Sunday, August 27, 2017

நவ துவாரகை யாத்திரை -17


முக்தி துவாரகை


 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்   

   1   2   3   4   5    6    7    8    9    10    11    12    13    14


   15   16   18   19   20   21    21  22   23  24    25   26   27   28

ஸ்ரீகிருஷ்ணர்



நாம் அடுத்து தரிசிக்கின்ற அடுத்த துவாரகை

மண்மிசை பெரும்பாரம் நீங்க ஒரு பாரதமா பெரும்போர்
பண்ணி மாயங்கள் செய்து  சேனையைப் பாழ்பட நூற்றிட்டுப் போய்
விண்மிசை தன் தாமமே புக  மேவிய சோதி தன் தாள்
ண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே?

என்று ஆழ்வார் பாடியபடி பூபாரம் குறைக்க கிருஷ்ணாவதாரம் எடுத்த பரந்தாமன்  ஸ்ரீகிருஷ்ணர்  தன் அவதார நோக்கம் நிறைவேறிய பின்  வைகுண்டம் சென்ற கதையாகும். இராம-கிருஷ்ண அவதாரங்களை இணைக்கும் அந்த சுவையான கதை என்னவென்று முதலில் காணலாம் அன்பர்களே.

பாரதப்போரில் தன் மைந்தர்கள் நூற்றுவரும் மடிய ஸ்ரீகிருஷ்ணரே காரணம் என்று அவர் மேல் கோபம் கொண்ட காந்தாரி, போருக்குப்பின் ஸ்ரீகிருஷ்ணர் அவளைக் காணச் சென்ற போது, என் மக்கள் அனைவரும் மாள காரணமாக இருந்த நீயும் உனது யாதவ குலமும் அது போலவே அழியட்டும்  என்று சாபம் கொடுத்தாள்.

யாதவர்களும் தர்மத்தை கைவிட்டு, குடியிலும், கேளிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர். ஒரு சமயம் முனிவர் துவாரகை வந்த போது யாதவர்கள் விளையாட்டாக, ஆண் ஒருவனுக்கு கர்ப்பிணிப் பெண் போல வேடம் அணிவித்து அவனை முனிவர் முன் நிறுத்தி, இவளுக்கு எக்குழந்தை பிறக்கும்? என்று கேட்டு கிண்டல் செய்தனர். உண்மையை உணர்ந்த முனிவர் இவன் ஒரு இரும்பு உலக்கையை பெற்றெடுப்பான் அதனால் உங்கள் யாதவ குலம் முற்றிலுமாக அழியட்டும் என்று சாபம் கொடுத்தார். பூபாரத்தைக் குறைக்க ஸ்ரீகிருஷ்ணர் தனது யாதவ குலத்தை தன்னுடன் அழைத்துச் செல்ல ஆடிய  நாடகமே இச்சாபங்கள்.

முனிவரின் சாபத்திற்கேற்ப அந்த ஆண் பிள்ளை ஒரு இரும்பு அம்மிக்குழவியை பெற்றெடுத்தான். அம்மியாக இருந்தால்தானே தமக்கு தீங்குண்டாகும் என்று கருதிய யாதவர்கள் அதை தூள், தூளாக பொடி செய்து கடலில் கரைத்தனர். இறுதியாக இருந்த ஒரு பெரிய இரும்புத்துண்டினை  அப்படியே கடலில் வீசி விட்டனர். 




இவர்கள் கடலில் கரைத்த தூள்கள் எல்லாம் பிரபாச தீர்த்தக்கரையில் ஒதுங்கின அவை அக்கரையில் வளர்ந்த கோரைப் புற்களுக்கு உரமாயின. இறுதியாக இருந்த இரும்புத்துண்டை விழுங்கிய மீன்,   ஜரா என்ற ஒரு வேடனின் கையில் வந்து சேர்ந்தது, அவனும் அம்மீனின் வயிற்றில் கிடைத்த அந்த இரும்புத்துண்டை தனது ஒரு அம்பின்  கூர் முணையாக அமைத்துக் கொண்டான்.

வைகுண்டம் செல்ல வேண்டிய நாளில் யாதவர்கள் அனைவருடன் ஸ்ரீகிருஷ்ணர் பிரபாச தீர்த்தம் வந்தார். எப்போதும் போல் குடி போதை அதிகமாக யாதவர்களிடையே பேதம் அதிகமாகியது. அதுவே ஒரு சண்டையாக மாறியது. அவர்கள் கடற்கரையில் வளர்ந்திருந்த கோரைப்புல்லை பிடுங்கி ஒருவருடன் சண்டையிட ஆரம்பித்தனர். முனிவரின் சாபத்தினால் அப்புற்களே வாளாக மாற,   ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு யாதவர்கள் அனைவரும் மாண்டனர்.



பால்-கா-தீர்த்த ஆலய்ம் 

காட்டில் சென்று ஸ்ரீகிருஷ்ணரும் ஒரு பிரம்மாண்டமான ஆலமரத்தினடியில் ஒரு காலின் மேல் ஒரு காலை வைத்து  யோக நித்திரையில் ஆழ்ந்தார். தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஸ்ரீகிருஷ்ணரின் இடது பாத பெருவிரல் ஒரு மானைப் போல தோன்ற தூரத்திலிருந்தே  ஜரா என்ற அந்த வேடன் அம்பெய்தான். ஸ்ரீகிருஷ்ணரும் பூலோகத்தில் தன்னுடைய திவ்ய மேனியை  விடுத்து வைகுண்டம் ஏகினார். பலராமரும் அருகில் உள்ள ஒரு குகையில் தனது மேனியை விடுத்து ஆதிசேஷன் ரூபத்தில் வைகுண்டம் சென்றார். இவ்வாறு காந்தாரி மற்றும் முனிவரின் சாபத்தினால்  யாதவ குலம் முற்றிலுமாக அழிந்தது.


தவழும் கிருஷ்ணர்

ஜரா என்ற அவ்வேடனுக்கு ஏன் கிருஷ்ணர் மேல் அம்பெய்யும் பாக்கியம் கிட்டியது என்று யோசிக்கின்றீர்களா? அதற்காக   நாம் இராமாவதாரத்திற்கு செல்ல வேண்டும். இராமாவதாரத்தில் சுக்ரீவனுக்கு உதவுவதற்காக இராமர் மறைந்திருந்து வாலியின் மேல் அம்பெய்து அவனை வதம் செய்தார். இக்கிருஷ்ணாவதாரத்தில் வாலியே ஜரா என்னும் வேடனாகப் பிறப்பெடுத்தான். அவன் கிருஷ்ணராக அவதாரமெடுத்த இராமரை மறைந்திருந்து அம்பெய்தான். இராமவாதாரத்தில் சூரிய புத்திரன் சுக்ரீவன், இந்திரனுடைய புத்திரன் வாலி வதமாக காரணமாக இருந்தான், கிருஷ்ணாவதாரத்தில் அது மாறி இந்திர புத்திரனாகிய அர்ச்சுனன், சூரிய புத்திரனான கர்ணனை வதம் செய்தான்.  தெய்வமே ஆனாலும் செய்கின்ற கர்மத்தின்படி அனுபவித்தே தீர வேண்டும் என்று பகவான் இதன் மூலம் உணர்த்தினார்.
வேடன் ஜரா 

அர்ச்சுனன் சுவாமியின் திருமேனிக்கு அந்திம சம்ஸ்காரம் செய்தானாம். மேல் பாகம் அப்படியே எரியாமல் கடலில் மிதந்து ஜெகந்நாதம் (பூரி) அடைந்தது, அதை ஆதிவாசிகள் இன்றும் நல்நாராயணன் என்று   வழிபட்டுவருகின்றனர் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது. 

இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணர் யோக நித்திரையில் இருந்து அம்படி பட்ட இடமே முக்தி துவாரகை. அந்த ஆலமரம் இன்றும் உள்ளது,  நன்றாக பாராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனடியில் ஸ்ரீகிருஷ்ணர் சங்கு சக்கர கதாதாரியாக ஒரு காலை ஒரு காலின் மேல் போட்ட கோலத்தில் உள்ள சுதை சிற்பத்தை அமைத்துள்ளனர். அறியாமல் அம்பெய்த ஜரா மண்டியிட்டு பகவானை வணங்குகின்றான். அதனடியில் விஷ்ணு பாதமும் அமைத்துள்ளனர்.  தவழும் கோல பாலகிருஷ்ணரையும் சேவிக்கின்றோம். விஷ்ணு பாதத்தில் மலர் தூவி பக்தர்கள் வழிபடுகின்றனர். அன்பர்கள் அருகில் உள்ள  பலராமர் வைகுண்டம் சென்ற குகையையும் சென்று சேவிக்கின்றனர். இத்தீர்த்தத்திற்கு அருகில் பிரம்மகுமாரிகளின் சிவலிங்க வடிவ கலைக்கூடம் அமைந்துள்ளது.


ஆலமரம் 

திரிவேணி சங்கமம்:  ஹிரண்யா மற்றும் கபிலா மற்றும் அந்தர் வாகினியாக சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமமாகும் திரிவேணி சங்கமமும் சோமநாத்த்தில் தரிசிக்க வேண்டிய, புனித நீராட வேண்டிய இடம் ஆகும். குறிப்பாக அமாவாசை தினங்களில் சங்கமத்தில் நீராடி நீத்தார் கடன் செலுத்துவது மிகவும் சிறப்பானதாகும்.


இவ்வாறு சோமநாதத்தில் அருமையான தரிசனம் முடித்து கொடினார் (Kodinar) புறப்பட்டோம்.  சிறிது தூரத்தில் வண்டி பழுதடைந்து   விட்டதால் அதை சரி செய்ய ஓட்டுனர் ஒரு கடையில் நிறுத்தினார். சுமார் ஒரு மணி நேரமாகும் என்பதால் ஒரு ஆட்டோ பிடித்து சோமநாதம் திரும்பி வந்து ஐயன் முன் அமர்ந்து திருமுறைகள் பாராயணம் செய்து கொண்டிருந்தோம். வண்டி பழுது சரியான பின் வண்டி திரும்பி அடியோங்களை அழைத்துக்கொண்டு வண்டி அடுத்த துவாரகை நோக்கி விரைந்தது. இதற்குள் மதியம் ஆகி விட்டதால் மதிய உணவை சோமநாத்தின் தங்கும் விடுதியிலேயே முடித்துக்கொண்டு கிளம்பினோம்.
விஷ்ணு பாதம் 

இதுவரை அடியோங்கள் தரிசித்த துவாரகாதீஷ் துவாரகை என்னும் முக்கிய துவாரகை, பேட் துவாரகை,  ருக்மிணி துவாரகை, கோமதி துவாரகை, மற்றும் சோமநாதத்தில் உள்ள முக்தி துவாரகை ஆகிய இவ்வைந்து தலங்கள் பஞ்ச துவாரகை என்று பலரால் கருதப்படுகின்றது.  பொதுவாக பல  அன்பர்கள் பஞ்ச துவாரகை யாத்திரை மேற்கொள்கின்றனர். அடியோங்கள் நவதுவாரகை யாத்திரைக்காக திட்டமிட்டிருந்ததால் பயணத்தை தொடர்ந்தோம்.

பிரம்மகுமாரிகள் கலைக்கூடம் 

மூல துவாரகை அமைந்துள்ள கொடினார் செல்லும் வழியில்  அடியேனுடன் பணி புரியும்  அன்பர் கூறிய பிராச்சி (Pirachi) என்னும் புண்ணிய தலத்தை அடைந்தோம். அத்தலத்தின் சிறப்பு என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 

                                                                                  நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

4 comments:

அபயாஅருணா said...

நன்றாக இருக்கிறது . தொடருகிறேன்

வெங்கட் நாகராஜ் said...

நானும் இந்த இடங்களுக்குச் சென்று வந்தேன்.....

S.Muruganandam said...

வெங்கட் அவர்களே, அனைவரும் பார்க்க வேண்டிய தலங்கள். தாங்களும் தரிசித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. எங்கள் அனுபவம் எவ்வாறு உள்ளது.

S.Muruganandam said...

வாருங்கள் அபயா அருணா. அருமையாக நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றீர்கள் ். தொடருங்கள்.