Saturday, October 29, 2016

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நரகாசுரனை  ஸ்ரீகிருஷ்ணரும், சத்யபாமாவும் சென்று வதம் செய்ததால் நரக சதுர்த்தசி நாள்  சூரிய உதயத்திற்கு முன் கங்கா ஸ்நானனம் செய்யும் நாள் , ஸ்ரீராமசந்திர மூர்த்தி இராவணனை வென்ற பின் அயோத்தி திரும்பிய அன்று  அயோத்தி மக்கள் தங்கள் இல்லத்தின் முன் தீபங்களை ஏற்றி வைத்து வரவேற்ற தீபாவளி   நாள், வருடப்பிறப்பு லக்ஷ்மி பூஜை  என்று  பலவிதமாக    பாரத   தேசமெங்கும்   தீபாவளி    சிறப்பாக  கொண்டாடப்படுகின்றது.

இறக்க முக்தித்தலமான காசியில் சொர்ண அன்னபூரணி லட்டுத்தேரில் அருள் பாலிக்கும் நாளும் தீபாவளிதான். 

 ஒரு சாரார்  அமாவாசையன்று சிவபெருமானுக்குரிய அஷ்டமஹா விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கின்றனர். இவ்வருடம் இன்று (29-10-2016) இரவு வரை சதுர்த்தசி உள்ளது ஆகவே கேதார கௌரி விரதம் நாளை அனுஷ்டிக்கலாம். 

கேதார கௌரி விரதத்தை பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள் 

கேதார கௌரி விரதம்

நர-நாராயண சிகரங்கள்




2013 இமாலய பெருவெள்ளத்திற்கு  பிறகு ஐயனை தரிசிக்க ஒரு வாய்ப்புக்கிட்டியது. முன்பிருந்த பொலிவெல்லாம்  இழந்து கோவில் மற்றும் நிற்கின்ற காட்சியைக் கண்டு கண்ணில் நீர் வடிந்தது. அலக்நந்தாவின் குறுக்கே இருந்த பாலம்,  திருக்கோயில் அருகில் இருந்த  மற்ற கட்டிடங்கள், ஆதி சங்கரர் ஆலயம், அவரது நினைவிடம், அன்பர்கள் உணவருந்திய கூடம். கடைகள், தங்கும் விடுதிகள், சுற்றுச்சுவர் ஈசானேசுவரர் சன்னதி அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.






  




2012ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் கௌரிகுண்டம் பெருஞ்சேதமடைந்து. கோயில்,  கௌரிகுளம்  எதுவும் தற்போது இல்லையாம். இராம்பாரா, கருடகங்கா முதலிய இடங்களும் தற்போது இல்லை. எப்போது அவைகளை புதுப்பிப்பார்கள் என்று தெரியவில்லை. முதலில் சென்ற பாதையும் சேதமடைந்ததால்  தற்போது ஆற்றின் மறுகரையில் உள்ள பழைய 18 கி.மீ பாதையை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.



தற்போது புதிதாக நதியின் குறுக்கே ஒரு  பாலம் கட்டியுள்ளனர். தற்காலிக தங்கும் விடுதிகள் கோவிலிருந்து தூரத்தில் அமைத்துள்ளனர். தற்போது ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு மின்னுகின்றது. புது வர்ணம் பூசியுள்ளனர். ஒரு பக்கக்கதவு மூடியே உள்ளது இன்னும் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முன் இருந்த நிலையை அடைய எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியவில்லை. சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள மாநிலம் என்பதால் பக்தர்கள் வருவதற்கு முதலில் எவை எவை அவசியமோ அவற்றை முதலில் முடிக்கின்றனர். வருடத்தில் ஆறு மாதங்கள் பனி மூடியிருக்கும் என்பதாலும், ஆலயம் திறந்திருக்கும் போது பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்பதாலும் வேலைகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.  










வெள்ளத்திற்கு முன் திருக்கேதாரம் இருந்த அழகைக் காண இங்கு செல்லுங்கள். 


திருக்கேதாரம் 2012_2

திருக்கேதாரம் 2012_3




திருக்கோயில் மட்டும் தப்பித்துக் கொள்ளும் வகையில் ஒரு செவ்வக வடிவப்பாறை எவ்வாறு வந்தது அது மட்டும் அங்கேயே எவ்வாறு நின்றது கோயில் மட்டும் எவ்வாறு தப்பியது என்பது அவ்விறைவனின் லீலை, மிகப்பெரிய அதிசயம் என்றே சொல்லவேண்டும். அப்பாறையை அப்படியே விட்டு வைத்துள்ளனர். அடையாளத்திற்காக காவி பூசி வைத்துள்ளனர்.   


வரும்காலத்தில் இது போன்ற எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்று சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டு வந்தோம்.

இத்தீபாவளி நன்னாளில்  கௌரியன்னை உடனுறை கேதாரீஸ்வரர் அருள் அனைவருக்கு சித்திக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.  

No comments: