Thursday, December 29, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -14





முக்தி தரும் சக்தி ஆலயங்கள் இரண்டையும்  மிகவும் திருப்தியாக தரிசனம் செய்த மகிழ்ச்சியுடன், எங்களது பேருந்து பழுதாகி ஹர்சில் கிராமத்திலேயே நின்று விட்ட காரணத்தினாலும், ஜீப் எதுவும் கிடைக்காத காரணத்தாலும், அரசு பேருந்தில் புறப்பட்டோம், ஆகியாவின் உயர்ந்த பாலமான புது வர்ணத்தில் மிளிர்ந்து கொண்டிருந்த  ஜாட்கங்கா பாலத்தைக் கடந்து வரும் போது பாகீரதியின் மறு கரையில் உள்ள முக்பா கிராமத்தில் கங்கா மாதா வந்து தங்கும் கோயிலை வழிகாட்டி காட்டினார், பேருந்தில் இருந்தே புகைப்படம் எடுத்துக்கொண்டோம். 

 பைரான் காட் பைரவர் ஆலயம்
பின்னர் பைரான்காட் கடக்கும் போது பைரவர் ஆலயத்தையும் புகைப்படம் எடுத்துகொண்டோம். இறங்கி தரிசனம் செய்ய முடியவில்லை. இருபக்கமும் ஓங்கி வளர்ந்த, வானத்தை ஒட்டடை அடிக்கும் தேவதாரு மரங்கள், சல சலவென்று பாய்ந்து ஒடும் பாகீரதி, காற்றில் மென்மையான ஈரம் என்று சுகமான பயணம், மலைப்பாம்பு போல நெளிந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில். நடுவில் ஒரு கிராமத்தில் வண்டி ஓட்டுனர் தேநீர் அருந்த வண்டியை நிறுத்தினார். அங்கு ஆப்பிள் பழங்கள் கிலோ 20 ரூபாய்க்கும், பேரிக்காய்  கிலோ 15  ரூபாய்க்கும் தொட்டுக்கொள்ள  மிளகாய்ப்பொடியுடன் விற்றுக்கொண்டிருந்தார்கள், நாம் இங்கு புகைவண்டியில் பயணம் செய்யும் போது கொய்யாப்பழம் வாங்கி சாப்பிடுவது போல அங்கு ஆப்பிள் பழத்தை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே பயணத்தை தொடர்ந்தோம். 
 
 வழியெங்கும் தேவதாரு மரங்கள் 


ஹர்சில் என்னும் இந்த கிராமம் ஹரி-சிலா என்பதின் திரிபு என்று கூறுகிறனர். ஜாலந்தரின் மனைவி மஹா தன்னை ஏமாற்றி ஜாலந்தரன் வதமாக காரணமாக இருந்ததால்  கல்லாக போக சாபம் கொடுத்தாள் எனவே மஹாவிஷ்ணு பாறையானதால் இவ்விடம் ஹரிசிலா ஆனதாம்.

முன்னரே கூறியது போல நாங்கள் பதிவு செய்திருந்தது அனைவரும் சேர்ந்து தங்கும் அறைகளுக்குத்தான், உத்தரகாசியில் உள்ள GMVN தங்கும் விடுதியில் இருவர் தங்கும் அறைகள்தான் உள்ளன , எனவே நாங்கள் கங்கோத்ரியில் இருந்து திரும்பி வரும் போது பட்வாரி என்னும் ஊரில்தான் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பட்வாரிக்கும் உத்தரகாசிக்கும் இடையே 30 கி.மீ தூரம். பட்வாரியிலிருந்து ஒரு நடைபாதை வழி கங்கோத்ரிக்கும், மற்றொரு நடைபாதை கேதார்நாத்திற்கும் உள்ளது.    எங்கள் வழிகாட்டி அங்கேயே நாம் இறங்கிக்கொள்ளலாம் என்று கூறினார், முதலிலேயே பிரம்மகாலில் மாட்டிக்கொண்டது போல இங்கு மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்று பயந்து, உத்தரகாசி சென்று விடலாம் என்று அடம் பிடித்து, GMVN கூடுதல் மேலாளரிடம் பேசி, உத்தரகாசி செல்வதற்கு அனுமதி பெற்று இரவில் உத்தரகாசி அடைந்தோம். ஆனால் உத்தரகாசியிலிருந்தும் இரண்டு நாட்கள் வெளியே செல்ல முடியாமல் மாட்டிக்கொண்ட கதையை தொடர்ந்து படியுங்கள். 

 
  
எழில்மிகு உத்திரகாசி GMVN  சுற்றுலா இல்லம்




எழிலார்ந்த பூந்தோட்டம்



  

சுற்றுலா இல்ல தோட்டத்தில் திரு.இரவி

யமுனோத்ரி தீர்த்ததை  அடைக்கும் 
தேவராஜன், தனுஷ்கோடி, சொக்கலிங்கம்

மறு நாள்  காலை பேருந்து  இல்லை என்பதால் இங்கேயே  இன்று தங்கி உத்தரகாசியை சுற்றிப் பாருங்கள் என்று வழிகாட்டி கூறினார் எனவே அதற்கு ஒத்துக்கொண்டு அங்கு தங்கினோம். அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி தினமாகும் என்பதால் இங்குள்ள கோவில்களை காணச் சென்றோம். முதலில் உத்தரகாசி நகரைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோமா? இந்நகரம் ஒரு மாவட்ட தலை நகரம். கங்கோத்ரி செல்பவர்களுக்கு இந்நகரம் நுழைவாயிலாக உள்ளது. இந்நகரமே ஒரு புண்ணிய ஸ்தலம் உத்தர் என்றால் வடக்கு உத்தர காசி என்பது  வடக்கு காசி என்று பொருள்.  புராணங்களில் இவ்விடம் பாராஹாத் என்று அறியப்பட்துள்ளது. காசியில் உள்ளது போல் இரண்து ஆறுகள் இங்கு பாகீரதியுடன் கலக்கின்றது இந்த சங்கமங்களுக்கு இடையே இந்நகரம் அமைந்துள்ளது.  எனவே இந்நகரம் சௌமிய காசி அதாவது புனித காசி என்றும் அழைக்கப்படுகின்றது. கங்கையின் கரையில் உள்ள ஐந்து காசிகளில் இதுவும் ஒன்று. காசியில் உள்ளது போலவே  விஸ்வநாதர் ஆலயமும், மணிகர்ணிகா ஸ்நான கட்டமும் உத்திர காசியிலும் உள்ளது. 

இந்நகரம் பாகீரதியின் கரையில் ஐந்து யோசனை தூரம் பரவியுள்ளது என்று புராணங்களில்  கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தில் கேதார் காண்டத்தில் கலியுகத்தில் தெய்வங்கள் வாசம் செய்யும் இவ்விடத்தில் தங்குவது முக்தி நல்கும் என்று கூறப்பட்டுள்ளது.   கடல் மட்டத்திலிருந்து 1150 மீ உயரத்தில் இமயமலையின் மடியில் பாகீரதியின் கரையில்   இந்நகரம் அமைந்துள்ளது. 
 

 உத்தரகாசியில் பாகிரதியின் அழகு




 இரண்டு நாட்கள் உத்தர காசியில் தங்கினோம்
என்ன செய்தோம்?
மோகன், வைத்தி, தனுஷ்கோடி, தேவராஜன்

 சொக்கலிங்கம், இரவி, கணேசன்,  கோபாலன், ரேணுகா, இராதாகுமாரி, தேவேந்திரன், மனோகரன் 

(நன்றாக சாப்பிட்டுத் தூங்கினோம்) 

பாண்டவர்களின்  பாதம் பட்ட புண்ணிய பூமி இது.  முன்னர் நாம் பார்த்த லாக்ஷாகிரகத்தில் (அரக்கு மாளிகையில்) இருந்து ஸ்ரீகிருஷ்ணரின்  ஆலோசனைப்படி  சுரங்கத்தின் மூலமாக தப்பித்த பாண்டவர்கள் வெளியே வந்த இடம் உத்தரகாசி. மேலும் அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதஸ்திரம் பெற்ற  இடம் உத்தரகாசி.      ஜமதக்னி முனிவரின் ஆசிரமம் இங்குதான் அமைந்திருந்தது, பரசுராமர் தந்தையின் ஆனைப்படி தன் தாயார் ரேணுகாதேவியின் சிரம் கொய்த பூமியும் இதுதான். ஆயிரமாயிரம் தபோவானர்கள் தவம் செய்த பூமி இந்த பூமி. ஆதி காலத்தில் பாதைகள் இல்லாத போது இந்நகரம்தான் சார்தாம் யாத்திரையின் நுழைவாயிலாக இருந்துள்ளது.  பாகில்ய, இந்திரகீல், வருணாவத், ஐராவத மலைகள் இந்நகரின் நான்கு திசை காவல் அரணாக உள்ளன. இவற்றுள் வருணாவத்   மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.  சித்திரை மாதத்தின்  கிருஷ்ணபக்ஷ திரயோதசியன்று வாருணி என்னும் இந்த வாருணாவத் மலையை கிரி வலம் வரும் விழா நடைபெறுகின்றது.  அன்றைய தினம் முப்பத்து முக்கோடி தேவர்களும் இம்மலையில் வந்து அருளுகின்றனர். தேவர்கள் கூடும் சமௌ கி சௌரி  என்னும் இடம் இந்நகரில் அமைந்துள்ளது. இன்றும் இந்நகரத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்கள் வருடத்தில் ஒரு நாள் இங்கு கூடி பக்தர்களுக்கு  நடனக்காட்சி அருளுகின்றார்கள்.  ஆதிகாலத்தில் இருந்தே  திபெத்திய வணிகர்கள் இந்நகரத்தில்  கணவாய் வழியாக வந்து வணிகம் செய்துள்ளனர்.  
 
விஸ்வநாதர் ஆலய முன் வாயில் 
 
 உத்தரகாசி விஸ்வநாதர் சன்னதி

உத்தரகாசியில் பல் வேறு திருக்கோயில்கள் உள்ளன. இவற்றுள் முதன்மையானது காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகும் இங்கு அன்னை திரிசூல வடிவில் வணங்கப்படுகின்றாள். மேலும் ஜெய்ப்பூர் மன்னர் கட்டிய  ஏகாதச ருத்ரர் ஆலயம், ஞானேஸ்வரர் ஆலயம், காளி மாதா ஆலயம்,  பரசுராமர் கோயில். குடேடி தேவி ஆலயம் ஆகிய பல ஆலயங்கள் உள்ளன. ஜடபரதர் மற்றும் பல ஆசிரமங்களும் உள்ளன.  மேலும்  ஜவஹர்லால் நேரு மலையேற்ற பயிற்சிப் பள்ளியும் இவ்வூரில் உள்ளது. இந்நகரம் சில வருடங்களுக்கு முன் கடுமையான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு  ஏராளமான சேதம் ஏற்பட்டது. ஆனால் பீனீக்ஸ் பறவையைப் போல எல்லாம் சரி செய்யப்பட்டு இன்று முன்னை விட பொலிவாக விளங்குகின்றது இந்நகரம். 
 மார்க்கண்டனுக்காக யமனை உதைத்த பரமன் சன்னதி

GMVN சுற்றுலா இல்லங்கள் எல்லாம் மிகவும் சிறப்பான முறையில் அருமையான பூங்காக்களுடன் பராமரிக்கப்படுகின்றன. இந்த உத்தரகாசி சுற்றுலா பாகீரதி நதிக்கரையோரம் அருமையான மலர்தோட்டத்துடன் புல்வெளியுடனும் அமைந்துள்ளது. காலை எழுந்தவுடன்  சன்னலை திறந்து சூரிய ஒளியில் மின்னும் பாகீரதியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவ்வளவு இரம்மியமான காட்சி பாகீரதி பாயும் அழகை நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம், ஆனால் நாங்கள் தேவையில்லாமல் பேருந்து பழுதாகி விட்டதால் இங்கு மாட்டிக்கொண்டதால் மனது அதில் ஒன்றவில்லை. வழிகாட்டி இங்குள்ள கோவில்களுக்கு சென்று வரலாம் என்று கூறியதால் அப்படியே நடந்து காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றோம். 
 விஸ்வநாதர் விமானம்

மிகவும் புராதமான ஆலயம், சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக யமனை உதைத்த மிருத்யுஞ்செய மூர்த்தியாய் தெற்காக சாய்ந்த வண்ணமும் அன்னை  மலைமகள் பார்வதி பிரமாண்ட திரிசூல வடிவிலும் அருள் பாலிக்கின்றனர் இந்தக்கோவிலில்.  ஸ்கந்த புராணத்தில் கேதார் காண்டத்தில் உத்தர காசியின்  மகிமை இவ்வாறு கூறபப்ட்டுள்ளது.  கலி காலத்தின் காசி இது.  பூமியில் பாவம் அதிகரித்து அரக்கர்கள் நடமாடும் காலத்தில் நான் இமய மாலியில் தங்குவேன் கலை காலத்தில்  கிழக்கு காசியைப் போல வடக்கு காசியும் பெருமை மிக்கதாகவும் விளங்கும் என்று சிவபெருமான் கூறுகின்றார்.  இங்கே சிவபெருமான் சுயம்பு லிங்க ரூபத்தில் அருள் பாலிக்கின்றார். கருவறையில் பார்வதி மற்றும்  கணேசர் சிலைகளும் உள்ளன. வெளியே நந்தியெம்பெருமான் காவல் காக்கின்றார்.  தற்போது உள்ள இக்கோவிலை தெஹ்ரி இராச்சியத்தின் அரசன்  சுதர்சன் சாவின் பாரியாள்  இராணி    கானேடி தேவி 1857l இக்கோவிலை கத்யூரி  அமைப்பில் கற்றளியாக கட்டினாள். பின்புறத்தில் வாரணாவது மலை அருமையான் பின்புலமாக விளங்குகின்றது.  மார்க்கண்டனுக்காக யமனை உதைத்த வரலாறு இத்தல ஐதீகமாக விளங்குகின்றது. எனவே சிவலிங்கம் தெற்கு நோக்கி சாய்ந்துள்ளது, வடநாட்டுக்கோயில்களில் நாமே, பால் , தண்ணீர் அபிஶேகம் சிவபெருமானுக்கு செய்யலாம். இங்கும் நாங்கள் பால் அபிஷேகம் செய்து வில்வம் சார்த்தி விஸ்வநாதரை வழிபட்டோம். 

விஸ்வநாதர் விமானம்
பின் புறத்தில் வார்ணாவத பர்வதம் 

அன்னை இங்கே பிரம்மாண்ட 19.5 அடி உயர திரிசூலமாக வணங்கபப்டுகின்றாள்.  இந்த திரிசூலம்  விஸ்வநாதர் சன்னதிக்கு  நேரெதிராக அமைந்துள்ளது. ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்த போது இந்த திரிசூலம் பய்ன்படுத்தப்படது. இந்த யுத்ததில் திரிசுலம், பரசு, சுதர்சனம் ஆகிய மூன்று ஆயுதங்களின் சக்தி உள்ளது  எனவே தேவர்கள் வெற்றி பெற்ற பின் இந்த திரி சூலத்தை இங்கே ஸ்தாபிதம் செய்தனர்.  அன்றிலிருந்து  இத்திரிசூலம் அம்மனாக வணங்கப்படுகின்றாள்.  நாம் கையால் இந்த சூலத்தை தொட்டால் அது ஆடும் ஆகவே இதன்  அடியைக் காண பிரிட்டிஷார்கள் முயற்சி செய்தார்களாம் ஆயினும் இந்த திரிசூலத்தின் அடியை காண முடியவில்லையாம்.  பிரம்மாண்ட மூன்று தலைகளுடன் பரசு ஒரு பக்கத்துடன்  அருமையாக  அருட்காட்சி தருகின்றது திரிசூலம். மகர சங்கராந்தி சமயத்தில் இங்கு மாஹ் மேளா என்னும் விழா ஒரு வாரகாலம் நதைபெறுகின்றது. அப்போது லக்ஷ கணக்கில் பக்தர்கள் இங்கு கூடி பாகீரதியில்  ஸ்நானம் செய்து விஸ்வநாதரை  வழிபடுகின்றனர். 

திரி சூல ரூபத்தில் பார்வதி மாதா

வெளிப்பிரகாரத்தில் பிரம்மாண்ட அரசமரம் உள்ளது. மேலும் சாக்ஷி கோபால் ஆலயம் மற்றும் மார்க்கண்டேயர் சன்னதி உள்ளன. மேலும் விநாயகருக்கும் துண்டி ராஜனுக்கும் தனி சன்னதிகள் உள்ளன. இங்கு விநாயகர் சதுர்த்திக்கு அதிக முக்கியத்துவம் இல்லை போல தோன்றியது.  அருகில் இருந்த ஒரு இராமர் கோவிலுக்கு சென்று விட்டு வரும் போது  இக்கோவிலின் மரத்தடியில் இரண்டு சாதுக்களை பார்த்தோம் அதில் ஒருவர் 10  அடி ஜடாமுடியுடன் அமர்ந்திருந்தார்.  இவர் தமிழில் பேசி எங்களை ஆச்சிரியப்படுத்தினார். சிறு வயதில் பஞ்சகாலத்தில் இங்கு ஓடி வந்தவர்,   இங்கேயே சந்நியாசி ஆகி தங்கி விட்டாராம். அவர் அருகில் இருந்தவர் வங்காளத்தை சேர்ந்தவராம் இவர்கள்  அமாவாசையன்று  அன்னதானம் செய்து வருகின்றோம் என்று கூறினார். நாங்கள் அன்னதானத்திற்கு பணம் கொடுத்த போது அதை கைகளினால் வாங்கவில்லை. தரையில் வைத்துவிடச்சொன்னார். பூமியில் பட்ட எதுவும் தானம் இல்லையாம் எனவே தரையில் வைக்க சொன்னார்.


ஒரு அழகிய ரோஜா மலர்  

விஸ்வநாதரை திவ்யமாக தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகு  சுற்றுலா இல்லம் சென்றோம். மதிய உணவு உண்ட பின் மற்ற கோவிகள்ளையும் நேரு மலையேற்ற பயிற்சி பள்ளியையும் சென்று காணலாம் என்று வந்தோம், ஆனால் உணவு உண்டபின், உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்றபடி ஒரு வாரமாக பயணம் செய்து கொண்டு இருப்பதால் மிகவும் அசதியாக இருந்ததால் சென்று ஒய்வெடுத்தோம்.   இன்றைய தினம் இவ்வாறு உத்தர காசியில் கழிந்தது. இனி அடுத்த நாள் என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாமா? அன்பர்களே.

9 comments:

Karthikeyan Rajendran said...

தெரியாத பல விஷயங்கள் உங்கள் உரையில் உள்ளது, மிக அருமை என் போன்ற puthiyavarkalukku migavum payanulla பல kurippukal ullana, padangalum மிக arumaiyaaga உள்ளது ,

Karthikeyan Rajendran said...

உங்கள் குழுவினரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது, மறக்காமல் உடனுக்குடன் பதிவிடவும், உங்கள் குழுவினருக்கு எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலன்களையும் வழங்குவானாக............ஓம் நமசிவாய!!!!!!!!!!!

S.Muruganandam said...

மிக்க நன்றி ஸ்பார்க் கார்த்தி.

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

புதிதாக செல்பவர்களுக்கு உபயோகப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்பத்திவுகளை இடுகின்றேன். தங்களுக்கு உபயோகமாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

S.Muruganandam said...

//மறக்காமல் உடனுக்குடன் பதிவிடவும்//

<a href="http://narasimhar.blogspot.com>மந்திராலயம்</a> யாத்திரையைப் பற்றியும் பதிவிட்டு வருகின்றேன் அதில் ஒரு பதிவிட்டு விட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பதிவிடுகின்றேன்.

தங்கள் உற்சாகத்திற்கு மிக்க நன்றி.

கோமதி அரசு said...

பூமியில் பட்ட எதுவும் தானம் இல்லையாம் எனவே தரையில் வைக்க சொன்னார்.//

புதிய செய்தியாய் இருக்கிறது.

கோமதி அரசு said...

பூமியில் பட்ட எதுவும் தானம் இல்லையாம் எனவே தரையில் வைக்க சொன்னார்.//

புதிய செய்தியாய் இருக்கிறது.

S.Muruganandam said...

//புதிய செய்தியாய் இருக்கிறது.//

ஆம் அவர் அப்படித்தான் கூறினார். நாம் தானம் தரும் போது கையில் தருகின்றோம் அல்லவா அதனால் இருக்கலாம்.

Sankar Gurusamy said...

சிறப்பான வர்ணணைகளுடன் அற்புதமாக இருந்தது.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

S.Muruganandam said...

மிக்க நன்றி குருசாமி ஐயா.