Tuesday, November 15, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -57

சோப்டா
சோப்டாவிற்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கு

கோமதி அரசு அம்மா அவர்கள் ஹெலிகாப்டரில் எடையைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கின்றனரா ? என்று  கேட்டிருந்தார்கள். ஆமாம் ஆனால் 90 கிலோவிற்கும் எடை அதிகமாக இருந்தால் மட்டுமே. மேலும் ஹெலிகாப்டரில் எவ்வளவு எடை செல்லலாம் என்று ஒரு கணக்கு இருப்பதால் பெரிய குழுவினராக இருந்தால் பிரித்து அனுப்புகின்றனர். 


தங்கிய விடுதி

\

காலையில் திருக்கேதாரநாதரை தரிசனம் செய்துவிட்டு திரும்பி  வரும் போது  ஒரு எடை அதிகமான அன்பர் மட்டும் திரும்பிவர நேரம் ஆனதால் ஃபடாவிலிருந்து கிளம்பும் போதே நன்பகல் ஆகிவிட்டது.   



பின்னர் குப்தகாசி தரிசனம் செய்து, காளிமடத்திற்காக முக்கிய பாதையிலிருந்து  இறங்கி சென்று திரும்பி வந்த போது  மாலை நான்கு மணியாகிவிட்டது. பின்னர் சமோலி செல்லும் குறுக்குப்பாதையில் திரும்பி ஊக்கிமடத்தை தரிசனம் செய்து விட்டு  கிளம்பியபோதே மலைப்பிரதேசம் என்பதால் இருள் சூழ ஆரம்பித்துவிட்டது. வண்டி ஓட்டுநரும் சமோலி செல்வது கடினம்தான் என்று கூறினார். செல்லமுடிந்தவரை செல்லுங்கள் தேவைப்பட்டால் வழியில் தங்கிக்கொள்ள்லாம் என்று கூறினோம் சரியென்று புறப்பட்டார்.   

தங்கிய அறை

திருக்கேதாரத்திலிருந்து பத்ரிநாதம் செல்ல இப்பாதை ஒரு குறுக்குவழிப்பாதை.  பெரும்பாதையானது திரும்ப ருத்ரபிரயாகை சென்று  பின்னர் டெல்லி- பத்ரிநாத் பாதையில் பயணம் செய்ய வேண்டும். அடியோங்கள் பயணம் செய்த பாதை குண்டு என்ற இடத்திலிருந்து சோப்டா, கோபேஸ்வர் வழியாக  சமோலி செல்லும் பாதை. பொதுவாக மலைப்பிரதேசங்களில்  வழித்தடங்கள் ஆற்றின் போக்கை ஒட்டி இருக்கும். அவ்வாறில்லாமல் இப்பாதை மலை உச்சியை ஒட்டி அமைந்த பாதை. போக்குவரத்தும் குறைவு, நேரமும் குறைவாக ஆகும் என்பதால் இப்பாதையில் பயணித்தோம். 

குளிர் காயும் அன்பர்கள் 


மலை உச்சியை ஒட்டி அமைந்த பாதை என்பதால் இரு பக்கமும் அடர்ந்த காடு, நெடிதுயர்ந்த பாசி, காளான் நிறைந்த மரங்கள் அமைந்த காடுகள் என்பதால் வெளிச்சம் மிகவும் குறைவாகவே இருந்தது. சோப்டாவை  நெருங்கும் போது  மழையும் பெய்ய ஆரம்பித்தது. மலைப்பிரதேசங்களில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருந்தால் மாலையில் மழை பெய்வது இயல்பு. முக்கிய பாதை அல்ல என்பதால்  பாதிஅயின் மத்தியில் எந்தவித அடையாளமும் இல்லை என்பதால் வண்டி ஓட்டுவது மிகவும் கடினமாக இருந்தது. மலை உச்சி எனபதனால் மேகங்கள் வந்து சூழ்ந்துகொண்டன. இரண்டட்டிக்குக்கூட பாதை தெரியவில்லை. வண்டி ஒட்டுநர் மிகவும் கவனமாக வண்டியை ஒட்டினார். சோப்டா வரை பாதை ஏற்றம் மிகுந்தது ஆகவே மிகவும் கவனத்துடன் கோளறு பதிகம் பாடிக்கொண்டே பயணம் செய்தோம்.   


அடியோங்கள் சோப்டாவை அடைந்தபோது மழை நின்றுவிட்டது.  வண்டி ஓட்டுநர் மழை பெய்ததாலும், பனி மூட்டம் அதிகமாகிவிட்டதாலும் இனி வண்டி ஓட்டுவது கடினம் என்றார். ஆகவே சோப்டாவில் தங்கலாம் என்று முடிவெடுத்தோம். சோப்டா பஞ்ச கேதாரங்களில் ஒன்றான துங்கநாத் செல்பவர்களுக்கு ஆதாரமுகாம் ஆகும். அங்கு சென்று விசாரித்தபோது அருகில் உள்ள பள்ளத்தாக்கில் ஒரு முகாம் இருக்கின்றது அங்கு சென்று தங்கலாம் என்று கூறினார்கள்.

மலை மழலை 
புல்கான் என்ற இடத்தில் அமைந்துள்ள சோப்டா க்ரீன் வேலி ரிசார்ட் என்ற அந்த தங்கும் விடுதியில் இரவு தங்கினோம். காலையில் கிடைத்த அருமையான  இயற்கைக் காட்சிகள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன.


காலையில் வானிலை சீராகவே இருந்தது. இங்கிருந்து பாதையும் இறக்கம்தான் எனவே சுமார் இரண்டு மணி நேரத்தில் கோபேஸ்வர் என்னும் தலத்தை அடைந்தோம் அங்கு  கோபேஸ்வரரை தரிசித்தோம் அத்தரிசனத்தை  அடுத்தபதிவில் காணலாம்.

                                                             யாத்திரை தொடரும் . . . . . . .

1 comment:

கோமதி அரசு said...

90 கிலோவிற்கும் எடை அதிகமாக இருந்தால் மட்டுமே. மேலும் ஹெலிகாப்டரில் எவ்வளவு எடை செல்லலாம் என்று ஒரு கணக்கு இருப்பதால் பெரிய குழுவினராக இருந்தால் பிரித்து அனுப்புகின்றனர்.//

ஓ! தகவலுக்கு நன்றி. பயணம் செய்பவர்களுக்கு இந்த தகவல் பயன்படும்.