகளில் விடியற்காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வரும்படி மகரிஷிகள் அருளியிருக்கின்றனர், முக்கியமாக பரணி தீப தினம் அன்றும், கார்த்திகை தீபம் அன்றும் நம் இல்லங்களில் மாலையில் தீபங்கள் ஏற்றி வைத்து, இறைவனை வழிபட வேண்டும், இது மட்டுமன்றி, அவரவர் ஊர்களிலுள்ள திருக்கோவில்களிலும் தங்கள் கையினால் தீபம் எற்றி வைப்பது அவசியமாகும்.


இவ்வாறு  கார்த்திகை மாதம் அக்னியின் மாதமாகும். நெருப்புக்கோள் (அக்னி கிரகம்)   செவ்வாயின் ராசியான விருச்சிகத்தில், மற்றொரு நெருப்புக் கோளான சூரியன் சஞ்சரிக்கும் காலமே, விருச்சிக மாதம் எனப் புராதான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள. விருச்சிக மாதத்தின் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி இனைந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத     ஜோதிப்பிழம்பாக  எம்பெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே   வணங்குகின்றோம், அந்த கார்த்திகை மாதத்தில் திங்கட் கிழமைகளில்  சோம வார விரதமும் இருக்கின்றோம்



இவ்வாறு இந்த கார்த்திகை(விருச்சிக) மாதத்தில் இரண்டு விரதங்கள் வருகின்றன  அவையாவன  கார்த்திகை சோம வார விரதம் மற்றும் கார்த்திகை பௌர்ணமி உமா மகேஸ்வர விரதம்  ஆகும். அவற்றுள்  முதலில் கார்த்திகை சோம வார விரதத்தைப் பற்றிப் பார்ப்போம். 


சோமவார விரதம் தோன்றிய வரலாறு:     
சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும்  கார்த்திகை சோம வாரத்தில் தான். தட்சபிரஜாபதி தன் மகள்களை  தனித் தனியாக மணம்          செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான , கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம்சதயம், பூரட்டாதிஉத்திரட்டாதி, ரேவதிஅசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான  சந்திரனுக்கு  மணம் புரிவித்தான். ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும்  மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற           பெண்கள் தங்கள் தந்தையிடம்         சென்று முறையிட்டனர். ஆத்திரமடைந்த தட்சன் உனது அழகில் கர்வம் கொண்டுதானே நீ என் மற்ற பெண்களை அவமதித்தாய் எனவே நீ  உனது  அழகை இழந்து குஷ்ட ரோகியாகக் கடவது என்று சந்திரனுக்கு சாபம்     கொடுத்தான், அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட் கிழமைகளிலும்             எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை  நினைத்து  விரதம் அனுஷ்டித்தான், அவனது விரததிற்கு மகிழந்த  பரம கருணாமூர்த்தியான             எம்பெருமான்  அவனுக்கு  சாப நிவர்த்தி  அளித்தார்   அதனால் சந்திரன் தான்  இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து     பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம்  எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு.


இவ்வாறு சந்திரன்,  சோம வார விரதத்தின் மகிமையால்  எம்பெருமானின் சடாமுடியில் இளம் பிறையாக அமரும் பாக்கியமும்  பெற்றான். இவ்வாறு   சந்திரனை தனது முடியில் சூடி அருளிய எம்பெருமான் சந்திர சேகரர்சந்திர மௌலீஸ்வரர்,  சசிதரர்சோம சுந்தரர், சசி மௌலீஸ்வரர், சோமநாதர், சசாங்க சேகரர், சசிசேகரர், சந்திர சூடர், மதி சூடிய மைந்தர்    என்று பலவாறாகப் புகழப்பட்டார். இந்த கார்த்திகை விரதம் சோமன் என்னும் சந்திரனின் பெயரால் (உமையம்மையுடன் கூடிய சிவபெருமானின் ஒரு நாமமும் சோமன்) சோமவார விரதம் என்று வழங்கப்படலாயிற்று.

கார்த்திகை விரதம் இருப்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன் இறுதியாக அவர்களுக்கு முக்தியும்  கொடுத்து அருள வேண்டும் என்று சந்திரன் வேண்ட அவ்வாறே அருள் பாலித்தருளினார்  ஐயனும். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதம் ஆகும். இங்கு தான் சோமனாகிய சந்திரன் சோமனாகிய எம்பெருமானுக்காக சோம வார விரதம் இருந்து அவர் ஜடாமுடியில் இளம் பிறையாக அமர்ந்தான் என்பது ஐதீகம்.


சோமவார விரதத்தின் மகிமை: 
வசிஷ்டர் கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டித்து கற்புக்கரசி அருந்ததியை இல்லாளாக அடைந்தார்.       இந்த சோமவாரத்தன்று விரதம் இருந்து பலன் பெற்ற ஒரு புராண வரலாறு. சந்திர வர்மன் என்ற மகனுக்கு அழகிய ஒரு பெண் மகவு பிறந்தது. அவளுக்கு சீமந்தினி என்று நாமம் சூட்டப்பட்டதுஅவளது ஜாதகத்தை கணித்தவர்கள் அவள் சிறு வயதிலேயே தனது கணவனை இழந்து விடும் துர்பாக்கியம்  கொண்டவள் என்று கூறினார்கள். அதனால் மன்னன் மிகவும் துக்கம் கொண்டு பல்வேறு முனிவர்களை கலந்தாலோசித்தான். யாக்யவல்லியர் என்ற முனிவர்  அவளை முறையாக கார்த்திகை சோம வார விரதத்தை கடைப்பிடிக்க ஆலோசனை அருளினார், அவளும் கார்த்திகை சோமவாரம் தோறும் அதிகாலையிலேயே எழுந்து உடல் சுத்தி செய்து மந்ததிரமாகும் பால்   வெண்ணீராடி , நாள் முழுதும் ஓம் நமசிவாயஎன்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஜபித்து உபவாசம் இருந்து  மாலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டு வரலானாள். அவள்  பருவம் அடைந்தவுடன் அவளூக்கு நளமஹாராஜாவின் பௌத்ரனான இந்திரசேனனின் மகன் சந்திராங்கதனுடன் விவாகம் நடந்தேறியது. ஒரு சமயம் அவர்கள் யமுனை நதியில் நீராடும் போது  நீர் சுழலில் சிக்கி அவன் மூழ்க நேர்ந்தது, ஆயினும் சீமந்தினி அனுசரித்த சோம வார விரதத்தின் பலனால் அவனை நாக கன்னியர் காப்பாற்றி       சென்றனர்.பின்னர் இறையருளால் அவன் பாதாள லோகம் விடுத்து மீண்டும் பூலோகம் வந்து தன் மனைவியுடன் இனைந்தான்.   சீமந்தினியும் வெகு காலம் பின்  தனது கணவனுடன்   சோமவார விரதம் அனுஷ்டித்து வரலானாள். இவ்வாறு நம் தலைவிதியையும் மாற்றும் வல்லமை கொண்டது இந்த சோமவார விரதம்கைலாயப் பேறு அளிக்கும் விரதமிது. இவ்விரதத்தை முறையோடு கடைப்பிடிப்பவர்கள் இந்த பிறவி இறப்பென்னும் சாகரத்திலிருந்து முக்தி அடைந்து எம்பெருமானுக்கு கைலாயத்திலே    சென்று பணி செய்யும் பேறு பெறுவர்.

கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை: 
இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறை ஸ்கந்த புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதிகாலையில் துயில் எழுந்து  உடல் சுத்தம் செய்துபஞ்சாட்சர மந்திரம் ஓதி உடல் முழுவதும் வெண்ணீராடி, சந்தியாவந்தனம் முடித்து , பரம கருணாமூர்த்தியை, சங்கரனை, சம்புவை, அம்பலத்தரசை, கங்காதரரை, உமாபதியை மனதில் எந்நேரமும் தியானித்து, சிவபெருமானின் அடியவர்களான ஒரு தம்பதியரை சிவ-சக்தியாக பாவித்து பாத பூஜை      செய்து வணங்கி, அவர்களுக்கு அமுது      செய்விக்க வேண்டும். விரதம் இருப்பவர் நாளின் ஒரு நேரம் மட்டுமே எளிய உணவை    உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய முடியாதவர்கள் திருக்கோவிலுக்கு சென்று உமா-மஹேஸ்வரரை வழிபட்டு, பஞ்சாமிர்தம் முதலிய  இனிய பொருட்களால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்வித்து, வில்வ தளங்களால் எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்து, சிறந்த அமுதை எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து அந்த பிரசாதத்தை சிவனடியார்களுக்கு வழங்கி தாங்களும் அந்த பிரசாதத்தை உண்ணலாம்.   இந்த விரதத்தை முறையாக, தூய மனத்துடன் கடைப்பிடிப்பவர்கள், இந்த மண்ணுலகில் எல்லா செல்வங்களையும் அடைந்து அனுபவித்து இறுதியாக கைலாயப் பதவியும் அடைவர்.


கார்த்திகை சோமவார ஆலய வழிபாடுகள்: 
இனி தற்போது கார்த்திகை சோமவாரத்தன்று எம்பெருமானுக்கு மணிவளர் கண்டருக்கு, இலை புனல் வேலருக்கு, செஞ்சுடர் வண்ணருக்கு, சாந்தணி மார்வருக்கு, ஏறது ஏறியவருக்கு, சங்கொளி வண்ணருக்கு பூணொடு மார்பருக்கு எந்தெந்த சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது என்பதை பார்ப்போம். கார்த்திகை சோமவாரத்தன்று சகல சிவாலயங்களிலும்  சந்திரனாம் சோமனுக்கு அருள் புரிந்து தட்சன் சாபம் போக்கி பிறை சந்திரனை ஜடா முடியில் அணிந்த சந்திர சேகரராம்   லிங்க மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூசனைகள் நடை பெறுகின்றன. பல் வேறு ஆலயங்களிலும் பல் வேறு வகைகளில் வழிபாடு நடை பெறுகின்றது. பெரும்பாலான ஆலயங்களில்  108 சங்காபிஷேகமும் சில விசேஷ தலங்களில் 1008 சங்காபிஷேகமும்  நடை பெறுகின்றது. திருநெல்வேலியிலே  நெல்லையப்பர்         கொலு தர்பார் காட்சி தந்தருளுகின்றார்.

பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங் காணா
அங்கணா அருளென அவரவர்  முறைமுறை யிறைஞ்ச நின்றார்
சங்க நான் மறையவர் நிறைதீர அரிவையர் ஆடல் பேணத்
திங்கள் நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர் தாமே.

கார்த்திகை மாதம் தீப மாதம் என்பதால் பல ஆலயங்களில் 1008,  இலட்சம் என விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சென்னை பூந்தமல்லியிலுள்ள ஒத்தாண்டீஸ்வரர் ஆலயத்தில் மூன்றாவது வாரம் இலட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும்   நடைபெறுகின்றது.. சங்காபிஷேகம் இல்லாத சில ஆலயங்களில் சம்போ சங்கர உமாபதிக்கு, சாம்ப சுந்தர பசுபதிக்கு, நந்தி வாகனனருக்கு, நாக பூஷணருக்கு, சந்திர சேகரருக்கு சிறப்பு அலங்காரங்களும் சிறப்பு பூஜைகளும்     நடைபெறுகின்றன.