திருமயிலை கற்பகாம்பாள் அன்ன வாகனத்தில்
கொலு மண்டபம் எழுந்தருளல்
கொலு மண்டபம் எழுந்தருளும் கற்பகவல்லி
ஒரு சாரார் நவராத்திரியின் இரண்டாம் நாள் நாம் அம்பிகையை, அகிலாண்ட வல்லியை, நவாக்ஷரி என்னும் ஒன்பது வயது பெண்ணாக வழிபடுகின்றனர். இல்லத்தில் அம்பிகையை இவ்வாறு வழிபட தானியம் பெருகும்.
கன்னியாக வழிபடும் போது நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்னையை மூன்று வயது குழந்தையாக பாவித்து த்ரிமூர்த்தியாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் தனதான்ய வளம் கிட்டும். இன்றைய ஸ்லோகம்
சத்வாதிபிஸ் திரிமூர்த்தியர்த்திர்யா தெளர்ஹி நாதா ஸ்வரூபிணி த்ரிகால வாபினிசக்திஸ் திரிமூர்த்திம் பூஜயாம்யஹம் ||
(சத்துவம் போன்ற குணங்களால், அனைத்து ரூபமாக, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் முக்காலங்களிலும் எந்த சக்தி வியாபித்திருக்கிறதோ அந்த த்ரிமூர்த்த்தியாகிய சக்தியை வணங்குகிறேன்.)
அம்மன் கொலு மண்டப பிரவேசம்
கற்பகாம்பாள் அன்னவாகன சேவை
அம்மன் பின்னழகு
ப்ரம்ஹசாரிணி துர்கா
நவதுர்க்கையாக வழிபடும் போது நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்னையை, இமவான் மகளாக பிறந்து சிவபெருமானை மணம் செய்து கொள்வதற்காக தவம் செய்யும் பருவத்தில் கன்னியாக, யோகினியாக, தபஸ்வினியாக ப்ரும்மசாரிணியாகவும் வழிபடலாம். சாட்சாத் பிரம்மம் ஆன அவளே தவ வடிவாக விளங்கி தவம் இருந்ததால் ப்ரம்ஹசாரிணி எனப் போற்றப் பட்டாள். நீல வடிவினாளாக அதாவது பக்தி வசமானவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.
ததாநாகர பத்மாப்யாம் அக்ஷ மாலா கமண்டலூ |
தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அநுத்தமா ||
என்பது ப்ரம்ஹசாரிணி துர்காவின் ஸ்லோகம் ஆகும்.
(தனது தாமரைக் கரங்களில் அக்ஷமாலை, கமண்டலம் தாங்கி சச்சிதானந்த நிலையை அருளும் அன்னை ப்ரஹமசாரிணி அடியேனை காக்கட்டும். )
முதல்நாள் பயிறுக் கோலம்
தமிழகத்தில் தசரா திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் தலம் குலசேகரன்பட்டிணம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் ஐயன் ஞான மூக்தீஸ்வரராகவும் அம்பாள் முத்தாரம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். இருவரும் சுயம்பு மூர்த்தங்கள். விஜய தசமியன்று அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்யும் சூர சம்ஹாரம் சிறப்பாக கடற்கரையில் நடைபெறுகின்றது. முத்தாரம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இத்திருவிழாவின் சிறப்பு பக்தர்கள் பல்வேடங்கள் அணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று அம்மனுக்கு செலுத்துவதாகும். பக்தர்கள் காப்புக்கட்டி தங்கள் வீட்டை விடுத்து ஆலயத்தின் அருகில் குடிசை கட்டி ஒரு வேளைப் பச்சரிசி சாதமும், துவையலும் உண்டு விரதமிருக்கின்றனர். பக்தர்கள் என்ன வேடம் அணியவேண்டுமென்று அம்மன் கனவில் வந்து கூறுவதாக ஒரு ஐதீகம் உண்டு. காளி அம்மன் வேடம் அணிவது சிறப்பாக கருதப்படுகின்றது.
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம்
பூரணி மனோன்மணி தயாபரி பராபரி புராதனி தராதரமெலாம்
பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு புத்ரி மகமாயியென்றே
சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன் செவிதனிற்கேறவில்லையோ
தேஹீயென்றாலுனக்கீய வகையில்லையோ தீனரக்ஷகியல்லையோ
ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள் தமை ஆதரிப்பவர் ஆருசொல்லாய்
அன்னை யேயின்னும் பராமுகம் பண்ணாமல் அடியேனைரக்ஷி கண்டாய்
மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ்
விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்பதவல்லி விமலி கற்பகவல்லியே (1)
பொருள்: முழுமையானவளே, பார்வதியே, தயை நிறைந்தவளே, சக்தியே, முன்னை பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளே, அகில உலகங்களையும் பொலிவுடன் படைத்த சிவசக்தியே, இமவான் செல்வியே மகமாயியே என்று அடியேன் இனைய தமிழ்க்கவிதை பாடி முறையிடுவது உனது திருக்காதில் விழவில்லையா? அன்னையே ஈவாய் என்று வேண்டினால் அருள வகையில்லையா? தீனர்களை காப்பவள் அல்லவா? பெற்ற தாயல்லாமல் பிள்ளைகளை யார் காப்பாற்றுவார்கள். அன்னையே இனியும் பாராமுகமாக இல்லாமல் அடியேனை இரட்சித்து காப்பாற்றுவாய். திரிபுரர்களை அழிக்க மேரு மலையை வில்லாக வளைத்த சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட அமுதானவளே! சோலைகள் நிறைந்த திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளே! பரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!
முந்தைய பதிவு அடுத்த பதிவு
முந்தைய பதிவு அடுத்த பதிவு
அம்மன் அருள் வளரும் ......
No comments:
Post a Comment