அந்தி மதியோடும் அரவச்சடைதாழ
உந்தி யனலேந்தி முதுகாட்டெரியாடி
சிந்தித் தெழவல்லார் தீராவினை தீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே - திருஞான சம்பந்தர்
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளாய் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனாய் எங்கும் நீக்கமற விலங்கும் சிவப்பரம்பொருள், உலக மக்கள் உய்ந்து சிறக்க கோவில் கொண்ட அருட்தலங்கள் நமது தமிழ் நாட்டில் பல உள்ளன. இவற்றுள் தேவாரப் பாடல் பெற்ற ஐயன், கருணைக்கரங்கள் விரித்தும்,அருள்விழிப்பார்வையில் அஞ்ஞான இருள் அகற்றியும் திருவிளையாடல் பல நிகழ்த்தி அற்புதம் காட்டியும் அருளை அமுதாய் பெருக்கியும் ஆட்கொண்டருளும் திருக்கோவில்கள் பலவற்றுள் காலப்பெருமையும் சாலப்பெருமையும் நிறைந்ததாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா?
காவிரியின் தென் கரையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் 34வது தலம் இத்தலம். மிகப் பெரிய சுயம்பு நடராஜப்பெருமானின் திருமேனி அமைந்துள்ள தலம். 3 நிலை ராஜ கோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் கூடிய இத்தலத்தில் எம் ஐயன் உமாமஹேஸ்வரராக மேற்கு நோக்கி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவர் பூமாதேவியால் பூசிக்கப்பெற்றவர். எனவே இவர் பூமிநாதர் என்றும் திருநாமம் பெற்றுள்ளர்.வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். மேலும் நந்திகேஸ்வரர், சனத்குமாரர், கன்னுவர் ஆகியோர்களும் இவரை வழிபட்டு நலம் பெற்றுள்ளனர். நந்தி வழிபட்ட தலமானதால் பிரதோஷ காலத்தில் ஐயனை வணங்க ஒன்றுக்கு பல மடங்காக பலன் கிட்டும்.
இத்திருக்கோவில் சிவஞான செல்வரான கண்டராதித்த சோழனின் துனைவியும் சிவசேகரன் இராஜராஜ சோழனின் பாட்டி செம்பியன் மாதேவி அவர்களால் கற்றளியாக திருப்பணிச் செய்யப்பட்டது. இத்தலத்தில் அம்மை மங்கள நாயகி , தேக சுந்தரி என்னும் அங்கவளை நாயகி சன்னதி கிழக்கு நோக்கியும், ஐயன் சன்னதி மேற்கு நோக்கியும் ஒன்றையொன்று எதிர்நோக்கியவாறு கல்யாணக் கோலத்தில் அமைந்துள்ளன. ஐயனும் அம்மையும் மாலை மாற்றும் விதமாக அமைந்துள்ளதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு திருமணப்பேற்றை அருளுகின்றார் நல்லம் நகரார்.
திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போலவே இத்தலத்திலும் எம் ஐயன் மாப்பள்ளை சுவாமியாக (உற்சவ மூர்த்தி) எழுந்தருளியுள்ளார். அழகிய ரிஷபத்தின் மேல் ஒயிலாக சாய்ந்து கொண்டு எழிலார் தேவி பார்வதியுடன் ஐயனின் கோலம் காணக் கண்கோடி வேண்டும், எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அப்படி ஒரு அழகு. திருமால் தாரை வார்த்து தரும் கோலத்தில் உடன் எழுந்தருளியுள்ளார்.
இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை. கல்வெட்டில் இறைவன் 'திருநல்லம் உடையார் ' என்று குறிக்கப்படுகிறார்.வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும், 'நக்கன் நல்லத் தடிகள்' என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும், குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன.
இத்தலத்தின் தீர்த்தம் சக்தி தீர்த்தம். தல மரம் அரச மரம் மற்றும் வில்வம். காவிரியின் தென் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 34வது தலம். அப்பர் மற்றும் சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். சம்பந்த பெருமானின் ஒரு பதிகம் இதோ:
கல்லா நிழன்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த
வில்லா லரண்மூன்ரூம் வெந்து விழசெய்தா
நல்லா னமையாள்வா நல்ல நகரானே!
அருட்பிரகாச வள்ளலார் காவிரி தென்கரை திருத்தலங்களை தரிசித்து வருகையில் திருநல்லத்திற்கும் எழுந்தருளி வழிபட்டதற்க்கு சான்று திருஅருட்பாவில் உள்ளது.
தமிழகத்திலேயே பெரிய நடராஜர் சிலை இத்தலத்தில்தான் உள்ளது, ஐம்பொன் சிலை என்றாலும் சுயம்புவாக தோன்றிய சிலை. இத்தலத்தில் ஆடவல்லான் சுயம்புவாக தோன்றிய மிகவும் சுவையான வரலற்றைக் காண்போமா? கண்டராதித்த சோழன் திருத்தேவி , மாதேவடிகள் செம்பியன் மாதேவி தன் கணவர் நினைவாக இத்திருக்கோவிலை கற்றளியாக கட்டுவித்து திருமுழுக்குக்கான நாளையும் குறித்து விட்டார். அனைத்து தெய்வத்திரு மேனிகளும் தயாராகி விட்டன. ஆனால் நடராச பெருமானின் திருமேனி மட்டும் எவ்வளவு முயன்றும் சிற்பியினால் வடிக்க முடியவில்லை. எவ்வளவு முறை வார்த்தாலும் ஏதோ ஒரு குறை வந்து கொண்டே இருந்தது. ஆண்டவன் அத்திருத்தலத்தில் நடத்த இருத்தும் திருவிலையாடலை அறியாத சிற்பி ஒன்றும் புரியாமல் சிற்பி இறைவனை நோக்கி இறைஞ்சினார். என்பெருமானே இது என்ன சோதனை? ஏன் இவ்வாறு நடக்கின்றது? உன்னுடைய திருவுருவம் மட்டும் ஏன் அமையமாட்டேன் என்கிறது எப்படியாவது அரச தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்று என்று.
தன்னுடைய அன்பனின் வேண்டுதலை ஏற்று இறைவன் இறைவியுடன் திருநல்லம் எழுந்தருளினார். எவ்வாறு எழுந்தருளினார்?, எம்பெருமான் திருவிலையாடல் நாயகன் அல்லவா அத்துடன் தன் அன்பர்கள் தன் கருணைக்கு பாத்திரமானவர்களா என்று சோதனை செய்யும் நாதன் அல்லவா. எனவே அவர் புலையனாக கையில் நான்கு வேதங்களையும் நாய்களாகப் பிடித்துக் கொண்டு அம்மை தலையில் கள் குடத்தை சுமந்தவாறு, ஸ்கந்தனை சிறு குழந்தையாக இடுப்பிலே ஏந்தி அஹ்ரகாரத்திலே, திருமாலும் நான் முகனும் காண ஒண்ணா மலர்ப் பாதம் நோக நடந்து வந்து வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டார். கீழ் சாதிக்காரனென்று அறியாமையினால் அவர்கள் தண்ணீர் மறுக்க கோவிலில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்க அவரும் கோப மிகுதியால் காய்ச்சி வைத்திருக்கின்ற ஐம்பொன் குழம்பு தான் உள்ளது நீ குடித்துக் கொள் என்றார். இறைவனும் அவ்வாறே அந்த குழம்பை குடித்து சுயம்புவாக அமர்ந்து விட்டார். நடந்த திருவிளையாடலை உணர்ந்த சிற்பி தண்டனிட்டு வணங்கினார். என்னே எம்பெருமானின் கருணை நம்மையெல்லாம் உய்விக்க தானே வந்து நமக்காக திருக்கோவில் கொண்டார்.
காலையில் எம்பெருமானின் திருமேனியைப் பார்த்த அரசி எவ்வாறு இரவுக்குள் இவ்வளவு அழகான திருமேனியை வடித்தாய் ? என்று வினவ , சிற்பியும் எம்பெருமானே தானே இறங்கி வந்து இங்கே அமர்ந்தார் என்று கூற நம்பாத மன்னனும் மற்றையோரும் சிற்பியை எள்ளி நகையாட, சிற்பி கண்ணீர் மல்கி இறைவனை வேண்ட, இறைவன் அசரீரிப்படி மன்னன் உளியால் காலில் வெட்ட குருதி பீரிட்டு வழிந்தோட , தன் தவறை உணர்ந்த மன்னனும் , அக்ரஹாரத்தாரும் எம்பெருமானின் லீலையை உணர்ந்து தண்டனிட்டு வணங்கி மன்னிப்பு பெற்றனர். இவர் சுயம்பு மூர்த்தம் என்பதற்கான ஆதாரம் கையில் உள்ள மச்சமும் கை விரல்களில் உள்ள ரேகைகளூம், அக்குளில் உள்ள தேமலும் மற்றும் அரசன் உளியால் ஏற்படுத்திய காயத்தின் தழும்பும் ஆகும். நடராசப் பெருமான் இங்கே எட்டடி உயரத்தில் சிவகாம சுந்தரியுடன் உலகிலே வேறு எங்குமே காணக் கிடைக்காத அற்புத கலைநயத்துடன் அருட் காட்சி தருகின்றார். அவரது அழகை கண்டார் விண்டிலர். பெருமானுக்கு வருடத்திலே ஆறு அபிஷேகமும் ஆருத்ரா தரிசன பிரம்மோற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றது.
ஆருத்ரா தரிசன உற்சவம் பத்து நாள் உற்சவமாக இத்தலத்தில் நடைபெறுகின்றது.பத்து நாட்களும் தினமும் மாலை திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகின்றது. ஆருத்ரா தரிசனத்தன்று அதிகாலை ஆனந்த தாண்டவ மூர்த்திக்கும் சிவகாமியம்மைக்கும் அற்புத மஹா திருமஞ்சனம், சந்தனாபிஷேகம் மற்றும் தீபாரதனை உதய காலத்தில் ஆரூத்ரா தரிசனம் தந்தருளுகின்றார் ஐயன். பகல் 10 மணியளவில் மஹா தீபாராதனை மற்றும் திருவெம்பாவை பாடல் காட்சி. 11 மணியளவில் உற்சவமூர்த்தி மணடப தீபாரதணை என சிறப்பாக நடைபெறுகின்றது. இத்தலத்தில் ஆனந்த தாண்டவ நடராஜர் திருவீதி வலம் வருவது இல்லை.
தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் பொதும் இராதிக் குரம்பைதான்
உமைக்கும் நல்லவன்தான் உறையும்பதி
நமக்கு நல்லது நல்லம் அடைவதே.
புரூவரஸ் என்ற மன்னன் இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வைத்திய நாத பெருமானை வழிபட்டு தனக்கு வந்த குட்ட நோய் தீர்ந்து தன் நன்றியறிதலுக்காக இப்பெருமானுடைய விமானத்தை பொன் வேய்ந்ததோடு வைகாசி விசாகத்தன்று உற்சவம் நடத்த ஏற்பாடு செய்தான் என்பது வரலாறு. இவ்வாறு இத்தலத்தில் வருடத்தில் இரண்டு பெரு விழாக்கள் நடைபெறுகின்றன. வைத்தியநாதரை வழிபட எல்லா நோய்களும் விலகும் குறிப்பாக குட்ட நோய் குணமாகும்.
நந்தி இல்லாத இத்தலத்தில் ஜபம் செய்தால் ஒன்றுக்கு பதின் மடங்காக ஜப பலன் பெறுவர் என்று கூறப்படுகின்றது. ஒரு கிளிக்கு ஆத்ம ஞானம் அளித்த ஞான கூபம் என்ற கிணறு இன்றும் காணக் கிடைக்கிறது. படிப்பில் மந்தமாக உள்ளவர்கள், ஞாபக சக்தி வேண்டுபவர்கள் இக்கிணற்று நீரை பருகினால் சிறந்த பலன் கிட்டும்.
திரிபுரத்தை எரித்த "திரிபுரசம்ஹாரமூர்த்தி' இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் எமபயம், எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது ஐதீகம் இத்தல விநாயகர் அரசமர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.. துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள்.
திருமுருகன் தேவியர்களுடன் பவனி வரும் காட்சி
எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டதுவாரபால விமானம் எனப்படும் அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள். 16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர். மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
பெருமாள் தாரை வார்த்து கொடுக்க சிவபார்வதி திருமணக்காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார். இங்குள்ள சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும்.சனி தோஷத்தில் பாதிக்கபட்டவர்கள் நலம் தரும் இச்சனி பகவானை வழிபடுவது சிறப்பு.
இத்தலத்திலுள்ள திருக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு அரசை வலம் வருவோர் மக்கட் பேறு முதலிய எல்லா நலங்களும் பெறுவர். அதிசயமாக 11 இதழ் கொண்ட வில்வ மரம் இத்தலத்தில் உள்ளது இந்த வில்வம் காசி வில்வம் என்று அழைக்கப்படுகின்றது.
தெற்கு பிரகார சுவற்றில் பிக்ஷாடணர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை சிற்பங்களும், பின் பக்க சுவற்றில் பிரம்மா விஷ்ணுவுடன் லிங்கோத்பவர் சிற்பங்களும். வடக்கு சுவற்றில் ஆட வல்லான், ஆலமர் கடவுள், செம்பியன் மாதேவி, கண்டராதித்தர் சிவலிங்கத்தை வழிபடும் புடைப்பு சிற்பங்கள் அழகாக செதுக்கப் பட்டுள்ளன.
கோவில் மேற்கூரையில் வரையப்பட்டுள்ள வைகாசி விசாகத்தின் போது நடைபெறும் திருவிழாவின் சில ஓவியங்களை இப்பதிவில் இடம்பெற்றுள்ளன.
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கம் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன்
நக்கன் சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே
என்ற திருநாவுக்கரசரின் பதிக்கத்தின் படி நாமும் திருநல்லம் சென்று அங்கவள நாயகி உடனுறை உமா மஹேஸ்வரறையும் , சிவகாம சுந்தரி உடனுறை நடராசப் பெருமானையும் வழிபட்டு நன்மையடைவோமாக.
* * *
2 comments:
கைலாஷி அவர்களுக்கு, தங்களின் எழுத்தால் திருநல்லம் தலத்தின் பெருமைகளை அறிந்தேன். ஆடவல்லான் நடத்திய திருவிளையாடலை அறிந்தேன், படிக்கும் பொழுது அப்படியே மனக்கண் முன்னே நடந்தேறியது போல உணர்தேன்.
//காய்ச்சி வைத்திருக்கின்ற ஐம்பொன் குழம்பு தான் உள்ளது நீ குடித்துக் கொள் என்றார். இறைவனும் அவ்வாறே அந்த குழம்பை குடித்து சுயம்புவாக அமர்ந்து விட்டார்//
அந்த சிற்பிக்கு தரிசனம் கிடைத்தது போல யாருக்கு கிட்டும்? படிக்கும் பொழுது கண்களில் நீர் வருவதை தவிர்க்க முடியவில்லை....
//இவர் சுயம்பு மூர்த்தம் என்பதற்கான ஆதாரம் கையில் உள்ள மச்சமும் கை விரல்களில் உள்ள ரேகைகளூம், அக்குளில் உள்ள தேமலும் மற்றும் அரசன் உளியால் ஏற்படுத்திய காயத்தின் தழும்பும் ஆகும்.//
தற்போது நேரில் சென்று பார்க்க முடியாத சூழலில் இருந்தாலும், இதற்கான உந்துதல் தங்களின் பதிவையும், கோவிலின் உள்ளே உள்ள ஓவியங்களும், குறிப்பாக "எட்டு அடி உயர சுயம்பு நடராஜர்" சிலையும் அதிகபடுத்துகின்றன(றார்)
//தற்போது நேரில் சென்று பார்க்க முடியாத சூழலில் இருந்தாலும், இதற்கான உந்துதல் தங்களின் பதிவையும், கோவிலின் உள்ளே உள்ள ஓவியங்களும், குறிப்பாக "எட்டு அடி உயர சுயம்பு நடராஜர்" சிலையும் அதிகபடுத்துகின்றன(றார்)//
உள்ளன்போடு வேண்டுபவர்களை அவர் என்றும் கை விடுவதில்லை. நிச்சயம் அவரை தரிசனம் செய்யும் பாக்கியம் தங்களுக்கு கிட்டும். அடியேனும் அவ்வாறே வேண்டிக்கொள்கிறேன்.
Post a Comment