Showing posts with label பாயம்மல். Show all posts
Showing posts with label பாயம்மல். Show all posts

Wednesday, August 8, 2018

நாலம்பல யாத்திரை - 6

பாயம்மல் சத்ருக்னன் ஆலயம்


 மற்ற அம்பலங்களின்  தரிசனம்:  




கேரளாவின் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில் நாம் நிறைவாக தரிசிக்கப் போகின்ற கோவில் பாயம்மல் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சத்துருக்னன் கோவில் ஆகும். இந்த ஆலயத்தில் உள்ள பெருமாளை வழிபடுபவர்களுக்கு எதிரிகளால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 

சத்துருக்கனன் கோவில் அமைந்திருக்கும் பாயம்மல்பரதன் கோவில் அமைந்திருக்கும் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த திருத்தலத்திற்குச் செல்ல இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.



ஓம் சத்ருக்னாய நம: 


பாயம்மலில் அமைந்திருக்கும் சத்துருக்னன் கோவில், திருப்பிரையார் இராமர், இரிஞ்ஞாலக்குடா பரதன், திருமூழிக்களம் இலட்சுமணர் கோவில்களைப் போல் பிரம்மாண்ட கோவில் இல்லை. சிறிய அளவிலான ஆலயமாக இருந்தாலும், மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதைப் போல, இத்தல இறைவனின் சக்தியும் பெருமைக்குரியதுதான்.


 அழகான மண்டபத்தில் தங்கக் கவசம் பூண்ட பலி பீடம் 

அடியோங்கள் சென்ற போது இவ்வாலயம் புதிப்பிக்கப்பட்டு சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கும் போல தோன்றியது. ஆலய மதில் சுவர் மற்றும் கதவுகளில் பிரசாத கட்டிடத்தில் சக்கரத்தாழ்வார் வரவேற்றார். பலி பீடம் மற்றும் நுழை வாயில் புதிதாக வேயப்பட்ட பொன் தகடுகளால் மின்னிக் கொண்டிருந்தது. பலி பீடம் ஒரு  அழகான கலை நுணுக்கம் கொண்ட தூண்களுடன் கூடிய மண்டபத்தில் அமைந்துள்ளது. ஆலயம் முழுவதும் புதிதாக பூசப்பட்ட வர்ணக்கலவையினால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. எங்கெங்கு காணினும் “ஓம் சத்ருக்னாய நம:” என்னும் மந்திரம் கண்ணில் பட்டது. ஆலயத்திற்கு எதிரே பிரம்மாண்டமான அரசமரம்.


பாயம்மல் ஆலயத்தின் முன்புறத் தோற்றம் 

இவ்வாலயத்தின் கருவறை  சிறியதாக   செவ்வக வடிவிலும், மேற்கூரை பிரமிடு வடிவத்திலும் அமைந்துள்ளது. ஆலய கருவறையில் நின்றிருக்கும் சத்துருக்ன பெருமாள்  சதுர் புஜ விஷ்ணுவாக நான்கு திருக்கரங்களுடன், வலதுபுறம் மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் தாமரை மலர், இடதுபுறம் மேற்கரத்தில் சங்கு, கீழ் கரத்தில் கதை ஆகியவைகளைக் கொண்டு, நின்ற நிலையில் சேவை சாதிக்கின்றார். இந்தக் கோவில் வளாகத்தில் கணபதிஅனுமன் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலயத்திற்குள் பின் புறம் ஒரு தீர்த்தம் உள்ளது.




ஸ்ரீமஹாவிஷ்ணு, பூலோகத்தில் இராமனாகப் பிறப்பெடுத்த போது, வைகுண்டத்தில் அவரைத் தாங்கும் ஆதிசேஷனே, இலட்சுமணனாகப் பிறந்து, எப்போதும் அவருக்குத் துணையாக இருந்து அவரைக் காத்தார். விஷ்ணுவின் திருக்கரங்களில் விளங்கும் சங்கு பரதனாகவும், சக்கரம் சத்துருக்கனனாகவும் பிறந்து அவருக்கு சேவை செய்தனர். லக்ஷ்மணன்,  சத்ருகனன் இருவரும்    இரட்டையர்   தசரதரின்            மூன்றாவது    மனைவி               சுமித்ரைக்கு  பிறந்தவர்கள்.



ராமனை உடனிருந்து பார்த்துக் கொண்ட லட்சுமணனை விட, பரதனே உயர்ந்தவன். பரதன் ஆசையே இல்லாதவன், அண்ணன் காடு சென்றதும், அவனுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்திருக்கலாம், அரசனாகி இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், அண்ணனின் காலணியைப் பெற்று வந்து, அதையே அரியாசனத்தில் வைத்து நாட்டை ஆண்டவன் அவன். பக்தனைப் பாகவதன் என்பர். பகவானை விடப் பாகவதனே உயர்ந்தவன் என்பதை உணர்த்தியவன் பரதன்.

பகவான் ராமனுக்குப் பாகவதனானப் பரதன் சேவை செய்தான் என்றால், அந்தப் பாகவதனுக்குச் சேவை செய்தவன் சத்துருக்னன். பரதன், ராமன் மேல் கொண்ட பக்தியை வழிமொழிந்து வாழ்ந்தவன் சத்துருக்னன் என்றால் அது மிகையல்ல. காட்டுக்குச் சென்ற  இராமன், பதினான்கு ஆண்டுகள் கடந்தும் அயோத்திக்கு வராததால், மனமுடைந்த பரதன் நெருப்பில் விழுந்து உயிர் விடத் துணிந்தான். நெருப்புக் குண்டத்தில் குதிக்க தயாரான நிலையில், சத்துருக்கனனைப் பார்த்து, ‘நீயே இனி இந்த நாட்டை ஆள வேண்டும்என்றான் பரதன். ஆனால் மண்ணின் மீது ஆசையில்லாத சத்துருக்னன் பேசாமல் இருந்து அமைதி காத்தான். அவன் அதிகம் பேசியதில்லை. ஆனாலும் கூட தான் கொண்ட இராம பக்தியை அமைதியாக இருந்த உயர்வாக்கிக் காட்டியவன் என்கிறது இராமாயண இதிகாசம்.


தீர்த்தக்குளம்

ராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின் லவணாசுரனை வென்றவர் சத்ருகனன் ஆவார். மது  என்ற அரக்கன்        சிவனைக்  குறித்து  தவம் செய்து ஒரு சூலம்   பெற்றான்.  உனக்கும்,  உன் மகன் இலவணனுக்கும் எதிரிகளை  ஒழிக்க இது உதவும்  என்று கொடுத்தார். லவணனின்  காலத்திற்குப்  பிறகு சூலம் என்னிடம் வந்துவிடும்  என்று  சிவபெருமான்   கூறி விட்டு, மறைந்து விட்டார்  மது நல்லவனாயிருந்தான்.  மகன் நேர் எதிர். துஷ்டனான லவணனை  அழிக்க  ராமர் சத்ருக்னனிடம்  சொல்கிறார். அண்ணலின் ஆணை கேட்டு அதை  நிறைவேற்றத்  தயாராக, கோப வடிவத்தில் இத்தலத்தில்  நிற்கிறார் சத்ருக்னர் என்பது ஐதீகம்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த சத்துருக்னனுக்கு, கேரளாவின் பாயம்மலில் தனியாகக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே கருதப்படுகிறது.

பாயம்மலில் இருக்கும் சத்துருக்கனன் கோவில் அதிகாலை 4.30 மணி முதல்  10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தினமும் உஷா பூஜை, உச்சி கால பூஜை, அத்தாழ பூஜை என்னும் மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

                                            எங்கெங்கு காணிணும் சுதர்சன சக்கரம்


சத்ருக்னன் என்றால் சத்ருக்களை (எதிரிகளை) வெல்பவன் என்று பொருள். பொதுவாக, இவரை வழிபடுபவர்களுக்கு எதிரிகளால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்கின்றனர்.

சத்துருக்கனன் விஷ்ணுவின் கையிலிருக்கும் சக்கரத்தின் தோற்றம் என்பதால், இக்கோவிலில் இவரைச் சுதர்சன மூர்த்தியாகவே வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு சுதர்சன மலரஞ்சலி, சக்கர சமர்ப்பணம் ஆகியவை முக்கியமான வழிபாடுகளாக இருக்கின்றன. மனிதனின் பல்வேறு பாதிப்புகளுக்குக் காரணமாக இருக்கும் கடன், நோய், எதிரி ஆகியவைகளால் துன்பமடைபவர்கள் இவ்வழிபாடுகளில் கலந்து கொண்டால், அனைத்துத் தொல்லைகளும் நீங்கி மன அமைதியோடு நல்ல பலனையும் பெற முடியும்.  நமஸ்கார மண்டபத்தில் சுதர்சன சக்கர யந்திரங்கள் உள்ளன, விரும்புபவர்கள் அதை பெருமாளின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்து பெற்றுக் கொண்டு சென்று தங்கள் இல்லங்களில் வைத்து வழிபடுகின்றனர். 

இந்தத் திருத்தலத்தில் கும்பம் மாதத்தில் (மாசி மாதம்) பூசம் நட்சத்திர நாளில் தொடங்கி ஐந்து நாட்கள் விழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இந்நாட்களில் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கேரளாவில் ஆடி மாதம் முழுவதையும் இராமாயண மாதம் என்று சொல்கின்றனர். இந்த மாதம் முழுவதும் நாள்தோறும் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இம்மாதத்தில் ஆலயத்துக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். 

கேரளாவின் பாயம்மல் தவிர, உத்ரகாண்ட்  மாநிலம் ரிஷிகேஷிலும் சத்துருக்கனனுக்கு ஒரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் இராம் ஜூலா எனும் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோவில் ஆதி பத்ர நாராயணன் கோவில் என்றும் ஸ்ரீ சத்துருக்னன் கோவில்என்றும் அழைக்கப்படுகிறது.


திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்கின்றது புராணங்கள். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வார் என்று வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். விஷ்ணு கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு என்று தனிச் சன்னிதி அமைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும்.

பெரியாழ்வாரும் தமது திருப்பல்லாண்டில்

பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின் சேவடி செவ்வி திருகாப்பு

அடியோமொடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
 வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு. . . - என்று  சக்கரத்தாழ்வாரையும் மங்களாசாசனம் செய்துள்ளார்.




சக்கரத்தாழ்வாரைத் தினமும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால், கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் கூட அழிந்து போவர். மனதில் தோன்றும் பயம் அனைத்தும் இல்லாமல் போகும். தீர்க்க முடியாத நோய்களும் குணமாகும். திருமணத்தடைகள் நீங்கும், வறுமை ஒழிந்து செல்வம் குவியும். சமயம் கிட்டும் போது கேரளா சென்று இராம சகோதரர்கள் நால்வரையும் சேவித்துவிட்டு வாருங்கள். இனி வரும் பதிவுகளில் இந்த யாத்திரையின் போது தரிசித்த மற்ற சில ஆலயங்களைப்பற்றியும் இரு அம்மன் ஆலயங்களின் பூர உற்சவத்தைப் பற்றியும் காணலாம் அன்பர்களே

Thursday, July 19, 2018

நாலம்பல யாத்திரை - 2


நாலம்பங்களின்  தரிசனம்:  





இராம பட்டாபிஷேக ஓவியம் - திருப்பிரயார்

இராமாயண சகோதரர்களுக்கான ஆலயங்கள் எங்கு அமைந்துள்ளன, அவை யாவை. அங்கு செல்லும் பாக்கியம் எப்படி கிட்டியது. மேலும் எந்தெந்த ஆலயங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது என்ற தகவல்களை இப்பதிவில் காணலாம்.

பாரத நாட்டில் இரண்டு மாநிலங்களில் இராமாயண சகோதரர்களான  இராமர், பரதன், இலக்குவம் மற்றும் சத்ருக்னன் ஆகிய நால்வருக்கும் ஆலயங்கள் அமைந்துள்ளன.  முதலாவது கேரளத்தில் திருச்சூர் கொச்சி இடைப்பட்ட பிரதேசத்திலும்,  இரண்டாவது உத்தராகண்ட மாநிலத்திலும் 
 உள்ளன. உத்தரகாண்ட மாநிலத்தில் தேவப் பிரயாகையில் இராமபிரானுக்கும், லட்சுமண ஜுலாவில் இலக்குவனுக்கும், ரிஷி கேசத்தில் பரதன்,  மற்றும் சத்ருக்னனுக்கும் ஆலயங்கள் உள்ளன.



கனக மழை - காலடி

கேரளாவில் நான்கு சகோதரர்களுக்கான ஆலயங்கள் குருவாயூரிலிருந்து தெற்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் (NH-17)  அருகே அமைந்துள்ளன. இவ்வாறு நான்கு கோவில்கள் கேரளத்தில் உள்ளதற்கான ஐதீகம். விஷ்ணு பக்தரான வக்கேகைமால் என்பவர் கூடல் மாணிக்கம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்தார். இவரது கனவில் வந்த பெருமாள் கடற்கரையில் ஒரு புதையல் உள்ளது என்று கூறி அழைத்து சென்றார்.  அவர் காட்டிய இடத்தில் நான்கு அற்புத சிலைகள் ஒன்று போலவே இருந்தது. துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பூமிக்கு வந்த போது பூஜித்த மூர்த்தங்களான அச்சிலைகள் தசரத புத்திரர்களின் சிலைகள் ஆகும். அவர்களை அவர் திருப்பரையார்,  இரிஞ்ஞாலக்குடா, திருமொழிக்களம், பாயம்மால் ஆகிய நான்கு தலங்களில் பிரதிஷ்டை செய்தார். அவை நாலம்பலம்” என்றழைக்கப்படுகின்றன. 


திருப்பிரயார் விமானம்

கண்டேன் சீதையை

திருச்சூர் திருப்பிரயாரில் இராமர் ஆலயம் – எர்ணாகுளம் குருவாயூர் தேசிய நெடுஞ்சாலையில் குருவாயூரில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இரிஞாலக்குடா பரதன் ஆலயம்

இரிஞ்ஞாலக்குடாவில் பரதர் ஆலயம்  - திருச்சூர் கொடுங்கல்லூர் சாலையில் திருச்சூரில் இருந்து சுமார் 22 கி.மீ உள்ளது.

திருமூழிக்களத்தில் லக்ஷ்மணன் ஆலயம் ஆலுவாய்க்கும் மாளுக்கும் இடையில் உள்ளது. இத்தலம் ஒரு திவ்யதேசம் ஆகும்.

பாயம்மாலில் சத்ருகனர் ஆலயம் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது.

இராம சகோதரர்கள் நால்வரையும் தரிசித்தால் தர்மநெறியில் பொருள் தேடி, நல்வழியில் இன்பம் அனுபவித்து இறுதியில் மோட்சமும் அடையலாம் என்பது ஐதீகம்.


பாயம்மல் சத்ருக்னன் அம்பலம்

நான்கு சகோதர்களும் நான்கு வேத ரூபமாக அருள் பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். இம்மாதத்தில் இந்நான்கு கோவில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதை நாலம்பலம் தொழல்” என்கின்றனர் இவர்கள். திரிப்பிரயாற்றில் நிர்மால்ய தரிசனத்தையும், இரிஞாலக்குடாவில் உஷத் கால பூஜையையும், திருமூழிக்களத்தில் உச்சிக்கால பூஜையையும், பாயம்மல்லில் அத்தாழ பூஜையையும் சேவிக்க வைகுண்டப்பேறு பெறுவர் என்பது ஐதீகம். எனவே பல பக்தர்கள் ஆடி மாதத்தில் ஒரே நாளில் நடந்தே சென்று இந்நான்கு ஆலயங்களிலும் தரிசனம் செய்கின்றனர். இத்தலங்களில் உள்ள பெருமாள்களை வழிபட எதிரிகளால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
அடியேன் முதலில் மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை சென்ற போது திருமூழிக்களத்தில் இலக்குவனை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது அப்போது இவ்வாறு இராம சகோதரர்கள் நால்வருக்குமான ஆலயங்கள் கேரளத்தில் அமைந்துள்ளன என்ற தகவல் தெரிய வந்தது. அப்போதே அவன் அருளால் நான்கு தலங்களையும் சேவிக்க வேண்டும் என்ற அவா உண்டானது. இன்னொரு சமயம் சோட்டாணிக்கரை செல்லும் போது திருப்பிரயாரில் இராமபிரானை மட்டும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. எப்போதாவது நாலம்பலத்தையும் ஒரே தடவையில் தரிசிக்கும் பாக்கியம் கிட்ட வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டிக்கொண்டிருந்தேன். அவர்ருளால் அவ்வாய்ப்பு கிட்டியது.

ஒரு சமயம் அடியேனது நண்பர் திரு.சுந்தர் அவர்கள் திருச்சூரில் உள்ள ஒரு நண்பரின் இல்லத்திற்கு சென்று மூன்று நாட்கள் தங்கிவிட்டு வந்தேன். அருகில் உள்ள பல ஆலயங்களை தரிசித்தோம். பிப்ரவரி மாதம் அவர்கள் இல்லத்தின் அருகில் உள்ள அம்மன் ஆலயத்தில் பூரம் உற்சவம் சிறப்பாக நடக்கும் அதற்கும் வரச்சொல்லி என்னை  அழைத்தார்கள் என்றார். அப்போது அடியேனையும் உடன் அழைத்துச் செல்ல முடியுமா? முடிந்தால்  நாலம்பலத்தையும் தரிசிக்கலாம் என்று கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். அவரும் அவர்களிடம் கலந்து பேசி,  செல்லலாம்  என்றார்.  ஒரு நான்கு  நாட்கள் யாத்திரையாக திட்டமிட்டு தொடர்வண்டியில் முன்பதிவு செய்தோம்.

ஆயிரங்கண்ணி பூரத்தில் காவடிகள்

ந்த யாத்திரையின் போது திருச்சூர், திருப்பிரயார், குருவாயூர், இரிஞ்ஞாலக்குடா, பாயம்மல், கொடுங்கல்லூர், திருஅஞ்சைக்களம், காலடி, திருமூழிக்களம், திருச்சூரில் திருவம்பாடி கிருஷ்ணர் மற்றும் பரமக்காவு பகவதி ஆலயங்கள் மற்றும் பொக்களாங்கரை என்ற ஊரின் உள்ள அம்மன் ஆலயத்தின் பூரம் உற்சவம் மற்றும் ஆயிரங்கண்ணி அம்மன் ஆலயத்தின் பூரம் உற்சவம் ஆகியவற்றை சேவித்தோம். வாருங்கள் அன்பர்களே ஒவ்வொரு ஆலயமாக தரிசிப்போம்.



Saturday, October 22, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24

நாலம்பலம்
பாயம்மல் சத்ருகனன் ஆலயம்



நாலம்பலம் வரிசையில் நிறைவாக அமைந்த ஆலயம் பாயம்மல் சத்ருகனன் ஆலயம். இத்தலம் பரதனின் ஆலயம் அமைந்துள்ள இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. லக்ஷ்மணன், சத்ருகனன் இருவரும் இரட்டையர் தசரதரின் மூன்றாவது மனைவி சுமித்ரைக்கு பிறந்தவர்கள். இவர் பெருமாளின் சுதர்சன சக்கரத்தின் அம்சம்.  லக்ஷ்மணன் எவ்வாறு இராமருக்கு தொண்டு செய்தாரோ அது போல பரதனுக்கு தொண்டு செய்த தொண்டனுக்கு தொண்டன் சத்ருகனன். பரதன் நந்தி கிராமத்தில் ஸ்ரீராமர் வருகைக்காக காத்திருந்த போது இராச்சியத்தை பரிபாலனம் செய்தவர்  இவர் . சத்ருகனன் என்றால் சத்ருக்களை வெல்பவன் என்று பொருள். இராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின் லவணாசுரனை வென்றவர்இவருக்கான கோவில்தான்  பாயம்மலில் உள்ளது.



சிறிய கோவில்தான். மற்ற கோவில்கள் போலில்லாமல்  ஸ்ரீகோவில் செவ்வக வடிவில் உள்ளது. அதற்கு தகுந்தாற்போல பிரமிட் வடிவ  விமானம். நின்ற கோலத்தில் சதுர்புஜ விஷ்ணுவாகவே இவரும் சேவை சாதிக்கின்றார். ஆனால் மூர்த்தி சிறியது ஆனால் கீர்த்தி பெரியது .மேற்திருக்கரங்களில் சக்கரம், சங்கம், கீழ்க்கரங்களில் பத்மம் கதை தாங்கி சேவை சாதிக்கின்றார்.
சத்ருக்னன் ஆலயத்தில், அவர் மட்டுமே இருக்கிறார். தெற்குப் பார்த்து கணபதி சந்நிதியும், முக மண்டபத்தில் அனுமன் சந்நிதியும் உள்ளதுமது என்ற அரக்கன் சிவனைக் குறித்து தவம் செய்து ஒரு சூலம் பெற்றான். உனக்கும், உன் மகன் லவணனுக்கும் எதிரிகளை ஒழிக்க இது உதவும் என்று கொடுத்தார். லவணனின் காலத்துக்குப் பிறகு சூலம் என்னிடம் வந்துவிடும் என்று சிவபெருமான் கூறிவிட்டு, மறைந்து விட்டார் மது நல்லவனாயிருந்தான். மகன் நேர் எதிர். துஷ்டனான லவணனை அழிக்க ராமர் சத்ருக்னனிடம் சொல்கிறார். அண்ணலின் ஆணை கேட்டு அதை நிறைவேற்றத் தயாராக, கோப வடிவத்தில் நிற்கிறார் சத்ருக்னர்



சுதர்சன புஷ்பாஞ்சலி, சக்கர சமர்ப்பணம் இவை இரண்டும் இங்கே முக்கிய வழிபாடுகள்சித்திரை மாதம் மிருகசீரிட  தினம் பிரதிஷ்டை தினம். வாய்ப்புக் கிட்டுபவர்கள் நான்கு தலங்களையும் சென்று சேவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்
மலைநாட்டு தலங்களைச் சேவித்தபின்  நாங்குநேரி வந்து வானமாமலைப்பெருமாளை சேவித்தோம்ப,  திருமலை சுவாமிகளின் ஆச்சாரியர் வானமாமலை ஜீயரின் ஆசி பெற்றோம். பின்னர் மதுரையடைந்து கூடலழகரை சேவித்தோம். யாத்திரையின் நிறைவாக திருமோகூரை சேவித்து சென்னை திரும்பினோம். விரிவுக்கஞ்சி இப்பதிவுடன் மலைநாட்டு திவ்விய தேச யாத்திரை தொடரை நிறைவு செய்கின்றேன். இதுவரை வந்து சேவித்த அனைவருக்கும் பரந்தாமன் அருள் கிட்ட அவரிடம் வேண்டுகின்றேன். விரைவில் இன்னொரு இனிய யாத்திரை விவரங்களுடன் தங்களை சந்திக்கின்றேன் அது வரை நன்றி வணக்கம். 

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை இனிதாக நிறைவுற்றது