Friday, October 21, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 23

நாலம்பலம்

இரிஞ்ஞாலக்குடா பரதன் ஆலயம்



துளசிதாசர் தமதுஹனுமான் சாலீசாஎன்ற ஸ்துதியில்  ஸ்ரீராமர்  அனுமனை

ரகுபதி கீனீ பஹுத் படாயீ |
தும் மம ப்ரிய பரத சம பாயீ ||

பொருள்:  “அனுமனே நீயும்  பரதன் போன்று எனக்கு  ஒரு பிரியமான சகோதரன் என்று போற்றினார்என்று பாடுகின்றார்.

அது போலவே இராஜகோபாலாச்சாரியார் தமதுசக்கரவர்த்தி திருமகன்என்ற இராமாயண நூலில் பரதனை தியானிப்பவர்களுக்கு ஞானமும் பக்தியும் தானே பெருகும் என்று கூறுகின்றார். சகோதர பாசத்திற்கும், தன்னலமின்மைக்கும், பொறுமைக்கும் சிறந்த இலக்கணமாக திகழ்பவன் பரதன். பதினான்கு ஆண்டுகள் நந்தி கிராமத்தில் இராமனை எதிர்பார்த்து காத்திருந்த கோலத்தில் பரதன் இந்த கூடல் மாணிக்கம் என்ற  ஆலயத்தில் சேவை சாதிக்கின்றார்பரதனுக்கு நமது பாரத தேசத்தில் உள்ள தனிக்கோவில்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று என்பது  ஒரு தனி சிறப்பு. அது மட்டுமல்ல இன்னும் பல சிறப்புகளும் உள்ளன அவை என்னவென்று காணலாமா அன்பர்களே.

பரதன்
பரதன் தவக்கோலத்தில் இருப்பதால் பூஜையின் போது வாசனைத் திரவியங்கள் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் கிடையாது. இவரே பரப்பிரம்மாக விளங்குவதால் கணேசர் உட்பட வேறு எந்த உபதெய்வமும் இக்கோவிலில் கிடையாது. தாமரை மலர், துளசி, மற்றும் தெச்சி பூக்கள் மட்டுமே பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். வேறு எந்த மலரும் சார்த்துவதில்லை. இவ்வாலயத்தில் உள்ள  துளசி செடிகளில் விதைகள் தோன்றுவதில்லையாம். பொதுவாக கேரளாவில் எல்லா ஆலயங்களிலும் ஐந்து வேளை பூஜைகள் நடைபெறும் ஆனால் இக்கோவிலில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றது. உஷத் பூஜை மற்றும் பந்தீரடி பூஜைகள் நடைபெறுவதில்லை. அது போலவே அனுதின  சீவேலியும் நடைபெறுவதில்லை. சித்திரை உற்சவத்தின் போது மட்டுமே  சுவாமி வெளியே வருவார். ஐப்பசி மாதம் திருவோணத்தன்று புத்தரிசி நைவேத்தியம் உண்டு. புதிதாக அறுவடையான அரிசி உணவு நிவேதிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மறுநாள் முக்குடி என்ற பிரசித்தி பெற்ற வயிற்று வலியை போக்கும் பிரசாதமும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த பிரசாதம் பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் ரகசியம் காத்து தயாரிக்கிறார்கள். இவ்வாலயத்தில் கத்திரிக்காய் சிறப்பு  நைவேத்தியம் என்று பல சிறப்புகள் உள்ளன.

இவ்வாலயத்தை அடைய புகைவண்டி மூலம் வருபவர்கள் இரிஞ்ஞாலக்குடா புகைவண்டி நிலையத்தில் இறங்கி பின்னர் ஆட்டோ அல்லது பேருந்து மூலம் 9 கி.மீ தூரத்தில் உள்ள கோவிலை அடையலாம். இத்திருக்கோவில் கொடுங்கல்லூரிலிருந்து திருச்சூர் செல்லும் பாதையில் திருச்சூரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.   இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட பரதன் ஆலயம் கூடல் மாணிக்கம் ஆலயம் என்றும் அழைக்கப்படுகின்றது. இனி இத்தலத்தின் புராணத்தை பற்றிப் பார்ப்போமா?

ஆதி காலத்தில் அடர்ந்த வனமாக இருந்த இவ்விடத்தில் குலிப்பிணி என்ற மஹரிஷியின்  தலைமையில் பல ரிஷிகள் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்திற்கு மெச்சி மஹா விஷ்ணு அவர்களுக்கு பிரத்யக்ஷமாகி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.அவர்களும் தாங்கள் இங்கேயே கோவில் கொள்ள வேண்டும் என்று கேட்க அவ்வாறே வரம் அளித்தார். பின்னர் முனிவர்கள் கங்கையை வேண்ட அவள் அங்கு தோன்றினாள். அந்த வெள்ளத்தில் மூழ்கி முனிவர்கள் அனைவரும் பரமபதம் அடைந்தனர். இன்றும் கோவிலின் உள்ளே உள்ள  குலிப்பிணி தீர்த்தத்தில் கங்கை இருப்பதாக ஐதீகம். இக்குளத்தின் நீரே பெருமாளுக்கு நைவேத்தியத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. பூஜை செய்யும் நம்பூதிரிகள் மட்டுமே இக்குளத்தில் நீராடுகின்றனர்.


ஆதிகாலத்தில் சாலக்குடி ஆறும், குருமலி ஆறும்  சங்கமம் ஆகும் கூடுதுறையில் இக்கோவில் அமைந்திருந்ததால் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றது என்பது ஒரு ஐதீகம். இரு சால் கூடல் என்பதே இரிஞ்ஞாலகுடா ஆனது என்பர். மற்றொறு ஐதீகம். ஒரு சமயம் பெருமாளின் சிரசிலிருந்து ஒரு அற்புத ஓளி தோன்றியது அப்போதைய காயங்குளம் அரசனிடம் இருந்த அற்புத விலை மதிப்பற்ற மாணிக்கத்தின் ஒளியை இவ்வொளியுடன் ஒப்பிட கொண்டுவந்த போது அந்த மாணிக்கம் பெருமாளின் திருமேனியில் மறைந்து விட்டது எனவே கூடல் மாணிக்கம் ஆயிற்று என்பர். மூன்றாவது ஐதீகம் ஒரு சமயம் தலிப்பரம்பா என்ற ஊரின் ஒரு முதியவர் பல் வேறு ஆலயங்களின் சான்னியத்தை ஒரு சங்கில் ஏற்று  தன் ஊரில் உள்ள மூர்த்திக்கு மாற்ற ஆலயம் ஆலயமாக சென்று  வரும் போது இவ்வாலயத்தை அடைந்தார். அப்போது அவர் கையில் இருந்து அந்த  சங்கு கீழே  விழுந்து சுக்குநூறாக உடைந்து அதில் இருந்த தெய்வ சக்திகள் அனைத்தும் இப்பெருமாளில் இணைந்ததால் இவர் கூடல் மாணிக்கம் என்றழைக்கப்படுகின்றார்.

கேரளப்பாணியில் மூன்று பக்கமும் வாயில்களுடன் பிரம்மாண்டமாக இந்த ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரத்தின் சுவர்களில் அற்புதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ள. ஆலயம் முழுவதும் ஓவியங்களும், அற்புத கற்சிலைகளும், மரச்சிலைகளும் நிறைந்திருக்கின்றன. ஸ்ரீகோவில் வட்டடிவில் உள்ளது. விமானம் சிறப்பாக இரண்டடுக்கு கூம்பு வடிவத்தில் உள்ளது. விமானத்திற்கு தாமிர தகடு சார்த்தியுள்ளனர். கலசம் ஆறு அடி உயரம் ஆலயத்தை சுற்றி நான்கு திருக்குளங்கள் அமைந்துள்ளன. இவற்றுள்  புனிதமான குலிப்பிணி தீர்த்தம் கோவில் வளாகத்திற்குள் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு பிரகாரத்தில் பெரிய கூத்தம்பலமும் உள்ளது.

இத்தலத்தில் பரதன் சதுர்புஜ விஷ்ணுவாகவே சேவை சாதிக்கின்றார். நின்ற தவத்திருக்கோலம், சதுர்புஜங்கள், வலமேற்கரம் தண்டம், கீழ்க்கரம் அக்ஷமாலை, இடமேற்கரம் சக்கரம். கீழ்க்கரம் சங்கம். தீபவழிபாடு, அவல் பாயச வழிபாடு, வெடிவழிபாடு, புஷ்பாஞ்சலி வழிபாடு பிரபலம். 14 வருடங்கள் கழித்து எப்போது இராமன் திரும்பி வருவார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கோலம். வனவாசம் முடித்து இராமன் திரும்பி வந்த போது அன்று பரதன் முகம் எவ்வளவு மலர்ச்சியாக இருந்ததோ அவ்வளவு மலர்ச்சியாக பரதன் இன்றும்  அருள் பாலிக்கின்றார் என்பது ஐதீகம்



பெருமாளுக்கு சங்கமேஸ்வரர் என்றொரு நாமமும் உண்டு101 தாமரை மலர்களுக்கு அதிகமாக எண்ணிக்கையில்  12 அடி நீளமான தாமரை மலர் மாலை பெருமாளுக்கு சார்த்தினால், தடைகள் எல்லாம் விலகும் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது இங்குள்ளவர்கள் நம்பிக்கைமேலும் தீராத வயிற்று வலியை நீக்கும் தன்வந்திரிப் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். தீராத வயிற்று வலியால் ஒரு பக்தர் அவதிப்பட்டு வந்தார் அவர் கனவில் தோன்றிப் பெருமாள் அவரது தோட்டத்தில் விளைந்த 101  கத்திரிக்காய்களை நைவேத்யமாக சமர்பிக்குமாறு வேண்டினார். அதற்குப்பின் அவரது வயிற்று வலி மாயமாக மறைந்தது. இது போல பல பக்தர்களின் நோயை தீர்த்து வைத்துள்ளார் பரதப்பெருமாள். பதினான்கு வருடம் கழித்து  இராமன் வர தாமதமானபோது வந்து நந்திகிராமத்தில் காத்திருந்த பரதன்  தீ மூட்டி அதில் இறங்க தயாரான போது விரைந்து வந்து இராமபிரான், இராவணனை வென்று வாகை சூடி, பிராட்டியுடன் திரும்பி வருகிறார் என்று கூறிய ஹனுமன் திடப்பள்ளியில் (மடப்பள்ளி) இன்றும் அரூபமாக  வசிப்பதாக நம்புகின்றனர்

மேட மாதம் (சித்திரை) பூரம் தொடங்கி திருவோணம் முடிய பெருவிழா மிகவும் சிறப்பாகவும் வேத தந்திரீக முறை வழுவாமலும்  நடைபெறுகின்றது. கேரளாவின் மற்ற கோவில்களை விட இங்கு நடக்கும் திருவிழா மிகவும் வித்தியாசமானது. தினமும் காலையும், மாலையும் 17 யானைகளோடு சுவாமி எழுந்தருளுவார். அதைக் காணக் கண் கோடி வேண்டும். பவனியின் போது நூற்றுக்கணக்கான வாத்தியக்கலைஞர்கள் பாங்கேற்கின்றனர்.

தன்னலமின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு பரதன் ஆவான். தான் செய்த தவறையே இல்லை என்றுதான் எல்லாரும் சொல்வர்கள் .ஆனால் தான் செய்யாத தப்பையே தான் செய்ததாக ஒப்புக்கொண்ட உயர்ந்தவன் பரதன். ஸ்ரீராமர் கானகம் சென்ற பின் பரதனும் சத்ருகனனும் பேசிக்கொண்டிருந்த போது பரதன் கூறுகின்றான். சத்ருகனா இவ்வாறு நடந்ததற்கு தாயார் கைகேயியோ, தந்தை தசரதரோ, அண்ணன் இராமனோ காரணம் அல்ல  நான்தான் காரணம், எனக்காகத் தானே தாயார் இராச்சியம் வேண்டுமென்று வரம் கேட்டார் என்று பெரும் பழியை சுமந்த பெருந்தன்மையாளன் பரதன். இதைப் போலவே    சூடிக்கொடுத்த  சுடர்க்கொடியாள் ஆண்டாள் தனது திருப்பாவையில் எல்லே இளங்கிளியே பாசுரத்தில்நானே தானாயிடுகஎன்று தான் செய்யாத தவறை ஒத்துக் கொள்கிறாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இருக்கவேண்டிய ஒரு முக்கியமான லட்சணம் இதுவாகும் எனவேதான் இத ஆண்டாளின் பாசுரம் திருப்பாவை பாசுரம் என்னும் சிறப்புப் பெற்றது.  அனைவரும் இவ்வாறு இருந்தால் எந்தவிதமான சண்டை சச்சரவும் இராதே.

நாலம்பல வரிசையில் மூன்றாவது தலமும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் திவ்விய தேசமும் பெருமாள் லக்ஷ்மணராகவும் சேவை சாதிக்கும் திருமூழிக்களத்தின் சிறப்புகளைப் முதலில்  எனவே அடுத்து சத்ருகனன் சேவை சாதிக்கும் பாயம்மல் தலத்தைப் பற்றிக் காணலாம் அன்பர்களே.
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்         பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: