Thursday, August 17, 2017

நவ துவாரகை யாத்திரை -16


சோமநாதர்  தரிசனம் 

இத்தொடரின்  மற்ற  பதிவுகள்:  

     1   2   3    4   5    6    7    8    9    10    11    12  

  13    14     15   17   18   19   20    21  22   23  24    25   26   27   28

சோமநாதர்

ந்தி சாயும் வேளை அரபிக் கடலை ஒட்டிய பாதையில் சூரியன் மறையும் அழகையும் பறவைகள் தங்கள் கூட்டிற்கு திரும்பிச் செல்வதையும் இரசித்துக் கொண்டே போர்பந்தரிலிருந்து (Porbundar) பயணம் செய்தோம். வழியெங்கும் பல காற்றாலைகளைக் கண்டோம். இடையில் வேராவல் (Veraval) என்ற ஊரைக் கடந்தோம். சோம்நாத்திற்கான தொடர்வண்டி நிலையம் இவ்வூர் ஆகும். அடியோங்கள்  சோமநாத்தை அடைந்த போது  இரவு மணி 8:30 ஆகி விட்டது.  

முதலில் தங்கும் விடுதியை பதிவு செய்ய வேண்டும் என்பதால் இரண்டு பேர் மைய முன்பதிவு  அலுவலகத்திற்கு சென்றனர். மற்றவர்கள் சோமநாதரை தரிசிக்க ஆலயம் சென்றோம். ஆலயத்தில் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலயத்திற்கு சுமார் அரை கிலோமீட்டருக்கு முன்னரே வண்டிகள் நிறுத்தப்படுகின்றன. அதற்குப்பின் பக்தர்கள் ந்து சென்றே ஆலயத்தை அடைய முடியும், செல்பேசி, புகைப்படக் கருவி மற்றும் எந்த மின்னணு கருவியும் கோவிலின் உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை.  உலோக கண்டுபிடிப்பான் (Metal Detector) கொண்டு உடற்பரிசோதனை செய்த பிறகே வாயிலின் உள்ளே நுழைய முடியும். தோல் பொருட்கள், காலணிகள், பைகள் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை அவற்றை  பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதி ஆலய வளாகத்தின்   உள்ளே உள்ளது.



சோமநாதர் ஆலயம் 

விஜய்துவாரத்தில் நுழைந்தவுடன் கோவிலின் முகப்பை  அருமையாக தரிசிக்கலாம். முழுக்க முழுக்க காவி பூசப்பட்ட முன் வாசல் மண்டபம். அதன் இரு புறங்களிலும் துலங்கும் மாட உப்பரிகைகள்.  மண்டபத்தின் மையத்தில் இருக்கும் வாசல் வழியாக ஆலயத்தில் நுழைந்தால் பரந்த புல்வெளி. அதன் நடுவே ஒரு பாதை பிரதான ஆலயம் நோக்கி செல்கின்றது. புல்வெளிக்கப்பாலும், ஆலயத்திற்கு பின் புறத்திலும் அரபிக் கடல் ஆர்ப்பரிக்கின்றது.

வரிசையும் விரைவாக சென்று கொண்டிருந்தது எனவே சந்திரனுக்கு அருளிய சோமநாதரின் தரிசனம் இரவே அருமையாக கிட்டியது. இவ்வாலயத்திற்கு எத்தனையோ கதைகள் உள்ளன வாருங்கள் அவையனைத்தையும் ஒவ்வொன்றாகக் காணலாம்.

சந்திரபுரம் என்றும் சூரியபுரம் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்ட்ட பிரபாஸ்பாடன் ஸ்ரீகிருஷ்ணரின் காலத்திற்கு முன்னரே பிரபலமான ஒரு தீர்த்த யாத்திரைத் தலம். கதிரவனின் பிரகாசத்தையும், வெண் நிலவின் குளிர்ச்சியும் பொருந்தியத்தலம் என்பதால் இத்தலத்திற்கு பிரபாஸ்பாடன் என்று பெயர். பிரபாச க்ஷேத்திரம் என்பதற்கு ஒளி மிகுந்த தலம் என்றும் ஒரு  பொருள் உண்டு.



கிருஷ்ண விஜயம் நிகழ்ந்த காரணத்தால் யாதவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இத்தலம் உயரிய யாத்திரை தலமானது. சந்திரன் தியானம்  செய்து சாபம் நீந்கி சிவபெருமானின் அருளைப் பெற்ற தலம் என்பதால் தியானம் செய்ய தக்கதோர் தலம் ஆகும். 

முதலில் சோமனாம் சந்திரனுக்கு அருளிய வரலாற்றை முதலில் காணலாம் அன்பர்களே. சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும்  கார்த்திகை சோம வாரத்தில் தான்.

 தட்சபிரஜாபதி தன் மகள்களை  தனித் தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம்சதயம், பூரட்டாதிஉத்திரட்டாதி, ரேவதிஅசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான  சந்திரனுக்கு  மணம் புரிவித்தான். ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும்  மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர்.





ஆத்திரமடைந்த தட்சன் உனது அழகில் கர்வம் கொண்டுதானே நீ என் மற்ற பெண்களை அவமதித்தாய் எனவே நீ  உனது  அழகை இழந்து குஷ்ட ரோகியாகக் கடவது என்று   சந்திரனுக்கு சாபம் கொடுத்தான், அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை  நினைத்து இப்பிரபாச படான் தலத்தில் விரதம் அனுஷ்டித்தான், அவனது விரததிற்கு மகிழந்த  பரம கருணாமூர்த்தியான எம்பெருமான்  அவனுக்கு  சாப நிவர்த்தி  அளித்தார்.    அதனால் சந்திரன் தான்  இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து   பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம்  எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு.

கார்த்திகை விரதம் இருப்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன் இறுதியாக அவர்களுக்கு முக்தியும் கொடுத்து அருள வேண்டும் என்று சந்திரன் வேண்ட ஐயனும் அவ்வாறே அருள் பாலித்தருளினார். சந்திரன் வழிபட்டு தன் சாபம் தீரப்பெற்ற தலத்தில் சோமநாதராக, ஜோதிர்லிங்கமாக அருள் பாலிக்கின்றார். பிரபாஸ்பாடன் சென்று சோமநாதரை வழிபட்டால் பிறவிப்பயன் பெறலாம்.  

மேலும் துவாரகைகளுள் முக்தி துவாரகை சோமநாத் ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின் ஒரு வேடனின் அம்பினால் காயம் பட்டு திவ்ய மேனியை விடுத்து வைகுண்டம் சென்றது இங்கிருந்துதான். இத்தலம் பால்கா தீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. மேலும் திரிவேணி சங்கமம்,  கோலோக் தாம் மற்றும் சற்று தூரத்தில் உள்ள பிராச்சி  ஆகிய இடங்களையும் சோம்நாதத்தில் தரிசிக்கலாம்.  தினமும் காலை 8 மணிக்கும்,  மதியம் 2 மணிக்கும்  சோமநாத் அருகில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லும் பேருந்து வசதி உள்ளது.

ஒலி ஒளி காட்சியின் சில காட்சிகள் 

அர்ச்சுனன்  தீர்த்த யாத்திரையின் சமயம்  இத்தலம் வந்த போது ஸ்ரீகிருஷ்ணரின் தங்கை சுபத்ரையின் அழகைப் பற்றி கேள்விப்பட்டான். பின்னர் ஸ்ரீகிருஷ்ணரின் உதவியுடன் சுபத்ரையை மணந்தான்.  அபிமன்யுவை வீரமகனாகப் பெற்றான். இத்தலம் ஆதி ஜோதிர்லிங்கத் தலமாகவும் போற்றப்படுகின்றது. துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரமும் சௌராஷ்ட்ரே சோமநாதம் ச என்று துவங்குகிறது.

வாருங்கள் பல முறை மிலேச்சர்களால் சிதைக்கப்பட்ட பின்னும் நெடிதுயர்ந்து நிற்கும் ஆலயத்தின் கதையைக் காணலாம். சத்ய யுகத்தில் சந்திரன் பொன்னால் இக்கோவிலை கட்டினான், எம்பெருமான் பைரவேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். திரேதாயுகத்தில் இராவணன்  ஸ்வர்ணகேஸ்வரராக வெள்ளியிலும், துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சிருங்கேஸ்வரராக சந்தன மரத்திலும் கட்டினர், அவையெல்லாம் அழிந்து விட்டன.  கலியுகத்தில் சோமேஸ்வரராக கற்கோவிலாகவும் விளங்குகிறது.

முகம்மது கஜினி 17 முறை படையெடுத்து வந்து இக்கோவிலை சிதைத்து இதன் செல்வங்களையெல்லாம் கொள்ளை அடித்து சென்றான், பின்னரும் பலமுறை புனருத்தாரணம் செய்யப்பட்ட  ஆலயங்கள் பல்வேறு முகம்மதிய மன்னர்களால் சிதைக்கப்பட்டன.  நாம் அன்னிய தளையிலிருந்து விடுபட்டு  சுதந்திரம் பெற்ற பிறகு இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய்  பட்டேல் அவர்களின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆலயத்தையே நாம் இப்போது தரிசிக்கின்றோம். 1950ல் தற்போதுள்ள ஆலயம்  கட்டி முடிக்கப்பட்டது. காந்தி அடிகளின் யோசனைப் படி பக்தர்களின் நன்கொடையின் மூலமாகவே  இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டது.  முன்பிருந்த செல்வச்சிறப்பில் தற்போது இல்லை என்றாலும் பிரம்மாண்ட ஆலயமாகவே விளங்குகின்றது. பழைய ஆலயத்தின்  முன் வாசலில் இருந்த அற்புத வேலைப்படுகள் கொண்ட பிரமாண்ட மரக்கதவு இன்றும் ஆக்ரா கோட்டையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.



 தங்கும் விடுதி 
விடுதியின்  உட்புறம் 


நாகாரா அமைப்பில் நெடிதுயர்ந்த விமானத்துடன் கூடிய பெரிய கருவறை, 150 அடி உயரமான விமானத்தின் கலசம் மட்டும் 10 டன் எடையுள்ளது என்பதில் இருந்து 
இவ்வாலயத்தின் பிரம்மாண்டம் விளங்கும். கூம்பூ வடிவ விமானத்தின் உச்சியில் சூலமும், நந்தியும், உடுக்கையும் உடைய முக்கோண கொடி பறக்கின்றது. வட்ட விதானக்கூரையுடன் கூடிய ஆலயத்தில் முதலில் நம்மை வரவேற்பது கலையழகுடன் கட்டப்பட்ட முகப்பு மண்டபம். இதில் இடப்புறம் விநாயகர், வலப்புறம் ஆஞ்சநேயர்.

கர்ப்பகிரகத்தை இவர்கள் நிஜ மண்டபம் என்றழைக்கின்றனர். அர்த்தமண்டபத்தை  சபா மண்டபம் என்றும், மஹா மண்டபத்தை நிருத்த மண்டபம் என்றும் அழைக்கின்றனர். இவ்விரண்டு மண்டபங்களும் உயர்ந்த தூண்கள் தாங்கும் மண்டபங்களாக எழிலாக அமைந்துள்ளன. இம்மண்டபங்களின் கூரையில் குவி மாடம், வெளிப் பகுதி புறாக்கூண்டு அமைப்பு, உள் பக்கம் அருமையான சுதை சிற்பங்களை அமைத்துள்ளனர்.

கருவறை முன் மண்டபம் மிகவும் அகலமாக எத்தனை பக்தர்கள் வந்தாலும் ஐயனை தரிசிக்கும் விதமாக அமைக்க்ப்பட்டுள்ளது. இதன்  முடிவில் கருவறைக்கு  இடப்புறம் அன்னை திரிபுரசுந்தரி சன்னதி, வலப்புறத்தில் அம்பா சன்னதி.  அம்பாவுக்கு முன்னர் அகண்ட தீபம் அணையாமல் எரிகிறது.

கர்ப்பகிரகம் மற்றும் முன் மண்டபம். ங்க கவசம் மற்றும்    வரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  முன் காலத்தில் எவ்வளவு செல்வச்சிறப்புடன் விளங்கியது அது போல இப்பொழுதும் விளங்க வேண்டும் என்ற முயற்சியில் நன்கொடைகள் பெற்று இத்திருப்பணிகளை செய்து வருகின்றனர்.  பிரம்மாண்ட ரூபத்தில் ஜோதிர் லிங்கமாக எம்பெருமான் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். எந்நேரமும் அருமையான அலங்காரத்தில் ஐயனை தரிசிக்கலாம். ஐயனுக்கு மேலே தங்கக் குடை மற்றும் தாரா பாத்திரம் தொங்குகின்றது.   விலாசமான கருவறையில் கோட்டத்தில்  நின்ற கோலத்தில் அம்பாள், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் உடன்  அருள் பாலிக்கின்றனர்.


ஆலயத்தின் அழகிய சுதை சிற்பங்கள் 


மண்டபம் முழுவதும் சிவபெருமானின் நாட்டியக் கோலங்கள். மானாட மழுவாட புனலாட மங்கை சிவகாமியாட மேலும் சிவ பார்வதி திருக்கல்யாண சிற்பம், யானை, குதிரை வீர்ர்கள், நாட்டியப்பெண்கள் சிற்பங்கள் மிகவும் அருமை. மிகவும் பிரம்மாண்டமான கோயில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வரிசை, தரிசனத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லை. அருகில் சென்று தரிசனம் செய்ய முடிகின்றது. ஐயனை தொட்டு அபிஷேகம் செய்ய அனுமதியில்லை, ஆனால் சன்னதியின் முன்னர் ஒரு பாத்திரம் வைத்துள்ளனர் அதில்   நாம் கொண்டு செல்லும் தீர்த்தத்தை ஊற்றினால் அது  ஐயனுக்கு  அபிஷேகம் ஆகும் வண்ணம் அமைத்துள்ளது மிகவும் சிறப்பு. மானசரோவர் தீர்த்தம் அபிஷேகம் செய்தோம்.

எண்ணற்ற முறை சிதைக்கப்பட்டிருந்தாலும் சாநித்தியத்துடன் இன்றும் விளங்குகிறது ஆலயம். புறத்தில் தரிச்னம் தரும் ஐயனை அகத்தில் இருத்தி கண்களை மூடி தியானித்தால் மனதும் உடலும் லேசாகின்றது. அப்படியே அந்தரத்தில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு.  ஐயனுக்கு எதிரே பிரம்மாண்ட நந்தி, ஆமை, அகண்ட தீபத்தையும் தரிசிக்கின்றோம்.

காலை 7 மணி, மதியம் 12 மணி, இரவு 9 மணி என்று ஒரு நாளில் மூன்று முறை  ஆரத்தி சிறப்பாக டைபெறுகின்றது. ஆரத்தி சமயத்தில் சங்கம் முழங்குகின்றது. ஜல் ஜல் என ஜால்ரா ஒலிக்கின்றது. டம் டம் என டமாரம் அதிர்கின்றது. சோமநாதத்தின் வரலாற்றை சொல்லும் ஒலி, ஓளிக் காட்சி இரவு 8 மணிக்கு நடைபெறுகின்றது. அடியோங்கள் தாமதமாக சோமநாதத்தை அடைந்ததால்  அக்காட்சியை காண இயலவில்லை.

சிதைக்கப்பட்ட புராதன பார்வதி ஆலயத்தின் கீழ்ப்பகுதி முக்கிய சன்னதிக்கு அருகில் உள்ளது. கடற்கரையில் கம்பீரமாக அமைந்துள்ளது இவ்வாலயம். இவ்வாலயத்திலிருந்து நேராக எந்த நிலப்பரப்பும் இல்லாமல் தென் துருவத்தை அடைய முடியும். நிலவியலில் நம் முன்னோர்களுக்கு  இருந்த  ஞானத்தை இது காட்டுகின்றது. தென் துருவத்தை நோக்கி ஒரு அம்பு அமைத்துள்ளனர். கபர்தின் விநாயகர், மற்றும் கஷ்ட் பஞ்சன் ஹனுமான் சந்நிதிகளும் உள்ளன. தியானம், பாராயணம் செய்ய  ஐயனுக்கு எதிரில் இடமுள்ளது.

ஐயனை தரிசனம் செய்பவர்கள் தரிசனம் செய்து கொண்டு செல்ல, ஸ்லோகங்கள் பாராயணம் செய்ய விரும்புபவர்கள் அமர்ந்து பாராயணம் செய்யவும் இடம் ஒதுக்கியுள்ளனர். அங்கு அமர்ந்து ஸ்ரீருத்ரம் பாராயணம் செய்தோம். முதலில் அலங்காரம் இல்லாமல் நிர்வாண தரிசனம் பெற்றோம். காலை                            ஆரத்தி  தரிசித்தோம்.  மூலவர், கர்ப்பகிரகத்தின் உள்ளே உள்ள பார்வதி அம்பாள், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கு ஆரத்தி பின்னர் கர்ப்பகிரகத்திற்கு வெளியே உள்ள பார்வதி அம்பாள், ஹனுமான், நந்தி, ஆமை, தெற்கு துவாரம் வழியாக சமுத்தித்திரத்திற்கும் ஆரத்தி நடைபெறுகின்றது.
விமான கலசம் 

இதன் பிறகு சுவாமிக்கு ச்ருங்காரம்  என்னும் மலர் அலங்காரம் அற்புதமாக செய்கின்றனர். சந்தனம் குங்குமப்பூ கலவை பூசுகின்றனர்.  முககவசம் சார்த்தி, பாணம் முழுவதும், தாமரை, சாமந்தி, வெள்ளெருக்கு, வில்வம், ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்தனர். மலர் மாலைகள் கொண்டு அலங்காரத்தை பூர்த்தி செய்தனர்.  ருத்ராட்சத்தினால் ஆன மகுடம் மற்றும் சந்திரன் வழிபட்ட ஈசன் என்பதால் சந்திரப்பிறை கொண்டு அற்புதமாக அலங்காரத்தை நிறைவு செய்கின்றனர். பின்னர் சிறப்பாக வேத மந்திரங்கள் முழங்க ஆரத்தி நடைபெறுகின்றது.  இரண்டாவது முறையாக ச்ருங்கார் ஆரத்தியும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. அருமையான தரிசனம் தந்த சிவபெருமானுக்கு நன்றி கூறி வெளியே வந்தோம். ஆலயத்தின் பிரம்மாண்ட வெளிப் பிரகாரத்தில் வலம் போது கடற்காற்று தழுவுகிறது.  கார்த்திகை பௌர்ணமி மற்றும் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது.  ஐயனை பிரிய முடியாமல் பிரிந்தோம்.

அறையின் உட்புறம் 

தங்கும் விடுதிகள் ட்ரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. ரூ50/- முதல் ரூ1000/- வரை அனைவருக்கும் ஏற்ற வகையில்  அறைகள் உள்ளன. லீலாவதி பவன், மஹேஸ்வரி பவன், அதிதி க்ருஹ் என்று மூன்று தங்கும் விடுதிகள் உள்ளன. மைய அலுவகத்தில் சென்று முன் பணம் கட்டி அறையை பெற்றுக் கொள்ளலாம். www.somnath.org என்ற இனைய தளத்தின் மூலம் முன் பதிவும் செய்து கொள்ளலாம். அறைகள் விலாசமாகவும், சுத்தமாகவும் உள்ளன. தொலைக் காட்சிப் பெட்டி, சுடு தண்ணீர்,  அலமாரி, கம்பளிப் போர்வைகள் என்று அனைத்து வசதிகளும் உள்ளன. அறைகள்  மிகவும் சுத்தமாக இருந்தன.  விடுதிகளை நன்றாக பராமரிக்கின்றனர். ஒவ்வொரு விடுதியிலும் பல ஆன்மீக நூல்களுடன் கூடிய  நூலகம் உள்ளது. வெளியே உட்கார்ந்து ஓய்வு எடுக்கவும் வசதிகள் உள்ளன. உணவு விடுதியில் அடக்க விலையில், சுகாதாரமான உணவும் உண்ணலாம். யாத்திரிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நிறைவாக அளிக்கின்றது கோயில் நிர்வாகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆதி சோமநாதர் ஆலயம்
(அகல்யாபாய் கட்டியது)

குருக்கள் யாரும் தட்சணை கேட்கவில்லை. சுவாமியை மறைத்துக்கொண்டு நிற்கவில்லை. பணம் உள்ளவன் சுவாமிக்கு அருகில் சென்று சேவிக்கலாம் வறியவர்கள் தூரத்திலிருந்தே தரிசித்து விட்டு  செல்ல வேண்டியதுதான் என்று எந்த பாகுபாடும் இல்லை ஏனென்றால்,  சுவாமியை தரிசிக்க எந்தவித தனி கட்டணமும் இல்லை. வரிசையும் வேகமாக செல்வதால் அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமுமில்லை. அனைவரும் இங்கு  சமமாகவே நடத்தப்படுகின்றனர்.. கட்டண சேவைகள் உள்ளன அதற்கான கட்டணத்தைக் கட்டி இரசீது பெற்றுக்கொண்டு அதற்கான பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டு செல்லலாம். சுவாமிக்கு அர்ப்பணம் செய்யும் மலர்களை தவறாமல் சுவாமியின் திருமேனியில் சார்த்துகின்றனர். அது போலவே பிரசாதம் (இங்கு இனிப்பு) சமர்பித்தால் சுவாமிக்கு நிவேதனம் செய்து திருப்பித்தருகின்றனர்.  தரிசனம், தங்கும் விடுதி, கோயிலில் உள்ள சுத்தம், ஒழுங்கு, விதிப்பிரகாரம் நடக்கும் பூசை என்று எல்லா விதத்திலும்   அனைத்து ஆலயங்களுக்கும் ஒரு முன்னோடியாக இவ்வாலயம் விளங்குகின்றது. எதையும் எதிர்பாராமல் கோயில் பணியாளர்கள் சேவை மனப்பான்மையுடன்  பணி செய்வதைப்  பார்த்தபோது ஆச்சரியமாகவும் அதே சமயம் பிரமிப்பாகவும் இருந்தது.  மொத்தத்தில் ஒரு ஆலயம் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இவ்வாலயம். 


லக்ஷ்மி நாராயணர் ஆலயம் 



பாரத தேசமெங்கும் முகம்மதியர்களால் சிதைக்கப்பட்ட பல இந்து ஆலயங்களை புனருத்தாரணம் செய்த மஹா சிவபக்தை இந்தோர் அரசி அகல்யாபாய் அவர்கள் கட்டிய ஆதி சோமநாதர் ஆலயம் சென்று ஆதி சோமநாதரை தரிசனம் செய்தோம். அருகில் நமது திராவிட பாணியில் அமைந்த லக்ஷ்மி நாராயணர் ஆலயம் சென்று ஆதி சேடன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் சேவை சாதிக்கும் பெருமாளை சேவித்தோம். ஐந்து நிலை திராவிடபாணி இராஜ கோபுரம், கொடிமரம், பலிபீடம், மற்றும் பஞ்சலோக உற்சவர்கள் என்று தென்னிந்திய தென்கலை சம்பிரதாய  கோவில் அமைந்துள்ளது. அடுத்து பால்கா தீர்த்தம் என்றழைக்கப்படும் முக்தி துவாரகை சென்று ஸ்ரீகிருஷ்ணரை சேவித்தோம். 

                                                                       நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

2 comments:

மாதேவி said...

சோமநாதர் ஆலயம் சுதை சிற்பங்கள் அனைத்துமே அழகு.

S.Muruganandam said...

வாருங்கள் மாதேவி . மிக்க நன்றி