நாலம்பங்களின் தரிசனம்:
இராமாயண சகோதரர்களுக்கான ஆலயங்கள் எங்கு
அமைந்துள்ளன, அவை யாவை. அங்கு செல்லும் பாக்கியம் எப்படி கிட்டியது. மேலும் எந்தெந்த
ஆலயங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது என்ற தகவல்களை இப்பதிவில் காணலாம்.
பாரத நாட்டில் இரண்டு மாநிலங்களில் இராமாயண
சகோதரர்களான இராமர், பரதன், இலக்குவம் மற்றும்
சத்ருக்னன் ஆகிய நால்வருக்கும் ஆலயங்கள் அமைந்துள்ளன. முதலாவது கேரளத்தில் திருச்சூர் கொச்சி இடைப்பட்ட
பிரதேசத்திலும், இரண்டாவது உத்தராகண்ட மாநிலத்திலும்
உள்ளன. உத்தரகாண்ட மாநிலத்தில் தேவப் பிரயாகையில் இராமபிரானுக்கும், லட்சுமண ஜுலாவில் இலக்குவனுக்கும், ரிஷி கேசத்தில் பரதன், மற்றும் சத்ருக்னனுக்கும்
ஆலயங்கள் உள்ளன.
கனக மழை - காலடி
கேரளாவில் நான்கு சகோதரர்களுக்கான
ஆலயங்கள் குருவாயூரிலிருந்து தெற்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் (NH-17) அருகே அமைந்துள்ளன. இவ்வாறு நான்கு கோவில்கள் கேரளத்தில் உள்ளதற்கான ஐதீகம். விஷ்ணு பக்தரான வக்கேகைமால்
என்பவர் கூடல் மாணிக்கம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்தார். இவரது கனவில் வந்த
பெருமாள் கடற்கரையில் ஒரு புதையல் உள்ளது என்று கூறி அழைத்து சென்றார். அவர் காட்டிய இடத்தில் நான்கு அற்புத சிலைகள் ஒன்று போலவே இருந்தது. துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர்
பூமிக்கு வந்த போது பூஜித்த மூர்த்தங்களான அச்சிலைகள் தசரத புத்திரர்களின் சிலைகள்
ஆகும். அவர்களை அவர்
திருப்பரையார், இரிஞ்ஞாலக்குடா, திருமொழிக்களம், பாயம்மால் ஆகிய நான்கு
தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.
அவை “நாலம்பலம்”
என்றழைக்கப்படுகின்றன.


கண்டேன் சீதையை
திருச்சூர் திருப்பிரயாரில் இராமர் ஆலயம் – எர்ணாகுளம் குருவாயூர் தேசிய நெடுஞ்சாலையில் குருவாயூரில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இரிஞாலக்குடா பரதன் ஆலயம்
|
இரிஞ்ஞாலக்குடாவில்
பரதர் ஆலயம் - திருச்சூர் கொடுங்கல்லூர் சாலையில்
திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ உள்ளது.
திருமூழிக்களத்தில்
லக்ஷ்மணன் ஆலயம் ஆலுவாய்க்கும் மாளுக்கும் இடையில் உள்ளது. இத்தலம் ஒரு திவ்யதேசம் ஆகும்.
பாயம்மாலில் சத்ருகனர்
ஆலயம் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து 8 கி.மீ தூரத்தில்
உள்ளது.
பாயம்மல் சத்ருக்னன் அம்பலம்
நான்கு சகோதர்களும் நான்கு வேத ரூபமாக அருள் பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். இம்மாதத்தில் இந்நான்கு கோவில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதை “நாலம்பலம் தொழல்” என்கின்றனர் இவர்கள். திரிப்பிரயாற்றில் நிர்மால்ய தரிசனத்தையும், இரிஞாலக்குடாவில் உஷத் கால பூஜையையும், திருமூழிக்களத்தில் உச்சிக்கால பூஜையையும், பாயம்மல்லில் அத்தாழ பூஜையையும் சேவிக்க வைகுண்டப்பேறு பெறுவர் என்பது ஐதீகம். எனவே பல பக்தர்கள் ஆடி மாதத்தில் ஒரே நாளில் நடந்தே சென்று இந்நான்கு ஆலயங்களிலும் தரிசனம் செய்கின்றனர். இத்தலங்களில் உள்ள பெருமாள்களை வழிபட எதிரிகளால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
அடியேன் முதலில் மலை நாட்டு
திவ்ய தேச யாத்திரை சென்ற போது திருமூழிக்களத்தில் இலக்குவனை சேவிக்கும் பாக்கியம்
கிட்டியது அப்போது இவ்வாறு இராம சகோதரர்கள் நால்வருக்குமான ஆலயங்கள் கேரளத்தில்
அமைந்துள்ளன என்ற தகவல் தெரிய வந்தது. அப்போதே அவன் அருளால் நான்கு தலங்களையும்
சேவிக்க வேண்டும் என்ற அவா உண்டானது. இன்னொரு சமயம் சோட்டாணிக்கரை செல்லும் போது
திருப்பிரயாரில் இராமபிரானை மட்டும் தரிசிக்கும் பாக்கியம்
கிட்டியது. எப்போதாவது
நாலம்பலத்தையும் ஒரே தடவையில் தரிசிக்கும்
பாக்கியம் கிட்ட வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டிக்கொண்டிருந்தேன். அவர்ருளால் அவ்வாய்ப்பு கிட்டியது.
ஒரு சமயம் அடியேனது நண்பர்
திரு.சுந்தர் அவர்கள் திருச்சூரில் உள்ள ஒரு நண்பரின் இல்லத்திற்கு சென்று மூன்று
நாட்கள் தங்கிவிட்டு வந்தேன். அருகில் உள்ள பல ஆலயங்களை தரிசித்தோம். பிப்ரவரி
மாதம் அவர்கள் இல்லத்தின் அருகில் உள்ள அம்மன் ஆலயத்தில் பூரம் உற்சவம் சிறப்பாக
நடக்கும் அதற்கும் வரச்சொல்லி என்னை
அழைத்தார்கள் என்றார். அப்போது அடியேனையும் உடன்
அழைத்துச் செல்ல முடியுமா? முடிந்தால் நாலம்பலத்தையும் தரிசிக்கலாம் என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். அவரும் அவர்களிடம் கலந்து பேசி, செல்லலாம்
என்றார். ஒரு நான்கு நாட்கள் யாத்திரையாக திட்டமிட்டு தொடர்வண்டியில்
முன்பதிவு செய்தோம்.
ஆயிரங்கண்ணி பூரத்தில் காவடிகள்
இந்த யாத்திரையின் போது திருச்சூர், திருப்பிரயார், குருவாயூர், இரிஞ்ஞாலக்குடா, பாயம்மல், கொடுங்கல்லூர், திருஅஞ்சைக்களம், காலடி, திருமூழிக்களம், திருச்சூரில் திருவம்பாடி கிருஷ்ணர் மற்றும் பரமக்காவு பகவதி ஆலயங்கள் மற்றும் பொக்களாங்கரை என்ற ஊரின் உள்ள அம்மன் ஆலயத்தின் பூரம் உற்சவம் மற்றும் ஆயிரங்கண்ணி அம்மன் ஆலயத்தின் பூரம் உற்சவம் ஆகியவற்றை சேவித்தோம். வாருங்கள் அன்பர்களே ஒவ்வொரு ஆலயமாக தரிசிப்போம்.
No comments:
Post a Comment