Saturday, October 8, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -7


                                                               கருமாரி திரிபுரசுந்தரி 
வைஷ்ணவி அலங்காரம் 

சங்க சக்ர கதாஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

சப்தமி நாளான இன்று அன்னை ஆதி பராசக்தியை மது கைடபரை சம்ஹாரம் செய்த மஹா துர்க்கையாக வழிபடுகின்றோம். இதனால் சத்ரு பயம், தீவினை, கெடுதிகள் விலகி இன்பம் உண்டாகும்.

                                                                    **************** 


பிரஹத் சுந்தர குசாம்பாள்
கருமாரி அலங்காரம் 


நவராத்திரியின் ஏழாம் நாள் அன்னையை எட்டு வயது குழந்தையாக பாவித்து சாம்பவி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் க்ஷேம விருத்தி ஏற்படும் . இன்றைய ஸ்லோகம்

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை பரிகீர்த்திதா யஸ்யாஸ்தாம் ஸுகதாந் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம் ||


(மிகுந்த ஒளிமயமான பரமாத்மாவின் இச்சைப்படி எந்த சக்தி திருவுருவங்களைத் தரிக்கின்றதோ அந்த சாம்பவியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

*************************



காலராத்ரி துர்க்கா 

அசுரர்களை வதம் செய்து பிரபஞ்சத்தைக் காப்பதற்கு காலராத்ரி தேவி அவதாரம் எடுத்தாள். பரட்டை முடி, கருத்தமேனி, மூன்று கண்கள், கழுதையின் மீது அமர்ந்தவாறு நெருப்பைக் கவசமாகக் கொண்டு கோபமான கோலத்தில், காலதாத்ரி தேவி காட்சி கொடுக்கிறாள். காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். 

இரவு நேரத்தில் இறந்த உடலான சவத்தின் மேல் அமர்ந்து, மின்னல் போன்ற ஒளி வீசும் ஆபரணத்தை அணிந்துகொண்டு, நெருப்பைக் கக்கும் வாயுடன் பவனி வருவாள் என்றும் கூறுவர். சுபாங்கி என்ற மற்றொரு பெயரைக் கொண்ட காலதாத்ரி தேவி தீமைகளை அழித்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்லாசிகள் தந்து அருள் புரிகிறாள் . 

பொன்னிறமான கௌரி (பார்வதி) அசுரர்களை அழிக்க பொன்னிறத்தை மாற்றி கருப்பு வர்ணத்தவளாக காட்சி தருகின்றாள். சும்ப நிசும்பர்களை அழிக்க அன்னை காளியாக தோன்றினாள். 

வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா |
வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ ||

(கழுதை வாகனத்தில் பெரிய உதடுகளுடன், பளபளக்கும் ஆபரணங்கள் அணிந்து பிரகாசமாக பவனி வரும் பயங்கரீ துர்கா என்னுடைய அறியாமையை போக்கட்டும்.)

********************


சொர்ணாம்பாள் 
மஹாலக்ஷ்மி அலங்காரம் 


ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

நெஞ்சத்திற்கும் வெகு வஞ்சத்திற்கும் அறநெறியில் வீழ்ந்திடுமயக்கும், நீசப்பிசாரரொடு நேசித்து நன்னெறியில் நிலையாத பெருமயக்கும்

அஞ்சத்தெழுநீத குழல்மங்கையர்கள் உந்தியெனு மடுவில் வீழ்ந்திடு மயக்கும் மாயைக்கு வித்தான நீள்நிதியின்மேலாசைமைத்துழன்றிடு மயக்கும்

கொஞ்சத்திலுனதருளை அன்றி விட்டொழியாது கோதற்ற ஞான நிலையும், கூடாது வாடுமெனை அஞ்சலென்றுன்னடியார் கூட்டமொடுகூட்டு கண்டாய்,

விஞ்சச் சிறந்தவனிடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க் குழல்வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (7)

பொருள்: அம்மா கற்பகவல்லியே! உன்னுடைய அருளால் குற்றமற்ற  ஞானம் பெறாமல் தடுக்கின்ற; நெஞ்சில் வஞ்சம் கொண்டு அற வழியில் செல்லாத மயக்கமும், தாழ்ந்தவர்களுடன் சேர்ந்து  நன்னெறியில் செல்லாத பெரு மயக்கமும், அஞ்சத்தக்க பெண்ணாசை என்னும் மயக்கமும்,  மாயைக்கு காரணமான செல்வத்தின் மேல் ஆசை வைத்து துன்பத்தில் உழலும்  மயக்கம்  ஆகியவற்றால்,  வாடுகின்ற அடியேனை அஞ்சாதே நீ எனது அடியவன் என்று உன்னுடைய அடியார் கூட்டத்தில் சேர்த்துக்கொள்வாயாக. யாரும் வெல்ல முடியாத சிறப்பையுடைய சிவபெருமான் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   

முந்தைய பதிவு                                                                                                                                             அடுத்த பதிவு   


                                                                                                                                               அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

No comments: