Showing posts with label போக்ரா. Show all posts
Showing posts with label போக்ரா. Show all posts

Sunday, July 12, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 14

போக்ராவிலிருந்து ஜோம்சம் ஜீப் பயணம்

போக்ரா விமான நிலையத்தில்  காத்திருக்கின்றனர்

இவர்களுக்கும் வானிலை சரியாக இல்லாததால் விமானம் இரத்தானது. ஒரு நாள் முழுவதும் காத்திருந்து மறு நாளும் விமான போக்குவரத்து நடைபெறுமா? இல்லையா என்பது தெரியாது என்பதால் இவர்கள் ஜீப் மூலமாக ஜோம்சம் செல்ல முடிவு செய்தனர். 



போக்ரா விமான நிலையத்தில் மலர்ந்திருந்த 
வண்ண வண்ண மலர்கள் 







போக்ராவில் இருந்து ஜோம்சம் விமானப்பயணம் வெறும் 45  நிமிடங்கள் தான் அதுவே ஜீப்பில் அல்லது பேருந்தில்  சென்றால் பாதை மலைப்பாம்பு போல  வளைந்து வளைந்து செல்கின்றது என்பதாலும்  தூரம் சுமார் 250 கி.மீ  என்றாலும் பாதை சரியில்லை வெறும் மண்பாதை என்பதால்  12 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். 



பயணமும் மிகவும் சிரமமானதுதான், குலுக்கி குலுக்கி போடும்,  இடுப்பு  கழன்று விட்டது என்று சொல்வோமே அது போல மிகவும்  சிரமமான பயணமாக இருந்ததாம். விமானம் இரத்தாகி விட்டால் மறு நாள் விமானத்தில் இடம் கிடைப்பதும் கடினம், மேலும் தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்கள்  வானிலை சரியாகாமல்  போகலாம் என்பதாலும். வேறு வழியில்லாமல் ஜீப்பில்  அல்லது சிறு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது. 

போக்ரா பேருந்து நிலையம் 



நடுவில் சிரமபரிகாரம் செய்து கொள்கின்றனர் 

ஜீப் மூலமாக செல்லும் போது   பெனி, காசா, தாதோபாணி, மர்பா , டுகூசே    அகிய கிராமங்களை கடந்து செல்கின்றனர்.


காலை சூரிய ஒளியில் நீலகண்ட சிகரம்



ஜோம்சமில்  நீலகிரி மலைச்சிகரங்கள்
காலை சூரிய ஒளியில் மின்னும் அழகு

யாத்திரை அழைத்துச்சென்ற இராமானுஜ தாசர் 
 திருமலை நம்பி சுவாமிகள் 





தவுலகிரி மலைத்தொடரின் சில பனி படர்ந்த  மலைச்  சிகரங்கள் 


மிகவும் சிரமப்பட்டு ஜீப்பில் பயணம் செய்து ஜோம்சம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்து  முக்திநாத் ஜீப் மூலம் சென்று நிறைவு ஏற்றத்தை நடந்தே சென்று முக்திநாத் அடைந்தனர்.  இவர்களுக்கு முக்திநாதர் தரிசனம் எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாம். 

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 13

போக்ரா சுற்றுலா

இவர்கள் முதலில் போக்ரா வந்தடைந்ததால்  இருக்கின்ற சமயத்தில் போக்ராவின் சுற்றுலாவை மேற்கொண்டனர். இப்பதிவில்  பிந்தியாவாசினி ஆலயம் மற்றும் டேவிஸ் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சென்றனர். 

பிந்தியாவாசினி  கோவில்

விநாயகர்

சிவன் சன்னதி


கோவிலுக்கு நன்கொடை அளித்த அன்பர்கள் 

முதலில் இவர்கள்  சென்றது விந்தியாவாசினி ஆலயம் ஆகும். போக்ரா நகரின் காவல் தேவதை இந்த அம்மன் என்று போற்றப்படுகின்றாள். அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள் அன்னை. இப்பிரதேச அரசன் விந்திய மலையிலிருந்து அம்மன் சிலையை கொணர்ந்ததால் அம்மனுக்கு இந்தத்திருநாமம்.  ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது ஆலய  வளாகம். ஒரு தனி சன்னதி வட இந்தியக்கோவில்கள் போல  விமானம்  உள் பக்கம் ஸ்ரீசக்ரம் அமைத்துள்ளனர். அம்மனை தொட்டு வணங்க அனுமதிக்கின்றனர். மேலும் கணபதி. பசுபதிநாதர், லக்ஷ்மி நாராயணர், இராதா கிருஷ்ணர், சீதா இராமன் சந்நிதிகளும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன. ஒரு ருத்ராட்ச மரமும் ஆலய வளாகத்தில் உள்ளது. அருமையான மர வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், ஜன்னல்கள் இவ்வாலயத்தின் ஒரு தனி சிறப்பு ஆகும்.  குன்றின் மேலிருந்து போக்ரா நகரத்தின் அழகைக் கண்டு இரசிக்கலாம்.

பிரம்மாண்ட காண்டா மணிகள் 

பிந்தியாவாசினி அம்மன் சன்னதி


சங்கட மோட்சன் ஹனுமான் 



பாதாளே சாங்கோ (Patale Chhango - Nether Fall) என்றும் தற்போது Devi’s  Falls என்றும் அழைக்கப்படும் அருவி. பேவா ஏரியிலிருந்து உருவாகி ஓடி வரும் ஒரு ஆறு இங்கே பாதாளத்தில் சென்று மறைந்து ஓடி மீண்டும் வெளியே வருகின்றாள். Davis என்ற ஐரோப்பியர் தவறி இந்நதியில் விழுந்து  பாதாளத்தில் சென்று மறைந்து பின்னர் வெளியே வந்ததால் அவர் நினைவாக தற்போது இப்பெயரில் அழைக்கப்படுகின்றது.

மோகன் -  வைத்தியநாதன்


போக்ராவில் இருந்து இவர்கள் ஜோம்சம் எவ்வாறு சென்றார்கள் என்பதை அடுத்த பதிவில் காணலாம். 

Saturday, July 11, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 12

கோரக்பூரிலிருந்து போக்ரா பயணம் 


கோரக்கநாதர் ஆலயம் 


கோரக்கர் பதினெட்டு சித்தர்களுள் ஒருவராக கருதப்படுகின்றார். இவரது குரு மச்சேந்திரநாதர் ஆவார்.  ஒரு சமயம்  மச்சேந்திர நாதர் மாயையின் வசப்பட்டு மலையாள தேசத்தின் அரசியை மணந்து கொண்டு  குடும்பமாக இருந்தபோது அவரை மீட்டுக்கொண்து வந்தவர் கோரக்கர். அவருக்கான கோவில் இது.  நேபாளத்திலும் மச்சேந்திரர் மற்றும் கோரக்கர் வழிபாடு உள்ளது.




ஆற்றின் இடையே ஒரு பாலம் 

கோரக்பூரில் இருந்து பேருந்து மூலம் எல்லைப்புற நகரமான சுனௌலியை அடையலாம். நம் இந்திய பேருந்துகள் நேபாளத்திற்குள் செல்ல அனுமதியில்லை எனவே அங்கு இறங்கி நடந்து எல்லையைக் கடந்து அப்புறம் சென்று பேருந்து, ஜீப் மூலம் போக்ராவை அடையலாம். 

                                                  போக்ரா செல்லும் பாதை 



நேபாளத்தில் இவ்வழியில் புத்தர் பிறந்த இடமான லும்பிணி உள்ளது.  கோரக்பூருக்கு அருகில் அவர் பரிநிர்வாணம் அடைந்த குஷி நகரம் உள்ளது.  சிலர் புத்தரின் இந்த நினைவிடங்களையும் சென்று தரிசிகின்றனர்.  கோரக்பூர் போக்ரா இடையிலான தூரம்  சுமார் 215 கி.மீ ஆகும். சுமார் 7   மணி நேரம்  பயணம் செய்த  பின் இவர்கள் போக்ரா அடைந்தனர். .   




Saturday, May 30, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 9

ஃபேவா ஏரி

போக்ராவின் சிறப்பே அதன் ஏரிதான். இந்த ஏரியில் படகுப்பயணம் செய்யாவிட்டால் போக்ரா சென்றதே வீண் என்று சொல்லலாம்.  “ஃபேவா ஏரி” (Phewa Lake) என்று அழைக்கப்படும் இந்த அழகான ஏரி  நேபாள் நாட்டின் இரண்டாவது பெரிய ஏரி ஆகும். சுற்றிலும் நெடிதுயர்ந்த பனி மூடிய மலைச்சிகரங்கள் அதன் அடிவாரத்தில் பச்சை நிரத்தில் மிகவும் விலாசனமான ஏரி. அருமையான சூழலில் அமைந்துள்ளது பேவா ஏரி. 

பேவா ஏரியில் படகுகள்



பனி மூடிய அன்னபூர்ணா மலைச் சிகரங்களின் அழகை இந்த ஏரியின் நீர் அருமையாக பிரதிபலிக்கின்றது, கரையில் போடப்பட்டுள்ள பெஞ்சுகளில் அமர்ந் து  அந்த அழகை இரசிப்பதே ஒரு அருமையான அனுபவம்.  போக்ராவில் காத்மாண்டுவைப் போல கூட்டம் அதிகம் இல்லை, சப்தம் இல்லை கிராம சூழலே விளங்குகின்றது. எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அமைதியாக தங்க ஏற்ற இடம். ஏரியை சுற்றிலும் நிறைய தங்கும் விடுதிகள்  உள்ளன.  கரையில் ஆல மரங்களும் அரச மரங்களும் உள்ளன அதன் அடியில் கற்பெஞ்சுகள் இடப்பட்டுள்ளது, அதில் அமர்ந்து ஏரியின் அழகை  அமைதியாக இரசிக்கலாம்.  படகுப்பயணம் செய்யலாம். சைக்கிளில் அல்லது நடந்து ஏரியை  வலம் வரலாம். 



ஏரியின் மத்தியில் லேக் வாராஹி ஆலயம்



கூரையில் மீன் கொத்திப் பறவைகள்            

ஏரியின் நடுவில் லேக் வராஹி ஆலயம் அமைந்துள்ளது.  ஐரோப்பியர்கள் அதிகம் வருவதால், கண்காணிப்பு கோபுரம், அதி வேக மீட்புப் படகுகள், படகில் பயணம் செய்யும் அனைவரும் பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும் எல்லா வகையான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. நேரம் குறைவாக இருந்ததால் அடியோங்கள்  லேக் வாராஹி ஆலயம் படகில் சுற்றி வந்து வணங்கி விட்டு தங்கும் விடுதிக்கு திரும்பி வந்தோம். வரும் வழியில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது, சூரியன் மறையும் அழகையும் இரசித்தோம்.

அந்தி சாயும் வேளையில் ஏரியின் அழகு
இவ்வாறாக அரை நாளில் அவசரம் அவசரமாக போக்ராவின் சுற்றுலாவை முடித்தோம்.

Friday, May 29, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 8

போக்ரா சுற்றுலா

சுற்றுலா செல்ல தயாராகி நிற்கின்றோம்

போக்ரா நேபாள நாட்டில் காத்மாண்டு நகருக்கு அடுத்த  பெரிய நகரம் ஆகும். அருமையான பனி மூடிய அன்னபூரணா, தவுளகிரி, மனசுலு  சிகரங்கள் பின்னணியில் விளங்க,  மிகப்பெரிய ஏரி, அருங்காட்சியகங்கள், கோவில்கள், நீர்வீழ்ச்சி, பாதாள ஆறு, குகைகள் என்று சுற்றுலா பயணிகள் பார்த்து இரசிக்க  வேண்டிய பல அம்சங்கள் இந்நகரத்தில் அமைந்துள்ளன.  மற்றும் அன்னபூரணா மலை சிகர ஏற்றதிற்காக செல்பவர்கள், முக்திநாத் செல்பவர்கள் ஆகியோர் வந்து செல்வதாலும் பல  தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் இவ்வூரில் அமைந்துள்ளன. இவ்வூரிலிருந்து நமக்கு அன்னபூரணா மலைச்சிகரங்களின் அருமையான காட்சி நமக்கு கிட்டுகின்றது என்று முன்னமே பார்த்தோமல்லவா? எனவே அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இங்கு ஒரு நாளாவது தங்கி சுற்றிப்பார்த்து விட்டுத்தான் செல்கின்றனர். எனவே நாங்களும் போக்ராவை சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.

 சிறு  குன்றின் மேல் உள்ள அம்மன் கோயில் வளாகத்திற்கு செல்லும் படிகள்
(குமாரசாமி, இளங்கோவன், அடியேன், இராமகிருஷ்ணன்)

விநாயகர் சன்னதி முன் சுந்தர்
(இப்பதிவுகளில் உள்ள பல புகைப்படங்கள் இவர் கை வண்ணம் ஆகும்)

மூஞ்சூறு வாகனம்

விந்தியாவாசினி அம்மன் சன்னதி
( நெற்றிச்சுட்டியை கவனித்தீர்களா?)

 அம்மன் சன்னதி முகப்பு[ பலகை

சிவன் சன்னிதி முன் நந்தி வாகனம்


சிவன் சன்னிதியின் சில கற்சிற்பங்கள்

முதலில் நாங்கள் சென்றது விந்தியாவாசினி ஆலயம் ஆகும். போக்ரா நகரின் காவல் தேவதை இந்த அம்மன் என்று போற்றப்படுகின்றாள். அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள் அன்னை. இப்பிரதேச அரசன் விந்திய மலையிலிருந்து அம்மன் சிலையை கொணர்ந்ததால் அம்மனுக்கு இந்தத்திருநாமம்.  ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது ஆலய  வளாகம். ஒரு தனி சன்னதி வட இந்தியக்கோவில்கள் போல  விமானம்  உள் பக்கம் ஸ்ரீசக்ரம் அமைத்துள்ளனர். அம்மனை தொட்டு வணங்க அனுமதிக்கின்றனர். மேலும் கணபதி. பசுபதிநாதர், லக்ஷ்மி நாராயணர், இராதா கிருஷ்ணர், சீதா இராமன் சந்நிதிகளும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன. ஒரு ருத்ராட்ச மரமும் ஆலய வளாகத்தில் உள்ளது. அருமையான மர வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், ஜன்னல்கள் இவ்வாலயத்தின் ஒரு தனி சிறப்பு ஆகும்.  குன்றின் மேலிருந்து போக்ரா நகரத்தின் அழகைக் கண்டு இரசிக்கலாம்.

இராதா கிருஷ்ணர் - லக்ஷ்மி நாராயணர் - சீதா இராமர் சன்னதி
லக்ஷ்மி நாராயணர்
(கதவின் மர வேலைப்பாட்டை கவனியுங்கள்)
 கருட பலகை

இராதா கிருஷ்ணர் சன்னதி முன் இருந்த பித்தளை குத்து விளக்கு
(நுண்ணிய வேலைப்பாட்டை கவனியுங்கள்)

கோவிலைக் கட்டிய அரசர்

அடுத்து நாங்கள் சென்றது  செட்டி கண்டகி நதி என்னும்  வெள்ளை கண்டகி நதி, முக்திநாத் சென்ற போது நாங்கள் பார்த்தது காளி கண்டகி நதி அதாவது கருப்பு கண்டகி நதி, இந்நதி பூமி மட்டத்தில் பாய்கின்றாள். இங்கு பாய்வது சேதி கண்டகி நதி அதாவது வெள்ளை கண்டகி நதி இவள் பாதாளத்தில் பாய்கின்றாள். K. I. சிங் என்ற இந்தியர்  நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய   இந்நதியின் ஓட்டதைப் பயன்படுத்தினார் எனவே அந்த நீர் மின் நிலையம் அவர் பெயரால் அழைக்கப்படுகின்றது. அவ்விடம் சென்று Calcium Carbonate என்னும் தாதுப் பொருள் அதிகமாக உள்ளதால் வெண்மையாக  பூமிக்குக்கீழ் பாயும் ஆற்றை கண்டோம். எனவே இந்நதியின் குறுக்கே உள்ள பாலம் இவர் பெயரால் K.I.சிங் பாலம் என்றே அழைக்கப்படுகின்றது.   அருகிலேயே கூர்க்காக்களின் அருங்காட்சியகம் உள்ளது.
பாதாளத்தில் பாய்கின்றாள் வெள்ளை கண்டகி நதி

நீர் மின் நிலையத்தில் வெள்ளை கண்டகி நதி

                கூர்க்கா அருங்காட்சியகம்                         

 அடுத்து நாங்கள் இங்கு பாதாளே சாங்கோ (Patale Chhango - Nether Fall) என்றும் தற்போது Devi’s  Falls என்றும் அழைக்கப்படும் அருவியைக் காணச்சென்றோம். பேவா ஏரியிலிருந்து உருவாகி ஓடி வரும் ஒரு ஆறு இங்கே பாதாளத்தில் சென்று மறைந்து ஓடி மீண்டும் வெளியே வருகின்றாள். Davis என்ற ஐரோப்பியர் தவறி இந்நதியில் விழுந்து  பாதாளத்தில் சென்று மறைந்து பின்னர் வெளியே வந்ததால் அவர் நினைவாக தற்போது இப்பெயரில் அழைக்கப்படுகின்றது. அருகே பல கடைகள் உள்ளன பல திபெத்திய கலைப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.  இதன் எதிரே குப்தேஸ்வர் மஹாதேவ் என்னும் ஒரு குகைக்கோவில் சென்று சிவபெருமானை வழிபட்டு நிறைவாக இவ்வூரில் அவசியம் பார்க்க வேண்டிய   பேவா ஏரியை அடைந்தோம். 


ஒரு மழலை






கலைப் பொருட்கள் விற்கும் கடைகள்



குப்தேஸ்வர் மஹா தேவ் குகைக் கோவில்