உமையம்மை இந்த விரதத்தை முதலில் அனுஷ்டித்து ஐயனின் உடலில் இடப்பாகம் பெற்றார். மஹா விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்தே வைகுண்டபதியானார். பிரம்ம அன்னத்தை வாகனமாக பெற்றார், அஷ்ட திக் பாலகர்கள் பிரம்மனிடமிருந்து பெற்ற சாபத்திலிருந்து விமோசனம் அடைந்ததும் இவ்விரத மகிமையினால்தான். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது. இவ்விரதத்தினை அனுஷ்திப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. அந்நாளில் அம்பிகை மலையரசன் பொற்பாவை சிவபெருமானை நோக்கி "எம்பெருமானே இவ்விரதத்தை உலகில் யார் அனுஷ்டித்தாலும் அவர்கள் விரும்பியவற்றை அருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும் அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று அவ்வண்ணமே அருள் புரிந்தார். எனவே நாமும் இவ்வரிய நோன்பினை நோற்று சிவபரம்பொருளின் பூரண கடாக்ஷத்தினை பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர். தேவியின் வேண்டுதலால் இவ்விரதத்தை முறையாக கடைப்பிடிக்கும் தம்பதிகள் இடையில் ஒற்றுமை விளங்கும், பிணி நீங்கும், வறுமை நீங்கி செல்வம் பெருகும். கன்னியர்களுக்கு நல்ல கணவன் அமைவான்.சிவபெருமானின் பரிபூரண அருள் கிட்டும்.
சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்தர்வராஜனுக்கு கூறியருளினார். விரதத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். இவ்விரதத்தை அனுஷ்டித்த இந்த இராஜ குமாரிகளின் கதை. புண்ணியவதி, பாக்கியவதி என்னும் இரு இராஜ குமாரிகள் தேவ கன்னியர் கங்கைக் கரையில் இவ்விரதத்தை அனுஷ்டித்து வருவதைக் கண்டனர். தன் தகப்பன் நாடு நகரிழந்ததன் காரணமாக விவாகமாகாத இக்கன்னியர் தேவ கன்னியரிடம் இவ்விரதம் பற்றிய விவரமறிந்து தேவ கன்னியர் கொடுத்த நோன்புக் கயிற்றையும் பெற்று வீட்டிற்கு போக வீடு அடையாளந் தெரியாமல் குச்சு வீடு மாட மாளிகையாக மாறி அஷ்ட ஐஸ்வரியம் பெருகியிருக்கும் புதுமையைக் கண்டு ஆச்சரியமடைந்து நிற்கையில் தகப்பன் தனது குமாரத்திகளை அழைத்துச் சென்று சுகமாக வாழந்து வரும் நாளில் இராஜ கிரி அரசன் புண்ணியவதியையும், அளகாபுரியரசன் பாக்கியவதியையும் மணந்து தத்தம் ஊர்களுக்கு சென்று புத்திர பாக்கியத்துடன் வாழந்து வந்தனர்.
இங்ஙனம் வாழந்து வரும் நாளில் பாக்கியவதி நோன்புக் கயிற்றை அவரைப் பந்தலின் மேல் போட்டு மறந்து போனதின் விளைவாக பாக்கியவதியின் நாட்டை வேற்றரசன் கைப்பற்றிக் கொண்டு இவர்களை ஊரைவிட்டு துரத்தி விட்டான். பாக்கியவதியும் அவள் புருஷனும் நித்திய தரித்திரர்களாகி உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி இருக்கையில் நோன்புக் கயிறு அவரைப் பந்தலிலிருந்ததால் அவரைக்காய் மிகுதியாகக் காய்க்க பாக்கியவதி அந்த அவரைக் காய்களை சமைத்து புசித்து ஜ“வித்து வந்தனர்.
இப்படியிருக்கையில் ஒரு நாள் பாக்கியவதி தன் குமாரனையழைத்து அப்பா நாம் நாடு நகரமிழந்து உண்ண உணவுக்கும் உடுக்க ஆடைக்கும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகையால் நீ இராஜகிரிக்கு போய் உன் பெரிய தாயாரிடம் நமது நிலையைக் கூறி கொஞ்சம் திரவியம் வாங்கிக் கொண்டு வா என்று சொல்லி கட்டமுது கட்டி கொடுத்து வழியனுப்பினாள். மகனும் இராஜகிரி வந்து பெரிய தாயாரிடம் தங்கள் வர்த்தமானங்களைச் சொல்ல , அவளும் பிள்ளையை நாலு நாள் வைத்திருந்து சில வஸ்திரமும் ஆபரணமும் திரவிய முடிப்பும் கட்டமுதும் கட்டிக் கொடுத்து அனுப்பினாள். அதை வாங்கிக் கொண்டு சில தூரம் சென்ற பின் ஒருக் குளக்கரையில் மூட்டையை வைத்து விட்டு கட்டமுது சாப்பிடும் போது மூட்டையை கருடன் எடுத்துக் கொண்டு போய் விட்டது. அதுகண்ட சிறுவன் மனஸ்தாபப்பட்டு மீண்டும் பெரிய தாயாரிடம் சென்று நடந்ததை சொல்லி மேலும் சிறிது திரவியம் கட்டிக் கொண்டு வரும் வழியிலே அதை திருடர்கள் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். சிறுவன் துக்கப்பட்டக் கொண்டு பெரிய தாயாரிடம் சென்று அம்மா! நாங்கள் செய்த பாவமென்னவோ? தெரியவில்லை இரண்டாவதாகக் கொடுத்த திரவியங்களையும் திருடன் பறித்துக் கொண்டு போய் விட்டான் என்று சொல்லி அழும் சிறுவனை தேற்றி குழந்தாய் உன் தாயார் கேதார கௌரி விரதத்தை அனுஷ்டித்து வருகிறாளா இல்லையா என்று கேட்டாள்.
சிறுவனும் இப்போது அனுஷ்டிப்பதில்லை, நோன்புக் கயிற்றையும் அவரைப் பந்தலின் மேல் போட்டு விட்டாள். அன்று முதல் இவ்வித கஷ்டங்களெல்லாம் வந்தது என்று தெரிகிறது என்று கூறினான். இதைக் கேட்ட புண்ணியவதி மிகவும் மனம் வருந்தி ஐப்பசி மாதம் வரை சகோதரி மகனை தன்னிடமே நிறுத்திக் கொண்டு ஐப்பசி நோன்பு நோற்கின்ற போது பாக்கியவதிக்கும் ஒரு பங்கு நோன்பு வைத்து நோற்று அந்த நோன்புக் கயிறும் பலகாரமும், பாக்கு, வெற்றிலை, மஞ்சளும் இன்னும் சில ஆடை ஆபரணங்களுந் திரவியமும் கொடுத்துக் காவலாக சில சேவகரையுங் கூட்டி இனி மேலாவது இந்த நோன்பை விடாமல் நோற்கச் சொல்லி புத்திமதி கூறி அனுப்பினாள்.
பெரிய தாயாரிடம் விடைபெற்று வரும் போது முன்னே வழியில் பறித்துப் போன திருடன் திரவியத்தை கொடுத்துச் சென்றான். கருடனும் மூட்டையைக் கொண்டு வந்து போட்டுவிட்டு உன் தாய் கேதேரேச்வரர் நோன்பு விரதத்தை விட்டு விட்டதனாலேயே இவ்விதம் வந்தது இனி மேல் பயபக்தியுடனே நோன்பு நோற்கச் சொல் என்று சத்தமுண்டாக்கிக் கூற சிறுவன் ஆச்சிரியப்பட்டு பயபக்தியோடும் சந்தோஷத்தோடும் தன் வீட்டிற்க்கு திரும்பி தன் தாயாரிடம் நடந்ததைக் கூறி தாயின் கையில் பெரிய தாயாரால் கொடுக்கப் பட்ட நோன்பு கயிற்றையும் பலகாரத்தையும் கொடுத்தான். பாக்கியவதியும் , ஆங்காரத்தினால் கெட்டேன் என்று சொல்லி ஸ்நானஞ் செய்து கேதாரீஸ்வரரை நமஸ்காரம் செய்து நோன்புக் கயிற்றை வாங்கிக் கட்டில் கொண்டாள். உடனே தங்கள் பட்டணத்தைப் பிடுங்கிக் கொண்ட அரசன் பட்டணத்தையும் யானை, சேனை, பரிவாரங்களையும் கொடுத்து விட்டுப் போனான். பிறகு முன் போலவே பாக்யவதிக்கு அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகவே தான் முன் நோன்பு நோற்கத் தவறினதாலேயே கேதாரீஸ்வரர் வறுமையைத் தந்தாரென்று அறிந்து அன்று முதல் தவறாமல் நோன்பைக் கடைப்பிடித்து சகல சம்பத்தும் பெருகி சுகபோகத்தோடு வாழ்ந்தாள். எனவே இந்த பூலோகத்தில் கேதார கௌரி விரதத்தை மனப்பூர்வமாய் விரும்பி அனுஷ்டிப்பவர்களுக்கு அந்த பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அனுகிரஹிப்பார் என்பது திண்ணம்.
அவரவர்கள் சௌகரியப்படி 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்டிக்கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் “பாரணம்’ பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.
அன்பர்கள் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உமையம்மை, கேதார கௌரி, மலைமகள், மலையரசன் பொற்பாவை, கிரிஜா, கிரி கன்யா, கிரி சுதா, சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராஜ தனயை, இமவான் உலவு புத்ரி, வரை மகள், பர்வதவர்த்தினி, பர்வதராஜ குமாரி, பார்வதி சகல ஸௌபாக்கியங்களையும் வழங்கி ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
அம்மையப்பர் போற்றி
தேவார திருவாசக பதிகங்களில் இருந்து திரட்டப்பட்ட துதிகள் இந்த கேதார கௌரி விரத நாளில் துதித்து அம்மையப்பர் அருள் பெறுங்கள்
1) ஓம் அணங்கின் மணவாளா போற்றி
2) ஓம் அம்மையப்பா போற்றி
3) ஓம் அம்மையே அப்பா ஒப்பிலா மணியே போற்றி
4) ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
5) ஓம் அரியாடிய கண்ணாள் பங்க போற்றி
6) ஓம் அரிதரு கண்ணி யாள் ஒரு பாகா போற்றி
7) ஓம் இமவான் மகட்கு தன்னுடைய கேள்வனே போற்றி
8) ஓம் இளமுலையாள் உமை பாகா போற்றி
9) ஒம் இமயமென்னும் குன்றரைக் கண்ணன் குலமகட் பாவை கூற போற்றி
10) ஓம் இழையாரிடை மடவாள் பங்க போற்றி
11) ஓம் உடையாள் உன் தன் நடுவிருக்க உடையாள் நடுவுள் நீயிருத்தி போற்றி
12) ஓம் உண்ணாமுலை உமையாளுடனாகிய ஒருவன் போற்றி
13) ஓம் உமையாள் கணவா போற்றி
14) ஓம் உமையவள் பங்கா போற்றி
15) ஓம் உமை நங்கையோர் பங்குடையாய் போற்றி
16) ஓம் ஏலம் ஏலும் நற்குழலி பங்கனே போற்றி
17) ஓம் ஏலவார் குழலி நாயகனே போற்றி
18) ஓம் ஏலவார் குழல் உமை நங்கை ஏத்தி வழிபட்ட காலகாலனே போற்றி
19) ஓம் ஒருமைபெண்மையுடையன் போற்றி
20) ஓம் கயல்மாண்ட கண்ணி தன் பங்க போற்றி
21) ஓம் கருந்தடங் கண்ணி பங்க போற்றி
22) ஓம் காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா போற்றி
23) ஓம் கிளி வந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனே போற்றி
24) ஓம் குரவங்கமழ் நறுமென் குழல் உமை பங்க போற்றி
25) ஓம் குரும்பைமுலை மலர்க்குழலி பாக போற்றி
26) ஓம் கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே போற்றி
27) ஓம் கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி
28) ஓம் கொத்தலர் குழலி பாக போற்றி
29) ஓம் கொம்மை வரிமுலை கொம்பு அணியாள் கூற போற்றி
30) ஓம் கோல் வளையாள் பாகா போற்றி
31) ஓம் கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூற போற்றி
32) ஓம் கோலப் பொங்கு அரா அல்குல் செவ்வாய் வெண்ணகைக் கரியவாள்கண்
மங்கையோர் பங்க போற்றி
33) ஓம் கோல் வளையாள் பங்க போற்றி
34) ஓம் சிறு மருங்குல் மை ஆர் தடங்கண் மடந்தை மணவாளா போற்றி
35) ஓம் சுரிகுழல் பணை முலை மடந்தை பாதியே போற்றி
36) ஓம் செப்பு ஆர் முலை பங்கனே போற்றி
36) ஓம் செப்பிள முலை நன் மங்கை யொரு பாக போற்றி
38) ஓம் செந்துவர் வாயுமை பங்க போற்றி
39) ஓம் தளரா முலை முறுவல்லுமை தலைவா போற்றி
40) ஓம் திதலைச்செய் பூண்முலை மங்கை பங்க போற்றி
41) ஓம் துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை பங்கனே போற்றி
42) ஓம் தவள வெண்ணகை மங்கையொர் பங்கினர் போற்றி
43) ஒம் தேனையார் குழலாளை யொர் பாக போற்றி
44) ஓம் தையல் ஒர் பங்கினர் போற்றி
45) ஓம் தையல் ஒர் பாகம் வாழ் ஜகந்நாதனே போற்றி
46) ஓம் தையல் இடம் கொண்ட பிரான் போற்றி
47) ஓம் தோடுடைய செவியா போற்றி
48) ஓம் மதி நுதல் மங்கை பங்க போற்றி
49) ஓம் மலை மாது ஒரு பாகா போற்றி
50) ஓம் மலையரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திரு நாயக போற்றி
51) ஓம் மலர்க்கொன்றை மலிந்த வரைமார்பில் பெண்மகிழ்ந்த பிரமாபுரமேவிய பெம்மான் போற்றி
52) ஓம் மலை மகளை ஒரு பாகம் வைத்தானே போற்றி
53) ஓம் மரு ஆர் மலர்க்குழல் மாது பங்க போற்றி
54) ஓம் மட்டுவார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகா போற்றி
55) ஓம் மாவடு வகிர் அன்ன கண்ணி பங்க போற்றி
56) ஓம் மாது இருக்கும் பாதியனே போற்றி
57) ஓம் மாது நல்லாள் உமை மங்கை பங்கன் போற்றி
58) ஓம் மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே போற்றி
59) ஓம் மாதினுக்கு உடம்பிடம் கொடுத்தானே போற்றி
60) ஓம் மைத்தடங்கண் வெருள்புரி மான் அன்ன நோக்கி தன் பங்க போற்றி
61) ஓம் மையார் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே போற்றி
62) ஓம் பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை பங்கா போற்றி
63) ஓம் பஞ்சேர் அடியாள் பங்க போற்றி
64) ஓம் பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா போற்றி
65) ஓம் பஞ்சின் மெல்லடியாள் பங்க போற்றி
66) ஓம் பந்து அணை விரலி(விரலாள்) பங்க போற்றி
67) ஓம் பருவரை மங்கை தன் பங்க போற்றி
68) ஓம் பண்டொத் தமொழி யாளை யொர் பாகமாய் கொண்டாய் போற்றி
69) ஓம் பணைமுலைப் பாக போற்றி
70) ஓம் பண் தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க போற்றி
71) ஓம் பண்ணின் நேர் மொழியாள் பங்க போற்றி
72) ஓம் பண் ஆர்ந்த மொழி மங்கை பங்க போற்றி
73) ஓம் பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
74) ஓம் பாடக மெல் அடி ஆர்க்கும் மங்கை பங்க போற்றி
75) ஓம் பாதி மாதொடும் கூடிய பரம்பரனே போற்றி
76) ஓம் பழுது இல் தொல் புகழாள் பங்க போற்றி
77) ஓம் புன வேய் அனவளை தோளி பங்க போற்றி
78) ஓம் பூண் முலையாள் பங்க போற்றி
79) ஓம் பெண் சுமந்த பாகத்தா போற்றி
80) ஓம் பெண் ஆளும் பாகனே போற்றி
81) ஓம் பெண் பால் உகந்த பெரும் பித்தா போற்றி
82) ஓம் பெண்ணை தென் பால் வைத்தாய் போற்றி
83) ஓம் பெண்ணின் நல்லாள் பங்க போற்றி
84) ஓம் பெண்ணோர் பாகா போற்றி
85) ஓம் பெண்ணாகிய பெருமான் போற்றி
86) ஓம் பெந்நாப்பட அரவு ஏர் அல்குல் உமை பாகா போற்றி
87) ஓம் போகமார்த்த பூண் முலையாள் பாகா போற்றி
88) ஓம் போரில் பொலியும் வெள்கண்ணாள் பங்க போற்றி
89) ஓம் மலையுடையாள் ஒரு பாகம் வைத்தாய் போற்றி
90) ஓம் மாதொரு பாகனே போற்றி
91) ஓம் மாது இயலும் பாதியனே போற்றி
92) ஓம் மாது ஆடும் பாகத்தா போற்றி
93) ஓம் மஞ்சாடும் ,மங்கை மணாளா போற்றி
94) ஓம் மான் ஓர் பங்கா போற்றி
95) ஓம் மான் நேர் நோக்கி உமையாள் பங்க போற்றி
96) ஓம் மான் பழித்து ஆண்ட மெல் நோக்கி மணாளா போற்றீ
97) ஓம் மலையாள் மணவாளா போற்றி
98) ஓம் மை இலங்கு நல்கண்ணி பங்கனே போற்றி
99) ஓம் நங்கடம்பனை பெற்றவள் பங்க போற்றி
100) ஓம் நறவிள நறுமென் கூந்தல் நங்கையோர் பாக போற்றி
101) ஓம் நாரி பாகனே போற்றி
102) ஓம் வடிவுடைவாணெடுங் கண்ணுமைபாக போற்றி
103) ஓம் வரை ஆடு மங்கை தன் பங்க போற்றி
104) ஓம் வளையொலிமுன்கை மடந்தையொர் பாக போற்றி
105) ஓம் வார் உறு பூண் முலையாள் பங்க போற்றி
106) ஓம் வார்கொண்ட வன முலையாள் உமை பங்க போற்றி
107) ஓம் வெண்ணகை கருங்கண் திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் புயங்க போற்றி
108) ஓம் வேயுறு தோளி பங்க போற்றி