Tuesday, August 29, 2017

நவ துவாரகை யாத்திரை -18

முக்தியருளும்   பிராச்சி  ஆலமரம்

\

 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 


    1   2   3   4   5    6    7    8    9    10     11    12    13 


   14   15   16   17   18   19   20   21    22   23  24    25   26   27   28
 

சோமநாத்தில் இருந்து சுமார் 22  கி.மீ தூரத்தில் குஜராத் காசி என்றழைக்கப்படும் இப்புண்ணியத் தலம் அமைந்துள்ளது. “ஏக் பார் பிராச்சி சௌ பார் காசிஅதாவது ஒரு தடவை பிராச்சி செல்வது நூறு தடவை காசி செல்வதற்கு சமம்“  என்பது இவர்களின் நம்பிக்கை. மஹா பாரதப் போருக்குக் பிறகு கௌரவர்களுக்கு பாண்டவர்கள் இத்தலத்தில்தான்  நீத்தார் காரியம் செய்தனர். எனவே  பித்ரு தர்ப்பணம் அளிப்பதற்கு உகந்த தலம். கயா செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அது கயா சென்றதற்கு சமம். கங்கை, யமுனை, காசி பிராச்சி ஆகியவை முக்தி தலங்கள்  என்பது இவர்கள் ஐதீகம்.

மோட்சமளிக்கும் பிராச்சி ஆலமரம்

இத்தலத்தின் சிறப்பு இதன் ஆலமரம். இம்மரத்தை “பிராச்சி பிப்லா“ என்று இவர்கள் அழைக்கின்றனர். ஒரு தடவை ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களைத் தேடிக்கொண்டு இத்தலம் வந்த போது இம்மரத்தினடியில் அமர்ந்து உத்தவருக்கு பாகவதத்தின் இரகசியார்த்தங்களை உபதேசித்தாராம். 

நாசிக்கின் பஞ்சவடி ஆலமரங்கள், அலகாபாத்தின் அக்ஷய வடம்,  பிருந்தாவனத்தின் பம்சி வடம், உஜ்ஜயினியின் சித்த வடம் மற்றும் கயாவின் போதிமரம்  போன்று  பிராச்சி வடத்திற்கும் தனி சிறப்பு உள்ளது. இந்த ஆலமரம் "மோக்ஷவாலி பீபல் பேட் "அதாவது "முக்தியளிக்கும்  ஆலமரம்" என்றும் அழைக்கப்படுகின்றது.
 
கருங்குரங்குகள்


ங்கு நீத்தார் காரியம் செய்வதும் மிகவும் எளிது. ஒரு தாமிர சொம்பில் தண்ணீர் வைத்துக் கொண்டு சங்கல்பம் செய்து வைக்கின்றனர். பின்னர் அத்தண்ணீரை ஆலமரத்தின் மேல் ஊற்றச் சொல்கின்றனர். அவ்வளவுதான் முன்னோர்கள் அனைவரும் மோட்சம் அடைகின்றனர் என்பது ஐதீகம்.

ஆலய வளாகமும் சரஸ்வதி  ஆற்றில் பிரதி பிம்பமும்நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது ஆலமரம். வண்டியில் இருந்து இறங்கியவுடன் பிராச்சி பிப்லா என்ற பெயர் பலகையை காணலாம். சுற்றிலும் கருங்குரங்குகள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தன.  ஆல மரத்திலும் நிறைய குரங்குகள் தாவிக்கொண்டிருந்தன. மரத்தின் அடியில் ஒரு  வயதான பண்டிட் நின்று கொண்டிருந்தார். அவர் அனைவரையும் அருகில் இருந்த ஒரு ஆற்றில்  இருந்து  சொம்பில் தண்ணீர் முகர்ந்து வரக் கூறினார்.  அனைவருக்கும் பொதுவாக சங்கல்பம் செய்து வைத்து நீரை மரத்தின் மேல் ஊற்றச் சொன்னார். அவ்வளவுதானாம்.  ஆனால் அன்னதானத்திற்கு ஏதாவது ன்கொடை தாருங்கள் என்று அனைவரிடமும் கேட்டார். விருப்பமுள்ளவர்கள் தங்களால் இயன்றதை அளித்தனர்.

சிவாலய முகப்பு 
அருகில் இருந்த ஆறு சரஸ்வதி ஆறு பூமிக்குள் சென்ற ஆறு பின்னர் இவ்விடம் மீண்டும் வெளியே வந்து தரையில் ஒடி சோமநாதத்தில்  திரிவேணி சங்கமமாகி பின்னர் கடலில் கலக்கின்றது என்று கூறினார்கள். நீர் ஓடுவது போல தோன்றவில்லை, மாசடைந்து பாசி படர்ந்திருந்தது. அதன் மறு கரையில் ஒரு ஆலய வளாகம் உள்ளது. அதில் மூன்று சிவாலயங்கள் உள்ளன. பிரதான சிவாலயத்தில் ந்தியெம்பெருமான் தனி மண்டபத்தில் அருள் பாலிக்கின்றார். இவ்வாலயத்தின் விமானமும் சற்றி வித்தியாசமாக பிரமிட் வடிவத்தில் அடுக்கடுக்க இருந்தது.  

பிரமிட் வடிவ விமானம் 

சோமநாத்தில் இருந்து காலையும் மாலையும் புறப்படும் சுற்றுலா பேருந்து இத்தலத்திற்கும் வந்து செல்கின்றது.  அன்பர் கூறியபடி பிராச்சி பிப்லாவை தரிசித்தபின் கொடினாருக்கு புறப்பட்டோம். செல்லும் வழியில் குஜராத்தைப் பற்றிய இன்னொரு தகவல் நிலக்கடலையைப் போலவே துவரம் பருப்பும் இம்மாநிலத்தில் அதிகம் விளைகின்றது. சாம்பாருக்காக நாம் பயன்படுத்தும் துவரம்  பருப்பு இங்கிருந்து வருகின்றது.  கொடினாரில் ஒரு அன்பர் மூலதுவாரகையை எளிதாக தரிசிப்பதற்கு உதவினார் அவர் யார் என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 

                                                                               நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தகவல்கள். தொடரட்டும் பகிர்வுகள்.

நான் இருமுறை குஜராத்/சோம்நாத் சென்றிருந்தாலும், பிராச்சி மற்றும் கொடினார் சென்றதில்லை. எங்கள் பயணம் வேறு இலக்குகளுடன் இருந்தன!

S.Muruganandam said...

இரு முறை தரிசனம் பெற்றிருக்கிறீர்கள் மிகவும் பாக்கியசாலி. ஐயா. இலக்குகள் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொருவரும் பெறுகின்ற அனுபவமும் வேறு வேறு விதமாக உள்ளது அல்லவா?. எல்லாம் அவன் செயல். இதன் மூலம் இனி செல்ல விரும்புபவர்கள் பயன் பெறட்டும் என்ற நோக்கத்தில் இச்சேவையை செய்து வருகின்றேன் ஐயா.