Sunday, November 20, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -59

                                 கல்பேஸ்வரம் 

இன்று கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள். அஷ்டமஹா விரதங்களின் ஒன்று. இன்று சகல சிவாலயங்களிலும் மாலை சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறும் நாள். இச்சோமவாரத்தின் மகிமைகளை அறிந்து கொள்ள செல்லுங்கள் இங்கே. 

கார்த்திகை சோமவார விரதம் -1         கார்த்திகை சோமவார விரதம்-2


கல்பேஸ்வரர் சன்னதி கற்பகநாதர்

பஞ்சகேதாரங்களில் ஒன்றான சுமார் 2000 மீ உயரத்தில் அமைந்துள்ள கல்பேஸ்வர், வருடம் முழுவதும் திறந்திருக்கும் ஒரே கேதாரம் இதுவாகும். ஐயன் பீமனிடமிருந்து தப்பிக்க பாய்ந்தபின் அவருடைய ஜடாமுடி இத்தலத்தில் தோன்றியதாக ஐதீகம். இத்தலத்தில் கற்பக மரம் உள்ளதால் கல்பேஸ்வர் என்றழைக்கப்படுகின்றது.  அடுத்து ஊர்கம் கிராமத்தில் அமைந்துள்ள பஞ்சபத்ரிகளில் ஒன்றாகக் கருதப்படும் தியானபத்ரி நாதரையும் தரிசனம் செய்தோம். 

ஹெலாங்கிலிருந்து ஊர்கம் செல்லும்  வாகனப்பாதை   
பஞ்ச கேதாரங்களின்   நடைப் பயண விவரம்

ஹெலாங் பிரிவிலிருந்து சுமார் 12கி.மீ தூரத்தில் உள்ள ஊர்கம் கிராமத்திற்கு சுமார் 5 கி.மீ முன்  வரை தற்போது  வாகனம் செல்லும் பாதையுள்ளது. சிறிது காலம் முன்னால் வரை 12 கி.மீ நடைபயணமாகவே அடியார்கள் ஐயனை சென்று தரிசித்து வந்தனர். பாதை ஒருவழிப்பாதைதான் குண்டும் குழியுமாக இருப்பதால் சற்று உயர்வான MAXX, BOLERO  போன்ற வாகனங்கள் இப்பாதைக்கு ஏற்றவை. அதன் பின்னர் கல்பேஸ்வரம் வரையில்  ஒற்றையடி சிமென்ட் பாதை அமைத்துள்ளனர். 


நடந்த களைப்பைப் போக்கிக்கொள்ள 
சிரமப்பரிகாரம் செய்யும் அன்பர் 

நடையணப்பாதை 


வழியிலுள்ள பல கிராம மக்கள் இப்பாதையை பயன்படுத்துகின்றனர். அதிகம் ஏற்ற தாழ்வுகள் இல்லை,  எங்கெங்கு காணினும் சக்தியடா  என்பது போல எப்பக்கம் திரும்பினாலும்  பச்சைப் போர்வை போர்த்திய மலைகள்,  அவற்றின் பனிபடர்ந்த  சிகரங்களைக் காண்கிறோம். டு டுவே பல அருவிகளைக் கண்டு களித்தோம்.


எங்கு திரும்பினாலும் மலைகள் கல்பேச்சுரம் நோக்கி நடைப்பயணம் 

வழியில் உள்ள செழிப்பான வயல்கள் 


அடுக்குப்பாசன வயல்கள் 

மிகவும் அடர்ந்த காடுகள் கொண்ட கல்பகங்கை பாயும் பள்ளத்தாக்கு என்பதால் பல முனிகள் இங்கு தவம் செய்தனர். அதில் முக்கியமானவர்கள் ஊர்வா முனிவரும் துர்வாசரும் ஆவர்.  ஊர்வா முனிவர் தனது தவலிமையால் ஊர்வசியை படைத்தார் என்பது ஐதீகம்.  எனவே இப்பள்ளத்தாக்கு ஊர்வசியின் பெயரால் ஊர்கம் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகின்றது.
புராதன வீடுகள் 

மலர்கள்

மும்மூர்த்திகளை தனது கற்பின் வலிமையால் குழந்தைகளாக மாற்றி பாலூட்டிய அத்ரி மஹரிஷியின்  துணைவி அருந்ததியின் புதல்வர், கோபத்திற்கு பெயர் போன சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படும் துர்வாசமுனிவரின் தபோபூமியும் இதுதான்.  இவர் கல்பேஸ்வரில் உள்ள கற்பகவிருட்சத்தின் அடியில் அமர்ந்து  தவம் செய்தார். பாண்டவர்களின் தாய் குந்திக்கு வரம் அளித்தவர் இவரே. பாண்டவர்கள் வனவாசம் இருந்த போது அவர்களிடம் மதிய வேளையில் தனது சீடர் குழாத்துடன் வந்து உணவு தயாரிக்க கூறிவிட்டு நீராட சென்றபோது அட்சய பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டோமே இனி என்ன செய்வது என்று திரௌபதி கலங்கி நிற்க, ஆபத்பாந்தவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்து பாத்திரத்தில் ஒட்டி இருந்த ஒரு பருக்கை சாதத்தை உண்டு  துர்வாசர் மற்றும் சீடர்களின் வயிற்றை நிரப்பிய லீலை நடந்ததும் இங்குதான் என்பது ஐதீகம்,

அருவி 

கற்பககங்கை ஆறு  (கல்ப கங்கா)

அருவியும் ஆறும் 

பழுதடைந்த தொங்கு பாலம் 

தொங்கு பாலம் பழுதடைந்து விட்டதால் 
தற்காலிகப் பாலம் வழியாக கல்பேஸ்வரத்தை  அடைந்தோம் 


பள்ளத்தாக்கு என்பதால் வயல்களில் நெல், கேழ்வரகு இராஜ்மா போன்ற  பயிர்கள், அவரை, வெண்டை, சோயா, முட்டைக்கோசு பயிரிட்டிருந்தனர்.  வழியில் உள்ள கிராம மக்கள் அடியார்களுக்கு  மிகவும் மரியாதை தருகின்றனர். வழி கேட்டால் மகிழ்ச்சியுடன் காண்பித்துக் கொடுக்கின்றனர். தங்களுக்கு தேவைப்படும் அனைத்துப் பொருட்களையும் மிகவும் சிரமத்துடன் முதுகில் சுமந்து செல்கின்றனர். அடியோங்கள் சென்ற சமயம் மழைக் காலம் முடிந்து பனிக் காலம் துவங்கும் காலம் என்பதால் அறுவடை செய்து கொண்டிருந்தனர். இவ்விளைபொருட்களை ஒரு வருடத்திற்கு சேமித்து வைத்துக்கொள்கின்றனர். காட்டுக்கோழிகளை கண்டோம். மெல்ல மெல்ல திருவந்தெழுத்தை ஓதிக்கொண்டே ஊர்கம் கிராமத்தை அடைந்தோம். வழியில் சில தங்கும் விடுதிகளைப் பார்த்தோம்.
கல்பேஸ்வரம் நுழைவு வாயில் 
குகையில் கல்பேஸ்வரர் சன்னதி 

அருஞ்சுனைநெடிதுயர்ந்த ஒரு மரத்தினடியில் தியானபத்ரி ஆலயத்தைக் கண்ணுற்றோம். முதலில் கல்பேஸ்வரம் சென்று திரும்பி வரும் போது  தரிசித்துக்கொள்ளலாம் என்று  2 கி.மீ தூரம் நடந்து    கல்பேஸ்வரம் வரை சென்றோம். இவ்வாலயம் செல்ல கற்பககங்கை (கல்பகங்கா) ஆற்றைக் கடக்க வேண்டும் மெல்ல மெல்ல திருவந்தெழுத்தை ஓதிக்கொண்டே கல்பேஸ்வரம் வரை சென்றோம். இவ்வாலயம் செல்ல கல்ப கங்கை ஆற்றைக் கடக்க வேண்டும்,  ஆலயத்திற்கு அருகில் செல்லும்  தொங்கு பாலம் சேதம் அடைந்திருந்ததால் தற்காலிகமாக ஒரு சிறு மரப்பாலம் ஆற்றின் மேலே அமைத்திருந்தனர் எனவே கீழிறங்கி  ஆற்றை அடைந்து   பின்னர் மேலேறிச் சென்று  ஆலயத்தை    அடைந்தோம்.


நந்தியெம்பருமான்கள் 

ஐயன் ஒரு சிறு குகையில் சேவை சாதிக்கின்றார். கேதாரத்தைப் போலவே ஒரு சிறு மலைச்சிகரமாகவே எழுந்தருளியுள்ளார் சிவபெருமான், அருகில் விநாயகரும் எழுந்தருளியுள்ளார்.  அருகில் ஒரு குண்டம் உள்ளது அதில் இருந்து நீர் முகர்ந்து வந்து ஐயனுக்கு திருவைந்தெழுத்தை ஓதி திருமுழுக்காட்டினோம். வழியில் பறித்து சென்றிருந்த மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்தோம். தேவாரம் திருவாசகம் இசைத்தோம்.  குகைக்கு வெளியே நந்தியெம்பெருமான்கள் காவல் காக்கின்றனர். வானத்தை ஒட்டடை அடிக்கும் ஒரு நெடிதுயர்ந்த தேவதாரு மரத்தின் அடியில் அனுமனுக்கும் ஒரு சன்னதி உள்ளது.
அனுமன் சன்னதி 

மிகவும் அமைதியான இடம் எந்தவித தொந்தரவும் இல்லாமல் தியானம் செய்ய அருமையான இடம்.  அருகில் கடைகள் ஏதும் இல்லை எனவே பூஜைப் பொருட்கள், வஸ்திரம், நைவேத்யம் நாம்தான் கொண்டு செல்லவேண்டும்.  
குழுவினர் 
அருகில் ஒரு குகையில்  இருந்த ஒரு சாது, பஞ்சகேதாரம் என்பது பஞ்சபூதங்கள், திருவைந்தெழுத்து என்று ஒரு விளக்கம் தந்தார்.

கல்பேஸ்வரம் –      அக்னி –       
ருத்ரநாத்-            வாயு –        ம
மத்தியமகேசுவரம்- ஆகாயம் –      சி
துங்நாத் -          நீர் –          வ
திருக்கேதாரம் –    பூமி -          ய

எவனொருவன் பஞ்ச பூதங்களான இந்திரியங்களை அடக்கி தவம் புரிகின்றானோ அவனுக்கு இறைவன்  தரிசனம் கிட்டும் என்பது இதன் தாத்பரியம் என்றார். 

தரிசனத்திற்கு பிறகு திரும்பி இறங்குகிறோம் சிறிது நேரம் அங்கு அமர்ந்து ஐயனை தியானம் செய்தபின் ஊர்கம் கிராமம் திரும்பி வந்து தியானபத்ரிநாதரை சேவித்தோம். அடுத்தபதிவில் அதைக் காணலாம் அன்பர்களே.

                                                          யாத்திரை தொடரும் . . . . . . .

4 comments:

ப.கந்தசாமி said...

நல்ல யாத்திரை. கொடுத்து வைத்தவர் நீங்கள்.

Muruganandam Subramanian said...

எல்லாம் அவன் செயல். அவனருளால் அவன் தாள் வணங்கமுடியும்.

கோமதி அரசு said...

கல்பேஸ்வரம் – அக்னி – ந
ருத்ரநாத்- வாயு – ம
மத்தியமகேசுவரம்- ஆகாயம் – சி
துங்கநாத் - நீர் – வ
திருக்கேதாரம் – பூமி - ய//

விளக்கம் அருமை.
படங்கள், செய்திகள் எல்லாம் பயனுள்ளவை.

எங்கும் இயற்கை வளம் கண்ணுக்கு குள்ர்ச்சியாய் .
கல்பேஸ்வரரை தரிசனம் செய்தேன் உங்கள் பதிவின் மூலம்.நன்றி.

Muruganandam Subramanian said...

எல்லாம் அவன் செயல். அவரே அழைத்து தரிசனம் அருளினார். வந்து தரிசனம் செய்ததற்கு மிக்க நன்றி.