Thursday, October 6, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -3

திருமயிலை வெள்ளீச்சுரம்   காமாட்சியம்மன்
 அன்ன வாகனக்கொலு 


ஒரு சாரார்  நவராத்திரியின் மூன்றாம் நாள்  ஆத்தாளை , அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, பதினைந்து வயது குமாரியாக, வழிபடுகின்றனர். இவ்வாறு அம்பிகையை வழிபட பகை அச்சம் விலகும்.



அன்னையை கன்னியாக வழிபடுபவர்கள் நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னையை நான்கு வயது குழந்தையாக பாவித்து கல்யாணி என்னும் கன்யாவாக வழிபடுவதால் பகை ஒழியும்.

இன்றைய ஸ்லோகம்

கல்யாண காரிணீநத்யம் பக்தானாம் பூஜிதாம் பூஜயாமி |
சதாம் பக்த்யா கல்யாணீம் ஸர்வகாதமாம் ||

(பக்தர்களால் எப்போதும் பூஜிக்கப்பட்டு அவர்களுக்கு எந்தச் சக்தி மங்களத்தைச் செய்கின்றதோ, அந்தக் கல்யாணியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

****************


சந்த்ரகாந்தா துர்கா

நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை நவதுர்க்கைகளில் , முக்கண்களுடன் பிறைச்சந்திரனை தலையில் சூடியவளாக, புலி வாகனத்தில் பவனி வருபவளாக , சிவபெருமானை தவம் செய்து கைபிடித்த பின் அவரது ஆபரணமான சந்திரனை சிரசில் சூடிய சிவபத்னியாக சந்த்ரகாந்தா துர்காவாக வணங்கப்படுகின்றாள். அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. அன்னையில் சிரசில் சூடிய இந்த அர்த்த சந்திரன் அவள் முடியில் மணி போல விளங்குவதால் அன்னைக்கு இந்த திருநாமம். மஹா திரிபுரசுந்தரியாக பழுப்பு வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது.


பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர் யுதா |
ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ர கண்டேதி விஸ்ருதா ||

என்பது சந்த்ரகாந்தா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

( ஆக்ரோஷமான புலி வாகனத்தில் பவனி வரும் சந்த்ரகாந்தா துர்கா அடியேனை காக்கட்டும். )


*********************


அருவி போன்று நீர் பின்புலத்தில் உள்ளதை கவனியுங்கள்



திருப்பைஞீலியில் அப்பருக்கு சிவபெருமான் 
அன்னமளித்த லீலை 

*****************
ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

அத்துவித சித்த பரிசுத்தர்களிடத்தினிலடுத்திடர் தொலைப்பமென்றால் ஆசையெனு மூவகைப்பேய் பிடித்து ஆவேச மாட்டும் வகையல்லாமலே

தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலது தன்வழியிலே யிழுத்துத் தள்ளுதே  பாழான கோபமுமடங்காது  தன்னரசு நாடு செய்யுதே

இத்தனைவிதச் சனியிலெப்படி வழிப்படுவதெப்படி பிழைப்பதம்மா இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து இணைமலர்ப்பதமருள் செய்குவாய்

வித்தகநுதற்கண்னிடத்தில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (2)

பொருள்: சீவனும் சிவனும் ஒன்று என்னும் அத்துவித உண்மையை உணர்ந்து  ஆசைகளை துறந்த மனத்தூய்மை கொண்டவர்களை அண்டி துன்பங்களில்  இருந்து விடுபடலாம் என்றால்,  மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை எனும் மூன்று ஆசைகளும் அலைக்கழிப்பதல்லாமல், குதிரை போன்று தாவிப்பாயும் மனமானது எவ்வளவு அடக்கினாலும் தன் வழியிலே இழுத்துச் செல்கின்றது. கோபமானதும் அடங்காது என்னை வாட்டுகின்றது, இவ்வளவு துன்பங்களுக்கிடையில் அடியேன் எவ்வாறு மீள்வது, எப்படி பிழைப்பது? அம்மா  கற்பகவல்லியே உனது கடைக்கண் பார்வையால்  அடியேனின் துன்பங்களை தீர்த்து,  உனது திருவடிகளை அடையும் அருள் புரிவாய். சிறப்பாக நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   

முந்தைய பதிவு                                                                                                                                              அடுத்த பதிவு   

                                                                                                                                                        அம்மன் அருள் வளரும் ......

No comments: