Showing posts with label இராமாயண மாதம். Show all posts
Showing posts with label இராமாயண மாதம். Show all posts

Tuesday, July 17, 2018

நாலம்பல யாத்திரை - 1


நாலம்பங்களின்  தரிசனம்:  




நாலம்பல  இராமாயண சகோதரர்கள்





இராம பட்டாபிஷேக ஓவியம் - திருமூழிக்களம்


நமது தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு.  ஆடி மாதம் அம்மன் மாதம் என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றதி. அம்மன் ஆலயங்களில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் கூழ் வார்த்தல் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதற்கு காரணம் ஆடி மாதம் அயன மாதம் ஆகும். ஆம் சூரியன் தனது வடக்கு நோக்கிய யாத்திரையை முடித்து தெற்கு நோக்கிய யாத்திரையை துவக்கும் துவக்கும் மாதம்தான் ஆடி மாதம். தக்ஷிணாயணம் துவங்கும் மாதம். தக்ஷிணாயனக் காலம் தேவர்களின் இரவு நேரம் என்பதால் ஆடி மாதம் தேவர்களின் சாயரட்சை அதாவது கோதூளிக் காலம் என்பது ஐதீகம். பித்ருக்களுக்கு உகந்த காலம்.

திருச்சூர் வடக்குநாதர் ஆலயம்

"ஆடிப்பட்டம் தேடி விதை", "ஆடி காற்றில் அம்மியே பறக்கும்" என்பதெல்லாம்  ஆடியைப் பற்றிய பழமொழிகள் .  ஆடியில் பருவ மழை ஜோராக பெய்யும் மாதம் எனவே பல தொற்று நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளதால் அதை தடுப்பதற்காக வேப்பிலை, வெங்காயம், கலந்து கேழ்வரகு கூழ் படைத்து அம்மனை வழிபாடு செய்வதை ஏற்படுத்தினர் முன்னோர்கள்.

இரிஞாலக்குடா கூத்தம்பலம் 

வான் முகில் வழாது பெய்து  நிலம் செழித்து பயிர்கள் நன்றாக வளர்ந்தது சூல் கொண்டு இருப்பதை உணர்த்தும் விதமாக அம்பாளே சூல் கொன்டிருப்பதாக பாவித்து ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்திக் கொண்டாடும் மாதம்.


ஆடி பதினெட்டாம் பெருக்கு இது தங்களை வாழ்விக்கும் காவிரி அன்னைக்கும், மழைக்கும், ஆற்றில் பெருக்கெடுத்தோடும் நீருக்கும் நன்றி சொல்லும் விழா. சிவபெருமான் கருணையால் பார்வதிதேவி தம் மக்களை வாழ்விக்க அருளிய அமிர்தமே ஆற்று நீர் எனக் கருதி அந்த அம்மனுக்கு வழிபாடு நடத்துவது மரபு. காவிரியின் கருணையினால் விளைந்த நெல்லை அரிசியாக்கி அந்த அரிசியில் பலவகை உணவைச் செய்து படைத்தல் என்பது காலங்காலமாக இருந்து வரும் பழக்கம். இது குறித்து புராணக் கதையொன்றும் உண்டு. சிவபெருமானைக் குறித்து பார்வதி தேவியார் தவம் செய்த மாதம் இது என்பதே அந்தக் கதை.


பூமி தேவியின் அம்சமான பூ மாலையும், பாமாலையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்  ஆண்டாள் அவதரித்த நாள். மேலும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்திற்கு மிகவும் உகந்த நாள். ஆடி பௌர்ணமியன்றுதான் ஹயக்ரீவர் அவதாரம் செய்தார். ஆடிக் கிருத்திகையும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பெரிய திருவடியாம் கருடாழ்வார் அவதாரம் செய்தது ஆடி சுவாதியில்தான்.


திருஅஞ்சைக்களம் 

ஆடி பதினெட்டாம் பெருக்கன்று "வான் பொய்ப்பினும் தான் பொய்யா பொன்னி நதியாம் காவிரி" நதியைப் போற்றிக்கொண்டாடி அவளை பூசிக்கும் நாள்.


கதகளி ஆட்டம்

நமது தமிழகத்தில்  இவ்வாறு என்றால் அண்டை மாநிலமான கேரளத்தில் ஆடி மாதம் இராமாயண மாதம் என சிறப்பாக கொண்டாடுகின்றனர். தமிழகத்தை விட பல மடங்கு தென் மேற்கு பருவக் காற்றால் மாரி கேரளத்தில் பொழிகின்றது. எனவே பயிர் சாகுபடி மிகவும் சிறப்பாக இருக்கும் எனவே இம்மாதத்தில் தொற்று நோயை தவிக்கும் வண்ணம் தினமும் இராமாயணத்தை வீட்டில் பாராயணம் செய்யும் வழக்கில் உள்ளது. 



 ஆயிரங்கண்ணி பூர உற்சவம்


கேரளத்தில் இராம சகோதரர்கள் நால்வருக்கும் தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒரே நாளில் நான்கு தலங்களிலும் சென்று நான்கு சகோதரர்களையும் வழிபடுகின்றனர்.  இந்த நான்கு தலங்களுக்கும் மற்றும் அருகில் உள்ள சில தலங்கள் மற்றும் இரண்டு அம்மன் கோவில்களின், கேரளத்தின் சிறப்பு மிக்க யானைகள் அணிவகுத்து கொண்டாடும்  இரு அம்மன் ஆலயங்களின் பூரம் உற்சவத்தையும் காணும் பாக்கியம் அடியேனுக்கு வாய்த்தது.  அவ்வனுபவத்தை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இத்தொடர். வாருங்கள் அன்பர்களே இராமாயண மாதத்தில் இராம சகோதரர்கள் நால்வரையும்  திவ்யமாக சேவிக்கலாம். இத்தொடரில் இடம் பெறும் புகைப்படங்களையெல்லாம் எடுத்தவர் அடியேனுடைய நண்பர் திரு.சுந்தர் அவர்கள்.

Thursday, October 20, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 22

நாலம்பலம்

திருப்பிரயார் இராமசாமி ஆலயம்


அடியோங்கள் இந்த யாத்திரையில் இராமசகோதரர்கள் அருள் பாலிக்கும் நாலம்பத்தில்,  திவ்விய தேசமான திருமூழிக்களத்தை மட்டுமே சேவித்தோம். பின்னர் ஒரு சமயம் கேரளா சென்ற போது இராமரையும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. விரும்பும் அன்பர்கள் இராமாயண சகோதரர்கள் எழுந்தருளியுள்ள  நாலம்பலத்தையும் சேவிக்கலாம் என்ற எண்ணத்தில்  அவ்வாலயங்களைப்பற்றிய சிறு  குறிப்புகள்  இடம் பெறுகின்றன. 
திருப்பிரயாரப்பன் 
(நன்றி http://www.vaikhari.org)

குருவாயூரிலிருந்து தெற்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (NH-17). இராமர், பரதன், லக்ஷ்மணன், சத்ருகனன் ஆகிய சகோதரர்கள் நால்வருக்குமான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கு கோவில்கள் கேரளத்தில் உள்ளதற்கான ஐதீகம். விஷ்ணு பக்தரான வக்கேகைமால் என்பவர் கூடல் மாணிக்கம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்தார். இவரது கனவில் வந்த பெருமாள் கடற்கரையில் ஒரு புதையல் உள்ளது என்று கூறி அழைத்து சென்றார்.  அவர் காட்டிய இடத்தில் நான்கு அற்புத சிலைகள் ஒன்று போலவே இருந்தது. துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பூமிக்கு வந்த போது பூஜித்த மூர்த்தங்களான அச்சிலைகள் தசரத புத்திரர்களின் சிலைகள் ஆகும். அவர்களை அவர் திரிபரையார்,  இரிஞ்ஞாலக்குடா, திருமொழிக்களம், பாயம்மால் ஆகிய நான்கு தலங்களில் பிரதிஷ்டை செய்தார். அவை “நாலம்பலம்” என்றழைக்கப்படுகின்றன.

நுழை வாயில்

திருச்சூர் திருப்பிரயாரில் இராமர் ஆலயம் – எர்ணாகுளம் குருவாயூர் தேசிய நெடுஞ்சாலையில் குருவாயூரில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இரிஞ்ஞாலக்குடாவில் பரதர் ஆலயம்  - திருச்சூர் கொடுங்கல்லூர் சாலையில் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ உள்ளது.

திருமூழிக்களத்தில் லக்ஷ்மணன் ஆலயம் ஆலுவாய்க்கும் மாளுக்கும் இடையில் உள்ளது. இத்தலம் ஒரு திவ்யதேசம் ஆகும்.

பாயம்மாலில் சத்ருகனர் ஆலயம் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது.

இராம சகோதரர்கள் நால்வரையும் தரிசித்தால் தர்மநெறியில் பொருள் தேடி, நல்வழியில் இன்பம் அனுபவித்து இறுதியில் மோட்சமும் அடையலாம் என்பது ஐதீகம்.

அலங்கார வளைவு

நான்கு சகோதர்களும் நான்கு வேத ரூபமாக அருள் பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். நமது தமிழகத்தைப் போலவே கேரளாவில் கர்க்கடக மாதம் (ஆடிமாதம்) ஆன்மீக மாதமாகக் கருதப்படுகின்றது. இதனை இராமாயண மாதம் என்றும் அழைக்கின்றனர். வீடுகளில் மாலை நேரம் இராமாயணம் பாராயணம் செய்கின்றனர்.  அம்மன் கோவில்களைப் போல இராம, பரத, இலக்ஷ்மண, சத்ருகனர் ஆலயங்களில் ஆடிமாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இம்மாதத்தில் இந்த நான்கு கோவில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதை “நாலம்பலம் தொழல்” என்கின்றனர். திரிப்பிரயாற்றில் நிர்மால்ய தரிசனத்தையும், இரிஞாலக்குடாவில் உஷத் கால பூஜையையும், திருமூழிக்களத்தில் உச்சிக்கால பூஜையையும், பாயம்மல்லில் அத்தாழ பூஜையையும் சேவிக்க வைகுண்டப்பேறு பெறுவர் என்பது ஐதீகம். எனவே பல பக்தர்கள் ஆடி மாதத்தில் ஒரே நாளில் நடந்தே சென்று இந்த  நான்கு ஆலயங்களிலும் தரிசனம் செய்கின்றனர்.

இராம பட்டாபிஷேக ஓவியம்

குருவாயூரில் இருந்து தெற்கே செல்லும் போது சுமார் 25 கி.மீ தூரத்திலேயே நெடுஞ்சாலைக்கு மிக அருகில் திரிப்பிரயார் இராமர் ஆலயம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இவ்வாலயத்தை மூன்று பக்கமும் ஆறு சூழ்ந்திருந்ததாம் (திரி-மூன்று, புற-பக்கம், ஆறு- நதி)  எனவே திரிப்புறஆறு என்பதே  திரிப்பிரயார் என்று மருவியது என்பர்.

கண்டேன் சீதையை 

கண்டெனன் கற்பினுக் கணியையைக் கண்களால்
தென்திரை அலைகடல் இலங்கைத் தென்னவ
அண்டர் நாயக இனிதுறத்தி ஐயமும்
கொண்டுள்ள துயரும் என்றனுமன் பண்ணுவான்.

நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே சென்றவுடனே அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது. ஆலய கோபுரம் கேரளப்பாணியில் அமைந்துள்ளது அருமையான இராமபட்டாபிஷேக ஓவியங்கள் கோபுர சுவற்றில் உள்ளன அவற்றை இரசித்துக்கொண்டே ஆலயத்தை வலம் வருகின்றோம். சுற்றம்பலத்தில் வடக்குப்புறம்  கோசாலா   கிருஷ்ணருக்கு தனி சந்நிதி உள்ளது. பல பக்தர்கள் அங்கு அமர்ந்து பஜனை செய்து கொண்டிருந்தனர்.  கர்ப்பகிரகத்திற்கு எதிரே திருப்பிரயாறு ஓடுகின்றது பார்க்க பார்க்க அருமையான காட்சி. ஆற்றின் மறு கரையில் தென்னை மரங்கள் காற்றில் அசைந்தாட, தென்னங்குலைகள் ஏராளமாக காய்த்துத் தொங்க  நுப்பும் நுரையுமாக தீவ்ரா என்றும் அழைக்கப்படும் திரிப்பிரயாறு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதே ஒரு பரவசம். ஆற்றுக்கு சென்று நீராட கோவிலிலிருந்து படிகள் அமைத்துள்ளனர். இவ்வாற்றில் உள்ள மீன்களுக்கு உணவிடுவது சிறப்பாக “மீனூட்டு” அழைக்கப்படுகின்றது.

மூலவர் இராமபிரான் திரிப்பிரயாரப்பன் என்றும் திரிப்பிரயார் தேவர் என்றும் அழைக்கப்படுகின்றார். சதுர்புஜ விஷ்ணு திருக்கோலத்தில் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கோதண்டம், அக்ஷமாலையுடன் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார் இராமபிரான். திருமார்பில் ஸ்ரீவஸ்தமும் கௌஸ்துபமும் அலங்கரிக்கின்றன. கரன் என்ற அரக்கனை வென்ற கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றாராம். திருக்கரத்தில் வில் உள்ளதாலும், கருடன் இல்லாததாலும் இராமபிரானாக வழிபடுகின்றனர். திருக்கரங்களில் அக்ஷமாலை இருப்பதால் பிரம்மாவின் அம்சமாகவும், மேலும் தெற்கு நோக்கி லிங்க ரூபத்தில் தக்ஷிணாமூர்த்தியும் எழுந்தருளியிருப்பதால் இவர் மும்மூர்த்தி ரூபராகவும் வணங்கப்படுகிறார்.  ஸ்ரீகோவில் வட்டவடிவிலும் விமானம் கூம்பு வடிவிலும் அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்தின்  சுவற்றில் அற்புதமான இராமாயண காட்சிகள் ஓவியமாக வரைந்துள்ளனர். கன்னி மூலையில் கணபதி சன்னதி அமைந்துள்ளது.

இக்கோவிலின் நமஸ்கார மண்டபத்தில்  இன்றும் ஹனுமன் அரூபமாக  எழுந்தருளியுள்ளதாக ஐதீகம். அன்று பிராட்டியை தேடச்சென்ற மாருதி திரும்பி வந்த அன்னையைக் காணாதச் சோகத்தில் இருந்த இராமபிரானிடம் ”திருஷ்ட சீத (கண்டேன் சீதையை)” என்று கூறினாராம். சிரஞ்சீவியாக இன்றும் இம்மண்டபத்தில் இருந்து கண்டேன் சீதையை என்று கூறிக் கொண்டிருக்கிறாராம். எனவே இவ்வாலயத்தில் ஹனுமனுக்கு தனி சன்னதிக் கிடையாது. 


அருமையான மரச்சிற்பங்கள் 

மண்டபத்தில் இராமயணத்துடன் தொடர்புடைய நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய 24 மரச்சிற்பங்கள் கொள்ளை அழகு. தெற்கு பிரகாரத்தில் ஐயப்பன் சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயம் அற்புதமான ஓவியங்கள், நுணுக்கமான வேலைப்பாடுடைய மரச்சிற்பங்கள் என்று ஒரு கலைக்கூடமாகவே விளங்குகின்றது.


விருச்சிக மாத (கார்த்திகை) சுக்லபக்ஷ ஏகாதசி மற்றும் மீன மாத(பங்குனி) பூரம் மற்றும் கன்னி மாத திருவோண  இராமர் சிற எனப்படும் சேதுபந்தனம் ஆகியவை இவ்வாலயத்தின் முக்கிய உற்சவங்கள் ஆகும். ஓணம் பண்டிகையின் போது  ஆற்றில் படகு போட்டிகளும் நடைபெறுகின்றது. பல கேரளக் கோவில்கள் போல இக்கோவிலிலும் வெடி வழிபாடு சிறப்பு. வாருங்கள் இனி பரதனை தரிசிக்கச் செல்வோம்.
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை  

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்
மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .