Thursday, November 10, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -54

குப்தகாசி 


உத்தராகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாகை மாவட்டத்தின் ஒரு பெருநகரம் குப்தகாசி. திருக்கேதாரத்திற்கு 47 கி.மீ தூரத்தில் 1319மீ உயரத்தில் சௌகம்பா பனிச்சிகரங்களின் மடியில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் காசிக்கு சமமான விஸ்வநாதர் ஆலயம்  உள்ளது. பாண்டவர்கள் தங்கள் பாவம் தீர சிவபெருமானை தேடி காசி சென்ற போது அவர்களுக்கு காட்சி தராமல் திருக்கயிலாயத்திற்கு வந்து விட்டார். அவரைத் தேடி இமயமலை வந்தபோது ஐயன் இவ்விடத்தில் நந்தி ரூபத்தில் மறைந்ததால் இவ்விடம் மறைவு என்ற பொருளில் குப்த்(காசி) என்ற திருப்பெயர் பெற்றது. பின்னர் பாண்டவர்கள் கௌரிகுண்டத்தின் அருகில் எம்பெருமானைக் கண்டனர்.
காசியில் உள்ளது போலவே எம்பெருமான் விஸ்வநாதராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். வாருங்கள் விஸ்வநாதரை சேவிக்கலாம். சாலையிலிருந்து மிக உயரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 100  படிகள் ஏறிச்செல்ல வேண்டும் சந்து போன்ற வழி இரு பக்கமும் கடைகளும், வீடுகளும் அமைந்துள்ளன. வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் ஒழுகுவதால் பாதை முழுவதும் ஈரமாக இருந்தது. 


 திரிவேணி சங்கமம்

சுவின் வாய் வழியாக கங்கையும், யானையின் வாய் வழியாக யமுனையும் அந்தர்வாகினியாக சரஸ்வதியும் சங்கமம் ஆவதாக ஐதீகம்  

இமயமலை ஆலயங்களைப் போல நெடிய கோபுரம், அர்த்தமண்டபத்துடன் அமைந்துள்ளது குப்தகாசி ஆலயம். கோபுர கோட்டத்தில் சிம்மம். தாமரை மலர்கள் கோபுரத்தை அலங்கரிக்கின்றன. சிங்கி-பிங்கி எனும் துவாரபாலகர்கள் ஆலயத்தை காவல் காக்கின்றனர்.  கருவறையில் சிவலிங்க ரூபத்தில் அருள்பாலிக்கின்றார் விஸ்வநாதர். அவருக்கு எதிரே அருமையான  மாலை மற்றும் நுண்ணிய  வேலைப்பாடுகளுடன் பஞ்சலோக சிறிய  நந்தியெம்பெருமான்.  அர்த்தமண்டபத்தில்  இடப வாகனத்தில் வராகர் மற்றும்  யானை வாகனத்தில் மஹாலக்குமி சிற்பங்கள் அருமை.


ஆலய வளாகத்தில் உள்ள சில சிலைகள்


சிவபெருமான் கௌரியன்னையை இங்குதான் பெண் கேட்டார் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அவுரங்கசீப் காசி ஆலயத்தை அழித்து மசூதியாக மாற்றியபோது விஸ்வநாதர் இங்கு வந்தவர் இங்கேயே தங்கி விட்டார் என்று ஒரு சாரார் நம்புகின்றனர்.


அர்த்தநாரீஸ்வரர்

ரிஷபத்தின் மேல் அமர்ந்த கோலம்  ஒரு தனி சிறப்பு
திருமுகத்தில் ஒரு புறம் வீரமும் மறுபுறம் நளினமும் தோன்றும் அழகை கவனியுங்கள்

விஸ்வநாதர் ஆலயத்திற்கு இடப்பக்கம்  இன்னொரு சிறு சன்னதி உள்ளது. அது அர்த்தநாரீசுவரர் சன்னதி. இவ்வாலயத்தில் இடபத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் ஆண்பாதி பெண்பாதி கோலத்தில் சிவசக்தின் பளிங்குமூர்த்தமாக அருள் பாலிக்கின்றார். இடப்பக்கம் மூக்குத்தி, அக்கமாலை, சுவடி திருப்பாதங்களில் கொலுசு, வலப்பக்கம் நாகம், இளம்பிறை,  திரிசூலம் திருப்பாதங்களில் நாகம்  என்று அருமையாக அமைத்துள்ளார் சிற்பி. மிகவும் அருமையான மூர்த்தம். சிவசக்தி மேல் வைத்த கண்ணை அவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியவில்லை அவ்வளவு அழகு. பின்புறம் அன்னபூரணிக்கு ஒரு சிறு சன்னதி உள்ளது.


அருமையான கலைநுணுக்கத்துடன் கூடிய நந்தி


இவ்வாலயத்தின் சிறப்பு மணிகர்ணிகா குண்டம் ஆகும். இக்குண்டம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஐயன் பாண்டவர்களுக்கு தரிசனம் தந்து மறைந்தபோது அவர் சடாமுடியில் இருந்த கங்கையும் யமுனையும் இன்றும் இக்குண்டத்தில் பாய்கின்றனர் என்று ஐதீகம். கோமுகத்திலிருந்து கங்கையும், யானை முகத்திலிருந்து யமுனையும் குண்டத்தில் பாய்கின்றனர். அந்தர்வாகினியாக சரசுவதி சங்கமம் ஆகின்றாள் என்பது ஐதீகம். எனவே இக்குண்டத்தில் நீராடினால் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 


பாண்டவர்கள் ஐயனைத்தேடிய புராணத்தை கூறுகின்றார்

அடியோங்கள் சென்ற சமயம் மதில் சுவர் மராமத்து வேலைகள் நடந்து கொண்டிருந்தன, காசி விஸ்வநாதரை அருமையாக தரிசித்தபின் காளிதாசனுக்கு அருளிய காளியை தரிசிக்க சென்றோம் தாங்களும் உடன் வாருங்கள் அன்பர்களே. 
                                                            யாத்திரை தொடரும் . . . . . . .

4 comments:

Anuradha Prem said...

குப்தகாசி ....தரிசித்தோம் ....

Muruganandam Subramanian said...

தரிசனம் இன்னும் தொடரும். வாருங்கள்

கோமதி அரசு said...

குப்த காசி தரிசனம் செய்தோம்.
தொடர்கிறேன்.

Muruganandam Subramanian said...

தொடர்ந்து வாருங்கள் அம்மா இன்னும் அருமையாக தலங்களின் தரிசனம் பெறுவீர்கள்.