Friday, November 28, 2008

கார்த்திகை சோம வார விரதம் -3

சங்காபிஷேகம்



சிவலிங்க வடிவத்தில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அழகு

(சென்னை அசோக் நகர் ஸ்வர்ணபுரீஸ்வரர்)


கார்த்திகை மாதத்தின் முதல் வாரம் கார்த்திகை மாதத்தின் சிறப்புகளை கண்டோம்.

108 சங்காபிஷேகம் ( பூ வடிவில் சங்குகள்)

பின் இரண்டாம் வாரம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி கண்டோம்.



திருமயிலையில் ஐந்தாம் வாரம் 1008 சங்காபிஷேகம்

இவ்வாரம் கார்த்திகை சோமவாரத்தன்று சிறப்பாக நடைபெறும் சங்காபிஷேகத்தின் தாத்பரியம் என்னவென்று பார்ப்போமா அன்பர்களே?





உலகத்தின் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல். பல்வேறு மந்திர தந்திர யந்திர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும் போது, இறையருளை முன் வைத்து, இறைத்தன்மையை ஈர்த்து தன்னுள் தேக்கி வைத்துக் கொண்டு, தன்னை வணங்குவோர்களுக்கு அருள் புரியும் வல்லமை பெற்றவை தெய்வ விக்ரஹங்கள். திருக்கோவில் கருவறை மூர்த்தங்களுக்கு அவ்வப்போது நிகழ்விக்கப்பெறும் அர்ச்சனாதி பூஜைகளும் அபிஷேகங்களும் இறை சக்தியை அதிகரித்து அம்மூர்த்தங்களுக்குள் தேக்கி வைப்பதற்காக ஆகமங்களிலே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வழியாகும்.

சுத்தமான இடத்தில் கோலங்களிட்டு அங்கே வாழை இலை பரப்பி அதில் பச்சரிசி பரப்பி அதன் மீது இறைவனை ஆவாஹனம் செய்வதற்குரிய ஒரு கலசமும், இறைவியை உருவேற்றுவதற்குரிய ஒரு கலசமும், 108 அல்லது 1008 வெண் சங்குகள் கலை நயத்துடன் அமைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். சில ஆலயங்களில் திருக்குடங்களுக்கு பதிலாக பெரிய வலம்புரி சங்கில் இறைவனை ஆவாஹனம் செய்கின்றனர். அவற்றுள் நறுமண பொருட்கள் சேர்க்கப்பட்ட நன்னீர் நிரப்பப் பெற்று, மலர், தருப்பை, மாவிலை ஆகியவற்றை கொண்டு சங்கங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்படுகின்றன. பின் ஹோமத்துடன் தேவ பூஜா மந்திரங்களினால் பிரதான கலசத்தில் / வலம்புரி சங்கில் இறைவன் மற்றும் இறைவியின் அருள் உருவேற்றப்படுகின்றது. 108 சங்கங்கள் அமைத்திருந்தால் 108 லிங்க வடிவங்கள் அவைகளில் உருவேற்றப்படுகின்றன. 1008 சங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றில் சிவபிரானது சகஸ்ரநாமாவளியிலுள்ள 1008 பெயர்களுக்குரிய வடிவங்கள் அவற்றில் உருவேற்றப்படுகின்றன. பின் திருக்குடங்களிலுள்ள இறைவர்க்கு அர்ச்சனை வேதங்கள் உள்ளிட்ட பூஜைகள் செய்விக்கப்படுகின்றன. தொடர்ந்து சங்கங்களிலுள்ள இறைவர்க்கு அர்ச்சனை வேதங்கள் முதலிய பூஜைகள் செய்விக்கப் பெறுகின்றன.

சிவலிங்க வடிவில் சங்கங்கள்
(மாம்பலம் சக்ர விநாயகர் ஆலயம்
)

பின் வழக்கம் போல் வேதங்கள் இசைத்தோ அல்லது திருமுறைகள் ஓதியோ கருவறை தெய்வங்களுக்கு நன்னீராட்டு நடைபெறுகின்றது. பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள், ஷோடச உபசாரங்கள் நடைபெறுகின்றது பின் உலக நன்மையை முன் வைத்து மந்திரங்களை மலர்களாகத் தொடுத்து கூறி ( மந்திர புஷ்பம்) இறைவர் அருள் கோரப்பட்டு தீப ஆராதனைகள் செய்யப்பட்டு வழிபாடு நிறைவு பெறுகின்றன. ஜோதிப்பிழம்பாக விளங்கும் சிவபெருமானைக் குளிர்விப்பதற்க்கு சங்காபிஷேகம் நடைபெறுகின்றது என்று கூறுவாருமுண்டு.
வடபழனி வேங்கீஸ்வரம் 1008 சங்காபிஷேகம்

பெரும்பாலான தலங்களில் 108 சங்காபிஷேகமே நடைபெறுகின்றது ஆயினும் சிறப்பு பெற்ற சிவத்தலங்களான திருக்கடையூர், திருநாகைக் காரோணம், திருவிடைமருது‘ர், திருபுள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்), திருவாடனை, திருவெண்காடு, திருக்கடலு‘ர் திருவாதவூர், திருவையாறு, திருமறைக்காடு(வேதாரண்யம்), திருவேடகம், திருஆலவாய் (மதுரை), திருச்சி, மயிலாடுதுறை முதலிய தலங்களில் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது.

வரும் வாரம் பல்வேறு தலங்களில் கார்த்திகை சோமவாரத்தன்று எவ்வாறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன என்று காண்போம் அன்பர்களே.


No comments: