Saturday, October 29, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48

2016 வருட யாத்திரை

இத்தொடரை சென்ற தடவை முடித்த போது எழுதிய வார்த்தைகள் இவை.

இத்துடன் இத்தொடர் நிறைவு பெற்றது.  இன்னும் பஞ்ச கேதார் யாத்திரை, டோலி யாத்திரை, நந்தா தேவி உற்சவம் என்று  எத்தனையோ யாத்திரைக்கான  செய்ய வாய்ப்புக்கள் உள்ளன.அவன் அருள் இருந்தால் அந்த யாத்திரை விவரங்களையும் அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இமயமலை  என்பது ஒரு காந்தம் போல  ஒரு தடவை அங்கு சென்றவர்கள் மறுபடியும், மறுபடியும் அங்கு செல்வார்கள். மும்முறை தொடர்ச்சியாக  இமயமலையில் இனிய யாத்திரை  செல்ல வாய்ப்புக் கிட்டியது. 2013ல் இமாலய பெருவெள்ளம் ஏற்பட்டது எனவே இருவருடங்கள் பத்தியுலா தடைப்பட்டது. 

பெருவெள்ளத்தால் தடைபட்ட யாத்திரை பின்னர் 2015ல் தொடர்ந்தது. இவ்வருடம் நான்கு நாட்கள் பத்தியுலாவாக  அமைந்தது,   பத்ரிநாத் மட்டுமே சென்றோம். டெல்லியில் இருந்தே வாகனம் அமர்த்திக்கொண்டோம், வழக்கம் போல் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆனது. செல்லும் வழியில் ஒரு குருத்துவாராவில் இலங்காரில் பிரசாதம் உண்டோம். இரவு பீப்பல்கோட்டிற்கு சற்று முன்னர் உள்ள ஒரு தர்மசாலையில் தங்கினோம். மறுநாள் திருவதரி அடைந்து  பத்ரிநாதரை தரிசித்தோம். மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் சேவித்தோம். மானா கிராமம் சென்று வந்தோம். சயன ஆரத்தி சேவித்தோம். காலையில் திருமஞ்சனகோலம் சேவித்து வெளியே வந்த போது இந்திரநீல பருபதத்தின் அருமையான வர்ண ஜாலத்தை தரிசித்தோம்.  கருக்கலில் பனியில் மின்னிய சிகரம் அருணன் உதிக்க மெல்ல மெல்ல இளஞ்சிவப்பாக மாறி பின்னர் பொன் போல மின்னி இறுதியில் அன்னத்தூவிப்போல  தூயவெள்ளை நிறமாகிய   வர்ண ஜாலத்தை, இந்திர ஜாலத்தை அருமையாக தரிசித்தோம். பின்னர் வரும் வழியில் தேவப்பிரயாகையில் புருடோத்தமனை சேவித்தோம். மெல்ல மெல்ல இம்மாநிலம் வெள்ள சேதத்திலிருந்து மீண்டு வருவது தெரிகின்றது.

மறு வருடமும் (2016) இறைவன் அருள்பாலித்தார் இவ்வருடம் பெங்களூர் அன்பர் சதோபந்த் யாத்திரை செல்ல விழைந்தார், ஒரு சிலர் மறுமுறை கேதாரீஸ்வரரை தரிசிக்கலாம் என்று கூறினர். ஆகவே அவரவர் விருப்பபடி செல்ல முடிவானது. இவ்வருடம் மொத்தம் ஒரு வாரம் யாத்திரை என்பதால் திருக்கேதாரம் சென்றவர்கள் திரியுக நாராயணன், குப்தகாசி, காளிமத், ஊக்கிமத், கோபேஸ்வர்,  பஞ்ச பத்ரிகளில் ஒன்றான தியானபத்ரி, பஞ்சகேதாரங்களில் ஒன்றான கல்பேஸ்வரம், ஆகிய முன்னர் தரிசிக்காத தலங்களை  தரிசிக்க முடிந்தது. இத்தலங்களின்  சிறப்பை இனி வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே. 


வழக்கம் போல் டெல்லிக்கு விமானத்தில் கிளம்பினோம்
டெல்லியில் சப்தர்ஜங் என்க்லேவ் கிருஷ்ண மந்திரத்தில்  உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரையும்   ஹனுமனையும், இராகவேந்திரையும் தரிசித்தோம் 


உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் ஹனுமன் 

இராகவேந்திரர் பிருந்தாவனம் யாத்திரை குழுவினர் 

டெல்லியிலிருந்து ஜன்சதாப்தி  தொடர்வண்டி மூலம் ஹரித்வாருக்குச் சென்றோம். 


ஹரித்வாருக்கு   தொடர்வண்டிப்பயணம் 


ஹரித்வாரத்தில்  மத்வாசிரமத்தில் தங்கினோம், 
கங்கையில் நீராடினோம். 

டெல்லியிலிருந்து வாகனம் அமர்த்திக்கொண்டு சென்றால் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆகிவிடுகின்றது என்பதால் இவ்வருடம் ஹரித்துவாரத்தில் இருந்து வாகனம் அமர்த்திக் கொண்டோம். அதிகாலையில் ஹரித்வார் மத்வாவச்ரமத்திலிருந்து புறப்பட்டு வழியில் உள்ள பிரயாகைகளை பார்த்துக்கொண்டு சுமார் ஒரு மணி அளவில் ருத்ரப்பிரயாகையை அடைந்தோம். ஒரு வாகனம் நேரே பத்ரிநாத் செல்ல இன்னொரு வாகனம் திருக்கேதாரத்திற்காக திரும்பியது. 

வழியில் மழை பொழிந்தது பாகீரதியும் அலக்நந்தாவும் ச‘ங்கமமாகி கங்கையாக மாறும் புனித இடம் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படும் கண்டம் என்னும் கடிநகர்  திவ்யதேசம் 


 ஓர் அருவி  குப்தகாசிக்கு அருகில் உள்ள ஃபடா கிராம ஹெலிகாப்டர் தளம்.
மாலை 4மணி அளவில் குப்தகாசியை அடைந்தது. அங்கு திருகேதாரத்திற்கான கட்டாய வருகைப் பதிவை முடித்துக்கொண்டு  ஃபடா என்ற இடத்திலிருந்து  மறுநாள் திருக்கேதாரம் செல்வதற்கு   ஹெலிகாப்டருக்காக  முன்பதிவு செய்தோம். ஒருவருக்கு ரூ 7000/-  வானிலை சரியாக இருந்தால் அதிகாலையிலேயே அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்தனர். உடல் எடை  90கிலோவிற்கு அதிகமாக உள்ள அடியார்களுக்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. சமயம் இருந்ததால் வெகு நாட்களாக செல்லவேண்டும் என்று நினைத்த திரியுக நாராயணர் ஆலயம் சென்றோம். 


யாத்திரை தொடரும் . . . . . . .

3 comments:

கோமதி அரசு said...

டோலியில் எடை அதிகம் இருந்தால் அதிக காசு. ஹெலிகாப்டருக்கும் அப்படியா?
நிறைய விஷ்யங்கள் அழகாய் பகிர்ந்து இருக்கிறீர்கள் .
இமயமலை யாத்திரை காந்தம் போன்றது தான் . மறுபடியும் , மறுபடியும் நம்மை இழுக்கும் என்பது உண்மைதான்.

Muruganandam Subramanian said...

வருடத்தில் ஒரு முறை இமயமலை சென்று இயற்கையுடன் இணைந்திருந்து, மூலிகைக் காற்றை சுவாசித்து, நடைப்பயணம் செய்து வருவதால் அந்த வருடம் முழுவதும் உடல் நலம் சீராக இருக்கின்றது என்பதுவும் ஒரு காரணம்.

90 கிலோவிற்கும் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு ஒரு கிலோவிற்கு இவ்வளவு என்று கணக்கிட்டு அதிகப்படி கட்டணம் வசூலிக்கின்றனர்.

Muruganandam Subramanian said...

ஆம் அம்மா, 90 கிலோவிற்கும் மேல் உள்ளவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதுவுமல்லாமல் ஹெலிகாப்டர்களையும் மாற்றி விடுகின்றனர். அடியோங்கள் திரும்பி வந்த போது ஒரு எடை அதிகமானவர்ருக்காக சுமார் இரண்டு மணி நேரம் காத்துக்கொண்டிருந்தோம். எனவே குழுவில் அதிகமாக பக்தர்கள் இருந்தால் சில சமயம் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.