நாலம்பலம்
திருப்பிரயார் இராமசாமி ஆலயம்
அடியோங்கள்
இந்த யாத்திரையில் இராமசகோதரர்கள் அருள் பாலிக்கும் நாலம்பத்தில், திவ்விய தேசமான திருமூழிக்களத்தை மட்டுமே
சேவித்தோம். பின்னர் ஒரு
சமயம் கேரளா சென்ற
போது இராமரையும் சேவிக்கும்
பாக்கியம் கிட்டியது. விரும்பும்
அன்பர்கள் இராமாயண சகோதரர்கள் எழுந்தருளியுள்ள நாலம்பலத்தையும் சேவிக்கலாம்
என்ற எண்ணத்தில் அவ்வாலயங்களைப்பற்றிய சிறு குறிப்புகள் இடம் பெறுகின்றன.
திருப்பிரயாரப்பன்
(நன்றி http://www.vaikhari.org)
(நன்றி http://www.vaikhari.org)
குருவாயூரிலிருந்து தெற்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (NH-17). இராமர், பரதன், லக்ஷ்மணன், சத்ருகனன் ஆகிய சகோதரர்கள் நால்வருக்குமான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கு கோவில்கள் கேரளத்தில் உள்ளதற்கான ஐதீகம். விஷ்ணு பக்தரான வக்கேகைமால் என்பவர் கூடல் மாணிக்கம் என்ற கிராமத்தின் தலைவராக
இருந்தார்.
இவரது கனவில் வந்த பெருமாள் கடற்கரையில் ஒரு புதையல் உள்ளது
என்று கூறி அழைத்து சென்றார். அவர் காட்டிய இடத்தில் நான்கு அற்புத சிலைகள் ஒன்று போலவே இருந்தது. துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பூமிக்கு வந்த போது பூஜித்த மூர்த்தங்களான அச்சிலைகள்
தசரத புத்திரர்களின் சிலைகள் ஆகும். அவர்களை அவர் திரிபரையார்,
இரிஞ்ஞாலக்குடா, திருமொழிக்களம், பாயம்மால் ஆகிய நான்கு தலங்களில்
பிரதிஷ்டை செய்தார். அவை “நாலம்பலம்” என்றழைக்கப்படுகின்றன.
நுழை வாயில்
திருச்சூர் திருப்பிரயாரில் இராமர் ஆலயம் – எர்ணாகுளம் குருவாயூர் தேசிய நெடுஞ்சாலையில்
குருவாயூரில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இரிஞ்ஞாலக்குடாவில் பரதர் ஆலயம் - திருச்சூர் கொடுங்கல்லூர்
சாலையில் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ உள்ளது.
திருமூழிக்களத்தில் லக்ஷ்மணன் ஆலயம் ஆலுவாய்க்கும் மாளுக்கும் இடையில் உள்ளது. இத்தலம்
ஒரு திவ்யதேசம் ஆகும்.
பாயம்மாலில் சத்ருகனர் ஆலயம் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது.
இராம சகோதரர்கள் நால்வரையும் தரிசித்தால் தர்மநெறியில் பொருள் தேடி, நல்வழியில் இன்பம் அனுபவித்து இறுதியில் மோட்சமும் அடையலாம் என்பது ஐதீகம்.
அலங்கார வளைவு
நான்கு
சகோதர்களும் நான்கு வேத
ரூபமாக அருள் பாலிக்கின்றனர் என்பது ஐதீகம்.
நமது தமிழகத்தைப் போலவே கேரளாவில் கர்க்கடக மாதம்
(ஆடிமாதம்) ஆன்மீக மாதமாகக் கருதப்படுகின்றது. இதனை இராமாயண மாதம் என்றும் அழைக்கின்றனர். வீடுகளில் மாலை நேரம் இராமாயணம் பாராயணம் செய்கின்றனர். அம்மன் கோவில்களைப் போல இராம, பரத,
இலக்ஷ்மண, சத்ருகனர் ஆலயங்களில் ஆடிமாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இம்மாதத்தில் இந்த நான்கு கோவில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதை “நாலம்பலம் தொழல்” என்கின்றனர். திரிப்பிரயாற்றில் நிர்மால்ய
தரிசனத்தையும், இரிஞாலக்குடாவில் உஷத் கால
பூஜையையும், திருமூழிக்களத்தில் உச்சிக்கால
பூஜையையும், பாயம்மல்லில் அத்தாழ
பூஜையையும் சேவிக்க வைகுண்டப்பேறு
பெறுவர் என்பது ஐதீகம்.
எனவே பல பக்தர்கள்
ஆடி மாதத்தில் ஒரே
நாளில் நடந்தே சென்று இந்த நான்கு
ஆலயங்களிலும் தரிசனம் செய்கின்றனர்.
இராம பட்டாபிஷேக ஓவியம்
குருவாயூரில்
இருந்து தெற்கே செல்லும்
போது சுமார் 25 கி.மீ
தூரத்திலேயே நெடுஞ்சாலைக்கு மிக
அருகில் திரிப்பிரயார் இராமர்
ஆலயம் அமைந்துள்ளது. ஒரு
காலத்தில் இவ்வாலயத்தை மூன்று
பக்கமும் ஆறு சூழ்ந்திருந்ததாம் (திரி-மூன்று,
புற-பக்கம், ஆறு-
நதி) எனவே
திரிப்புறஆறு என்பதே திரிப்பிரயார் என்று
மருவியது என்பர்.
கண்டேன் சீதையை
கண்டெனன் கற்பினுக் கணியையைக் கண்களால்
தென்திரை அலைகடல் இலங்கைத் தென்னவ
அண்டர் நாயக இனிதுறத்தி ஐயமும்
கொண்டுள்ள துயரும் என்றனுமன் பண்ணுவான்.
அண்டர் நாயக இனிதுறத்தி ஐயமும்
கொண்டுள்ள துயரும் என்றனுமன் பண்ணுவான்.
நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே
சென்றவுடனே அலங்கார வளைவு
நம்மை வரவேற்கின்றது. ஆலய
கோபுரம் கேரளப்பாணியில் அமைந்துள்ளது
அருமையான இராமபட்டாபிஷேக ஓவியங்கள்
கோபுர சுவற்றில் உள்ளன
அவற்றை இரசித்துக்கொண்டே ஆலயத்தை
வலம் வருகின்றோம். சுற்றம்பலத்தில் வடக்குப்புறம் கோசாலா கிருஷ்ணருக்கு தனி
சந்நிதி உள்ளது. பல
பக்தர்கள் அங்கு அமர்ந்து
பஜனை செய்து கொண்டிருந்தனர். கர்ப்பகிரகத்திற்கு எதிரே திருப்பிரயாறு
ஓடுகின்றது பார்க்க பார்க்க
அருமையான காட்சி. ஆற்றின்
மறு கரையில் தென்னை
மரங்கள் காற்றில் அசைந்தாட,
தென்னங்குலைகள் ஏராளமாக காய்த்துத்
தொங்க நுப்பும்
நுரையுமாக தீவ்ரா என்றும்
அழைக்கப்படும் திரிப்பிரயாறு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதே ஒரு
பரவசம். ஆற்றுக்கு சென்று
நீராட கோவிலிலிருந்து படிகள்
அமைத்துள்ளனர். இவ்வாற்றில்
உள்ள மீன்களுக்கு உணவிடுவது
சிறப்பாக “மீனூட்டு” அழைக்கப்படுகின்றது.
மூலவர்
இராமபிரான் திரிப்பிரயாரப்பன் என்றும்
திரிப்பிரயார் தேவர் என்றும்
அழைக்கப்படுகின்றார். சதுர்புஜ
விஷ்ணு திருக்கோலத்தில் திருக்கரங்களில் சங்கு, சக்கரம்,
கோதண்டம், அக்ஷமாலையுடன் உபய
நாச்சியார்களுடன் சேவை
சாதிக்கின்றார் இராமபிரான். திருமார்பில்
ஸ்ரீவஸ்தமும் கௌஸ்துபமும் அலங்கரிக்கின்றன. கரன் என்ற
அரக்கனை வென்ற கோலத்தில்
பெருமாள் சேவை சாதிக்கின்றாராம். திருக்கரத்தில் வில்
உள்ளதாலும், கருடன் இல்லாததாலும்
இராமபிரானாக வழிபடுகின்றனர். திருக்கரங்களில் அக்ஷமாலை இருப்பதால்
பிரம்மாவின் அம்சமாகவும், மேலும்
தெற்கு நோக்கி லிங்க
ரூபத்தில் தக்ஷிணாமூர்த்தியும் எழுந்தருளியிருப்பதால் இவர் மும்மூர்த்தி
ரூபராகவும் வணங்கப்படுகிறார். ஸ்ரீகோவில் வட்டவடிவிலும்
விமானம் கூம்பு வடிவிலும்
அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்தின் சுவற்றில்
அற்புதமான இராமாயண காட்சிகள்
ஓவியமாக வரைந்துள்ளனர். கன்னி மூலையில் கணபதி சன்னதி
அமைந்துள்ளது.
இக்கோவிலின்
நமஸ்கார மண்டபத்தில் இன்றும் ஹனுமன்
அரூபமாக எழுந்தருளியுள்ளதாக ஐதீகம். அன்று
பிராட்டியை தேடச்சென்ற மாருதி
திரும்பி வந்த அன்னையைக்
காணாதச் சோகத்தில் இருந்த
இராமபிரானிடம் ”திருஷ்ட சீத (கண்டேன் சீதையை)” என்று
கூறினாராம். சிரஞ்சீவியாக இன்றும்
இம்மண்டபத்தில் இருந்து கண்டேன்
சீதையை என்று கூறிக் கொண்டிருக்கிறாராம். எனவே இவ்வாலயத்தில்
ஹனுமனுக்கு தனி சன்னதிக்
கிடையாது.
அருமையான மரச்சிற்பங்கள்
மண்டபத்தில்
இராமயணத்துடன் தொடர்புடைய நுணுக்கமான
வேலைப்பாடுகளுடன் கூடிய 24
மரச்சிற்பங்கள் கொள்ளை அழகு. தெற்கு
பிரகாரத்தில் ஐயப்பன் சன்னதி
அமைந்துள்ளது. இவ்வாலயம்
அற்புதமான ஓவியங்கள், நுணுக்கமான
வேலைப்பாடுடைய மரச்சிற்பங்கள் என்று
ஒரு கலைக்கூடமாகவே விளங்குகின்றது.
விருச்சிக
மாத (கார்த்திகை) சுக்லபக்ஷ
ஏகாதசி மற்றும் மீன
மாத(பங்குனி) பூரம்
மற்றும் கன்னி மாத
திருவோண இராமர்
சிற எனப்படும் சேதுபந்தனம்
ஆகியவை இவ்வாலயத்தின் முக்கிய
உற்சவங்கள் ஆகும். ஓணம்
பண்டிகையின் போது ஆற்றில் படகு
போட்டிகளும் நடைபெறுகின்றது. பல
கேரளக் கோவில்கள் போல
இக்கோவிலிலும் வெடி வழிபாடு
சிறப்பு. வாருங்கள் இனி
பரதனை தரிசிக்கச் செல்வோம்.
திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :
திருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை
திருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்
திருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
குருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்
சோட்டாணிக்கரை வர்க்கலா நெய்யாற்றங்கரை
இரிஞ்ஞாலக்குடா பாயம்மல்
மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .
No comments:
Post a Comment