Showing posts with label சிவபுரி. Show all posts
Showing posts with label சிவபுரி. Show all posts

Tuesday, December 25, 2012

சிதம்பரத்தை சுற்றியுள்ள சிவத்தலங்கள் - 2

திருகழிப்பாலை (சிவபுரி)



ஆனந்த கூத்தரின் ஆருத்ரா தரிசன சமயத்தில்  அடுத்து நாம் தரிசிக்க இருக்கும் தலம் திருக்கழிப்பாலை. மூவராலும் பாடல் பெற்ற இத்தலம் முன்பு கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் காரைமேடு என்னும் இடத்தில் இருந்தாம். ஒரு சமயம்  கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கு திருக்கோயிலை முற்றிலும் சேதப்படுத்திவிட்டது. பின்னர்  படுகை முதலியார் குடும்பத்தில் திரு. பழநியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோயில்கட்டி அதில் கழிப்பாலை இறைவரையும், அன்னையையும், ஏனைய பரிவார தேவதைகளையும் எழுந்தருளுவித்துள்ளார். சிவபுரியில் இருந்து சுமார் ½ கி.மீ தூரத்தில் தற்போது இந்த ஆலயம் உள்ளது. பாலையப்பர் கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது

இறைவன் - பால்வண்ண நாதேஸ்வரர்.
இறைவி - வேதநாயகி.
தல மரம்: வில்வம்
தீர்த்தம்: கொள்ளிட நதி
மூவராலும் பாடப் பெற்ற தலம்
சோழ நாட்டு (வடகரை) 4வது தலம் 

 வான்மீகி முனிவர் பூசித்துப் பேறு எய்தினர். இத்தலத்திற்கு ஞானசம்பந்தரது பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசரது பதிகங்கள் ஐந்து, சுந்தரரது பதிகம் ஒன்று ஆக மொத்தம் எட்டுத் திருப்பதிகங்கள் இருக்கின்றன. இவற்றுள் திருநாவுக்கரசர் திருவாய் மலர்ந்துள்ள ``வனபவள வாய்திறந்து`` என்று தொடங்கும் அகப்பொருள்துறைகள் அமைந்த பாடல்கள் படித்து இன்புறத்தக்கன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம்  இராஜகோபுரத்திற்கு வெளியிலேயே ஒரு நந்தி தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நந்தியின் தலை திரும்பியுள்ளது. இந்த நந்தி மூலவரைப் பார்க்காமல் பைரவரை பார்க்கின்றது என்று கூறுகின்றனர். உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர். ஒரே பிரகாரம்தான். சபையில்  நடராஜரின் சடைமுடி அள்ளி முடிந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார். அருகில் சிவானந்தவல்லி, தில்லையைப் போலவே  தன் தோழிகளான லக்ஷ்மி, சரஸ்வதியுடன் அருள் பாலிக்கின்றாள்.

தல வரலாறு: கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. மனம் நொந்த முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, எம்பெருமான் உமையவளுடன் நேரில் அருட்காட்சி தந்து, முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள் என்றார்.

பால்வண்ண நாதர் 

எங்கேனும் இருந்துன் அடியேன் உனைநினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. –சுந்தரர் பாடிய பால்வண்ண நாதர் இன்றும் சதுர ஆவுடையில் பிறை வடிவத்தில் லிங்கம் உள்ளது. வெள்ளை லிங்கம், கருப்பு ஆவுடை. படத்தில் தெளிவாகக் காணலாம்.  லிங்கத்திற்கு பால் மற்றும் சந்தனம் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற அபிஷேகம் எல்லாம் ஆவுடையாருக்குத்தான். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.   கருவறையில் ஐயனுக்கு பின் புறம் அம்மையப்பர் நின்ற கல்யாண  கோலத்தில் அருளுகின்றனர், அகத்திய முனிவருக்கு காட்சி தந்ததாக ஐதீகம். அம்பாள் வேத நாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றாள். 

பைரவரை நோக்கி உள்ள நந்தி

இக்கோவிலின் சிறப்பு மூர்த்தி பைரவர் ஆவார், இவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், ஜடாமுடி, சிரசில் கபாலம், சிங்கப்பல், சர்ப்பத்தால் கோர்க்கப்பட்ட 24 மண்டை ஓட்டு மாலை, பூணூல், சர்ப்ப அரைஞாண் அணிந்து, இடக்கையில் சர்ப்பத்துடன்  திகம்பரராக தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது. இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர் கூட்டம் அன்று அலை மோதுகின்றது. இவரை வணங்கினால் காசியில் உள்ள கால பைரவரை வணங்கியதற்கு சமம்.

அம்பாள் சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை இடை உடுத்தி கால் சிலங்கை ஜல் ஜல் என்று ஒலிக்க கிராமத்தை வலம் வந்து காப்பதாகவும், அது போலவே பைரவரின் வாகனமான .நாயும் கிராமத்தை காப்பதாக இக்கிராம மக்கள் நம்புகின்றனர். சபரி மலை மேல் சாந்திகளின் குல தெய்வம் இந்த பால்வண்ணநாதர்தானாம். மேல் சாந்தி யார் என்பதை நடக்கும் குலுக்கல் இக்கோவிலில்தான் நடைபெறுமாம் ஆனால் சீட்டை இங்கு பிரித்து பார்க்காமல் சபரி மலை சென்று பிரித்து பார்க்கின்றார்களாம். 

இக்கோவிலிலும் கொடிமரம் கிடையாது எனவே பெரிந்திருவிழா கிடையாது. நவராத்திரி, சிவராத்திரி, விநாயக சதுர்த்தி முதலிய விசேஷ உற்சவங்கள் மட்டும் நடைபெறுகின்றன. சோழ மன்னர்களின் நான்கு கல்வெட்டுகள் உள்ளன.

புனலா டியபுன் சடையா யரணம்
அனலா கவிழித் தவனே யழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்

உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.

என்று சம்பந்தப்பெருமான் பாடிய பால்வண்ணநாதரையும், வேத நாயகி அம்பாளையும், பைரவரையும் வழிபட பாருங்கள் சிவபுரிக்கு.

Monday, December 24, 2012

சிதம்பரத்தை சுற்றியுள்ள சிவத்தலங்கள் - 1


திருநெல்வாயில் (சிவபுரி)

பூலோக கைலாயமாம் சிதம்பரத்தை சுற்றி பல்வேறு சிவத்தலங்கள் உள்ளன. இந்த வருட ஆருத்ரா தரிசன மஹோத்சவம் தில்லையில் 19-12-2012 கொடியேற்றத்துடன் தொடங்கி விட்டது. 27ம் தேதி வியாக்கிழமையன்று ஆனந்த நடராஜரும், சிவகாம வல்லியும் திருத்தேருக்கு  எழுந்தருளி அருட்காட்சி தருவர் பின்னர் 28 வெள்ளியன்று அருணோதய காலத்தில் மஹா அபிஷேகம் அன்று மதியம் ஆருத்ரா தரிசனம் இந்த புண்ணிய வேளையில் கோயிலை சுற்றியுள்ள சிவத்தலங்களை தரிசனம் செய்யலாமா அன்பர்களே தொடர்ந்து வாருங்கள். ஒரே நாளில் அனைத்து தலங்களையும் தரிசித்து விடலாம். முடிந்தவர்கள் சென்று தரிசிக்க வேண்டுகிறேன்.

நாம் முதலில் தரிசனம் செய்யப்போகின்ற தலம் திருநெல்வாயில் என்னும் சிவபுரி. சிவபுரி உச்சிநாத சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படும் இத்தலம்  தேவார பாடல் பெற்ற தலமாகும். அம்மையின் ஞானப் பால் உண்ட திருஞான சம்பந்தரால்   பாடப் பெற்ற தலம்திருவேட்களத்தில் தங்கி இருந்த நாட்களில் ஆளுடையப்பிள்ளை இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தலம்கன்வ மகரிசி வழிபட்ட தலம். சிவபுரி மான்மியம் என்னும் தலவரலாறு பெற்ற தலம். நெல் வயல்களை ஊரின் வாயிலில் கொண்டு விளங்கும் மாட்சியில் இவ்வூர் நெல் வாயில்  எனப்பெற்றது தற்போது சிவபுரி என வழங்கப்படுகின்றது.

சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் சாலையில் வந்து, பல்கலைக் கழகத்திற்குள் நுழையாமல் வலப்புறமாகத் திரும்பி கவரப்பட்டு சாலையில் சென்று, அது மெயின் ரோடில் சேருமிடத்தில் (கவரப்பட்டு சாலை இடப்புறமாகத் திரும்பிவிட) நாம் நேரே எதிர்ச்சாலையில் - பேராம்பட்டுச் சாலையில் சென்றால் சிவபுரியை அடையலாம். கோயில் வரை வண்டியில் செல்லலாம்.

இறைவன் - உச்சி நாதேஸ்வரர், உச்சிநாத சுவாமி. மத்யானேஸ்வரர்
இறைவி - கனகாம்பிகை.
தலமரம் - நெல்லி.
தீர்த்தம்கிருபா சமுத்திரம் (கோயிலின் எதிரில் உள்ளது).
சோழ நாட்டு (வடகரை) 3வது தலம் 

கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் நீராழி மண்டபத்துடன் திருக்குளம் உள்ளது. ஐந்து நிலைகளுடன் காட்சி தரும் ராஜகோபுரத்தைக் கடந்து உட்சென்றால் கோஷ்டத்தில் நர்த்தனவிநாயகர் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர் அஷ்டபுஜதுர்க்கை பிரம்மா. பிரகாரத்தில் சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சூரியன்  சந்திரன் சந்நிதிகள் உள்ளன. ஒரே பிரகார வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன.

துவாரபாலகரைத் தொழுது வாயிலைக் கடந்தால் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளதுதெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.  அம்மையின் பெயரால் இக்கோவிலை கனகாம்பாள் கோயில் என்று இங்குள்ளவர்கள் அழைக்கின்றனர். சபையில்  ஆனந்த தாண்டவர் சிவகாமியுடன் தரிசனம் தருகின்றார்.

விருத்தனாகி வெண்ணீறு பூசிய
கருத்தனார் கனலாட்டு உகந்தவர்
நிருத்தனார் நெல்வாயில் மேவிய
ஒருத்தனார் எமது உச்சியாரே                என்று ஆளுடையப்பிள்ளை பாடிய
மூலவர்  சுயம்பு இலிங்கத் திருமேனி உயரமும் பருமனும் குறைந்த அமைப்புடையது. சதுரபீடம் சுற்றளவில் சிறியது. கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்தில் அருளுகின்றனர். முன்மண்டபத்தில் நந்தியைச் சுற்றியுள்ள முன், பின் இருதூண்களில் நால்வர் சிற்பங்கள் உள்ளன. தினமும் ஐந்து கால வழிபாடுகள். வைகாசி விசாகத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு சிறப்பு. கொடி மரம் கிடையாது பெருந்திருவிழாவும் இல்லை.

வாழ்க்கைமனைநல்வாயலெங்கு நவமணிக்குன்றோங்கு
திருநெல்வாயில் நின்றொளிரும் நீளளியே(திருஅருட்பா)

மூன்று வயதிலேயே சீர்காழித் திருத்தலத்தில் குளக்கரையில் அம்மையின் ஞானப்பால் உண்டு தோடுடைய செவியன் என்று பாடத்தொடங்கிய ஞானசம்பந்தப்பெருமான் பின்னர் திருக்கோலக்காவில் பஞ்க்ஷாரம் வரையப்பட்ட பொற்றாளம் பெற்று, பல தலங்களுக்கு பதிகம் பாடி வரும் போது பட்டீஸ்வரத்தில் முத்தி சிவிகையும் முத்து பந்தலும் பெற்று, பல தலத்து இறைவனைப் பாடி திருமறைக்காட்டிலே மூடிய கதவை திறந்து, மதுரை சென்று ஆலவாயான் அருளால்  கூன்பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கி   சமணரை அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் வென்று இன்னும் பல தலங்கள் சென்று அற்புதம் பல நிகழ்த்தி மயிலாப்புரில் அங்கம்பூம்பாவையை உயிருடன் எழுப்பி திருவான்மியூர் முதலிய தலங்களை வணங்கி சீர்காழி அடைகிறார். அவருக்கு அப்போது திருமணத்திற்கு தக்க பருவம் வந்தமையால், அவரது தந்தையாரும் மற்ற பெரியோர்களும் நம்பியாண்டார் நம்பி அவர்களின் திருமகளை திருமணம் பேசி நிச்சியிக்கின்றனர். அவர்கள் திருமணம் திருநல்லூர் பெருமணம்( தற்போது ஆச்சாள்புரம்) என்ற தலத்தில் நடந்தது. திருஞான சம்பந்தரின் திருக்கல்யாணம் காண வந்த 12000 சிவனடியார் சிதம்பரத்திலிருந்து  ஆச்சாள்புரம் செல்லும் போது உச்சிக்காலத்தில் இவ்வாலயம்   வர அந்த அடியார் திருக்கூட்டத்திற்கு கோயில்  வேலையாள் போல வந்து இறைவனே  உச்சிப்பொழுதில் அமுது அளித்த வள்ளல்  எனவேதான் இவர் உச்சிநாதர் என்றும் மத்யானேஸ்வரர் என்றும்  அழைக்கப்படுகின்றார்.இக்கோயிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.


பிரகாரத்தில் தனி சன்னதியில் உள்ள சனி பகவானைப் பற்றிய ஒரு சுவையான கதையும் உள்ளது. திருஞான சம்பந்தருடன் வந்த சிவனடியார் ஒருவருக்கு சனி திசை துவங்குவதால் அவரை சனி பிடிக்க வந்தது. அப்போது அவர்  பசியாக உள்ளது சாப்பிட்டுவிட்டு வருகின்றேன் என்று வேண்ட சனியும் கருணையுடன்  ஒத்துக்கொண்டு அவரை கோவிலுக்குள் அனுப்பினார்.
 திருஞான சம்பந்தரின் திருமணம் முடிந்தவுடன் அடியார்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு , “நல்லூர் பெருமணம்” என்ற பதிகத்தைப் பாடிக்கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கருவரையில் ஒரு சோதி தோன்றியது. அப்பொழுது சம்பந்தப்பெருமான் “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என்னும் பஞ்சாக்ஷரப் பதிகத்தை பாடிக்கொண்டே  அடியார்கள் அனைவரையும் அந்த ஜோதியில் கலக்கச்செய்தார்.  சனி பிடிக்க வந்த அன்பரும்  அப்படியே சம்பந்தப் பெருமானுடன் சிவலோகம் அடைந்து விடுகின்றார்  எனவே  இன்றும் பிரகாரத்தில் சனி பகவான் அவருக்காக காத்திருக்கிறாராம். எனவே கருணைச்சனியாக இங்கே சனி பகவான் எழுந்தருளியுள்ளார்.

மறையி னார்மழு வாளி னார்மல்கு
 பிறையி னார்பிறை யோடி லங்கிய
 நிறையி னாரநெல் வாயிலார்தொழும்
இறைவனாரெம் துச்சி யாரே என்று சம்பந்தப்பெருமான் பாடிய உச்சிநாதரையும் கனகாம்பாளையும் சமயம் கிட்டும் போது தரிசனம் செய்யுங்கள் அன்பர்களே.  

Saturday, November 19, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -5


ஓம் நமசிவாய


கோவிலின் முன்னே உள்ள மலைப்பிரதேசம்
(ஓம் நமசிவாய என்று இங்கு வைத்திருப்பது போல் பல இடங்களில் பார்த்தோம்)


இதுதான் மர்க்கட நியாயம்






குரங்குக்குட்டி தன் தாயை பற்றிக்கொள்வது போல நாமும் பெருமாளை விடாது பற்றிக்கொள்ள வேண்டும்.

வண்டி நின்ற இடம் சிவபுரி, இங்கு ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தனி சிறப்புக்கள் இரண்டு. முதலாவது இங்கு உள்ள பிராகாஷேஸ்வர் மஹாதேவ் சிவலிங்கம் வடக்குப் பார்த்த லிங்கம். லிங்க மூர்த்தியின் தாரை வணங்கும் நம்மை நோக்கி உள்ளது போல அமைந்துள்லது ஒரு சிறப்பு. பொதுவாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் போது கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோதான் பிரதிஷ்டை செய்வார்கள் ஆனால் இங்கு வடக்கு நோக்கி பிரதிஷ்தை செய்யப்பட்டுள்ளது. கோசை என்று வழங்கப்படும் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் வடக்குப் பார்த்த லிங்கம் ஆவார். வடக்குப்பார்த்த லிங்க மூர்த்தியை வணங்க முக்தி கிட்டும் என்பார்கள். மேலும் இக்கோவிலின் இனியொரு தனித்தன்மை இது தனியார்களால் முற்றும் நிர்வகிக்கப்படுகின்றது (private trust). சன்னதியில் மேலும் அம்மனும் , விநாயகரும் இருந்து அருள் பாலிக்கின்றனர். ஒரு தனி சன்னதியில் மிகப்பெரிய ஸ்படிக லிங்கம் ஒன்றும் உள்ளது. உண்டியல் வசூல் கிடையாது. ஆனால் இக்கோவில் வளாகத்தின் உள்ளேயே பல கடைகள் உள்ளன அதில் பூஜா சாமான்கள், ருத்திராக்ஷம், மணி மாலைகள் கிடைக்கின்றன , விரும்பியவர்கள் வேண்டியவற்றை வாங்கிக்கொள்ளலாம். இதில் வரும் வருமானத்தில் திருக்கோவிலை பராமரிக்கின்றனர். நாங்கள் சென்ற சமயம் அபிஷேகம் நடந்து கொண்டிருந்து முக்கண் முதல்வருக்கு. பின்னர் திருக்கதவம் திறக்கப்பட்டது உள்ளே சென்று அலங்காரத்தில் இருந்த நீலகண்டனை, மங்கை சிவகாமி நேசனை, மலைக்கு மருகனை, காமனை கண்ணால் எரித்த மகேஸ்வரனை, தியாகராஜனை மனதார வணங்கினோம். பின்னர் அவர்கள் கொடுத்த ஆப்பிள் பிரசாதம் சுவீகரித்துக் கொண்டு வெளியே பச்சைப் போர்வை போர்த்தியது போல இருந்த மலையை ரசித்து படம் எடுத்துக்கொண்டு அருகில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த குரங்குகளை சிறிது நேரம் பார்த்துவிட்டு யமுனோத்த்ரிக்கான பயணத்தை தொடர்ந்தோம். பின்னர் இக்கோவிலைப் பற்றி ஒரு செய்தி தெரிய வந்தது உத்தராகண்ட் மாநிலம் முழுவதும் “ஓம் நமசிவாய” என்னும் பெரிய பெரிய விளம்பரங்களைப் பார்த்தோம்.





கெம்ஃடி நீர்வீழ்ச்சி
(முசோரி செல்லும் போது கட்டாயம் இங்கு செல்லுங்கள், ஒரு அருமையான picnic spot)

பின்னர் கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது அது சிவபுரிக்கு வாருங்கள் என்று அனைவரையும் அழைக்கும் வண்ணம் அமைந்த விளம்பரம் என்று. சிவபுரியிலிருந்து மலைகளின் அரசியான முசோரி வழியாக சென்றோம் ஆனால் சுற்றி பார்க்க நேரமில்லாததால் அப்படியே முசோரியை பேருந்திலிருந்தே பார்த்துவிட்டு கெம்ப்டி நீர்வீழ்ச்சியையும், வண்டியை நிறுத்தச்சொல்லி ஒரு பார்வை புகைப்பட கருவியால் பார்த்துக்கொண்டு கிளம்பினோம். வழியில் அருமையான பல பாதை விளம்பரங்களைப் பார்த்தோம், அவற்றில் சில Why Forest: F-menas white. F-menas soil. F- means life so save forests. பிளாஸ்டிக் பயன் படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். மரங்களை காப்போம் மழை பெறுவோம் என்னும் பல அருமையான வாசகங்கள் கண்ணில் பட்டன.

ஒரு மலை மழலை



மலைப்பாம்பைப் போல வளைந்து வளைந்து சென்ற மலைப்பாதையில் பயணம் தொடர்ந்தது முசோரி ஒரு மலை உச்சியில் அமைந்திருந்தது பின்னர் கீழிறங்கி சென்றோம். மலையின் மறுபக்கம் சென்றவுடன் யமுனையின் முதல் தரிசனம் கிட்டியது. வழியில் கண்ட காட்சி அப்படியே மனதை கவரும் வண்ணம் இருந்தது மலை உச்சியிலே மேகக்கூட்டங்கள், நெடிதுயர்ந்து நிற்கும் மரக்கூட்டங்கள், கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, பறவைகள் மற்றூம் வண்டுகளின் ரீங்காரம் என்று அப்படியே ஒரு ரம்மியமான சூழல் அதை இரசித்துக்கொண்டே பயணத்தை தொடர்ந்தோம். நடுவில் ஒரு கிராமத்தில் நிறுத்தி காலை உணவை ( ஆலு பரோட்டா, சப்ஜி ) முடித்துக்கொண்டோம். கடையில் இருந்தவர்கள் பரவாயில்லை நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் 20 நாட்களாக மழை பெய்து கொண்டிருந்தது இன்று மழை இல்லை நல்ல துவக்கம்தான் என்று கூறினார்கள், அது போலவே வெயிலும் காய்ந்தது. நாங்கள் அவ்வாறே நம்பினோம் ஆனால் போகப் போக என்ன நடந்தது தெரியுமா? தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள் தெரியும்.

யமுனையாற்றின் நடுவில் ஒரு இழுவை தொட்டில்

அநேகமாக ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் மழை நின்று விடும் ஆனால் இந்த வருடம்(2010) சற்று அதிகமாகவே மழை பெய்து ஏராளமான சேதம் ஏற்பட்டது. ஆனால் எங்களின் முதல் நாள் பயணத்தில் நல்ல வெயிலாக இருந்தது. அந்த மலையின் கீழ் இறங்கி யமுனை நதியை (யமுனோத்திரியிலிருந்து 80 கி.மீ கீழே உள்ள இடம்) யமுனை பாலத்தின் மூலம் கடந்து யமுனோத்ரியை நோக்கிய பயணத்தை தொடர்ந்தோம். இதற்கப்புறம் யமுனை நதியின் கரையோரமாகவே பயணம் செய்கின்றோம்.

யமுனை பாலம்

இமயமலை மடிப்பு மலை வகையாகும் அதுவும் இது ஒரு தொடர்மலை என்பதால் நம் பயணம் முதலில் ஒரு மலையில் முதலில் மேலேறி செல்வதாக இருக்கும் அப்போது மலை முகட்டில் உள்ள நெடிதுயர்ந்த மரங்களையும் உச்சியில் தவழும் மேகங்களையும் வழியில் இருக்கும் கிராமங்களையும் காணலாம். பின் உச்சியை அடைந்து கீழே இறங்கும் போது பாதாளத்ததில் ஓடும் ஆற்றையும் இப்பக்கம் அதிகமாக வயல்களையும் கிராமங்களையும் பார்க்கலாம். இவ்வாறு முழுவதுமாக கீழே இறங்கி ஆற்றை அடைந்து அதன் குறுக்கில் உள்ள பாலத்தின் மூலம் அடுத்த மலையின்மேல் ஏறி இம்மலையின் மேல் ஏறத்தொடங்குகின்றோம் என்று யாத்திரை செய்த நாட்களில் எல்லாம் இப்படித்தான் பயணம் தொடர்ந்தது. யமுனையாற்றின் இப்பக்கம் இருந்த போது எதிரே உள்ள மலையின் உச்சியில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்ததை கவனித்தேன், எப்படி இவ்வளவு உயரத்தில் பயம் இல்லாமல் செல்கின்றனர், கரணம் தப்பினால் மரணம்தான் என்று நினைத்தேன், இன்னும் சிறிது நேரத்தில் நாங்களும் அந்த இடத்தை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை உணராமல்.





யமுனையாற்றின் குறுக்காக ஒரு பாலம்


இந்தப்பாலங்கள்தான் மக்கள் ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு செல்ல உதவுகின்றன.

எங்கள் வழிகாட்டியிடம் சிறிது உரையாடியதால் கிடைத்த சில தகவல்கள் நாம் தற்போது செல்கின்ற பாதை NH-123, சுமார் 114 கி.மீ யமுனையின் கரையோரமாகவே செல்கின்றது. தற்போது ஒரு பேருந்து செல்லும் பாதையாகத்தான் உள்ளது. ஆகவே முதலில் மேலிருந்து வரும் வண்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வழி கொடுக்கின்றனர். இரவு ஆறு மணிக்கு மேல் வண்டிகளில் அதிகம் யாரும் பயணம் செய்வதில்லை. இந்தப் பாதி சுமார் 75 வருடங்களுக்கு முன்பே போடப்பட்டது. அதர்கு முன்னும் யாத்த்ரிகள் கால்நடையாக யமுனோத்திரிக்கு சென்று கொண்டுதான் இருந்தனராம். ஆம் ஆதி காலம் தொட்டே இந்த புண்ணிய பூமிக்கு காந்தத்தால் கவரப்பட்ட இரும்பு போல பக்தர்கள் சென்று கொண்டும் வந்து கொண்டும்தான் இருந்தனர். அப்போதெல்லாம் இந்த யாத்திரைகள் வாழ்வின் கடைசி யாத்திரையாக இருந்தது.
புதுப்புனலுடன் ஒடி வரும் யமுனை நதி

யமுனை பாலத்தை கடந்து யமுனையின் இடக்கரையில் பயணம் செய்து கொண்டிருந்த நாங்கள் லாக்ஷா க்ரஹம் என்ற இடத்தை அடைந்தோம். அந்த சிறப்பு என்னவென்றால், லலிதா த்ரிசதியில் அம்பாளுக்குரிய ஒரு நாமம் “லாக்ஷாரஸ – ஸ்வர்ணபாயை நம:” அதாவது செவ்வரக்கு குழம்பு போன்ற சரீர காந்தியுடையவள். இதையே அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியின் ஆரம்பத்தில் அன்னையை துதிக்கும் போது உதிக்கின்ற செங்கதிர், குங்குமக்குழம்பு. மாதுளம்பூ போன்று செந்நிறமானவள் அன்னை என்று பாடுகின்றார். எதற்காக இதை இங்கே குறிப்பிட்டேன் என்றால் இந்தப்பேரைக் கேட்டவுடன் அம்பாளின் அந்த ஞாபகம்தான் மன்தில் வந்தது. லாக்ஷா என்றால் அரக்கு என்று பொருள். எதாவது பொறி தட்டுகின்றதா? பரவாயில்லை அடியேனே சொல்லிவிடுகின்றேன். மஹாபாரதத்தில் துரியோதனன் கள்ளத்தனமாக ஒரு அரக்கு மாளிகை கட்டி அதில் பாண்டவர்களையும் குந்தி தேவியையும் அதில் அனுப்பி தங்க வைத்து சூழ்ச்சியால் கொல்லப் பார்த்தான் அல்லவா? கண்ணபிரான் சூட்சுமமாக தீப்பிடித்துக் கொள்ளும் போது எலி தன் வளையில் இருந்து ஓடிவிடும் என்றபடி அரக்கு மாளிகை பற்றி எரிந்த போது சுரங்கப்பாதை வழியாக தப்பித்துக் கொண்டனரல்லவா? அந்த அரக்கு மாளிகை இங்குதான் இருந்ததாம் தற்பொதும் அந்த சுரங்கம் உள்ளது என்றனர். எனவே தற்பொது இப்பகுதி லாக்கா மண்டல் (அரக்கு மண்டலம்) என்று அழைக்கப்படுகின்றதாம். இங்குள்ள மக்கள் தங்களை பாண்டவர்களின் வழி வந்தவர்கள் என்றும் நம்புகின்றனர். இவ்வாறு மஹாபரதத்தின் ஊடும் பாவும் இந்த மலைகளில்தான் நெய்யப்பெற்றன என்றால் அது மிகையாகாது. இன்னும் பாண்டவர்களுடன் சம்பந்தப்பட்ட பல செய்திகளை நாம் காண்போம். சிறிது நேரம் அங்கே நின்று எதிரே அரக்கு மாளிகை இருந்த மலைப்பகுதியை புகைப்படம் எடுத்துக்கொண்டு, அருகில் கொட்டிக்கொண்டிருந்த அருவிகளை இரசித்தோம். இந்த பத்து நாள் யாத்திரையில் பல ஆயிரக்கணக்கான நீர் வீழ்ச்சிகளைப் பார்த்திருப்போம்.




லாக்ஷாக்ரஹம் மலை



அரக்கு மாளிகையிலிருந்து மேலே செல்லும் போது யமுனை நதியின் குறுக்கே பல பழைய பாலங்களைப் பார்த்தோம். ஒரு இடத்தில் கம்பியின் மூலம் இப்பக்கத்தில் இருந்து அப்பக்கத்திற்கு சாமான்களை கொண்டு செல்லும் இழுவை யந்திரத்தை பார்த்தோம். யமுனையானவள் பொங்கும் நுரையுடன் அப்போதுதான் பெய்த மழைத் தண்ணீருடன் ஆர்ப்பாட்டமாக புதுப்புனலாக ஓடிக்கொண்டிருந்தாள். வழியெங்கும் பல கிராமங்கள், கிராமத்தில் ஆலோலம் பாடும் கிளிகள். வாழை, நெல், மக்காச்சோளம் பயிரிடப்பட்ட வயல்கள் அவற்றின் நடுவிலே சிலேட்டுப்போல அங்கே கிடைக்கும் பாறைகளையே கூரைகளாக ( ஒடு அல்ல, கான்க்ரீட்டும் அல்ல) வீடுகள், யமுனை நதியின் வேகத்தைக் கொண்டே மாவரைக்கும் யந்திரங்கள் என்று பல்வேறு காட்சிகளை கண்டு களித்தோம்.

இங்கு வாழ்கின்ற மக்களை பார்த்து ஆச்சரிய படாமலிருக்க முடியவில்லை, வருடத்தில் ஆறு மாதங்களுக்கு கடும் குளிர், இரண்டு மாதங்கள் மழை, நிலசரிவு, அதனால் எங்கும் செல்ல முடியாத நிலை, பல இடங்களுக்கு வாகன வசதி கிடையாது ஒற்றையடிப் பாதைதான் என்றாலும் என்று பல அசௌகரியங்கள் இருந்தாலும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக தங்கள் பணிகளை செய்து கொண்டிருக்கும் உழைப்பாளிகள் இவர்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் பிட்டு என்னும் கூடையை முதுகில் கட்டிக்கொண்டு அதில் எல்லா சாமான்களையும் தூக்கிக்கொண்டு மலையேறி தங்கள் குடும்பங்களை ஓட்டும் பாங்கினை என்னவென்று சொல்ல. இவ்வாறே நைகாவ், டாடம்,
நௌகாவ் என்ற ஊர்களை கடந்து மதிய உணவு வேளைக்கு பார்க்கோட்டை சரியான சமயத்திற்கு சென்று அடைந்தோம். இதற்கப்புறம் யாத்திரை எப்படி நடந்தது என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? சற்றுப்பொறுங்களேன் உள்ளே உணவு தயாராக உள்ளது சாப்பிட்டுவிட்டு வந்து தொடர்கிறேன்.


ழியில் உள்ள ஒரு கிராம வயல்

கிராமத்துக்கோயில்


ஒரு சிறு மலர் கொத்து



நாளை (21-11-11) கார்த்திகை சோமவாரம், பரம கருணாமூர்த்தி, ஆலாலமுண்ட நீலகண்டர் வெண்மதி சூடிய பரமனுக்கு மிகவும் உகந்த நாள். இந்த கார்த்திகை சோமவாரத்தின் சிறப்புகளை இங்கே சென்று படியுங்கள் அன்பர்களே.





யாத்திரை இன்னும் தொடரும்.......