Tuesday, October 18, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 20

வர்க்கலா ஜனார்த்தன சுவாமி ஆலயம்

ஆலய முகப்பு


சேர நாட்டு திவ்யதேச யாத்திரையின் இரண்டாம் நாள் காலை செங்கண்ணூரரைச் சுற்றியுள்ள ஆறு திவ்ய தேசங்களை சேவித்தபின்   மதியம் கேரளத்தின் தென்பகுதியில் உள்ள திருவனந்தபுரம் நோக்கிப் புறப்பட்டோம். எம்.சி சாலையில் பயணித்தோம்.  சற்று நீண்ட பயணம்தான்  வழியில்  திருவனந்தபுரத்திற்கு சுமார் 50 கி.மீ முன்பாக உள்ள வர்க்கலா என்ற கடற்கரையோர கிராமத்தில்   ஜனார்த்தனசுவாமியை  சேவித்தோம்.

வர்க்கலா இயற்கை எழிலும் இறையருளும் சேர்ந்த தலம். அமைதியான ஒரு சிறு கிராமம். அருமையான கடற்கரை உள்ளதால் வெளி நாட்டினர் பலர் இக்கிராமத்தை நாடி வருகின்றனர். இக்கடற்கரையின் ஒரு சொட்டு நீர்  மேனியில் பட்டாலும் அது ஆன்மாவையும், பாவங்களையும் கழுவி நிர்மூலமாக்கி விடும் என்பதால் பாபநாசம் கடற்கரை என்றும் அழைக்கப்படுகின்றது. கடற்கரை முழுவதும் நீர்த்தார் கடன் கொடுப்போரைக் காண முடிந்தது, கற்கடக மாதம் அதாவது ஆடி மாதம் அமாவாசை அன்று இக்கடற்கரையில் பிண்ட தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம் என்றார்கள். முதலில் கடற்கரைக்கு சென்று கால்களை நனைத்துக்கொண்டு ஆலயம் நோக்கி வந்தோம்.





500 ஆண்டுகள் பழமையானது  இந்த ஜனார்த்தன சுவாமி ஆலயம். ஒரு சிறு மலையின் மேல் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு எதிரே சக்கர தீர்த்தம் உள்ளது.  அருகில் ஐயப்ப சுவாமி ஆலயம் உள்ளது.  நெடு நெடுவென்று 50 படிகள் மேலேறிச்சென்று ஆலயத்தை அடைந்தோம். இரண்டு அடுக்குகள் கொண்ட கேரளப்பாணி அலங்கார வளைவு அடியோங்களை வரவேற்றது. பாண்டிய மன்னன் கட்டியதாம்,  மன்னன் தனது பிரம்மஹத்தி தோஷம் தீர புனித யாத்திரை வந்த போது இத்தலத்தில் அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது.  அங்கிருந்த ஒரு முனிவர் அதற்குக் காரணம்  கடலில் மூழ்கி  உள்ள  பரந்தாமன் விக்கிரகம் என்றார்.  கனவில் பெருமாளும் வந்து வழிகாட்ட மறுநாள் விக்கிரகத்தை  மீட்டெடுத்து பிரதிஷ்டை செய்து  கோவிலைக் கட்டினாராம்.

கிருஷ்ணபிரேமி சுவாமிகள் இந்தப்பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.  ஜோஷிர்மட் திவ்யதேசத்தில் குறிப்பிடுவதைப் போலவே இத்தலத்திலும் பெருமாளின் வலது கரம் திரும்பிக்கொண்டு வருகிறதாம். கீழ் நோக்கிய வலதுதிருக்கரம் தற்போது மேல் நோக்கி திரும்பி விட்டது. முழுவதுமாக தீர்த்தம் அருந்துவது போல வரும்போது உலகம் அழியும் என்று கூறுகின்றனர்.

முதலில் நாக லிங்க மரத்தடியில்   சிவன் சன்னதி,  லிங்க வடிவில் அருள் பாலிக்கின்றார் சிவபெருமான்.  அற்புத சிற்பங்கள் ஆலயத்தில் நிறைந்துள்ளன.  டராஜர், காளி, பிக்ஷாடணர், அம்பாள், மோகினி, வேணு கோபாலர், ரதி மன்மதன் என்று அற்புதமான சிற்பங்கள் ஆலயம் முழுவதும் கொள்ளை அழகு. அடுத்து ஜனார்த்தன சுவாமி சன்னதி பெருமாளை திவ்யமாக சேவித்தோம். வட்ட வடிவ ஸ்ரீகோவில் தொப்பி விமானம் அருமையாக சுத்தமாக இருந்தது ஆலயம். 

ஸ்ரீகுமார் தம்பதிகள் 


 கடற்கரையில் குழுவினர்

கோகுலாஷ்டமியன்று சிறப்பாக பெருமாளுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகின்றதாம்.  கணபதி மற்றும் சாஸ்தாவிற்கு தனி சன்னதிகள் உள்ளன.  முடியாதவர்கள் ஏறிவர தனிப்பாதை உள்ளது . தெற்குப்பக்கம் வாகனங்கள் மேலே  வரவும் வசதியுள்ளது. ஜனார்த்தன சுவாமியை சேவித்தபின் திருவனந்தபுரம் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை                நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: