Friday, July 27, 2018

நாலம்பல யாத்திரை - 3


திருப்பிரயார் இராமசாமி ஆலயம்


மற்ற அம்பலங்களின்  தரிசனம்:  




நெடுஞ்சாலையிலிருந்து செல்லும்  அலங்கார  வழி

கேரள மாநிலத்தில் திருச்சூர் நகருக்குத் தென்மேற்கே சுமார் இருபது கி.மீ. தொலைவில் கொடுங்கலூருக்கும் குருவாயூருக்கும் இடையில் திருப்பிரயார் இராமர் ஆலயம் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு திருச்சூரிலிருந்தும் குருவாயூரிலிருந்தும் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. ஒரு காலத்தில் இவ்வாலயத்தை மூன்று பக்கமும் ஆறு சூழ்ந்திருந்ததாம் (திரி-மூன்று, புற-பக்கம், ஆறு- நதி)  எனவே திரிப்புறஆறு என்பதே  திருப்பிரயார் என்று மருவியது என்பர்.



மேற்கு கோபுர இராம பட்டாபிஷேக ஓவியம்

கடற்கரையில் சேதுபந்தன ஆலோசனை  ஓவியம்

இராமாயண சகோதரர்களை கண்டெடுத்த வக்கே கைமாலுக்கு ராமபிரானை திருப்பிரயாரில் எந்த இடத்தில் பிரதிஷ்டை செய்வது என்ற குழப்பம் நீடிக்க, முடிவில் இது பற்றி தேவ பிரசனம் கேட்டபோது, ‘ஒரு மயில் ஆகாத்தில் பறக்கும். அது பறக்குமிடத்திற்கு நேர் கீழே பிரதிஷ்டை செய்என்று அசரீரி சொன்னது. அப்படியே செய்யத் தீர்மானித்து, பிரதிஷ்டா வைபவத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து மயிலின் வருகைக்காக காத்திருந்தார்களாம். வெகுநேரமாயும் மயில் வரவேயில்லையாம். ஆனால், திடீரென்று பக்த கோடிகளில் ஒருவர் ஒரு கொத்து மயிலிறகுகளை வைத்துக்கொண்டு கூட்டத்தினரிடையே இருப்பது கண்ணில் பட்டதாம். அதையே மயிலாகப் பாவித்து, அவர் நின்ற இடத்திலேயே ராமரைப் பிரதிஷ்டை செய்தார்களாம். ஆனால், இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட உடனேயே பிரசனத்தில் சொன்னபடியே  ஒரு மயில் ஆகாயத்தில் தோன்றியதாம். அதன் நிழல் விழுந்த இடத்தில் கோயிலின் பலிக்கல்லைப் பதித்தார்களாம். அதனால்த்தலத்தில் பலிக்கல்லும் மூலஸ்தானத்திற்கு நிகரானதாக கருதப்படுகிறது.


மூடியேயுள்ள மேற்கு வாயில்


கண்டேன் சீதையை 

ண்டனன் கற்பினுக் கணியையைக் கண்களால்
தென்திரை அலைகடல் இலங்கைத் தென்னவ
அண்டர் நாயக இனிதுறத்தி ஐயமும்
கொண்டுள்ள துயரும் என்றனுமன் பண்ணுவான்.

பல ஆண்டு காலம் அந்தப் பலிக்கல் சுழன்றுகொண்டே இருந்ததாம். அதன் காரணம் யாருக்குமே தெரியவில்லை. ஒருசமயம் நாரணத்து பிராந்தன்என்ற துறவி அந்தக் கோயிலுக்கு வந்தார். இந்தப் பலிக்கல் சுழல்வதைப் பார்த்துவிட்டு, கோயில் பூசாரியை அழைத்துவரச் செய்து, அந்தக்கல் மீது ஒரு ஆணியை அடிக்கச் சொன்னாராம். ஆணி அடித்தபோது சில மந்திரங்களை உச்சாடனம் செய்தாராம். ஆணி அடித்ததும் பலிக்கல் சுழல்வதை நிறுத்திவிட்டதாம். இன்றும் அந்தப் பலிக்கல்லும், அதில் ஆணி அறைந்திருப்பதையும் காணலாம்.

இவ்வாறு இராமபிரான், திருபிரயார் திருத்தலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். கோயிலுக்கு முன்னால் ஓடும் ஆறும், கரையில் செழித்தோங்கியுள்ள தென்னை மரங்களும், அவ்விடத்தை வளமும் வனப்பும் கொழிக்கும் சிருங்கார நந்தவனமாகவும், அழகும் அமைதியும் தவழும் திருத்தலமாகவும் மிளிரச் செய்கின்றன.



                                             விளக்கு மாடம்

இத்தலத்தில் இராமரோடு அவருக்கு வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் எழுந்தருளி இருக்கின்றனர் அதற்கான காரணம். பலிக்கல் சுழல்வதை நிறுத்திய நாராணத்து பிராந்தன்தான் ஆலயத்தில் உள்ள துர்ச்சக்திகளின் உக்கிரத்தைக் குறைக்க மூலவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்தாராம் என்பது ஒரு ஐதீகம். எனவே அதிசயமாக சீதாதேவி இவ்வாலயத்தில் இடம் பெறவில்லை.

இந்தக் கோயிலின் மேற்கு வாசல் எப்போதும் மூடியே இருக்கின்றது. அது இன்னொரு காரணம்? கேரளத்தில் புகழ் பெற்ற வில்வ மங்கலம் சுவாமிகள் ஒருசமயம் இங்கே வந்தாராம். அவர் ராமர் சந்நதி முன் நின்றபோது, மேற்கு வாசல் வழியாக ஸ்ரீதேவியும், பூதேவியும் சுவாமியைப் பூஜிப்பதற்கு வருவதைக் கண்டாராம். அவர்கள் இருவரும் இங்கே இருப்பதுதான் முறை என்று நினைத்த வில்வ மங்கல சுவாமிகள் சட்டென்று, அவர்கள் திரும்பிப் போக முடியாதபடி மேற்கு வாசலை மூடித் தாளிட்டு விட்டாராம். போகும் முன் ஸ்ரீதேவியையும், பூதேவியையும் ராமருக்கு இருபுறமும் பிரதிஷ்டை செய்துவிட்டுப் போய்விட்டாராம். அவர்கள் இருவரும் மீண்டும் வெளியே போகாமலிருப்பதற்காக மேற்கு வாசல் இன்றும் மூடியே இருக்கின்றதாம் என்பது இன்னொரு ஐதீகம்.


ஸ்ரீஇராமர் - திருப்பிரயார் தேவர்

இந்த திருப்பிரயார் ராமரை ‘‘திருப்பிரயார் தேவர்’’ என்றே அழைக்கின்றார்கள். இவருக்கு நிறைய சொத்துகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவை கிடைத்ததே ஒரு அதிசயமான சம்பவத்தினால்தானாம். ஒருசமயம் திருப்பிரயார் கோயிலுக்கு திப்புசுல்தான் விஜயம் செய்தாராம். அப்போது அவரிடம் சிலர், ‘‘இந்த சுவாமி மகா சக்தி வாய்ந்தவர்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘‘என்ன சுவாமி, வெறும் கற்சிலைதானே?’’ என்று எண்ணிய திப்பு, கையிலிருந்த கழியால், பெருமானுடைய ஒரு கையில் லேசாக ஒரு தட்டு தட்டினாராம். தட்டின இடத்தில் உடனே ரத்தம் கொப்பளித்துப் பெருகியதாம். திடுக்கிட்டுப் போய் உடனே தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்ட திப்பு, பிராயச்சித்த அபராதமாக, ஏராளமான நிலபுலன்களை கோயிலுக்கு மான்யமாக அளித்தாராம்.

இத்தலத்தில் ஆஞ்சநேயருக்குத் தனிச்சந்நதி கிடையாது. கண்டேன் சீதையை’ (திருஷ்ட சீத) என்று ஆஞ்சநேயர், இராமபிரானிடம் வந்து ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும் கூறிய தலமாக இது கருதப்படுகிறது. இவையெல்லாம் இத்தலத்துடன் கூடிய சில ஐதீகங்கள்.


முன் மண்டபம் 

நுணுக்கமான மரவேலைப்பாடுடன் கூடிய முகப்பு


ஸ்ரீராமர்  


     ஆஞ்சனேயர்  
                           
வாருங்கள் ஸ்ரீராமரை சேவிக்கலாம். நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே சென்றவுடன் அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது. மேற்கு ஆலய கோபுரம் கேரளப்பாணியில் எளிமையாக அமைந்துள்ளது அருமையான இராமபட்டாபிஷேகம் மற்றும் கடற்கரை ஓரத்தில் இலங்கைக்கு பாலம் கட்ட வானரங்களுடன் இராமபிரான் ஆலோசனை செய்யும்  ஓவியங்கள் கோபுர சுவற்றில் கேரள பாணியில் அருமையாக வரைந்துள்ளனர்.  அவற்றை இரசித்துக் கொண்டே ஆலயத்தை வலத்தை துவக்குகின்றோம்.
கோபுர வாயிலை கடந்தவுடன் மூடியுள்ள மேற்கு வாயிலையும் அதற்கு மேலே அனுமன் இராமனிடன் சீதா தேவியிடம் பெற்று வந்த சூடாமணியை அளிக்கும் ஓவியத்தையும் கண்டு களிக்கலாம். சுற்றம்பலம் எனப்படும்  இக்கோயிலின் வெளிப்பிராகாரம் மிகப்பெரியதாக இருக்கிறது. வடக்குப் பிராகாரத்தில் பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. கோசாலா   கிருஷ்ணருக்கும் தனி சந்நிதி உள்ளது. பல பக்தர்கள் அங்கு அமர்ந்து பஜனை செய்கின்றனர்.

                                                                            பள்ளியோடம்

வடகிழக்கு மூலையில் பள்ளியோடம் இருப்பதை காண்கிறோம். பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ள அப்பள்ளியோடத்தின் ஒரு புறம் வாலில் மணி தொங்க, மண்டியிட்டு அமர்ந்த கோலத்தில்  கைகளை கூப்பி அமர்ந்த கோலத்தில் அனுமனை தரிசிக்கின்றோம். இப்பள்ளியோடத்தில் மீன மாதம்(பங்குனி)  இராமசந்திர மூர்த்தி தீவ்ரா நதியை கடந்து ஆராட்டுபுழா தர்மசாஸ்தா ஆலயத்திற்கு பூரம் உற்சவம் காண எழுந்தருள்கின்றார்.

இவ்வாலயம் கொச்சி தேவஸம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கொச்சி அரசர்கள் தங்களை சூரிய குலத்தோன்றல்களாக கருதுகின்றனர். இராமபிரானும் சூரிய குலத்தவர் தானே. எனவே கொச்சி மகாராஜா தான் கட்டிய ஆராட்டுப்புழா தர்மசாஸ்தா ஆலயத்தின் பூரத்திருவிழாவிற்கு இராமரை எழுந்தருள செய்வித்தார். அது இன்று வரை தொடர்கின்றது.

இராமன் தாரக பிரம்மம்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித்தீருமே
இம்மையே இராம என்னும் இரண்டெழுத்தினால்  - என்றபடி தனது நாமத்தை உச்சரித்தாலே இந்த சம்சாரக்கடலை கடத்த வைக்கின்ற இராமன் இப்பள்ளியோடத்தில் தீவ்ரா நதியைக் கடக்கின்ற போது அவருடன் கடப்பவர்களுக்கு மறு ஜென்மம் இல்லை என்பது ஐதீகம்.


தீவ்ரா (திருப்பிரயார்) ஆறு






கர்ப்பகிரகத்திற்கு எதிரே  கிழக்குப் பக்கம் திருப்பிரயாறு ஓடுகின்றது பார்க்க பார்க்க அருமையான காட்சி. ஆற்றின் மறு கரையில் தென்னை மரங்கள் காற்றில் அசைந்தாட, தென்னங்குலைகள் ஏராளமாக காய்த்துத் தொங்க  நுப்பும் நுரையுமாக தீவ்ரா என்றும் அழைக்கப்படும் திருப்பிரயாறு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதே ஒரு பரவசம். ஆற்றுக்கு சென்று நீராட கோவிலிலிருந்து படிகள் அமைத்துள்ளனர். இவ்வாற்றில் உள்ள மீன்களுக்கு உணவிடுவது சிறப்பாக மீனூட்டுஎன்றழைக்கப்படுகின்றது.


தென்பிராகாரத்தில் வெடிசாலை இருக்கிறது. இத்திருக்கோயிலில் வெடி வழிபாடு மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இங்கே காணிக்கை செலுத்தினால், வெடியை நம் கண் முன்னேயே வெடிக்கிறார்கள். ஒற்றை வெடியிலிருந்து ஆயிரம் வெடி வரையில், ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப பிரார்த்தனை செய்துகொண்டு, பணம் செலுத்தி வெடி வழிபாடு நடத்துகிறார்கள். வெடி வழிபாடு இங்கு முக்கியத்துவம் பெறக் காரணம் அனுமன்தான். ராமபிரானின் கட்டளைப்படி, சீதாதேவியைச் தேடிச்சென்ற அனுமன், இலங்கையில் ராவணனிடம் சிறை பட்டிருக்கும் நிலையைக் கண்டு வந்து தன் தலைவனிடம் கண்டேன் சீதையை என்ற இன்பச் செய்தியை அதிர்வேட்டுப் போட்டார் போல சொல்லி மகிழ்ச்சியை ஏற்படுத்தினாராம். அதன் பொருட்டே, அந்த மகிழ்ச்சியைத் தாமும் பெற வேண்டும் என்பதற்காகவே பக்தர்களும் அதிர்வேட்டுப் போட்டு அறிவிப்பதாக ஐதீகம். கருவுற்ற பெண்மணிகளின் சுகப்பிரசவத்திற்கும் இந்த வெடி வழிபாடு சிறந்ததாகக் கருதப்படுகிறது. இத்தெற்கு பிரகாரத்தில் ஐயப்பன் சன்னதி அமைந்துள்ளது. அழகே உருவாக சாஸ்தா பால உருவில் கையில் பால் கிண்ணத்துடன் அருள் பாலிக்கின்றார். 

                                        ஸ்ரீகோவில் விமானம்    

வெளிச்சுற்றை முடித்து விட்டு ஸ்ரீகோவிலின் உள்ளே செல்லும் போது பன்னிரெண்டு பிரமாண்டமான தூண்களைக் கொண்ட மண்டபத்தை கடக்கின்றோம். இம்மண்டபத்தில் இம்மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன, உயரமான நில விளக்கு ,துலாபாராம் ஆகியவை இம்மண்டபத்தில்  உள்ளன. விளக்கில் கருடன் இல்லை ஆனால்  அனுமன் அருள் பாலிக்கின்றார், அவரும் கதகளியில் எப்படி இங்கு வேடமணிவார்களோ அது போல அமைத்துள்ளது ஒரு சிறப்பு. ஸ்ரீகோவிலின் உள்ளே நுழையும் வாயிலில் நுணுக்கமான மரவேலைப்பாடுகளுடன் கூடிய முகப்பு, வலப்பக்கம் அனுமனையும், இடப்பக்கம்  தாமரை மாலையுடன் இராம பிரானையும் கதகளி கோலத்தில் எழிலாக அமைத்துள்ளனர்.

இக்கோவிலின் நமஸ்கார மண்டபத்தில்  இன்றும் ஹனுமன் அரூபமாக  எழுந்தருளியுள்ளதாக ஐதீகம். அன்று பிராட்டியை தேடச்சென்ற மாருதி திரும்பி வந்த அன்னையைக் காணாதச் சோகத்தில் இருந்த இராமபிரானிடம் திருஷ்ட சீத (கண்டேன் சீதையை)” ன்று கூறினாராம். சிரஞ்சீவியாக இன்றும் இம்மண்டபத்தில் இருந்து கண்டேன் சீதையை என்று கூறிக் கொண்டிருக்கிறாராம். எனவே இவ்வாலயத்தில் ஹனுமனுக்கு தனி சன்னதிக் கிடையாது.  மண்டபத்தில் இராமயணத்துடன் தொடர்புடைய நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய 24 மரச்சிற்பங்கள் கொள்ளை அழகு. தினமும் மாலை வேளைகளில் ராமதூதனுக்கு அவல் நைவேத்தியம் படைக்கிறார்கள்.

வட்ட வடிவ (ஸ்ரீகோவில்) கருவறையைச் சுற்றிலும் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. செப்பு தகடால் வேயப்பட்ட கூம்பு வடிவ  விமானம், அபிஷேக தீர்த்தம் வரும் கல்குழாயைப் பூதகணம் ஒன்று தலையில் தாங்கியிருப்பது போன்ற அமைப்பு அபூர்வமானது, அழகானது. இவ்வாலயம் அற்புதமான ஓவியங்கள், நுணுக்கமான வேலைப்பாடுடைய மரச்சிற்பங்கள் என்று ஒரு கலைக்கூடமாக விளங்குகின்றது.

மூலவர் இராமபிரான் திரிப்பிரயாரப்பன் என்றும் திரிப்பிரயார் தேவர் என்றும் அழைக்கப்படுகின்றார். சதுர்புஜ விஷ்ணு திருக்கோலத்தில் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கோதண்டம், அக்ஷமாலையுடன் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார் இராமபிரான். திருமார்பில் ஸ்ரீவஸ்தமும் கௌஸ்துபமும் அலங்கரிக்கின்றன. கரன் என்ற அரக்கனை வென்ற கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றாராம். திருக்கரத்தில் வில் உள்ளதாலும், கருடன் இல்லாததாலும் இராமபிரானாக வழிபடுகின்றனர். திருக்கரங்களில் அக்ஷமாலை இருப்பதால் பிரம்மாவின் அம்சமாகவும், மேலும் தெற்கு நோக்கி லிங்க ரூபத்தில் தக்ஷிணாமூர்த்தியும் எழுந்தருளியிருப்பதால் இவர் மும்மூர்த்தி ரூபராகவும் வணங்கப்படுகிறார். மூலவர் ராமர் மிக அழகாக இருக்கிறார். அந்த அருள் சிந்தும் கமல இதழில் பரவும் புன்னகை பரவசப்படுத்துகிறது. கழுத்திலே கௌஸ்துமும் தரித்திருக்கிறார். மார்பிலே வத்ஸம் இலங்குகிறது. கோதண்டமும், குளிர் முகமும், கருணைக் கண்களும் சங்கும், சக்கரமுமாகப் பொன்னொளி வீசி நிற்கும் பெருமானைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.

இன்று மூலவிக்ரகத்தை பொன் தகட்டால் மூடியிருக்கிறார்கள். ஏனென்றால் அதன் உள்ளே உள்ள கல்லாலான சிலை வெகு பழமையானதாகையால் அதை எடுத்துவிட்டு, புதிதாக ஒன்றைச் செய்து வைக்க ஒருசமயம் விரும்பினார்கள் ஆலயத்தார். பிரசன்னம் பார்த்தபோது, ‘‘என்னைத் தொடாதே!’’ என்று பதில் வந்ததாம். எனவே சிலை பழுதுபட்டு விடாமல் காக்க பஞ்ச லோகத்தால் ஒரு கவச உறை செய்து அதை மூலவர் மீது பதித்திருக்கிறார்கள். மூலவரைப் பார்த்தால் கற்சிலை போலவே தோன்றாது. பஞ்ச லோக விக்ரகம் போலத்தான் இருக்கும்.

நில விளக்கில் அனுமன்

விருச்சிக மாத (கார்த்திகை) சுக்லபக்ஷ ஏகாதசி மற்றும் மீன மாத(பங்குனி) பூரம் மற்றும் கன்னி மாத திருவோண  இராமர் சிற எனப்படும் சேதுபந்தனம் ஆகியவை இவ்வாலயத்தின் முக்கிய உற்சவங்கள் ஆகும். இங்கு உற்சவங்கள் தொடங்குவதற்கு முன் ஆலயத்தில் கொடியேற்றுவதில்லை. ஆறாட்டு விசேஷம் மட்டும் ஒருவாரம் நடைபெறுகிறது. ஏழு நாட்கள் ராமபிரான் கோயிலை விட்டுப் புறப்பட்டு ஊர்வலம் வந்து திரும்புகிறார். கார்த்திகை ஏகாதசிக்கு இருவாரங்களுக்கு முன்பிருந்தே தினமும் ஆலயம் பூராவும் நிறைய மலர் மாலைகளால் அலங்கரிக்கிறார்கள். அதற்கு நிறை மாலைஎன்று பெயர். அச்சமயத்தில் லட்ச தீபமும் ஏற்றப்படுகின்றது. ஏகாதசிக்கு ஒருவாரம் முன்பிருந்தே, சங்கீதக் கச்சேரிகளும், கதா காலேட்சபங்களும், கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகளும் கலையரங்குகளில் குதூகலமாக நடைபெறுகின்றது, ஏதாதசியன்று விடியற்காலை ராமபிரானை தரிசிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகிறார்கள்.

அன்று காலை, நண்பகல், இரவு காலங்களில் பதினொன்றுக்கும் குறையாத யானைகள் அலங்கரிக்கப்பட்டு, அவற்றில் பெரிய யானையின் மீது சுவாமி எழுந்தருளி, பல்வகையான இன்னிசை வாத்தியங்களுடன் ஆலயத்தைச் சுற்றி பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஓணம் பண்டிகையின் போது  ஆற்றில் படகு போட்டிகளும் நடைபெறுகின்றது.


நில விளக்கின் கூர்ம பீடம்

திருபிரயாரிலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள அவணங்காட்டு சாத்தனுக்கும், இராமர் கோயிலுக்கும் பிரிக்க முடியாத பந்தங்கள் இருக்கின்றன. இந்த சாத்தனை இங்கே ராமனின் திருமகனாகவே பக்தர்கள் கருதுகிறார்கள். சாத்தனின் உபத்திரவங்களால் தீர்க்கப் பெற்றவர்கள் ராமபிரானைச் சரணடைந்து, வழிபட்டு, தக்க காணிக்கை செலுத்தி நிவர்த்தி பெறுகிறார்கள். திருப்பிரயார் கோயிலில் உச்சிகால பூஜை முடிந்த பிறகே, அவணங்காட்டில் சாத்தனுக்கு பூஜை நடைபெறுகிறது. அப்போது தெய்வ அருள் வந்து பூசாரி பக்தர்களுக்கு நல்வாக்குக் கூறுவதும், நடைபெற்று வருகின்றன. வாக்கு கேட்க பல பக்தர்கள் வருகிறார்கள்.

இந்த ராமர் கோயிலில் ஒரு காலத்தில் தமிழ் பிரபந்தங்கள் பாடப்பெற்றனவாம். பிரபந்தம் பாடுவதும் அபிநயிப்பதும் இங்கே இருந்திருக்கிறது. அதை இங்கே கூத்துஎன்கிறார்கள். ஆரம்பத்தில் பிரபந்தக் கூத்து என்றே அதை அழைத்தார்கள். பிரபந்தக் கூத்திலே பாட்டு, அபிநயம் இரண்டும் சேர்ந்திருக்கும். ஆனால், பிற்காலத்தில் பாட்டு நின்றுவிட்டது, கூத்து மட்டும் தொடர்கிறது. கூத்து முடியும்வரை, எதிரே உள்ள கருவறையின் கதவுகளைத் திறந்தே வைத்திருப்பார்களாம்.

இந்த ஆடி மாதத்தில் நாலம்பல தரிசனத்தில் முதலில் திருப்பிரயார் இராமரை சேவித்தோம். வாருங்கள் அடுத்து இரிஞாலக்குடாவில் பரதனை சேவிக்கலாம்.

மற்ற அம்பலங்களின்  தரிசனம்:     இரிஞாலக்குடா, திருமூழிக்களம்

2 comments:

Anuprem said...

ஓம் நமோ நாராயணா...

அருமையான தகவல்களுடன் இறை தரிசனம்...

S.Muruganandam said...

ஓம் நமோ நாராயணா...