ஓம் நமசிவாய
திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை
சோமவார விரதத்தின் மகிமை:
விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன்
வெண் மழுவாட்
படையவன் பாய்புலித் தோல் உடை கோவணம்
பல் கரந்தைச்
சடையவன் சாமவே தன்சசி தங்கிய
சங்கவெண்தோ
டுடையவன் ஊனமில் லியுறைமிடம்
ஒற்றியூரே.
என்று சசியை தலையில் தாங்கும் திருக்கயிலை நாதருக்கு உகந்த அஷ்டமஹா விரதங்களுள் ஒன்றான கார்த்திகை சோமவார விரதத்தின் பெருமைகளை காணலாம் வாருங்கள் அன்பர்களே.
வசிஷ்டர் கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டித்து கற்புக்கரசி அருந்ததியை இல்லாளாக அடைந்தார். இந்த சோமவாரத்தன்று விரதம் இருந்து பலன் பெற்ற ஒரு புராண வரலாறு. சந்திர வர்மன் என்ற மகனுக்கு அழகிய ஒரு பெண் மகவு பிறந்தது. அவளுக்கு žமந்தினி என்று நாமம் சூட்டப்பட்டது. அவளது ஜாதகத்தை கணித்தவர்கள் அவள் சிறு வயதிலேயே தனது கணவனை இழந்து விடும் துர்பாக்கியம் கொண்டவள் என்று கூறினார்கள். அதனால் மன்னன் மிகவும் துக்கம் கொண்டு பல்வேறு முனிவர்களை கலந்தாலோசித்தான். யாக்யவல்லியர் என்ற முனிவர் அவளை முறையாக கார்த்திகை சோம வார விரதத்தை கடைப்பிடிக்க ஆலோசனை அருளினார், அவளும் கார்த்திகை சோமவாரம் தோறும் அதிகாலையிலேயே எழுந்து உடல் சுத்தி செய்து மந்ததிரமாகும் பால் வெண்ணிராடி , நாள் முழுதும் ஓம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாது ஜபித்து உபவாசம் இருந்து மாலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டு வரலானாள். அவள் பருவம் அடைந்தவுடன் அவளூக்கு நளமஹாராஜாவின் பௌத்ரனான இந்திரசேனனின் மகன் சந்திராங்கதனுடன் விவாகம் நடந்தேறியது. ஒரு சமயம் அவர்கள் யமுனை நதியில் நீராடம் போது நீர் சுழலில் சிக்கி அவன் மூழ்க நேர்ந்தது, ஆயினும் žமந்தினி அனுசரித்த சோம வார விரதத்தின் பலனால் அவனை நாக கன்னியர் காப்பாற்றி சென்றனர். žமந்தினியும் வெகு காலம் பின் தனது கணவனுடன் சோமவார விரதம் அனுஷ்டித்து வரலானாள். இவ்வாறு நம் தலைவிதியையும் மாற்றும் வல்லமை கொண்டது இந்த சோமவார விரதம். கைலாயப் பேறு அளிக்கும் விரதமிது. இவ்விரதத்தை முறையோடு கடைப்பிடிப்பவர்கள் இந்த பிறவி இறப்பென்னும் சாகரத்திலிருந்து முக்தி அடைந்து எம்பெருமானுக்கு கைலாயத்திலே சென்று பணி செய்யும் பேறு பெறுவர்.
சந்திரசேகரர் சூரிய பிரபை சேவை
கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை:
"ஓம்" என்னும் பிரணவத்தின் வடிவத்தை ஒத்து இருக்கும் சங்கிலிருந்து ஓம் என்னும் நாதம் இயற்கையாக வருகின்றது. நாம் நமது காதில் சங்கை வைத்துக் கேட்டால் ஓம் என்னும் சப்தத்தை உணரலாம்.
உலகெல்லாம் உய்ய ஆலகால விடத்தை எம்பெருமான் தியாகராஜர் உண்ட போது அதன் வீரியத்தால் ஒரு வினாடி எம்பெருமான் மயங்கியதாகவும் அப்போது அன்னை பார்வதி திருப்பாற்கடலில் இருந்து ஒரு சங்கை எடுத்து எம்பெருமானுடைய நாபியில் வைக்க உடனே எம்பெருமான் மயக்கம் நீங்கி எழுந்து விட்டதாகவும், அவ்வளவு வீரியம் வாய்ந்தது சங்கு என்பாரும் உண்டு.
சிவ பெருமான் அபிஷேகப்பிரியர், அந்த எம்பெருமானுக்கு செய்யும் எல்லா அபிஷேகத்தையும் விட சங்கால் செய்யும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது ஏனென்றால் அந்த ஓங்காரத்தாலே நாம் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்கிறோம் என்பதால் அவர் மிகவும் பிரசன்னமாகிறார் என்பது ஐதீகம். சங்காபிஷேகம் கண்குளிரக் கண்டு இறைவனை வழிபடுவதால் மலமாசுகள் நீங்கும் சகல செல்வம் மிக்க பெருவாழ்வு கை கூடும்.
சங்கு மருத்துவ குணம் உடையது. எம்பெருமானுக்கு சங்காபிஷேகம் செய்த தீர்த்தத்தை உட்கொள்வதால் வெண்குஷ்டம், மலட்டுத்தன்மை, மனநோய் முதலிய நோய்கள் குணமாகும்.
வலம்புரி சங்கு, ருத்ராக்ஷம், வினாயகர் மூன்றும் சுயம் மங்களகரமானவை பிராண பிரதிஷ்டை அவசியமில்லை. சங்கு துளசி, சாலக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூசிப்பவர்களுக்கு மஹா ஞானியாகும் பாக்கியமும், முக்காலம் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கடலில் விளைவது சங்கு. சங்கு புனிதமுடைய பொருளாகவும், பூசனைக்கு துணை புரியும் நற்கருவியாகவும் பெரியோர்களால் போற்றிக்கொள்ளப்பட்டது.
இன்றும் மேற்கு வங்காளத்தில் அவர்கள் வீட்டுப் பூசையின் போது சங்கு முழங்கிகின்றனர்.
சங்க நாதம் முழங்கும் இடத்தில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கின்றாள். விஷ்ணுவின் இடக்கரத்தில் விளங்குவது பாஞ்சசன்னியம் என்னும் சங்குதான்.
பாஞ்சசன்யம் என்னும் விலைமதிப்பற்ற சங்கு பாஞ்சன் என்னும் அசுரனிடம் இருந்ததாகவும் திருமால் அவனை வென்று பெற்றதாக கூறுவர். மேலும் பஞ்ச இந்திரியங்களை அடக்குவதாலும் காரணப்பெயர் உண்டானது.
பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட மங்கலப்பொருள்களுள் சங்கும் ஒன்று.
1008 சங்காபிஷேகம்
கடலில் அதிகமாக விளைவது இடம்புரி சங்கு.
இப்பிசாயிரம் சூழ்ந்தது இடம்புரி
இடம்புரி ஆயிரம் சூழ்ந்தது வலம்புரி
வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம்
சலஞ்சலம் ஆயிரம் சூழ்ந்தது பாஞ்ச சன்யம்.
எனவே பெருமாள் திருக்கரத்தில் விளங்கும் பாஞ்சசன்னியம் கோடியில் ஒன்று. பெருமாளுடன் எப்போது நீங்காது இருப்பது சங்கு எனவேதான் படைப்போர்புக்கு முழங்கும் பாஞ்சசன்னியமும் பல்லாண்டு என்று, பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார், திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கனணி நிறமும் கண்டேன் செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கை கண்டேன் என்று மங்களாசாசனம் செய்கின்றார் பேயாழ்வாரும். கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவள செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? என்று பாஞ்சசன்னியத்தை பத்மநாபனோடு பெருஞ்சுற்றமாக்கி வினவுகிறாள் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் நாச்சியாரும்.
சங்கம் மட்டும் வலக்கரத்தில் ஏந்தி , சக்கரம் இல்லாமல் பெருமாள் சேவை சாதிக்கின்றார் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலே. விஷ்ணு தலைச்சங்கம் பெற்ற திவ்ய தேசம் தலைச்சங்க நண்மதியம், இத்தலத்தில் பெருமாளுக்கு விலைமதிப்பற்ற வலம்புரி சங்கு சாற்றப்படுகின்றது. இராமாவதாரத்தில் பரதன் சங்கின் அம்சம், ஆழ்வார்களில் பொய்கையார் சங்கின் அம்சம். குற்றால நாதர் ஆலயம் சங்கு வடிவத்தில் அமைந்துள்ளது திருக்குற்றாலத்திலே.
குபேரனின் நவநிதிகளுள் ஒன்று சங்க நிதி. வலம்புரி சங்கை வீட்டில் வைத்து வழிபட லக்ஷ்மி கடாட்சம் பெருகும், செல்வம் பொங்கும்.
சிவலிங்க வடிவில் சங்குகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் அழகு
"கை விட மாட்டானென்று ஊது சங்கே , கனக சபையானென்று ஊது சங்கே" என்று பாடுகின்றார் வள்ளலார் பெருமான்.
சங்கு வீரத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றது. சங்கை முழங்குவதற்கு நல்ல நெஞ்சு பலம் தேவை , எனவேதான் போரில் தளபதிகள் தங்கள் சேனைகளை ஒன்று படுத்த சங்கம் முழங்கினர், சங்கம் முழங்கும் போது வீரம் பிறக்கின்றது. எனவே தான் பண்டைக்காலங்களில் போரின் போது சங்கு முழங்கப் பெற்றது. மஹா பாரத போரின் போது பஞ்ச பாண்டவர்களூள் தர்மர் அனந்த விஜயம் என்ற சங்கையும், பீமன் பவுண்டரம் என்ற சங்கினையும், அர்ச்சுனன் தேவதத்தம் என்ற சங்கினையும், நகுலன் சுகோஷம் என்ற சங்கினையும், சகாதேவன் மணி புஷ்பகம் என்ற சங்கினையும் முழங்கினர்.
ஒரு மனிதனின் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய மூன்று முக்கிய நிகழ்ச்சிகளிலும் சங்கின் ஓசை முக்கியத்துவம் பெறுகின்றது. தூய்மையின் அடையாளம் சங்கு, தூய வெண்மை நிறம் கொண்டது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற பழமொழி சங்கின் உயர்வை பறை சாற்றுகின்றது. எனவே எம்பெருமான் சங்கு போன்று தூய்மையானவர் என்பதை உணர்த்த சங்கை இடது கரத்தில் ஏந்தி சேவை சாதிக்கின்றார்.
சங்கத்திற்கென்றே தனி காயத்ரியும் உள்ளது
ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே பவமாநாய தீமஹ’ |
தந்ந: சங்க: ப்ரசோதயாத் ||
6 comments:
மிகவும் அருமையான பதிவு, கார்த்திகை சோம வார விரதத்தின் பெருமையின் தெரிந்து கொண்டேன் மற்றும் சங்குகளின் முக்கியத்துவத்தையும் விரிவாக கூறியுள்ளீர்கள்.
சிதம்பரத்தில் நடக்கும் ஆருத்ரா திருவிழா மற்றும் ஆனி மஞ்சன திருவிழாவின் போது பல்லாயிரம் பக்தர்கள் ஒன்று கூடி ஒரு சேர சங்கை ஒலிப்பதும், சபாநாயகரும் அன்னையும் மாறி மாறி ராஜசபையிலும் நடன பந்தலிலும் நடனமிடும் காட்சி காண கண் கோடி வேண்டும்....
வாருங்கள் Logan
கைவிடமாட்டானென்று ஊது சங்கே
கனக சபையான் என்று ஊது சங்கே...
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
really awesome information. I like it very much.
Thank You very much Sivanarul
கார்த்திக சோமவாரம் அன்று சங்காபிஷேகம் பார்த்து விட்டேன்.
சங்கின் பெருமையை அருமையாக சொன்னீர்கள்.
அருமையான பதிவு.
ஒம் நமசிவாய.
மிக்க நன்றி.
Post a Comment