Tuesday, November 15, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -56

ஊக்கிமத்   ( ஊக்கிமடம்)

ஊக்கிமத் ஆலயம்

நந்தி மண்டபம் நகார அமைப்பில் விமானம் 

கருவறை

குப்தகாசிக்கு எதிரே அமைந்துள்ளது ஊக்கிமத் என்னும் தலம். வாணாசுரனின் புத்திரி உஷாவிற்கும், கிருட்டிணரின் பேரன் அநிருத்தனுக்கும் திருமணம் இத்தலத்தில் நடைபெற்றதால் உஷாமத் என்றழைக்கப்பட்டு பின்னர் அது மருவி இன்று ஊக்கிமத்(Ukimath) என்றழைக்கப்படுகின்றது. திருக்கேதாரத்திலிருந்து குப்தகாசி - சோப்டா – கோபேஸ்வர் – சமோலி வழியாக பத்ரிநாத் செல்லும் சாலையில் 1311மீ உயரத்தில் இத்தலம் அமைந்திருக்கின்றது.

நந்தியெம்பெருமான்
அசுரனும் நைவேத்ய பழங்களும் 

திருக்கேதாரம் மற்றும் மதுமகேசுவரம் தெய்வமூர்த்தங்கள் பனிக்காலத்தில் இத்தலத்திற்கு வந்து தங்குகின்றனர். அவர்களுக்கு பூசை இத்தலத்தில் நடைபெறுகின்றது. ஆகவே இத்தலம் பஞ்சகேதார் சிம்மாசனம் என்றழைக்கப்படுகின்றது. திருக்கேதாரநாதருக்கு பூசை செய்யும் உரிமை பெற்ற இராவல் இங்கு தங்குகின்றனர். இத்தலம் மதுமகேசுவரம், துங்கநாத், தோரியா தால் ஆகிய இடங்களுக்கு நடைப்பயணம் செல்பவர்களுக்கு நுழைவாயிலாக விளங்குகின்றது.

முதலில் இத்தலத்திற்கு பெயர்வரக் காரணமாக இருந்த உஷாவின் கதை என்னவென்று காணலாமா அன்பர்களே?. வாணாசுரன் என்னும் அசுரன் ஆயிரம் கரங்கள் உடையவன் அவன் சிறந்த சிவபக்தன்,  சிவபெருமானை குறித்து தவஞ்செய்து பல அரிய வரங்களைப் பெற்றான். அவனுடைய புத்திரி உஷா, அவள் பருவமடைந்தபோது இங்கு ஒரு கன்னி மாடம் அமைத்து யாரும் நெருங்கமுடியாதபடி காவலை அமைத்து அக்கன்னி மாடத்தில் அவளை சிறை வைத்தான்.


திருக்கேதாரநாதரும்  மதுமகேசுவரநாதரும் 
 குளிர்காலத்தில்  இத்தலத்தில்  வந்து தங்குகின்றனர்

ஒரு நாள் அவள் கனவில் ஒரு அழகிய வாலிபனைக் கண்டாள் அவனை  மணந்து கொண்டு இன்பம் துய்ப்பதாகவும் கண்டாள். மறு நாள் அவள் தன்னுடைய தோழி சித்ரலேகாவிடம் தன்னுடைய கனவினைக் கூறினாள். அவளும் அனைத்து அரசகுமாரர்களின் சித்திரங்களை வரைந்து காண்பித்தாள். அதில் கிருட்டிணபரமாத்மாவின் பேரன் அநிருத்தனை அடையாளம் கண்டு கொண்டாள் உஷா. பின்னர் சித்ரலேகாவை  அனுப்பி  மாயத்தால் துவாரகையில் உறங்கிக் கொண்டிருந்த அநிருத்தனை தூக்கிவரச்செய்து கன்னி மாடத்தில் அவனுடன் இன்பம் துய்த்து வந்தாள்.


ஆலயவளாகத்தில் உள்ள அருமையான கட்டிடங்கள் இதை பெரிய திருமடலில் திருமங்கையாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.
பொன்னகரஞ்செற்ற புரந்தரனோடொக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்குவாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத்தன்னொக்கும்
கன்னியரையில்லாத காட்சியாள் – தன்னுடைய
இன்னியிர்த் தோழியால் எம்பெருமானீசன் துழாய்
மன்னு மணிவரைத் தோள் மாயவன்- பாவியேன்
என்னையிது விளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்
மன்னவன் தன்காதலனை மாயத்தாற்கொண்டு போய்
கன்னிதன்பால் வைக்கமற்றவனோடெத்தனையோ
மன்னிய இன்பமெய்தினாள்
வாணாசுரன் மகள் உஷாதேவி கொண்ட காதல்: உலகைச் சுற்றியுள்ள கடலிலுள்ள இரணிய நகரை அழித்த இந்திரனோடு இணையான மன்னவனாய் அசுரர்களுக்கு தலைவனான வாணனுடைய பெண் உஷாவையைப் பற்றிக்கூறுகிறேன். அவள் பாவை போல் அழகுடையவள்; உலகிலேயே தனக்கு நிகரான பெண்ணே இல்லாதவாறு அழகால் பெருமையுடையவள்; தனது உயிருக்கு சமமான தோழியின் உதவியால் இவள் செய்தது என்னவென்றாள்.. எனக்குச் சுவாமியாய், அழகிய திருத்துழாய் மாலை பொருந்திய மணிமயமான மலை போன்ற தோள்களை உடையவனாய், ஆச்சரிய பூதனாய், பாவியேனாகிய எனக்கு இக்காமவேதனையை விளைவித்தவனாய், நான்கு திருத்தோள்கள் வாய்ந்த மன்னனாகிய கண்ணனுடைய அன்பார்ந்த பேரனாகிய அநிருத்தனைத் தவத்தின் வலிமையால் கவர்ந்து போய் கன்னிகையான தன்னுடன் வைத்துக்கொண்டு அவனுடன் அளவில்லாத பேரின்பம் பெற்றாள்.
மஹாவிஷ்ணு


பிரம்மா 

சிலகாலத்திற்குப்பின் வாணாசுரனுக்கு உண்மை தெரியவர அநிருத்தனை  சிறை வைத்தான். தன் பேரனை சிறை மீட்க கண்ணன் படை கொண்டு வந்து போரிட்டார். போர் வெகு நாள் நீடித்தது. நிறைவில் சிவபெருமான் இருவருக்கும் சமாதானம் செய்து வைக்க உஷாவிற்கும் அநிருத்தனுக்கும் திருமணம் இத்தலத்தில் நடைபெற்றது.


கேதாரீஸ்வரர்  இருக்கை உஷா- அநிருத்தன் திருக்கல்யாண மண்டபம் 


உஷாவின் பெயரைக்கொண்ட இத்தலத்தில்  எம்பெருமான் ஓங்கேசுவரராக அருள் பாலிக்கின்றார்.  இமயமலை ஆலயங்கள் போல நகார அமைப்பில் ஒரு நெடிய கோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது.  ஆயினும் சில வேறுபாடுகளைக் காணமுடிகின்றது.  இக்கோபுரத்தில் அருமையான பல கற்சிற்பங்கள் உள்ளன. நுழைவாயில் சுவாமிக்கு நேராக இல்லாமல் ஒரு பக்கத்தில் உள்ளது. வாயிலின் இருபுறத்திலும் திருமால் மற்றும் நான்முகனின் அருமையான கற்சிலைகள் அமைத்துள்ளனர். 


கருவறையில் ஐயன் சிவலிங்க ரூபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். வெள்ளிக் கவசம் சார்த்தியிருந்தனர். அருமையாக பிரபையும் இருந்தது. ஐயனுக்கு எதிராக உற்சவ  பஞ்சலோக நந்தியெம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.  மூலவராக கல்நந்தி தனி மண்டபத்துடன் உற்சவ மூர்த்திகளை நோக்கியவாறு வெளியே எழுந்தருளியுள்ளார்.  இரண்டு நந்தியெம்பெருமானின் முன்னர் ஒரு கிண்ணத்தில் பழங்களும் ஒரு அசுரனையும் காண்கிறோம் இது என்ன என்று கேட்டபோது ஒரு சமயம் நந்தியெம்பெருமான் ஐயனுக்கு நைவேத்யம் செய்து கொண்டிருந்த போது  திடீரென்று ஒரு அசுரன் வந்து அதைப் பார்த்துவிட அவ்வசுரனை நந்தியெம்பெருமான் வதம் செய்தார் என்ற சுவையான வரலாற்றைக் கூறினர். இவ்வாலயத்தில் சந்திரசேகரர், விஷ்ணு, வள்ளி தெய்வானை சமேத முருகர் உற்சவ மூர்த்திகளும் உள்ளன. ஐயனுக்கு பின்னர் அஞ்சலி கோலத்தில் மாந்தாதாவின் சிலை உள்ளது.  


அற்புதமான நுழைவு வாயில் மாந்தாதா தனது இறுதி காலத்தில் இத்தலத்தில் அன்னமில்லாமல் ஒற்றைக் காலில் நின்று  தவஞ்செய்தார் எனவே சிவபெருமான் அவருக்கு ஓங்கார ரூபத்தில் தரிசனமளித்தார். எனவே சுவாமிக்கு ஓங்காரேசுவரர் என்று திருப்பெயர். இனி மாந்தாதாவின் சரித்திரத்தைப் பற்றி காணலாமா? அன்பர்களே? மாந்தாதா இராமபிரானின் பாட்டனார். இசுவாகு குலத்தின் மன்னர். இவர் பிறந்த விதம் மிகவும் சுவையானது. இவருடைய தகப்பனார் யுவனாசவர்,  அவருக்கு நூறு மனைவியர் ஆயினும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.  எனவே அவர் புத்திரகாமேட்டி யாகம் நடத்தினார்.  யாகத்தின் முடிவில் மறு நாள் புண்ணிய தீர்த்தத்தை தன் மனைவியருக்கு இவர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் விதியின் விளையாட்டால் இரவு இவருக்கு தாகம் எடுக்க அப்புண்ணிய தீர்த்தத்தை இவரே குடித்து விட்டார். எனவே இவரது நெஞ்சிலிருந்து மாந்தாதா பிறந்தார். தாயின் வயிற்றில் இருந்து பிறக்காததால் இவருக்கு தாய்ப்பால் கிட்டவில்லை. சிவபெருமான் இவரது விரல்களில் இருந்தே இவருக்கு அமிர்தம் கிடைக்கும்படி வரமருளினார். இவருக்காகவே சிவபெருமான் இத்தலத்தில் ஓங்கார ரூபத்தில் எழுந்தருளினார்.இத்தலத்தில் உஷாவிற்கும் அநிருத்தனுக்குன் திருமணம் நடந்த இடத்தையும், அதன் அருகில் சண்டி தேவியின் சன்னதியையும் தரிசிக்கலாம். நான்கு கோலத்தில் சண்டி தேவி நவதுர்க்கைகள், நரசிம்மர் ஆதிசங்கரர் அருள் பாலிக்கின்றனர். அகத்திய முனிவருக்காக சண்டி தரிசனமளித்தாராம். இவ்வாலய வளாகத்தில் திருக்கேதாரநாதரும் மதுமகேசுவரரும் வந்து தங்கும் மண்டபமும், பஞ்ச கேதாரீஸ்வர்கள், வாராகி சன்னதிகளும் உள.
இவ்வாலயத்தின் இன்னொரு சிறப்பு இதன் நுழைவு வாயில்  துவாரம் பத்ரிநாதத்தின் சிம்மதுவாரம் போன்று பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் அதற்கு அடுத்தபடி இந்நுழைவாயில் எழிலாக அமைந்துள்ளது. அறுகோண வடிவில் முற்றிலும் மரத்தால் ஆன இத்துவாரத்தில் யானை, சிம்மம், கிளிகள், பூக்கள், தூண்கள்,  சாளரங்கள் அருமையாக அமைத்துள்ளனர். இப்பகுதி மரத்தச்சர்களின் கைவினைக்கு இத்துவாரம் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. இமயமலைக்கே உரிய சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளி வர்ணங்களில்  அருமையாக காட்சி தருகின்றது இத்துவாரம். இவ்வாலய வளாகத்தில் அமைந்துள்ள அத்தனை கட்டிடங்களிலும் கிளிகள் மற்றும் வர்ணப்பூச்சை நாம் காணலாம். எனவே தங்களுக்கு ஒரு  வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் இவ்வாலயம் சென்று தரிசியுங்கள். பின்னர் சோப்டா நோக்கி புறப்பட்டோம். சோப்டாவை நெருங்கும் போது மாலையாகிவிட்டது. இருட்டிக்கொண்டு வந்தது, சிறிது நேரத்தில் கனமழயையும் பிடித்துக்கொண்டது சுத்தமாக எதுவும் தெரியவில்லை மிகவும் சிரமத்துடன் வாகன ஓட்டுனர் திறமையாக வண்டியை ஓட்டிச்சென்று சோப்டாவை அடைந்தார்.  பயணத்தைத் தொடராமல் அருகில் உள்ள Green View Resort என்ற தங்கும் விடுதியில் இரவு தங்கினோம். அடுத்த பதிவில் சோப்டாவின் சில இயற்கை காட்சிகளைக் காணலாம் அன்பர்களே.

                                                          யாத்திரை தொடரும் . . . . . . .

2 comments:

கோமதி அரசு said...

இனிய யாத்திரை. விவரங்கள் மிக அருமை.
படங்கள் மிக அழகாய் இருக்கிறது.
இனி தொடர்ந்து படிக்கிறேன்.

Muruganandam Subramanian said...

அவனருளால் இவ்வருட யாத்திரை மிகவும் அருமையானதாகவே அமைந்தது. பல புதுத்தலங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. தொடர்ந்து வாருங்கள்.