Saturday, November 19, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -58

கோபேஸ்வர்

சமோலி மாவட்டத்தில் 1400மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய  கரம் கோபேசுவரம் (Gopeshwar) ஆகும். சமோலி மாவட்டத்தின் தலைகராக விளங்குகின்றது. துங்கநாத், அனுசுயாதேவி, ருத்ரநாத், ஆகிய தலங்களுக்கு நுழைவாயில் இவ்வூர். இவ்வூரில் உள்ள பழம்பெருமை வாய்ந்த   வாருங்கள் இவ்வூரில் அமைந்துள்ள கோபேசுவரரின் ஆலயத்தை தரிசிக்கலாம். 


இத்தலத்திற்கு கோபேசுவரம் என்று பெயர் வர ஒரு சுவையான வரலாறு உண்டு. இவ்விடத்தில் இருந்த சுயம்பு சிவலிங்கத்திற்கு ஒரு பசு தானே பால் சொரிந்து கொண்டு இருந்தது. இதை கவனித்த சாகர் எனும் அரசன் இக்கோவிலைக் கட்டினான். பசு அடையாளம்  காட்டியதால் எம்பெருமானுக்கு கோபேசுவரர் என்று திருப்பெயர். ஐயனின் பெயரால் இந்நகருக்கு கோபேசுரம் என்று பெயர். பனி காலத்தில்  பஞ்சகேதாரங்களில் ஒன்றான  ருத்ரநாதர் உற்சவமூர்த்தி இவ்வாலயத்தில் வந்து தங்குவதால் ஐயன் ருத்ரநாதர் என்றுமழைக்கப்படுகின்றார்.

புராதன கோபேசுவரர் ஆலயம்  

மிகவும் பழமையான ஆலயம் தற்போது தொல்பொருள் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலயத்தைக் காணும் போதே இதன் தொன்மை புலப்படுகின்றது. சாலையில் இருந்து 10 படிகள் கீழிறங்கி செல்ல வேண்டும். கட்யூரி வம்சத்தினரின் ஒற்றை காரசிகரம், மரச்சட்டங்களுடன் கூடிய அந்தராளம், மஹாமண்டபம் என்று அமைந்துள்ளது இவ்வாலயம். சுவர்களில் அருமையான சிற்ப வேலைப்பாடுகள் உள.  ஆலய திருச்சுற்றில் பல உடைந்த தெய்வச்சிலைகள் காணக்கிடைக்கின்றன. எனவே முன்னர் இக்கோயிலைச் சுற்றி இன்னும் பல ஆலயங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.


அற்புதமான வேலைப்பாடு 

ஒரே திருச்சுற்று, குளிர் காலத்தில் பஞ்ச கேதாரங்களுள் ஒன்றான ருத்ரநாத் உற்சவர்  வந்து தங்கும் மண்டபம், அர்த்த நாரீசுவரர், பார்வதி,  கருடன், அனுமன், அனுசுயாதேவி வதுர்க்கைகளுக்கு தனி சன்னதி உள்ளது. ஆலய வளாகத்தில் கற்பக மரம் அமைந்துள்ளது. 





உருத்திரேஸ்வரர் இருக்கை 

உருத்திரநாதர்

ஐயனின் ஐந்து முகங்கள்

அனுமன் சன்னதிக்கு எதிரே ஒரு  திரிசூலம் உள்ளது. உத்திரகாசியில் பார்த்தது போல மூவிதழ் சூலம், பரசு, சுதர்சன சக்கரம் மூன்றின் சக்தியும் ஒன்றான திரிசூலம். அவ்வளவு பிரம்மாண்டமானதல்ல 5 அடி உயரம்தான். அது அம்மையின் திரிசூலம் இது ஐயனின் திரிசூலம்.   மன்மதன் யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமான் மேல் மலர்க்கணை எய்தபோது, இத்திரிசூலத்தை அவர் காமன் மேல் வீசினார், அது  இவ்விடத்தில் நிலை கொண்டது என்பது ஐதீகம். இத்திரிசூலம் எட்டு உலோகத்தால் ஆனது, இதுவரை சிறிது கூட மாறுபடவில்லை என்பது இதன் சிறப்பு.

கற்பக மரம் 

கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் 

இத்திரிசூலத்தில் வடமொழியில் நேபாள அரசன் அநேகமல்லன் மற்றும் பல அரசர்களின்  சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோபேஸ்வரரை தரிசித்தபின் சமோலி வழியாக தேசியநெடுஞ்சாலையில் பயணித்து ஹெலாங் அடைந்து கல்பேஸ்வரம் மற்றும் தியானபத்ரிநாதரையும் தரிசனம் செய்தோம் வாருங்கள் அன்பர்களே ஊர்கம் கிராமத்திற்கு டக்கலாம். 


சிவபெருமானின் திரிசூலம் 



                                                            யாத்திரை தொடரும் . . . . . . .

2 comments:

கோமதி அரசு said...

ருத்ரநாதர் தரிசனம் அருமை.
படங்கள் செய்திகள் பார்க்க ஆவலை ஏற்படுத்துகிறது.
தொடர்கிறேன்.

S.Muruganandam said...

இன்னும் சில அருமையான ஆலயங்களை தரிசித்தோம். தொடர்ந்து வாருங்கள் அம்மா.