Sunday, October 16, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 19

சோட்டாணிக்கரை பகவதி தரிசனம்


சோட்டாணிக்கரை பகவதி

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரையின் முதல் நாள் இரவு காட்கரையப்பனை சேவித்த பின் சோட்டாணிக்கரை வந்தடைந்தோம். அடியோங்கள் இரவு  சோட்டாணிக்கரை ஆலயம் சென்ற போது  மேல் பகவதிக் காவு திருக்கதவம் அடைக்கப்பட்டிருந்தது. கீழ் பகவதிக்காவில் குருதி பூஜை நடந்து கொண்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் தூரத்தில் இருந்தே தரிசித்து விட்டு கோவிலுக்கு அருகிலேயே உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறைகள் எடுத்து தங்கினோம். அதிகாலை 4 மணிக்கே நடை திறந்து விடும் பகவதியை தரிசித்து விட்டு வந்து விடுங்கள் 5 மணிக்கு கிளம்பினால்தான்  மறு நாள்  காலை தரிசிக்க வேண்டிய திவ்வியதேசங்களை எல்லாம் தரிசிக்க இயலும் என்று சுவாமிகள் கூறினார். எனவே அடியோங்கள் உறங்கச் சென்றோம்.


இரண்டாம் நாள் அதிகாலையிலேயே எழுந்து சோட்டாணிக்கரை பகவதியை தரிசித்தோம்.  கேரளத்தில் உள்ள பகவதி ஆலயங்களில் சோட்டாணிக்கரை பகவதி ஆலயம் முதன்மையானது என்று கூறலாம். இத்தலத்தில் இராஜராஜேஸ்வரியான  பகவதி மூன்று வேளைகளில் ஒவ்வொரு  முப்பெரும் தேவியாராக சேவை சாதிக்கின்றாள் என்பது சிறப்பு. த்தலத்தில் பகவதி காலை வெண்ணிற ஆடையில் சரஸ்வதியாகவும், உச்சிவேளையில் சிவப்பு ஆடையில் லட்சுமியாகவும், மாலையில் நீலநிற ஆடையில் துர்கையாகவும்  அருள் பாலித்தருளுகின்றாள். தேவியின் வலது பக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் நாராயணி என்றும் லக்ஷ்மி நாராயணா  என்றும் அழைக்கப்படுகின்றாள். அம்மே நாராயணா, தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரே நாராயணா”,  ன்றே அன்பர்கள்  அன்னையை போற்றி வணங்குகின்றனர்.
பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது திருக்கரத்தை  பாதத்தில் காட்டி வலது திருக்கரத்தால்  அருள் பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால் வலது திருகரத்தை  பாதத்தில் காட்டி, இடது திருக்கரத்தினால் அருள்பாலிக்கின்றாள்.  குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் எல்லாவித பிரசனைகளையும் குறிப்பாக மன நோய், பில்லி சூனியம் முதலான  இடர்பாடுகளை தீர்க்கும் அன்னையாக இத்தலத்தில் அருள் பாலிக்கின்றாள்.
சோட்டணிக்கரை ஆலயம் 
(நன்றி : தஞ்சையம்பதி)

இனி அன்னை இந்த தலத்திற்கு வந்த வரலாற்றைப் பற்றிப் பார்ப்போமா?
ஆதி காலத்தில் இந்த சோட்டாணிக்கரைப்பகுதி பெரும் காடாக விளங்கியது.அன்னை ஒரு வனவாசி பெண்ணுக்கு இக்காட்டுப்பகுதியில் தரிசனமளித்தாள். காலம் உருண்டோடியது,  ஒரு சமயம்  அதில் வசித்து வந்த ஆதிவாசிகளின் தலைவன் கண்ணப்பன் என்பவன் மஹா கொடூரனாக விளங்கினான். அவன் பக்கத்து கிராமத்தில் உள்ள பசுக்களைத் திருடிக்கொண்டு வந்து அவற்றைக் கொன்று இறைச்சியாக்கி தன் ண்பர்களுடன்  புசித்து வந்தான். ஒரு நாள் ஒரு கன்றை அவன் அவ்வாறு கொல்ல முயன்ற போது அது கட்டறுத்து கொண்டு காட்டுக்குள் ஓடி விட்டது. மறு நாள் அதே கன்றை தன் அன்பு மகளுடன் அவன் கண்டான், அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது அரிவாளால் அந்த கன்றை கொல்ல முயன்றான். அவன் மகள் கன்றைக் கொல்ல வேண்டாம் என்று மகள் குறுக்கிட்டாள். மகள் மேல் இருந்த பாசத்தினால் அவனும் அந்தக் கன்றைக் கொல்லாமல் விட்டுவிட்டான். மறு நாள் அவனின் மகள் இறந்து கிடந்தாள். சோகத்தில் அழுந்திக்கிடந்த அவன் கனவில் ஒரு நாள் அந்த கன்று  தோன்றியது. நான் சாட்சாத் ஜகதம்பா, முன்னொரு காலத்தில் ஒரு வனவாசிப் பெண்ணுக்கு தரிசனம் தந்த நான்  உன் தொழுவத்தில்  சிலையாக இருப்பேன், அருகில் மஹா விஷ்ணுவின் சிலை இருக்கும் என்றாள். அதே போலே மறு நாள் அம்மன் மற்றும் மஹா விஷ்ணுவின் சிலைகளை கண்ட அவன் அச்சிலைகளை பூசித்து வந்தான். அவனது இறப்பிற்கு பிறகு அந்த கிராமத்தினர் அந்த இடத்தை விட்டு வேறு இடம் சென்று விட்டனர்.  கண்ணப்பன் தொழுவத்தில்  புதர் மண்டி விட்டது. ஒரு நாள் ஒரு பெண் புல் வெட்டிக்கொண்டிருந்த போது ஒரு கல்லிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்தது. இதனால் பதட்டம் அடைந்த அந்த பெண் பிரசித்தி பெற்ற எடாட்டு நம்பூதிரியிடம் விஷயத்தைக்கூற அவரும் தன் யோக சக்தியினால் அந்த சிலையில் அம்மன் சக்தி இருப்பதை உணர்ந்து விளக்கேற்றி பூஜை நடத்தினார். அதற்குப்பின்  அப்பகுதி மக்கள் தினமும் வந்து வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே இன்றும் சோட்டாணிக்கரை அம்மனாக அருள் பாலிக்கின்றாள் இன்றும் அதிகாலை நிர்மால்ய தரிசனத்தின் போது அன்னையை ருத்ராக்ஷ கல்லாக தரிசனம் செய்யலாம். அடியோங்களுக்கும் அன்னை இந்த யாத்திரையின் போது தன் நிஜ சொரூப தரிசனத்தையே அருளினாள்.

இத்தலத்திற்கான மற்றொரு புராணக்கதையும் உண்டு. காலடியில் அவதரித்து பாரத தேசமெங்கும் பயணித்து சரஸ்வதி தேவியின் அருளால் அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தி  சனாதான தர்மத்திற்கு புத்துயிரூட்டிய ஜகத்குரு  ஆதி சங்கர பகவத் பாதாள் மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரியை கேரளத்திற்கு கொண்டு வர விரும்பினார். அதற்காக தவமும் இருந்தார். சங்கரரின் தவத்திற்கு மகிழ்ந்த அன்னை அவர் முன் தோன்றினாள்.  சங்கரரும் தனது வேண்டுகோளை அன்னையிடன் சமர்பித்தார். அன்னை ஒரு நிபந்தனையுடன் அவர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள். அம்பாள், மகனே! நீ முன்னால் நடந்து செல்ல வேண்டும், உன் பின்னால் நான் நடந்து வருகின்றேன். எதற்காகவும் நீ திரும்பிப் பார்க்கக்கூடாது. அவ்வாறு திரும்பிப் பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன் என்று மொழிந்தாள். அதற்கு கட்டுப்பட்ட அன்னையும் கால் சிலம்பு கலீர் கலீர் என்று ஒலிக்க நடந்து வந்தாள். ஆதி சங்கரரும் பல நாட்கள் இரவு பகல் பாராமல் நடந்து கொண்டிருந்தார். அன்னையும் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு நாள் அன்னையின் சிலம்பொலி கேட்கவில்லை. ஐயம் கொண்ட சங்கரர் அம்மனின் நிபந்தனையை மறந்து பின்னே திரும்பி பார்த்து விட்டார். அங்கே சர்வாபரண பூஷிதையாக சர்வாபரணங்களுடன் மந்தகாச புன்னகையுடனும் அன்னை சங்கரருக்கு தரிசனம் தந்தாள்.  மகனே! நிபந்தனையை மறந்து விட்டாயா? என்றாள். சங்கரர் அம்மையே தங்களின் கொலுசு சப்தம் கேட்காததால் பின் தங்கி விட்டீர்களோ என்று திரும்பிப் பார்த்தேன் மன்னிக்க வேண்டும் என்றார். அன்னை மகனே! நான்    இந்த கொல்லூரிலேயே மூகாம்பிகையாக  கோவில் கொள்ளப் போகிறேன் என்றாள்.

ஆதிசங்கரர்  பின்னும் அன்னையிடம் அம்மா கேரள தேசத்திற்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார். அதற்கு அன்னை இதுவும் கேரள பூமிதான், கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை கேரளம்தான் என்றாள். அம்மையின் திருமொழி சங்கரருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆலப்புழைக்கு அருகே உள்ள வேந்த நாட்டிற்கு அன்னை எழுந்தருள வேண்டும், தன் தவத்தை வீணாக்கி விடக்கூடாது என்று மன்றாடி வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்று அன்னையும், சங்கரா, தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் நான் சோட்டாணிக்கரை ஆலயத்தில்  இருப்பேன் என்று அன்னை வாக்களித்தாள். சங்கரர் தன் நாட்டிற்கு திரும்பி வந்தார். அன்னை தனது வாக்குறுதிப்படி சங்கரரோடு ஜோதி ருபத்தில் வந்து கலந்து விட்டாள். அன்னையின் தரிசனம் கண்ட சங்கரர் ஆனந்தமடைந்தார்.  இவ்வாறு அம்மன் ஜோதியான கரை இன்று சோட்டாணிக்கரையாக விளங்குகின்றது. எனவே தினமும் காலை 7  மணி வரை அம்மை சோற்றாணிக்கரை ஆலயத்தில் வெண் பட்டு உடுத்திய கோலத்தில் சரஸ்வதியாக அருள் பாலிக்கின்றாள். இதற்குப் பிறகே அன்னை கொல்லூருக்கு செல்கின்றாள் என்பது ஐதீகம்.


குருதி பூஜை 

இது வரை நாம் கண்டது மேல்க்காவு பகவதி மகிமை. இனி கீழ்க்காவு பகவதியின் புராணத்தைப் பற்றிக் காணலாமா அன்பர்களே.   வில்வமங்களம் சுவாமிகள் ஒரு அழகிய பெண்ணைக் கண்டார். அவள் அவரை துரத்திக் கொண்டே ஓடத்தொடங்கினாள் வில்வமங்களம் சுவாமிகள் அவளிடமிருந்து தப்பிக்க வேகமாக  ஓடினார் பகவதியின் திருக்குளத்திற்கு அருகில் வந்த போது இராஜராஜேஸ்வரி பத்ரகாளியாக ஆவிர்பவித்து   அந்தப் பெண்ணை கொன்றாள். அவள் ஒரு யட்சி என்றும் வில்வமங்களம் சுவாமிகளை கொல்ல வந்தாள். என்பதும் அன்னை தன்னை காப்பாற்றினாள்  என்பதும் சுவாமிகளுக்கு புரிந்தது. பின்னர் சோட்டாணிக்கரை பகவதி தனது சௌந்தர்ய ரூபத்தை வில்வமங்களம் சுவாமிக்கு காட்டி அருளினாள். எனவே அன்னையை  கீழ்க் காவு பகவதியாக – பத்ரகாளியாக வில்வமங்களம் சுவாமிகள் பிரதிஷ்டை செய்தார். பெண்கள் தங்கள் குறை தீர பெரிய ஆணிகளை அடிக்கும் பலா மரம் கீழ்க்காவு பகவதிக்கு வலப்பக்கம் உள்ளது. தினமும் கீழ்க்காவு பகவதி சன்னதியில் குருதி பூஜை நடைபெறுகின்றது.

இவ்வாலயத்தின் முக்கிய பண்டிகை மகம் தொழல் ஆகும். மாசி மகத்தன்று அன்று வில்வமங்களம் சுவாமிகளுக்கு எவ்வாறு அன்னை சர்வாலங்கார பூஷிதையாக தரிசனம் நல்கினாளே அதே போல இன்றும் தனது பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்து அருளுகின்றாள். இன்றைய தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்கின்றனர். உற்சவ அம்மனும் யானையில் பவனி வந்து அருள் பாலிக்கின்றாள். ஆயிரக்கணக்கில் குறிப்பாக பெண்கள் அன்றைய தினம் பகவதியை  வந்து தரிசனம் செய்து அருள் பெற்று தங்கள் குறைகள் நீங்கப்பெறுகின்றனர். 
  
மேலும் கணபதி சிவன், சாஸ்தா, நாகர்கள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.  கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் நுழை வாயில்கள் உள்ளன. ஸ்ரீகோவிலின் சுவற்றில் வெள்ளியால் அம்மனின் லீலைகள் அனைத்தும் சிற்பமாக அமைத்துள்ளது புதுமையாக உள்ளது. சீவேலிப் திருச்சுற்று யானைகள் செல்லும் அளவிற்கு உயரமாகவும் விலாசமாகவும் உள்ளது. நாகர் மேடை  வடக்குப் பக்கம் உள்ளது.  சிவன் சன்னதியில் லிங்க வடிவில் சிவபெருமான் அருள் பாலிக்கின்றார். தெற்குப் பகுதியில் அம்மனை தரிசித்து விட்டு வெளி வரும் வாயிலும் பிரசாதம் வழங்கும் பகுதியும் அமைந்துள்ளன.  


அம்மையை நிர்மால்ய கோலத்தில் அபிஷேகத்துடன் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. சிவன் சன்னதியிலும் அபிஷேகம் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அன்னையின்  அற்புத தரிசனத்திற்குப்பின் செங்கண்ணூர்ச் சென்று அதன் அருகில் உள்ள ஆறு திவ்யதேசங்களை சேவித்துவிட்டு திருவனந்தபுரம் செல்லும் வழியில் வர்க்கலா ஜனார்த்தனரை சேவித்தோம். அத்தலத்தைப் பற்றி அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: