சென்னை மகாலிங்கபுரம்
பிரஹத் சுந்தர குஜாம்பாள்
கன்னியாகுமாரி அலங்காரம்
நமது பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தீமையை நன்மை அழித்து எல்லாரும் சுகமாக விளங்குவதை குறிக்கும் வகையில் நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. ஒன்பது நாட்கள் அம்மன் தவம் இருந்து பத்தாம் நாள் விஜதசமியன்று தீமையாம் மகிஷனை வதம் செய்ததை கொண்டாடுகிறோம். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தசரா என்று சிறப்பாக கொண்டாடிகின்றனர், இங்கு சாமுண்டீஸ்வரி இந்த பத்து நாட்களிலும் போற்றி வணங்கப்படுகின்றாள். கேரளாவில் விஜயதசமியன்று அக்ஷராப்பியாசம் என்று குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை துவக்குகின்றனர். குஜராத்தில் ஒன்பது நாட்களும் இரவு கர்பா என்னும் நடனமாடி அன்னையை வழிபடுகின்றனர். வட நாட்டில் ஒரு சாரார் கடுமையான விரதம் இருந்து அன்னையை நவ துர்காவாக வழிபடுகின்றனர் . ஒரு சாரார் இதை இராம்லீலாவாக , இராமர், இராவணனனை வெற்றி கொண்டதை கொண்டாடுகின்றனர். ஒன்பது நாட்கள் இராமாயணம் பாராயணம் செய்கின்றனர் பத்தாம் நாள் விஜய தசமியன்று, இராவணன், மேகநாதன்( இந்திரஜித்), கும்பகர்ணன் பொம்மைகளை கொளுத்துகின்றனர். வங்காளம் முதலான கிழக்குப் பகுதியில் துர்க்கா பூஜை மிகவும் சிறப்பு. சஷ்டியன்று அன்னை துர்க்கை திருக்கயிலாயம் விடுத்து பூலோகத்திற்கு தன் அன்னை இல்லத்திற்கு தன் மகள்கள் மஹா லக்ஷ்மி மற்றும் மஹா சரஸ்வதி, மகன்கள் கணேசன் மற்றும் கார்த்திகேயன்(முருகர்) மற்றும் கணேசரின் மனைவி அபராஜிதாவுடன் எழுந்தருளி அருள் பாலித்து பூஜையை ஏற்றுக்கொள்கின்றாள். விஜய்தசமியன்று பின்னர் அன்னை திருக்கயிலாயம் திரும்பிச்செல்கின்றாள்.
நவராத்திரியின் போது தேவி மகாத்மியம் என்றும் துர்கா சப்தஸதீ என்றழைக்கபப்டும் ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், லலிதா த்ரிசதீ, அபிராமி அந்தாதி மற்றும் அன்னையின் பல்வேறு தோத்திரங்களை படிப்பது மிகவும் உத்தமம்.
காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி |
தன்னோ துர்கி ப்ரசோதயாத் ||
பொதுவாக முப்பெருந்தேவியரான வீரத்திற்குரிய மஹாதுர்கா, செல்வத்திற்குரிய மஹா லக்ஷ்மி, கல்விக்குரிய மஹா சரஸ்வதி என்று மூன்று மூன்று நாட்களாக அன்னையை வழிபடுவது ஒரு முறையாகும். அநேகர் இவ்விதமாகவே அன்னையை இந்த நவராத்திரி சமயத்தில் வழிபடுகின்றனர்.
ஒரு சிலர் முதல் நாள் அன்னையை ஆதி பராசக்தியை மூன்று வயது பாலையாக பாவித்து வழிபடுகின்றனர். அன்பர்கள் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியை மூன்று வயதுள்ள குழந்தையாக தங்கள் இல்லங்களில் வழிபடுவதால் சகல மங்களங்களும் பெருகும்.
கன்னியாக வழிபடும் போது நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பிகையை அகில உலகத்தையும் ஆண்டு அருளும் அம்மையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து குமாரியாக வழிபடுகின்றோம். இவ்வாறு வழிபட தரித்திர நாசம்.
குமாரியாக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.
குமாரியாக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.
1. குமார்ஸ்ய ச தத்வானி யாஸ்ருஜத்யபி ஸீலயா
காதீநபிச தேவாம்ஸ்தாத் குமாரீம் பூஜயாம்யஹம் ||
காதீநபிச தேவாம்ஸ்தாத் குமாரீம் பூஜயாம்யஹம் ||
(ஒரு குழந்தையைப் போல லீலா வினோதங்களைச் செய்பவளை, பிரம்மன் முதலான தேவர்களை, எந்த சக்தி தனது லீலைகளினால் சிருஷ்டிக்கிறதோ, அந்த குமரியாகிய சக்தியை வணங்குகிறேன்.)
ஷைலபுத்ரி துர்கா
நவதுர்கையாக வழிபடும் போது முதல் நாள் அகில உலகத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடும் அன்னையை ஷைலபுத்ரி என்று மலைமகளாக வழிபடுகின்றோம். சதி தேவியாக தக்ஷபிரஜாபதியின் மகளாகப் பிறந்த அன்னை தக்ஷனின் ஆணவத்தின் காரணமாக பின் அந்த உடலை அழித்துக்கொண்டு பின் பர்வத ராஜ புத்ரியாக, மலையரசன் பொற்பாவையாக, கிரிகன்யாவாக, பார்வதியாக, பிறந்த அன்னையாக, நந்தி வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானின் பத்னியாக வழிபடுகின்றோம். ஷைலபுத்ரியை ஹேமவதி என்றும் அழைக்கிறோம். பசுமை வர்ணத்தவளாக அதாவது இயற்கை ரூபிணியாக வணங்குகின்றோம் ஷைலபுத்ரி துர்காவை.
வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் |
வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் |
வ்ருஷாரூடாம் சூலதராம் சைல புத்ரீம் யசஸ்விநீம் ||
என்பது ஷைலபுத்ரி துர்காவின் ஸ்துதியாகும்.
( பிறை நிலவை முடியில் சூடி, நந்தி வாகனமேறி பவனி வரும், திரிசூலதாரி, இமவான் மகளாக அவதரித்த ஒப்புயர்வற்ற ஷைல புத்ரியை என்னுடைய எண்ணங்கள் ஈடேற அடியேன் வணங்குகின்றேன். )
இவ்வருடம் மஹாலய அமாவாசை 30-09-2016 அன்று வந்தது. விஜய தசமி 11-10-2016 அன்று வருகின்றது ஆகவே திருமயிலையில் கற்பகாம்பாளின் கொலு நாளைதான் துவங்குகின்றது. இன்றைய தினம் ஒரு ஆலயத்தின் உற்சவர் அம்மனின் கொலுவை தரிசிக்கின்றீர்கள். நாளை கற்பகாம்பாளின் தரிசனம் பெறலாம் அன்பர்களே
அம்மன் அருள் தொடரும். . . . .. ... .
No comments:
Post a Comment