Friday, October 7, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -4

கற்பகவல்லி அம்மன் காமதேனு வாகனத்தில் 
மஹா கௌரியாக கொலு


நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை ஜகத் ஜனனியை சோடசாக்ஷரி என்னும் சுமங்கலிப் பெண்ணாக, சர்வ மங்கள மாங்கல்யையாக பூஜிப்பதால் கல்வி, ஞானம் பெருகும்.



பின்னழகு

நவராத்திரியின் நான்காம் நாள் அன்னையை ஐந்து வயது குழந்தையாக பாவித்து ரோகிணி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். இன்றைய ஸ்லோகம்

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம ஸஞ்சிதாநிவ யாதேவிஸர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம் ||

(எல்லா ஜீவரசிகளின் பாவங்களையும் எந்தச் சக்தியினால் நிவர்த்தி செய்கிறாளோ அந்த சக்தியாகிய ரோகிணியை வணங்குகிறேன்.)

*********************


கூஷ்மாண்டா துர்கா

நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை நவதுர்கைகளில் , சூரிய மண்டலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு இந்த புவனம் முழுவதற்கும் வெப்பத்தை வழங்கிக்கொண்டிருக்கும் கூஷ்மாண்டா துர்காவாக வழிபடுகின்றோம். இந்த பிரம்மாண்டம் முழுவதையும் சிருஷ்டிப்பவள் இவளால்தான்.

கமண்டலம், வில், அம்பு, தாமரை, அமிர்தகலசம், சக்கரம், கதை, ஆகியவைகளை ஏழு கரங்களில் ஏந்தியபடி எட்டாவது கரத்தில் எட்டு சித்திகள், ஒன்பது நிதிகள் அடங்கிய ஜப மாலையோடு, சிம்மத்தை வாகனமாகக் கொண்டு திவ்யமாகக் காட்சி கொடுக்கிறாள் அன்னை. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து அருள் புரிகிறாள். எல்லாவற்றிக்கும் ஆதியாக ஊதா வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

அன்னை தன் சக்தி முழுவதையும் சூரியனுக்கு அளித்து சிருஷ்டியை துவக்குகிறாள் அன்னை.

ஸுராஸம்பூர்ண கலசம் ருதிராப்லுத மேவசம் |
ததாநா ஹஸ்த பத்மாப்யாம் கூக்ஷ்மாண்டா சுபதாஸ்துமே ||

என்பது கூஷ்மாண்டா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

(தனது இரு தாமரைத் திருக்கரங்களில்   இரத்தம் நிரம்பிய இரு பூரண கலசங்களை ஏந்தி, சிருஷ்டியை ஸ்திதி  சம்ஹாரத்தை தனது கண் இமைப்பில் நடத்தும் கூஷ்மாண்டா தேவி அடியேனுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும். )

**********************



முண்டக கண்ணியம்மன் 
சரஸ்வதி அலங்காரம் 

*********************
ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

பொய்வைத்த சிந்தை மடமங்கையர்கள் வாசனைப் பூங்குழலிலே நிழலிலேபொழியம்புபோலமிரு விழியம்பிலே பொடிப்பூச்சிலே கைவீச்சிலே

செய்தொப்பமிட்ட செப்பெனுமுலையிலே, துடிசிற்றிடையிலே, உடையிலே, தெட்டிலே, நந்நுதற் பொட்டிலே வெண்ணகைச் செம்பவள வாயிதழிலே,

பைவைத்த விடவரவமெனு நிதம்பத்திலே பாழறி வழிந்து மூழ்கிப் பரகதிக்கொரு தவிச்செய்கையிமிலாக் கொடும் பாதகனையாள்வதன்றோ

மெய்வைத்தகையானிடத்தில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (3)

பொருள்: பொய்யை மனதில் கொண்ட மங்கையர்களின் மணம் மிகுந்த  கரிய கூந்தல், அம்பு போன்ற கூரிய இரு  கண்கள், பொடிப்பூச்சு, ஒயிலான கை வீச்சு, மதர்த்த செப்புக்கலசம் போன்ற கொங்கைகள், உடுக்கை போன்ற இடை, அணிந்திருக்கும் ஆடைகள், நெற்றிப் பொட்டு, முறுவலிக்கும் செம்பவளம் போன்ற இதழ், விடம் கொண்டப் பாம்பைப் போன்ற அல்குல் ஆகியவற்றில் மூழ்கி அறிவிழந்து தடுமாறும், பரகதி அடைய நினையாத பாதகனை, என்று ஆள்வாய், அம்மா கற்பகவல்லியேமெய்யிற்கே இருப்பிடமான சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளேபரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!   
  


முந்தைய பதிவு                                                                                                                                  அடுத்த பதிவு   


                                                                                                                            அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

No comments: