Showing posts with label மத்வாஸ்ரமம். Show all posts
Showing posts with label மத்வாஸ்ரமம். Show all posts

Thursday, October 31, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 67



சென்னை விமான நிலையத்தில்

இவ்வருடம் சென்னையிலிருந்து 25 அன்பர்களும், பெங்களூரிலிருந்து 15 அன்பர்களுமாக மொத்தம் 40 அன்பர்கள் யாத்திரை மேற்கொண்டோம். மூன்று மாதங்களுக்கு முன்பாகவே   டில்லி சென்று வர விமான சீட்டு, கேதார்நாத்திற்கு செல்ல ஹெலிகாப்டர்  சீட்டு மற்றும் பத்ரிநாத்தில் மாலை விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றுக்கான முன்பதிவை முடித்துக்கொண்டோம். வழக்கம் போல் சென்னையிலிருந்து டில்லி விமானம் மூலம் சென்று அங்கிருந்து டேராடூன் ஜன்சதாப்தி இரயில் மூலம் ஹரித்வாரை அடைந்தோம். முன்பு ஒரு முறை பௌர்ணமியன்று ஹரித்வாரை அடைந்தது போல இவ்வருடமும் அமைந்தது. குளிர் நிலவும், குளிர் தட்பவெப்பமும் எங்களை வரவேற்றது. இரயில் நிலையத்திலிருந்து பேருந்து மூலம், ஹரித்வாரத்தில் உள்ள மத்வாஸ்ரமத்தில் தங்கினோம். இரவில் கங்கையில் தீர்த்தமாடினோம்.


சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின் சில சிலைகள்























இவ்வருடம் மழைக் காலம் நீடித்தால் பத்ரிநாத் செல்லும் வழியில் சில நிலச்சரிவுகள் ஏற்பட்டதை அறிந்திருந்தோம். மேலும் ஒரு வாரம் முன்பு கோவிந்காட் என்ற இடத்தில் ஒரே சமயத்தில் அதிக மழை கொட்டியதால் வாகனங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது என்றும் படித்திருந்தோம். எனவே எப்படி அவர் நமக்கு அளிக்கின்றாறோ அதை ஏற்றுக் கொள்வோம் என்ற மன நிலையுடன்தான் யாத்திரைக்குப் புறப்பட்டோம்.

                                  தில்லி விமானப்பயணம்

தில்லி விமான நிலையத்தில் முத்திரைகள் 

பத்ரிநாத் செல்ல அடியோங்கள் வண்டிகளுக்கு முன் பதிவு செய்திருந்த வாகன ஏற்பாட்டாளர், கடைசி நேரத்தில் நிலச்சரிவின் காரணமாக பத்ரிநாத்தில் சில வண்டிகள் சிக்கிக்கொண்டன, முன்னர் கூறியது போல சிற்றுந்துகள் அளிக்க முடியாது, வேண்டுமென்றால்  40 பேர் செல்லக்கூடிய பெரிய பேருந்து தருகிறேன் என்று கையை விரித்தார்மலை பிரதேசத்தில் பெரிய வண்டிகளில் செல்வதை விட சிறிய வண்டிகளில் செல்வதே உத்தம்மானது என்பதால் வேறு வாகன ஏற்பாட்டாளர்களுடன் பேசி நான்கு சிறு வண்டிகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு புறப்பட்ட போதே சுமார் இரண்டு மணி நேரம் காலதாமதமாகி விட்டது. மேலும் வழியிலும் கால தாமதம் ஏற்பட்டது. பிரதம மந்திரியின் கனவுத்திட்டமான சார்தாம் பாதைகளை அகலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்ததால் பல இடங்களில் நின்று  செல்ல வேண்டி இருந்தது.


 

 ஹரித்வாருக்கு புகை வண்டிப்பயணம்


இப்பணிகளைப் பற்றிய சிறு விவரம், இமயமலையில் தேவபூமியான ரிஷிகேசில் இருந்து பத்ரிநாத் வரை மலைகளை குடைந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு  பூகம்பங்களையும் தாங்கும் வகையில் அமைக்க போகும் இருவழி சாலைகள்தான் மிக முக்கியமானது. இந்து மதத்திற்கும் இமயமலைக்கும் உள்ள தொடர்பு இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்க வேண்டும். ஏனென்றால் இமயமலையில்  காற்று ஒலித்துக் கொண்டிருக்கும் ஓம் என்கிற சத்தத்தை விட அங்கு செல்லும் மக்கள் ஒலிக்கும் ஹர ஹர மகாதேவா என்கிற சத்தம்தான் காற்றின் ஒலியையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது.


முழு நிலவன்று கங்கையின் கரையில்

ஹரித்வார் புகைவண்டி நிலையத்தில் உள்ள சிவன் சிலை

மத்வாஸ்ரமத்தில்


இந்த ஹர ஹர மகாதேவா கோஷம் இமயமலையில் மட்டுமல்ல அது இந்தியா முழுவதும் இனி கேட்க வேண்டும் அதற்கு நிறைய பக்தர்களை வரவழைக்க வேண்டும் என்று நினைத்த பிரதமர்,  உத்தரகாண்ட்  மாநிலத்தில் இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் சார்தாம் யாத்திரையை ஊக்குவிக்க ரிசிகேசில் இருந்து இந்தியாவின் கடைசி கிராமமான மானா வரைக்கும் அனைத்து சீதோசன நிலைகளையும் தாங்கும் வண்ணம் சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு  இருவழி சாலைகளை 12,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளார்.

கண்டம் என்னும் கடிநகர் புருஷோத்தமர் ஆலயம் 


மூன்று வருடங்களுக்கு முன் உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையினால் வெள்ளம் வந்த பொழுது  இந்த சார்தாம் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் 5000 க்கும் மேற்ப்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி இறந்துபோனார்கள் அல்லவா. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்று மத்திய அரசு நினைத்து அதற்கான செயல் திட்டங்களில் இறங்கியது.

இதற்காக 13 பைபாஸ் ரோடுகளை மறு சீரமைத்து 2 சுரங்கப்பாதைகளை அமைத்து 25 பாலங்களை உருவாக்கி 3 மேம்பாலங்களை கட்டி 154 பேருந்து  நிறுத்தங்களை ஏற்படுத்தி மக்களின் யாத்திரை பயணத்தை பாதுகாப்பாக்கி இமயமலையெங்கும் 11,000 அடி உயரத்தில் ஹர ஹர மகாதேவா என்கிற மனித உயிரின் ஆத்ம ஒலியை ஒலிக்க இருக்கிறது  அரசு. இதற்கான துவக்க விழா இன்று ஆரம்பித்தது. 7 பகுதிகளாக நடைபெறும் இந்த வேலை இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிட திட்டமிட்டிருக்கின்றனர்.


                                                                                                                                                                                                                                                                                                                                                         யாத்திரை தொடரும் .....


Sunday, October 30, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48

2016 வருட யாத்திரை

இத்தொடரை சென்ற தடவை முடித்த போது எழுதிய வார்த்தைகள் இவை.

இத்துடன் இத்தொடர் நிறைவு பெற்றது.  இன்னும் பஞ்ச கேதார் யாத்திரை, டோலி யாத்திரை, நந்தா தேவி உற்சவம் என்று  எத்தனையோ யாத்திரைக்கான  செய்ய வாய்ப்புக்கள் உள்ளன.அவன் அருள் இருந்தால் அந்த யாத்திரை விவரங்களையும் அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


இமயமலை  என்பது ஒரு காந்தம் போல  ஒரு தடவை அங்கு சென்றவர்கள் மறுபடியும், மறுபடியும் அங்கு செல்வார்கள். மும்முறை தொடர்ச்சியாக  இமயமலையில் இனிய யாத்திரை  செல்ல வாய்ப்புக் கிட்டியது. 2013ல் இமாலய பெருவெள்ளம் ஏற்பட்டது எனவே இருவருடங்கள் பத்தியுலா தடைப்பட்டது. 

பெருவெள்ளத்தால் தடைபட்ட யாத்திரை பின்னர் 2015ல் தொடர்ந்தது. இவ்வருடம் நான்கு நாட்கள் பத்தியுலாவாக  அமைந்தது,   பத்ரிநாத் மட்டுமே சென்றோம். டெல்லியில் இருந்தே வாகனம் அமர்த்திக்கொண்டோம், வழக்கம் போல் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆனது. செல்லும் வழியில் ஒரு குருத்துவாராவில் இலங்காரில் பிரசாதம் உண்டோம். இரவு பீப்பல்கோட்டிற்கு சற்று முன்னர் உள்ள ஒரு தர்மசாலையில் தங்கினோம். மறுநாள் திருவதரி அடைந்து  பத்ரிநாதரை தரிசித்தோம். மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் சேவித்தோம். மானா கிராமம் சென்று வந்தோம். சயன ஆரத்தி சேவித்தோம். காலையில் திருமஞ்சனகோலம் சேவித்து வெளியே வந்த போது இந்திரநீல பருபதத்தின் அருமையான வர்ண ஜாலத்தை தரிசித்தோம்.  கருக்கலில் பனியில் மின்னிய சிகரம் அருணன் உதிக்க மெல்ல மெல்ல இளஞ்சிவப்பாக மாறி பின்னர் பொன் போல மின்னி இறுதியில் அன்னத்தூவிப்போல  தூயவெள்ளை நிறமாகிய   வர்ண ஜாலத்தை, இந்திர ஜாலத்தை அருமையாக தரிசித்தோம். பின்னர் வரும் வழியில் தேவப்பிரயாகையில் புருடோத்தமனை சேவித்தோம். மெல்ல மெல்ல இம்மாநிலம் வெள்ள சேதத்திலிருந்து மீண்டு வருவது தெரிகின்றது.

மறு வருடமும் (2016) இறைவன் அருள்பாலித்தார் இவ்வருடம் பெங்களூர் அன்பர் சதோபந்த் யாத்திரை செல்ல விழைந்தார், ஒரு சிலர் மறுமுறை கேதாரீஸ்வரரை தரிசிக்கலாம் என்று கூறினர். ஆகவே அவரவர் விருப்பபடி செல்ல முடிவானது. இவ்வருடம் மொத்தம் ஒரு வாரம் யாத்திரை என்பதால் திருக்கேதாரம் சென்றவர்கள் திரியுக நாராயணன், குப்தகாசி, காளிமத், ஊக்கிமத், கோபேஸ்வர்,  பஞ்ச பத்ரிகளில் ஒன்றான தியானபத்ரி, பஞ்சகேதாரங்களில் ஒன்றான கல்பேஸ்வரம், ஆகிய முன்னர் தரிசிக்காத தலங்களை  தரிசிக்க முடிந்தது. இத்தலங்களின்  சிறப்பை இனி வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே. 


வழக்கம் போல் டெல்லிக்கு விமானத்தில் கிளம்பினோம்




டெல்லியில் சப்தர்ஜங் என்க்லேவ் கிருஷ்ண மந்திரத்தில்  உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரையும்   ஹனுமனையும், இராகவேந்திரையும் தரிசித்தோம் 


உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் 



ஹனுமன் 

இராகவேந்திரர் பிருந்தாவனம் 







யாத்திரை குழுவினர் 

டெல்லியிலிருந்து ஜன்சதாப்தி  தொடர்வண்டி மூலம் ஹரித்வாருக்குச் சென்றோம். 


ஹரித்வாருக்கு   தொடர்வண்டிப்பயணம் 


ஹரித்வாரத்தில்  மத்வாசிரமத்தில் தங்கினோம், 
கங்கையில் நீராடினோம். 

டெல்லியிலிருந்து வாகனம் அமர்த்திக்கொண்டு சென்றால் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆகிவிடுகின்றது என்பதால் இவ்வருடம் ஹரித்துவாரத்தில் இருந்து வாகனம் அமர்த்திக் கொண்டோம். அதிகாலையில் ஹரித்வார் மத்வாவச்ரமத்திலிருந்து புறப்பட்டு வழியில் உள்ள பிரயாகைகளை பார்த்துக்கொண்டு சுமார் ஒரு மணி அளவில் ருத்ரப்பிரயாகையை அடைந்தோம். ஒரு வாகனம் நேரே பத்ரிநாத் செல்ல இன்னொரு வாகனம் திருக்கேதாரத்திற்காக திரும்பியது. 

வழியில் மழை பொழிந்தது 



பாகீரதியும் அலக்நந்தாவும் ச‘ங்கமமாகி கங்கையாக மாறும் புனித இடம் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படும் கண்டம் என்னும் கடிநகர்  திவ்யதேசம் 


 ஓர் அருவி 



 குப்தகாசிக்கு அருகில் உள்ள ஃபடா கிராம ஹெலிகாப்டர் தளம்.




மாலை 4மணி அளவில் குப்தகாசியை அடைந்தது. அங்கு திருகேதாரத்திற்கான கட்டாய வருகைப் பதிவை முடித்துக்கொண்டு  ஃபடா என்ற இடத்திலிருந்து  மறுநாள் திருக்கேதாரம் செல்வதற்கு   ஹெலிகாப்டருக்காக  முன்பதிவு செய்தோம். ஒருவருக்கு ரூ 7000/-  வானிலை சரியாக இருந்தால் அதிகாலையிலேயே அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்தனர். உடல் எடை  90கிலோவிற்கு அதிகமாக உள்ள அடியார்களுக்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. சமயம் இருந்ததால் வெகு நாட்களாக செல்லவேண்டும் என்று நினைத்த திரியுக நாராயணர் ஆலயம் சென்றோம். 


யாத்திரை தொடரும் . . . . . . .