Tuesday, July 17, 2018

நாலம்பல யாத்திரை - 1


நாலம்பங்களின்  தரிசனம்:  




நாலம்பல  இராமாயண சகோதரர்கள்





இராம பட்டாபிஷேக ஓவியம் - திருமூழிக்களம்


நமது தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு.  ஆடி மாதம் அம்மன் மாதம் என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றதி. அம்மன் ஆலயங்களில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் கூழ் வார்த்தல் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதற்கு காரணம் ஆடி மாதம் அயன மாதம் ஆகும். ஆம் சூரியன் தனது வடக்கு நோக்கிய யாத்திரையை முடித்து தெற்கு நோக்கிய யாத்திரையை துவக்கும் துவக்கும் மாதம்தான் ஆடி மாதம். தக்ஷிணாயணம் துவங்கும் மாதம். தக்ஷிணாயனக் காலம் தேவர்களின் இரவு நேரம் என்பதால் ஆடி மாதம் தேவர்களின் சாயரட்சை அதாவது கோதூளிக் காலம் என்பது ஐதீகம். பித்ருக்களுக்கு உகந்த காலம்.

திருச்சூர் வடக்குநாதர் ஆலயம்

"ஆடிப்பட்டம் தேடி விதை", "ஆடி காற்றில் அம்மியே பறக்கும்" என்பதெல்லாம்  ஆடியைப் பற்றிய பழமொழிகள் .  ஆடியில் பருவ மழை ஜோராக பெய்யும் மாதம் எனவே பல தொற்று நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளதால் அதை தடுப்பதற்காக வேப்பிலை, வெங்காயம், கலந்து கேழ்வரகு கூழ் படைத்து அம்மனை வழிபாடு செய்வதை ஏற்படுத்தினர் முன்னோர்கள்.

இரிஞாலக்குடா கூத்தம்பலம் 

வான் முகில் வழாது பெய்து  நிலம் செழித்து பயிர்கள் நன்றாக வளர்ந்தது சூல் கொண்டு இருப்பதை உணர்த்தும் விதமாக அம்பாளே சூல் கொன்டிருப்பதாக பாவித்து ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்திக் கொண்டாடும் மாதம்.


ஆடி பதினெட்டாம் பெருக்கு இது தங்களை வாழ்விக்கும் காவிரி அன்னைக்கும், மழைக்கும், ஆற்றில் பெருக்கெடுத்தோடும் நீருக்கும் நன்றி சொல்லும் விழா. சிவபெருமான் கருணையால் பார்வதிதேவி தம் மக்களை வாழ்விக்க அருளிய அமிர்தமே ஆற்று நீர் எனக் கருதி அந்த அம்மனுக்கு வழிபாடு நடத்துவது மரபு. காவிரியின் கருணையினால் விளைந்த நெல்லை அரிசியாக்கி அந்த அரிசியில் பலவகை உணவைச் செய்து படைத்தல் என்பது காலங்காலமாக இருந்து வரும் பழக்கம். இது குறித்து புராணக் கதையொன்றும் உண்டு. சிவபெருமானைக் குறித்து பார்வதி தேவியார் தவம் செய்த மாதம் இது என்பதே அந்தக் கதை.


பூமி தேவியின் அம்சமான பூ மாலையும், பாமாலையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்  ஆண்டாள் அவதரித்த நாள். மேலும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்திற்கு மிகவும் உகந்த நாள். ஆடி பௌர்ணமியன்றுதான் ஹயக்ரீவர் அவதாரம் செய்தார். ஆடிக் கிருத்திகையும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பெரிய திருவடியாம் கருடாழ்வார் அவதாரம் செய்தது ஆடி சுவாதியில்தான்.


திருஅஞ்சைக்களம் 

ஆடி பதினெட்டாம் பெருக்கன்று "வான் பொய்ப்பினும் தான் பொய்யா பொன்னி நதியாம் காவிரி" நதியைப் போற்றிக்கொண்டாடி அவளை பூசிக்கும் நாள்.


கதகளி ஆட்டம்

நமது தமிழகத்தில்  இவ்வாறு என்றால் அண்டை மாநிலமான கேரளத்தில் ஆடி மாதம் இராமாயண மாதம் என சிறப்பாக கொண்டாடுகின்றனர். தமிழகத்தை விட பல மடங்கு தென் மேற்கு பருவக் காற்றால் மாரி கேரளத்தில் பொழிகின்றது. எனவே பயிர் சாகுபடி மிகவும் சிறப்பாக இருக்கும் எனவே இம்மாதத்தில் தொற்று நோயை தவிக்கும் வண்ணம் தினமும் இராமாயணத்தை வீட்டில் பாராயணம் செய்யும் வழக்கில் உள்ளது



 ஆயிரங்கண்ணி பூர உற்சவம்


கேரளத்தில் இராம சகோதரர்கள் நால்வருக்கும் தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒரே நாளில் நான்கு தலங்களிலும் சென்று நான்கு சகோதரர்களையும் வழிபடுகின்றனர்.  இந்த நான்கு தலங்களுக்கும் மற்றும் அருகில் உள்ள சில தலங்கள் மற்றும் இரண்டு அம்மன் கோவில்களின், கேரளத்தின் சிறப்பு மிக்க யானைகள் அணிவகுத்து கொண்டாடும்  இரு அம்மன் ஆலயங்களின் பூரம் உற்சவத்தையும் காணும் பாக்கியம் அடியேனுக்கு வாய்த்தது.  அவ்வனுபவத்தை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இத்தொடர். வாருங்கள் அன்பர்களே இராமாயண மாதத்தில் இராம சகோதரர்கள் நால்வரையும்  திவ்யமாக சேவிக்கலாம். இத்தொடரில் இடம் பெறும் புகைப்படங்களையெல்லாம் எடுத்தவர் அடியேனுடைய நண்பர் திரு.சுந்தர் அவர்கள்.

2 comments:

Anuprem said...

நல்ல தகவல்களும் அழகிய படங்களும் ஐயா...

புதிய ஆலயங்களை தரிசிக்க காத்திருக்கிறேன்...

S.Muruganandam said...

மிக்க நன்றி அனுராதா அம்மா.