தென்னாடுடைய சிவனே போற்றி
நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈரடியாலே மூவிலகு அளந்து
நால்திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால், அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
கடுமுரண் ஏனம் ஆகி, முன்கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின்எய்த்து
ஊழி முதல்வ! ’சயசய’ என்று
வழுத்தியும் காணா மலரடி இணைகள்.
பொருள்: நான்கு திருமுகங்களையுடைய பிரம்மதேவன் முதலாகிய தேவர்கள் எல்லாரும் வணங்கி நிற்க, இரண்டு திருவடிகளினாலே மூன்று உலகங்களையும் , நான்கு திக்கிலும் உள்ள தேவர்களும் தமது ஐம்பொறிகளும் மகிழும்படி வணங்குகின்ற ஒளிகளையுடையதிருமுடியமைந்த அழகிய திருமால், ஜோதிப்பிழம்பாய் நின்ற நாளில் அடியையும், முடியையும் அறிய வேண்டும் என்ற விருப்பத்தினால், வேகமும் வலிமையும் உள்ள பன்றியாகி முன் வந்து, ஏழுலகங்களையும் ஊடுருவும்படி நிலத்தை தோண்டிச் சென்று பின் இளைத்து, ’படைப்பு காலத்திற்கு முற்பட்டவனே, வெற்றியடைக; வெற்றியடைக’ என்று துதித்தும் காணப்பெறாத தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய திருவண்ணாமலையார் உயிர்களுக்கு ஏற்படும் அல்லல்கள் அனைத்தையும் நீக்குபவர் என்று போற்றித் திருஅகவலில் பாடுகின்றார்.
வெள் விடையில் அண்ணாமலையார்
திருவண்ணாமலையில் கார்த்திகைதீபப் பெருவிழாவின் ஐந்தாம் திருநாளான இன்று ஐயன் தனக்கே உரிய வெள்ளை ரிஷபத்தில் அதாவது 25 அடி வெள்ளி இடப வாகனத்தில் பெரிய குடைகளுடன் திருவீதி உலா வந்து அருள் பாலிக்கின்றார் இந்த நன்னாளில் கிரி வலம் பற்றிக்காண்போமா அன்பர்களே.
பூலோக மேருவான திருக்கயிலாய மலையிலே மலையரசன் பொற்பாவையும் எம்பெருமானும் சூட்சும ரூபத்தில்தான் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர், அங்கு திருக்கோவில் ஒன்றும் கிடையாது. திருக்கயிலாய மலையே சிவசக்தியாக கருதப்படுகின்றது, எனவே பரிக்கிரமா என்று அழைக்கப்படும் கிரி வலம் திருகயிலாயத்தில் மிகவும் விசேஷம்.
திருவண்ணாமலை
அவ்வாறே அண்ணாமலையே சிவன், சிவனே அண்ணாமலை எனவே அண்ணாமலை கிரிவலமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வருடத்தில் இரண்டு நாட்கள் எம்பெருமானே கிரி வலம் வருகின்றார் என்றால் அந்த கிரிவலத்தின் சிறப்பை வேறு வார்த்தைகளால் கூற முடியுமா? கார்த்திகை தீபத்திற்கு அடுத்த இரண்டாம் நாள் மற்றும் திருஊடல் உற்சவத்தின் இரண்டாம் நாள் ஐயன் அம்மையுடன் தானே கிரிவலம் வருகின்றார்.
கருணையே வடிவான மலையை முழு மதி நாளில் வலம் வருதல் கிரி வலம் என்று அழைக்கப்படுகின்றது. அக்னியே வடிவான இம்மலையை சுற்றுவதால் அநேக நன்மை. செம்பவள மேனி வண்ணனின் நிறத்தைக் கொண்ட இந்த அருணாசல மலை, மருந்தான முக்தி பேறு அளிக்கும் மலை. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி மலை, கண் மூன்றும் உள்ள மலை திருவண்ணாமலை 2688 அடி உயரம் கொண்டது. மேற்கு கோபுரத்தின் பின் புறம் அமைந்துள்ளது இந்த மலை. முந்தைய யுகங்களில் அக்னி, மாணிக்க, பொன் மலையாக விளங்கி தற்போது கலியுகத்தில் கல் மலையாக உள்ளது.
இரமண மகரிஷி
- இடைக்கடரின் ஜீவ சமாதி, எண்ணற்ற சித்தர்கள் வசித்த குகைகள் இம்மலையிலே உள்ளன, எனவே லிங்க வடிவான இம்மலையில் சித்தர்கள் சூட்சும வடிவத்தில் வசிப்பதாலும் பௌர்ணமியன்று அவர்கள் நடமாட்டம் இருக்கும் என்பதாலும் கிரிவலம் நமது துன்பங்களையும் நோய்களையும் போக்கும்.
- இம்மலையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளின் காற்றால் கிரிவலம் வருவோரின் நோய் நீங்குகின்றது.
- இம்மலைக்கு காந்த சக்தி உள்ளதாக புவுயியல் வல்லுனர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.
அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமா? இந்தப் பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு. சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்.
வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும். இரண்டடிக்கு லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும். மூன்றடிக்கு கோயில் கட்டிய பேறு கிடைக்கும். அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு சமீபத்தில் இருக்கும். மலையைச் சுற்றி நடந்து சிவந்த பாதங்களைக் கண்டால் நாலாவித பாவங்களும் காணாதொழியும். பாதத்துளிகள் நரகத்தையும் பரிசுத்தப்படுத்தும். கிரிவலம் வருவோரின் காலடித் தூசுபட்ட மனித தேகத்தின் பிறவிப் பிணி நீங்கும் என கிரிவலத்தின் மகிமையை பலவாறு கூறுகிறது அருணாச்சல புராணம்.
இம்மலையின் சிறப்பை சம்பந்தர் பெருமான் இவ்வாறு பாடுகின்றர்.
ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல்
ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி இழியும்இரவின் கண்
ஆணைதிரள்வந் தணையும்சாரல் அண்ணாமலையாரே.
திருமாலும் பிரம்மனும் அடி முடி தேடி சென்றபோது ஞானப்பிழம்பாய் நின்ற அண்ணாமலையார் தன்னுடைய உண்மையான அடியவர்களின் குறைகளை நீக்கி முக்திப் பேறு அளிக்கும் பெருமான். அவர் காட்டுப்பன்றி கூட்டமும், மான் கூட்டமும், கரடிக் கூட்டமும் சஞ்சரித்தற்கு இடமான, இரவிலே யானைக் கூட்டமும் வந்து சேருகின்ற திருவண்ணாமலையில் அமர்ந்தவர்.
திருவண்ணாமலை அர்த்தநாரீஸ்வரர் ரூபம்
அருணாச்சல மலையானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் காட்சியளிக்கிறது. திருவண்ணாமலைக்கு மேலே செல்ல முறையான படிக்கட்டுகளோ வசதிகளோ இல்லை. மலையிலும் தரிசனம் செய்ய வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. தற்போது மலைக்கு செல்ல பயன்படுத்தப்படும் பாதை தண்டபாணி ஆசிரமம் வழிதான். இந்த ஆசிரமம் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. அந்தப்படியில் ஏறி ஆசிரமம் சென்றதும் ஆசிரம முகப்பில் சிறிய அளவில் கன்னி மூல ஜோதி விநாயகரை தரிசனம் செய்யலாம். ஆசிரமத்தின் உள்ளே சென்றால் தண்டபாணி சாமியும் அருகில் செவ்வாய் பகவானையும் தரிசனம் செய்யலாம். மேலும் மேலே சென்றால் முலைப்பால் தீர்த்தம் உள்ளது. அதன் பக்கவாட்டில் சடைசாமி ஆசிரமம் உள்ளது. அதைத்தாண்டி மேலே சென்றால் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் தளம் உள்ளது. அங்கு தரிசனம் செய்ய அண்ணாமலையார் பாதம் உள்ளது. அம்மைக்கு காட்சி கொடுத்த இடப்பாகம் கொடுத்து அர்த்தநாரீசுவராக மாறிய எம்பெருமான் அதன் அடையாளமாக மலை உச்சியில் பாத தரிசனம் தருவதாக ஐதீகம். தீபத்திருநாளன்று தீப தரிசனம் காண செல்லும் பக்தர்கள் அண்ணாமலையார் பாதத்தை வணங்கி வழிபடுகின்றனர்.
இந்த ஆசிரமத்தின் இடப்பக்கத்தில் குகை நமச்சிவாயர் கோயில் உள்ளது. அதைத்தாண்டி சென்றால் விருப்பாச்சி குகையும் சற்று தள்ளி ஸ்கந்தாஸ்ரமும் உள்ளது. சில பக்தர்கள் இந்த ஆசிரமங்களுக்கு சென்று தரிசனம் செய்து தியானமும் செய்து வருகின்றனர். மலையே சிவ பெருமான் என்பதால் மிகுந்த நியம நிஷ்டையுடன் மலை மேலே ஏறவும்.
கிரி வலம் மொத்தம் 14 கி,மீ தூரம். எட்டு திக்குகளிலும் அஷ்ட திக்கு லிங்கங்கள் எண் கோண அமைப்பில் அமைந்துள்ளன, கிழக்கிலே இந்திர லிங்கமும், தென் கிழக்கிலே அக்னி லிங்கமும், தெற்கிலே யம லிங்கமும், தென் மேற்கிலே நிருதி லிங்கமும், மேற்கிலே வருண லிங்கமும், வடமேற்கிலே வாயு லிங்கமும், வடக்கிலே குபேர லிங்கமும், வட கிழக்கான ஈசான திக்கில் ஈசான லிங்கமும் அமைந்துள்ளன. அண்ணாமலையார் இராஜ கோபுரத்தில் இருந்து கிரிவலத்திற்காக கிழக்கு நோக்கி புறப்படும் போது முதலில் நாம் தரிசிக்கும் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசைக்கு அதிபதி சூரியன், சுக்கிரன். இந்திர லிங்கத்தை வழிபாடு செய்வதால் லக்ஷ்மி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம். கிரிவலப்பாதியில் இரண்டாவது லிங்கம் அக்னி லிங்கம். இது செங்கம் ரோட்டில் தாமரைக் குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் எம்பெருமான் ஜோதி(அக்னி) வடிவாக காட்சி தந்ததால் இந்த அக்னி லிங்கம் மலை பக்கமாக அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபட்டால் நோய், பிணி, பயம், முதலியவை விலகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.
கிரிவலப்பாதையில் 3வது லிங்கம் யமலிங்கம் ஆகும். இத்தலம் இராஜ கோபுரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. கோவிலின் பக்கத்தில் சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருகி வழிபடுவதால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
யமலிங்கம்
கிரிவலப்பாதையில் 3வது லிங்கம் யமலிங்கம் ஆகும். இத்தலம் இராஜ கோபுரத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. கோவிலின் பக்கத்தில் சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருகி வழிபடுவதால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
அக்னி லிங்கம்
நிருதி லிங்கம்
இராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 8 கி. மீ தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகில் வருண தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும். அடுத்த லிங்கம் வாயு லிங்கம். இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். வடமேற்கு திசையின் அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையிலிருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, கண்களுக்கு நல் வழி கிடைக்கும். அடுத்த லிங்கம் குபேர லிங்கம். இங்கு பக்தர்கள் இவர் மீது காசுகளை வீசி வணங்குகின்றனர். வடக்கு திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வழிபட பொருளாதாரம் உயரும், மன நிம்மதி கிட்டும். கிரிவலப்பாதியின் நிறை லிங்கம் ஈசான்ய லிங்கம், சிறிது தள்ளி அமைந்துள்ளது இக்கோவில். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். வடகிழக்கு திசையின் அதிபதி புதன். இங்கு வழிபடுவதால் மனம் ஒரு நிலை அடையும், இறை நிலை பெறுவதற்கு வழி காட்டும். எட்டு லிங்கங்களையும் வழிபட்டால் புண்ணியம் கோடி. எனவே கிரி வலம் வருவதால் சகல நன்மைகளும் எற்படும். தேவாரப் பாடல் பெற்ற ஆதி அண்ணாமலைக் கோவிலும் கிரிவலப் பாதையில் உள்ளது. இவை உட்பட கிரிவலப் பாதையில் 64 வழிபாடு தலங்கள் உள்ளன.
வாயு லிங்கம்
அக்னியான மலையை நாம் சுற்றுவதால் அனேக நன்மை என்பதால் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் லட்சக் கணக்காணோர் கிரி வலம் வருகின்றனர். பௌர்ணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகமாக வாங்கி பூரண நிலவாக சந்திரன் பிரகாசிப்பதால் நிறைந்த உயிர் சக்தியை அளிக்கிறார் இதனால் பௌர்ணமி கிரி வலம் சிறப்பு. அக்னி ஸ்தலம் என்பதால் அக்னி கோளான ஞாயிறு, மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் கிரி வலம் செய்வதும் நல்லது. திருவருணை மலையின் சுற்றுப்பாதையை வலம் வந்தால் எண்ணியன ஈடேறும்.பாவங்களும், பிணிகளும் அகலும்; செல்வமும் புகழும் தழைக்கும் என்பது ஐதீகம்.
கிரிவலத்திற்காக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அசுவமேத யாக பலனை அளிக்கும் என்பது ஐதீகம். பௌர்ணமியன்று நிலவொளியில் கிரிவலம் வருவதால் ஏற்படும் நன்மைகள் உடலுறுப்புகள் உறுதி அடையும், ஆன்மீக நலம், அருள் நலம் ஏற்படும், மனம் மொழி மெய்த்தூய்மை அடையும், உலகவாழ்வுத் துன்பங்கள் விலகும், நீர், நெருப்பு, காற்று நோய்கள் நீங்கும், கலை ஞானம் வந்து அடையும், உவமை இல்லாத மெய்ஞானம் சித்திக்கும், திருமண தோஷத் தடை நீங்கி திருமணம் எளிதில் அமையும், குழந்தை செல்வம் நன்மக்கட் பேறு வாய்க்கும், பல தலைமுறையாக வளரும் பகை விலகும், அன்பர்கள், நண்பர்கள் துனை அமையும், மனநிறைவான நல்ல குடும்ப வாழ்வும், மகிழ்ச்சியும் ஏற்படும். வயிறு குடல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வியாபாரத்தில் தடங்கல் , நெருக்கடி தோஷங்கள், நீங்கி அபிவிருத்தி உண்டாகும், சகல செல்வம் மேன்மை கீர்த்தியோடு அவரவர் பிரார்த்தனை நிறைவேறி இறைவன் அருள் கிடைக்கும்.
கிரிவல மகிமை தொடரும் ............
2 comments:
>>பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை ....?
Ayyappan temple place where jothi is shown is called பொன்னம்பலமேடு..
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.
Post a Comment