நாளைய தினம் (14-11-2016) ஐப்பசி பௌர்ணமி சிவாலயங்களில் எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும் நாள் அன்னாபிஷேகத்தின் சிறப்பை அறிய இங்கு செல்லுங்கள்
*******************

மஹா காளி சன்னதி

குப்தகாசியிலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில்
அமைந்துள்ளது 108 சக்திபீடங்களில் ஒன்றென்று கருதப்படும் காளிமட் (Kalimath)
ஆலயம். நெடுஞ்சாலையிலிருந்து சரசுவதி நதியை ஒட்டி சுமார் 10 கி.மீ
இறங்கிச்சென்றால் இவ்வாலயத்தை அடையலாம். முக்கிய சாலை அல்ல என்பதால் பல இடங்களில்
பாதை சேதமடைந்துள்ளது மேலும் ஒற்றைப்பாதை என்பதால் எதிரே வாகனங்கள் வந்தால் நின்றே
செல்ல வேண்டியுள்ளது. சரசுவதி நதியின் கரையில் அருமையான இயற்கைச் சூழலில்
அமைந்துள்ளது இவ்வாலயம். ஆற்றை பாலத்தின்
மூலம் கடந்து ஆலயத்தை அடையலாம்.
ஆலய வளாகத்தில் உள்ள சிலைகள்
தேவி மஹாத்மியம் என்றும் துர்க்கா சப்தசதீ என்றும்
அழைக்கப்படும் மாகாளி, மஹாலட்சுமி,
மஹாசரசுவதி ரூபமான சண்டிதேவியின்
பெருமையைக் கூறும் புராணத்தில் காளி தேவியின் காதை கூறப்பட்டுள்ளது. சும்ப நிசும்பர்களை வதம் செய்ய அன்னை இமயமலைச்
சாரலுக்கு எழிலான சுந்தரியாக வந்தாள்.
அன்னையின் அழகில் மயங்கிய சும்பன் தன்னை மணந்து கொள்ள வேண்டிய போது தன்னை வெல்பவரையே நான் மணந்து
கொள்வேன் என்று அன்னை கூறினாள். எனவே அன்னையுடன் போர் செய்ய தனது தளபதிகளை
அனுப்பினான். அன்னை அவர்களை வதம் செய்து சாமுண்டி என்னும் திருப்பெயர் பெற்றாள்.
அடுத்து தூம்ரலோசனன் வந்தான் அவனையும் அன்னை வென்றாள். அடுத்து இரக்தபீஜன்
வந்தான்., அவனுடைய மேனியிலிருந்து சிந்தும் ஒவ்வொரு இரத்தத்துளியிலிருந்தும்
அவனைப் போலவே ஒரு அரக்கன் தோன்றுவான்
என்றொரு அரிய வரம் பெற்றிருந்தான். ஆகவே அவனை வதம் செய்ய அன்னை தன்
மேனியிலிருந்து கரிய காளியைத் தோற்றுவித்தாள். காளி அவனுடைய ஒரு துளி இரத்தமும்
கீழே சிந்தாதவாறு அவனுடைய இரத்தத்தையும் குடிக்க இரக்தபீஜன் மாண்டான். பின்னர்
சும்ப நிசும்பர்கள் போருக்கு வந்தார்கள் அவர்களையும் வென்று அன்னை தேவர்கள்,
மானிடர்கள் அனைவரையும் காப்பாற்றினாள். காளிதேவி பின்னர் அந்தர்தியானம் ஆன இடமே
இத்தலம் என்று ஒரு ஐதீகம்.
மஹாசரஸ்வதி சன்னதி
இங்கு கோரமான கரிய உருவம் கொண்ட காளியே கௌரிகுண்டத்தில் பேரழகியாக பொன் வர்ணத்தில் கௌரியாக அருள்பாலிக்கின்றாள். துஷ்டர்களை அழிக்கவும் பக்தர்களைக் காக்கவும் அன்னை ஏற்கின்ற வேடங்கள் இவை. எல்லாம் அவள் விளையாட்டே.
தான் அமர்ந்திருந்த மரக்கிளையையே வெட்ட முயன்ற மூடனாக இருந்தவனை தனது அருளால் மஹாகவி காளிதாசனாக மாற்றியவள் இக்காளி என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. காளிதாசர் வடமொழியில் குமாரசம்பவம், மேகதூதம், இரகுவம்சம், அபிஞான சாகுந்தலம் போன்ற அற்புதமான காவியங்களை இயற்றினார். அவற்றில் குமாரசம்பவத்தில் காளிதாசன் கூறியுள்ள இயற்கை வர்ணனைகள் இம்மந்தாங்கினி பள்ளத்தாக்கின் வர்ணனை, சிவசக்தியின் ஐக்கியமும் இப்பகுதியிலே ஏற்பட்டது இவர்களின் கூற்று. ஆகவே காளிதாசனுக்கு அருளியவள் இக்காளி என்பது இவர்கள் நம்பிக்கை. ஸ்ரீநகருக்கு அருகில் உள்ள தாரிதேவி அன்னையின் மேற்பகுதி, கீழ்ப்பகுதி இங்குள்ளது என்றும் ஒருசாரார் நம்புகின்றனர்.
மஹாலக்ஷ்மி சன்னதி
அன்னைக்கு இங்கு திருவுருவம் இல்லை வெள்ளி ஸ்ரீசக்கர
ரூபத்தில் இங்கு வழிபடப்படுகிறாள். மேலிருந்து வெள்ளிக்குடை தொங்குகின்றது.
ஸ்ரீசக்கரத்திற்கு கீழ் ஒரு குளம் உள்ளது அக்குளத்தில் காளி மாதா உறைகிறாள் என்பது
ஐதீகம், தினசரி பூசை
இச்சக்கரத்திற்குத்தான். வருடத்தில் ஒரு நாள் நவராத்திரியின் ஏழாம் நாள்
காலராத்திரி துர்க்கையாக வடநாட்டில்
அன்னையை வணங்கும் நாளன்று மட்டும் ஸ்ரீசக்கரம் அகற்றப்பட்டு கீழே உள்ள
குளத்திற்கு பூசை செய்கின்றனர். அதையும் யாரும் காண முடியாது பூசாரி மட்டும் பூசை
செய்கின்றார். ஆகவே நவராத்திரியின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையை தரிசிக்க
வருகின்றனர். பெருவிழா காலராத்திரி நவராத்திரியை ஒட்டி நடைபெறுகின்றது.
திருக்கோயில் கற்றளியாக இல்லாமல் ஸ்ரீசக்கரத்தைச் சுற்றி
ஒரு கலசத்துடன் இரண்டடுக்கு கூம்பு கூரையுடன் கம்பிகளால் சதுர
வடிவச்சன்னதியாக அமைந்துள்ளது.
ஸ்ரீசக்கரத்தின் முன்னர் இருபுறமும் காளியின் ஆயுதமான பிரம்மாண்ட அரிவாள்கள்
வைத்துள்ளனர். அன்னைக்கு சிவப்பு சுன்ரீ(முக்காடு)
படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள். காளி
தேவியை
ஐயந்தீ மங்கலா காளி பத்ரகாளி கபாலினீ |
துர்க்கா க்ஷமா சிவா தாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா
நமோஸ்துதே ||
என்று தோத்திரம் கூறி வணங்கினோம். அருகிலேயே
மஹாலக்குமிக்கும், மஹாசரசுவதிக்கும் சிவபெருமானுக்கும், அர்த்தநாரீசுவர்ர்க்கும் தனி சிறு ஆலயங்கள் உள. லக்ஷ்மி சன்னதியில் திரியுகநாராயணன் போலவே
அகண்ட சோதி உள்ளது.
சரஸ்வதி ஆறு
ஆற்றுப்பாலம்
சரசுவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் தியானம் செய்ய அருமையான, அமைதியான சூழ்நிலை இவ்வாலயத்தில் நிலவுகின்றது. தியானத்தில் அமர்ந்தால் அன்னையின் அதிர்வலைகளை உணரலாம். இவ்வாறு அன்னையை வணங்கிய பின் மேலே வந்து பத்ரிநாத் செல்லும் பாதையை அடைந்து அடுத்து ஊக்கிமட் அடைந்தோம். ஊக்கிமட்டில் ஒரு சுவையான காதல் கதை நடந்தது அது என்னவென்று அடுத்தபதிவில் காணலாம் அன்பர்களே
யாத்திரை தொடரும் . . . . . . .
2 comments:
மிக அருமையான படங்கள். தேவியின் கதை எல்லாம் அருமை.
அடியேனுடன் பணிபுரியும் ஒரு அன்பர் இப்பகுதியைச் சார்ந்தவர் அவரின் வழிகாட்டுதலின் பேரில் இத்தலங்களுக்கு செல்ல வாய்ப்பு கிட்டியது. இல்லையென்றால் தமிழ்நாட்டில் உள்ள நமக்கு இக்கோவில்களைப் பற்றி அதிகம் தெரியாது.
Post a Comment