Showing posts with label திருவான்மியூர். Show all posts
Showing posts with label திருவான்மியூர். Show all posts

Friday, October 2, 2020

திருப்பாத தரிசனம் - 40


திருவான்மியூர் ஐதீகம் 

மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் உற்சவர் அம்பாள், ஒன்பது கோணமும் மேவி உறைகின்ற சுக்கிர வார அம்மனாக கண்ணாடி அறையிலே தினமும் நம் அனைவருக்கும் அருட்காட்சி வழங்குகின்றாள். தலையில் கரண்ட மகுடம், பாசம் அங்குசம் தாங்கி அபய வரத திருக்கரங்களுடன் அருள் பாலிக்கின்றாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் திருவிழாக் கோலமாக  திரிபுர சுந்தரி சுக்கிரவார அம்மனாக உட்புறப்பாடு கண்டருளுகிறாள்.  அம்மனின் சௌந்தர்யத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.

அன்னையின் ஆலயத்தின் மஹாமண்டபத்தில் உள்ள  தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர்.  நரம்பு சம்பந்தமான நோய்கள், வறுமை, கடன் முதலியவற்றை நீக்கும் வல்லமை கொண்டவர். சரபேஸ்வரரின் தூணின் பின்புறம் உக்கிர நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.  வெளிப் பிரகாரத்தில் மும்முடி விநாயகர், விஜய விநாயகர், நிறைய பசுக்களை கொண்ட ஒரு பசுமடமும், நாகர் சன்னதியும் அமைந்துள்ளன.

ஆலயத்தின் தெற்கு மூலையில் மடப்பள்ளியை அடுத்துக் காணப்படும் ஸ்ரீவிநாயகர் சன்னதியில் உருவத்தால் மாறுபட்ட மூன்று விநாயகர்கள் அருள் பாலிக்கின்றனர்.

இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமியன்று தியாகராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. மற்றும் பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. வைகாசியில் தியாகேசர் வசந்தோற்சவமும், பௌர்ணமியன்று 18 நடன காட்சியும், வைகாசி  விசாகமும், ஆனியில் ஆனி உத்திரமும், ஆடிப் பூரம் அம்மனுக்கும், ஆவணியில் வினாயகர் சதுர்த்தியும், புரட்டாசியில் நவராத்திரி சமயத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள்  செய்யப்படுகின்றன. ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகமும், கார்த்திகை சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும், கார்த்திகை தீபத்தன்று 18 வகை நடன காட்சியும்,  மார்கழி திருவாதிரையும், திருப்பள்ளியெழுச்சியும், தைப்பூசம், மகா சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பங்குனி பௌர்ணமியை இறுதி நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.  தியாகராஜ தலம் என்பதால், சோமாஸ்கந்தர் பஞ்சமூர்த்தியாக வலம் வருவதில்லை, சந்திரசேகரரே  பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் திருஉலா வருகின்றார். பஞ்ச மூர்த்திகளில் அம்மையும் தனியாக வலம் வருவதில்லை. தியாகராஜர் இரவு பஞ்சமூர்த்திகள் திருஉலா முடிந்தபின் அம்மையுடன் உலா வருகின்றார்.

காமதேனு  ஈசனை வழிபடும்  சிற்பம் 

முதல் நாள் கொடியேற்றம் இரவில் நடைபெறுவது ஒரு சிறப்பு. கொடியேற்றத்திற்கு தியாகராஜப்பெருமானும், திரிபுரசுந்தரி அம்பாளும் எழுந்தருளுகின்றனர்.  ஒவ்வொரு நாள் வாகனமும் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றோர்களும் உடன் வலம் வருகின்றனர். இரண்டாம் நாள் காலை  சூரிய பிரபையில் காமதேனுக்கு காட்சியளிக்கிறார் எம்பெருமான். மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு அருள் பாலிக்கின்றார். மாலை சந்திரனுக்கு அருள் பாலிக்கின்றார். இரவில் தியாகேசர் பார்த்த சாரதிக்கு அருளுகின்றார். நான்காம் நாள் காலை பிருங்கி முனிவருக்கு அருள் பாலிக்கின்றார். ஐந்தாம் காலை எமனுக்கு அருள் பாலிக்கின்றார். மாலை ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் பவனி. தியாகேசர் இராமருக்கு அருளுகின்றார். ஆறாம் நாள் காலை இரட்சசுவிற்கு அருளல், இரவு தியாகேசர் இந்திரனுக்கு அருளல், ஏழாம் நாள் காலை திருத்தேரோட்டம் பிரமனுக்கு அருளல், எட்டாம் நாள்  காலை நான்கு மறைகளுக்கு அருளல் மற்றும் பரிவேட்டை விழா நடைபெறுகின்றது. ஒன்பதாம் நாள் மாலை கல்யாண சுந்தரர் திருக்கல்யாணமும், விமானக் காட்சியும், அகத்தியருக்கு கல்யாண கோலம் காட்டிய நிகழ்ச்சியும், வன்னி மர காட்சியும் நடைபெறுகின்றது, பத்தாம் நாள் காலை சந்திரசேகரர் கடலில் தீர்த்தவாரி  கண்டருளுகிறார். இரவு தியாகர் திருக்கல்யாணமும், கொடி இறக்கமும் வான்மீகி முனிவருக்கு 18 வகை நடனக் காட்சி பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. எம்பெருமானின் நடனத்தை காணும் கண்கள் பேறு பெற்றவை என்பதில் ஐயம் இல்லை ஐயன் மட்டுமல்ல அம்மையும், காவடி சிந்து,  பாம்பு நடனக் காட்சி தருகின்றாள். பதினோராம் நாள் காலை 4 மணி அளவில் பிரம்மோற்சவத்தின் சிகரமாக தியாகேசர் திரிபுர சுந்தரி அம்மனுக்கு அருள பந்தம்பரி 18 திருநடனக் காட்சி தந்தருளுகின்றார். தான் இருக்கும் போது கங்கையை இறைவன் தலையில் ஏற்றுக்கொண்டதால் அம்மை ஊடல் கொள்ள அம்மையை சமாதானப்படுத்த ஐயன் 18 நடனகாட்சி தந்து அருளுவதாக ஐதீகம்.

கல்லிலே கலை வண்ணம் கண்டார்கள் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது இத்திருக்கோவில், தியாகராஜ மண்டபத்தில் உள்ள  தூண்களில் செதுக்கப்பட்டுள்ள கணபதி, முருகன், தண்டபாணி, ஹனுமன், மற்றும் தூண்களின் மேல் உள்ள பூ வேலைப்பாடுகள் நமது சிந்தையை கவர்கின்றன. தூண்களின் மேல் உள்ள சிங்கங்கள் எழில் பெற செதுக்கப்பட்டுள்ளன, தியாகேசரின் சன்னதியிலும் மூன்று கால்   தூண்களூம் அவற்றில் உள்ள சிங்கங்களில் யானையும் சேர்த்து செதுக்கியிருப்பதும், மேலும் சன்னதியின் முன் சுவற்றில் உள்ள மயில் முருகர் வித்தியாமாக இடக்கரத்தில் வில் ஏந்தி காட்சியளிக்கிறார். மருந்தீசர் சன்னதி முழுவதும் தூண்கள் நிறைந்துள்ளது.  அம்மனின் வெளி மண்டபத்தில் கவின் மிகு சிற்பங்கள் நம்மை உவகை கொள்ள வைக்கின்றன.அவற்றுள் சில தபசு காமாட்சி, சரபேஸ்வரர், நரசிம்மர், குபேரர் மற்றும் சடநட சித்தர் நம் சிந்தையை கவர்கின்றன. குதிரை வீரன் சிலையில் ஐந்து மனிதர்கள் மற்றும் இரண்டு புலிகளுடன் மிக சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது , மேலும் யாழி சிற்பங்கங்களையும் கண்டு களிக்கலாம். கிழக்கு இராஜ கோபுரத்தில் மயில் மேல் முருகன் சிற்பத்தில் மயில் வாயில் ஒரு பாம்பை ஏந்தியிருப்பது ஒரு தத்ரூபம்.

கூரையில் உள்ள ஒரு ஓவியம்

வ்வாலயத்தின் அருகில் சற்று தொலைவில், மகான் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் உள்ளது. மேலும் அம்மா சக்கரை பெண் சித்தர் அதிஷ்டானமும் அருகிலேயே உள்ளது. வெளிப்பிரகாரத்தில் தேவாசரிய மண்டபத்தில் வருடத்தின் அனைத்து நாட்களும் சமயச்சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.  ஒரு ஆன்மீக நூலகமும் உள்ளது.   

       ஓட்டை மாடத்தி லொன்பது வாசலும்

       காட்டில் வேவதன் முன்னங் கழலடி

       நாட்டி  நாண்மலர்   தூவி வலஞ்செயில்     

      வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே

என்று திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற நோய்களையெல்லாம் தீர்த்தருளும் மருந்தீசரையும், ஆடும் அழகர் தியாகேசரையும் அவரது 18 வகை நடனத்தையும், திரிபுரசுந்தரி அம்பாளையும் தரிசிக்க திருவான்மியூர் வாருங்கள். அடுத்து திருக்கச்சூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக பிச்சையெடுத்து உணவிட்ட அமிர்த தியாகேசரை தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.

 

Sunday, September 27, 2020

திருப்பாத தரிசனம் - 39

                                              திருவான்மியூர் தியாகேசர் -2

                           

தொண்டை நாட்டுத் தேவாரத்தலங்களுள் இத்தலம் 25வது தலம் ஆகும்.  இன்று கான்க்ரீட் காடாக இருக்கும் திருவான்மியூர் அக்காலத்தில் ஒரு பக்கம் கடல் சூழ , ஒரு பக்கம் வயல்கள் சூழ நெய்தலும், மருதமும் இணைந்து காட்சியளித்த அழகை ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் இவ்வாறு பதிகம் பாடியுள்ளார்

கரையு லாங்கட லிற்பொலி சங்கம் வெள் ளிப்பிவன்

திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர் – என்றும் திருவான்மியூரின் கீழ்திசையில் கடல் இருப்பதால் கடலிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வந்து உப்பங்கழிகளில் ஒதுங்கும் அழகுடையதாகவும் கடல் மீன்கள் துள்ளி வந்து கரையில் கிடந்து உகளும் சிறப்புடையதாகவும், கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்திற்குரிய மலர்கள் தேன் சொரியும்படி பூத்திருக்கும் அழகுடையதாகவும்  இருந்திருக்கின்றது என்றும்

கானயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம்

தேனங்கிய பைம்பொழில் சூழ் திருவான்மியூர் – என்றும் புகழ்ந்து பாடி இத்திருவான்மீயூர் இறைவனை வழிபடுபவர்கள் யாவரும் தேவர் உலகத்தினையும் ஆளும் வல்லமை உடையவர்கள் ஆவார்கள் என்று பலன் கூறியுள்ளார்.

மனதில் ஆயிரமாயிரம் கவலைகள், எத்தனையோ துன்பங்கள், குடும்ப பாரம், வேலையின்மை, உடல்நோய் எத்தனையோ சஞ்சலங்கள் இருந்தும் அதற்கு விடைகிடைக்காமல் திணறும் நேரத்தில்  இத்தலத்து இறைவனை சம்பந்தப்பெருமான் பாடியபடி

திரையார் தென்கடல் சூழ் திருவான்மீயூர் உறையும்

அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே – என்று பாடி சரணடைய உங்கள் துன்பங்கள் அனைத்தும் தீயினில் தூசாகும்.

வாழ்வினில் எத்தனை துன்பம் வந்தாலும் பரவாயில்லை, ஒரு முறை இத்திருவான்மீயூர் தலம் வந்து ஈஸனை வலம் வந்து வழிபடுங்கள் “வாட்டம் தீர்த்திடும் வான்மீயூர் ஈசன் என்று அப்பர் பெருமானும்  ஒரு பதிகம் பாடியுள்ளார்.  சேக்கிழார் பெருமான் தமது  பெரிய புராணத்தில் திருவான்மியூர் தலப் பெருமை குறித்தும் பாடியுள்ளார்.

அதிகார நந்தி சேவை 

அருணகிரிநாதர் இத்தலத்து முருகன் மேல்

  ....  திசைமாமு காழியரி மகவான்மு  னோர்கள்பண

சிவநார்  ஆலமயில்               - அமுதேசர                    

திகழ்பால  மாகமுற மணிமாளி   மாடமுயர                      

திருவான்மி  யூர்மருவு             - பெருமாளே!     

என்று  திருப்புகழ் பாடியுள்ளார். அக்காலத்திலேயே மாட மாளிகைகள் திருவான்மீயூரில் நிறைந்திருந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிந்து கொள்கிறோம்.

அப்பைய தீக்ஷிதர், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள்  மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமர குருதாச  சுவாமிகளும்  இத்தலத்தைப் பாடியுள்ளனர். ஸ்தல புராணம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் பாடியுள்ளார்.

கிழக்கில்  ஏழு நிலை மற்றும் ஐந்து நிலை இராஜ கோபுரங்கள்,  மேற்கில் ஐந்து நிலை கோபுரம். கிழக்கு கோபுரம் வழியாக நாம் கோவிலின் உள்ளே நுழைந்தால் நேர் எதிரே   அருணகிரியாரால் பாடல் பெற்ற முருகர் வள்ளி, தேவ சேனா சமேதராக அழகிய தூண்களுடன் கூடிய  தனி  சன்னதியிலே காட்சியளிக்கிறார். வலப்பக்கம்  முழுமுதற் கடவுளான விஜய கணபதியை தனி சன்னதியில்  கண்டு வணங்கலாம். அம்மன் சன்னதி எதிராக நான்கு தூண் ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது.

அவருக்கு வலப்பக்கம் அற்புத சிற்பங்கள் நிறைந்த தூண்கள் நிறைந்த தியாகராஜ மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தூண்களில் பல எழிலான சிற்பங்கள்.  ஒரு தூணில் அனுமனும் அவருக்கு எதிரே தண்டபாணியும் எழுந்தருளியுள்ளனர்.  தனி சன்னதியில் கிழக்கு நோக்கி எம்பெருமான் மான், மழு ஏந்தி அபய, வரத ஹஸ்ததுடனும், வலக்காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையிலும், நடுவில் ஸ்கந்தன் நின்ற நிலையிலும், இடப்புறம் அம்மை கையில் மலர் ஏந்தி இடது காலை தொங்கவிட்ட நிலையிலும் சோமாஸ்கந்தராக, இருந்தாடும் அழகராக, தியாகராஜராக அருள் பாலிக்கிறார் அம்மையும் திரிபுர சுந்தரியும் தனி காட்சி தருகின்றார். பௌர்ணமி மற்றும் சிறப்பு நாட்களில் தியாகராஜரின் திருவீதியுலாவும் மற்றும் 18 திருநடனக் காட்சியும் சிறப்பாக நடைபெறுகின்றது. எம்பெருமானின் நடனத்தை காணப்பெற்றோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை. தியாகராஜர் இத்தலத்தில் ஆடும் நடனம் அஜபா நடனமாகும்.

சந்திரசேகரர்

அனைத்து தியாகவிடங்க தலங்களிலும் தியாகராஜர் சன்னதி   மூலவரின் வலப்பக்கம், மூலவர் நோக்கும் திசையை நோக்கியவாறு  அமைந்திருக்கும் ஆனால் இத்தலத்தில் மாறாக, எதிரே மூலவரை பார்த்தவாறு அமைந்துள்ளது. இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் அப்பைய தீக்ஷிதர்.   ஒரு காலத்தில் திருவான்மீயூர் ஆலயம் மங்கள ஏரியின் பெரு வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்தபோது இங்கு வந்த அப்பைய தீக்ஷிதர் மூலவரை தரிசிக்க முடியாமல் போக, அவருக்காக மேற்கே திரும்பினாராம் ஈசன்.

தியாகராஜர் மண்டபத்திலுள்ள நுழைவாயில் வழியாக  நுழைந்தால்  மருந்தீசர் சன்னதியை அடையலாம்.  சன்னதி கருவறை மற்றும் அர்த்த மண்டபம் என்னும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. மூலஸ்தானத்தில் ஆலமுண்ட நீலகண்டர், சுயம்புவாக, அருவுருவ லிங்க ரூபமாக, மருந்தீசராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இமண்டபத்தின் தெற்குப்பகுதியில் வினாயகருடன் துவங்கி 63நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அடுத்து தாமரை மலரை ஏந்திய கஜலட்சுமி எழுந்தருளியுள்ளார். பின் சைவ சமய குரவர்கள், அதையடுத்து  வீரபாகு, அருணகிரிநாதர் இருபுறமும் கைகூப்பி நிற்க முத்துக் குமார சுவாமி  இரு தேவியருடன் எழிற்காட்சி தருகின்றார்.

வடக்கில் உற்சவ திருமேனிகள் அனைத்தும் அமைந்துள்ளன. அதையடுத்து  சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சன்னதி உள்ளது. அதையடுத்து 108 சிவலிங்கங்கள் பன்னிரெண்டு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியின் இறுதியில் கால பைரவர் காட்சியளிக்கிறார்.

இம்மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் பஞ்சலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன, இவற்றுள்  முதலாவதாகப் பெரிய அளவில் உள்ளவர் கேதாரீஸ்வரர். தீபாவளி சமயத்தில்  கேதார கௌரி விரதம் இருப்போர் இவரை பூசிப்பது வழக்கம். தீபாவளியன்று (ஐப்பசி அமாவாசை) கேதாரீஸ்வரரை வழிபட பித்ரு சாபம் தீரும், அன்று பல வட மாநிலத்தவர்களும் வந்து சிறப்பாக வழிபடுகின்றனர். உண்ணாமுலையம்மை சமேத அண்ணாமலையாரும், நின்ற கோலத்தில் சூரியனும் உள்ளனர். ருத்ராக்ஷ மண்டபத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். தெற்கிலே அறுபத்து மூவர் தொடர்கின்றனர். வடக்கு கோஷ்டத்தில் துர்க்கையம்மனும், பிரம்மாவும் அருட்காட்சி தருகின்றனர். கிழக்கு கோஷ்டத்தில் திருமால்  காட்சியளிக்கிறார். தெற்கு கோஷ்டத்தில்  ஆலமர் கடவுளும், நர்த்தன விநாயகரும் அருட்காட்சி தருகின்றனர்.

சுவாமி சன்னதியை விட்டு வெளியே வந்து தியாகர் மண்டபத்தைக் கடந்து வெளியே வந்து வலம் வந்தால் கொடிமரம், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். மிகவும் பழமையான கோவில் என்பதை உணர்த்தும் வகையில்   நந்தீஸ்வரரின் திரு முகம் நேராக உள்ளது. அவரை  வணங்கி மேற்கு கோபுரத்தையும் வணங்கி   திரும்பினால்  தல விருட்சமான வன்னி மரத்தை காணலாம் அதன் அடியில் நின்றாலே மெய் சிலிர்க்கின்றது எம்பெருமான் சுயும்புவாக இருந்த இடமல்லவா அங்கிருந்தே அனைத்து விமானங்களையும், கோபுரங்களையும் தரிசித்து    பாப விமோசனம் அடையலாம்.  பின் யாக சாலையை கடந்து வலம் வந்தால் அம்மனின் சன்னதியை அடையலாம்.


த்ரிபுர சுந்தரி அம்பாள்

அம்பாள் சன்னதி கருவறை, அர்த்த மண்டபம்,  முன் மண்டபம், வெளி மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு  தனி பிரகாரத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் நின்ற கோலத்தில் நம்மை எல்லாம் காக்க அம்மை அஞ்ச வேண்டாம் என்று அபய கரத்துடனும், என்னை சரணடை என்று இடது கரத்தால் தனது திருவடியைக் காட்டும் வரத கரமாகவும், பக்தர்களை காப்பதோடு மட்டுமல்லாமல் துஷ்டர்களை அழிக்கவும் என்பதை உணர்த்தும் விதமாக மேற்கரங்களில் அங்குச பாசமும் ஏந்தி நளினமாக சாய்ந்த நிலையில் எழிற்காட்சி தருகின்றாள். அந்த ஜகத்ஜனனியை கண்டவுடன் நம் கவலைகள் எல்லாம் ஓடுகின்றன. என்னே நம் தாயின் எழில் பிறவி எடுத்ததின் பயனை நாம் அடைந்து விட்டதாக உணரலாம். அம்மையைக்காண பல கோடி தவம் செய்திருக்க  வேண்டும். அம்மையின் சன்னதிக்கு முன் சிம்ம வாகனமுள்ளது, அம்பாள் ஓளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறையும்  ஸ்ரீசக்ரமும் நிறுவப்பட்டுள்ளது. உட்பிரகார சுவர்களிலே அபிராமி அந்தாதி  ஒவ்வொரு பாடலுக்கும் தனித் தலைப்புடன் கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுள்ளன. “சோதி மாதவமே! யோகச் சுடரொளி விளக்கே! ஞான போகமே!  அகங்கனிந்த புனிதமே! நிறைவே! அன்பே! தீதிலாது உயிர்கள் ஓங்கு திருவான்மியூருள் மேவு நாதநாதாந்த சொக்க நாயகி” என்று துவாதாசாந்த முனிவர் இத்தல அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளார்.

Sunday, September 20, 2020

திருப்பாத தரிசனம் - 38

                                     

 விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றியனே

 உரையார் பல்புகழாய் உமை நங்கையோர் பங்குடையாய்

 திரையார் தென் கடல்சூழ் திருவான்மியூர் உறையும்

அரையா உன்னையல்லால் அடையாது எனது ஆதரவே  -       என்று                         திருஞானசம்பந்தர் பாடிய தலம்     திருவான்மியூர்  ஆகும்.       இத்தலமும் சென்னையில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள மூன்று பதிகம் பெற்ற தலங்களுள் தென் பகுதியில் அமைந்துள்ளது இத்தலம்.

பிரம்மாவின் வாரிசான பிரதேச குமாரர் வேடுவர்களுடன் கூடி  தீய குணமுடையவராக விளங்கினார். ஒரு சமயம் தலைகீழாகத் தவம் செய்யும் ஒரு முனிவரைப் பார்த்து அவரைக் கொல்ல நினைத்து தோல்வி அடைந்து மனம் மாறி அவர் தவம் முடிக்கும் வரை காத்திருந்து அறிவுரைகள் கேட்டு கங்கைக்கரையில் தவக்கோலம் பூண்டு  முனிவரானார். அப்போது சத்திய லோகத்தில்  பிரம்மா மூலம் இராம காதையை அறிந்த நாரதர் மூலம் உபதேசம் பெற்று  இவ்வுலகுக்கு இராமாயணம் என்னும் இன்னமுதத்தை  குயிலாக மாறி கூவி  வழங்கிய வால்மீகி முனிவரானார். பின்னர் தவம் செய்யும் போது மார்க்கண்டரை சந்தித்து முக்தி அடையும் முறையைக் கேட்க அவரும் தென் திசை நோக்கி செல். ஒரு புண்ணிய இடத்தில் "நான் இருக்கிறேன்" என்ற அசரீரி ஒலி கேட்கும். வ்விடத்தில் இறைவன் தங்களுக்கு முக்திப்பேறு அளிப்பார்  என்று கூறினார்.  அவ்வாறே தென் திசை நோக்கி வந்த வால்மீகி முனிவர் கிழக்கு கடற்கரை ஓரத்தில் நான் இங்கிருக்கிறேன் என்ற ஒலியை கேட்டு  வன்னி மரத்தடியில் சுயம்புவான மூர்த்தியை கண்டெடுத்து வழிபட, மனம் மகிழ்ந்த இறைவன் தியாகராஜராக அவருக்கு பங்குனி பௌர்ணமியன்று 18 வகை நடன காட்சி தந்தருளினார். அவர் வேண்டிக்கொண்டபடி பவளக்கொடியாம்  உமையம்மையுடன்  பக்தர்களுக்கு அருள் புரிய இத்தலத்திலே கோவில் கொண்டார். வான்மீகி  வேண்டிக் கொண்டபடி கோவில் கொண்டதால்  அவர் பெயரால் இத்தலம் வான்மியூர் என்றாயிற்று  தேவாரப்பாடல்  பெற்றதால் திரு என்னும் அடைமொழியும் சேர்ந்து திருவான்மீயூராயிற்று.

வசிஷ்ட முனிவர் நடு மண்டலத்தில் விசுவநாதருக்கு பூஜை செய்ய காமதேனுவின்  உதவியை வேண்டினார், காமதேனுவும் நாள் தோறும் அபிஷேகத்திற்கு பாலை சொரிந்து வந்தது. ஒரு நாள் அது மலையிலேயே தங்கி விட்டதால் பூஜை செய்ய முடியாமற் போனதால்  அவர் இட்ட சாபத்தால், தனது புனிதத் தன்மை நீங்கி காட்டுப்பசுவாகி, அலைந்து திரிந்து,   பழைய ஞானத்தால் மருந்தீசரின் திருமேனி மீது தினம் பால் சொரிந்து பாவ விமோசனம் பெற்றது. எனவே இறைவனுக்கு பால் வண்ண நாதர், கோகரந்தீஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு. காமதேனுவின் குளம்பு பட்ட வடு இன்னும் எம்பெருமானின் திருமேனியில் உள்ளது. பாலபிஷேகத்தின் போது வடுவை தரிசிக்க இயலும்.

மலையரையன் பொற்பாவை பார்வதி திருக்கல்யாணத்தின் போது அனைத்து  சீவ கோடிகளும் கயிலையில் கூடியதால்  வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது அப்போது பூமியை சமன் செய்ய  வேண்டி  தென் திசை வந்த கும்ப முனி அகத்தியருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் இறைவனை நினைக்க அம்மாதொரு பாகர் உமையம்மையுடன் தோன்றி மருந்தும் அதன் வகைகளையும் கூற அகத்தியரும் நலம் பெற்றார். எனவே இறைவர் ஒளஷதீஸ்வரர், அதாவது மருந்தீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். மருந்தீசரை வழிபட்டு  அவரின் திருநீறு, அபிஷேகப் பால் ஆகியவற்றை உண்டு தங்கள் நோய் தீரப்பெற்றோர் ஏராளம். எனவே பக்தர்கள் அனைவரும் இறைவனை “திருவான்மியூர் மருந்து” என்று கொஞ்சியழைக்கின்றனர்.

மந்தமா கியசிந்தை மயக்கறுத்

தந்தமில் குணத்தானை யடைந்து நின்

றெந்தை யீசனென்றேந் திட வல்லிரேல்

வந்துனி ன்றிடும்வான் மியூரீசனே 

என்று திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற வான்மீக நாதர் எழுந்தருளியுள்ள இத்தலம், மூர்த்தி,  தலம்,  கீர்த்தி என்ற மூன்றும் ஒரு சேர அமைந்த தலம். பிறக்க, இறக்க முக்தி அளிக்கும் தலம், நினைத்தாலே வீடு பேறு அளிக்கும் தலம் என்று தல புராணம் கூறுகின்றது. சிறந்த பிரார்த்தனைத் தலம்.  திருவல்லிக்கேணி, திருமயிலை, வாலீஸ்வரர், கங்காதேஸ்வரர், தாண்டீஸ்வரர் ஆலயங்களின் கல்வெட்டுகளில் திருவான்மியூர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வேத ஆகமப்படி தேவமுனிகள் மூலம் பிரம்மாவால்  அமைக்கப்பெற்ற தலம். பிரம்மாவே திருக்கோவில், மாடவீதி, மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் திருத்தேர் மற்றும் உற்சவ விக்கிரங்கள் அமைத்து பங்குனி மாதத்தில் ஆண்டுப்  பெரு விழா   (பிரம்மோற்சவம்)  செய்து வழிபட்டார். திருமால், போர் முடித்த  பார்த்த சாரதி ஆகியோர் வழிபட்ட தலம். இராமர் சீதா பிராட்டியை தேடி வரும் வழியில் இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றார். சந்திரன் குரு பத்தினியை சேர்ந்ததால் குரு சாபம் பெற்று இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டு குரு சாபம்   நீங்க பெற்ற தலம். மருந்தீசர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளதால் மாலை சூரியன்  பூஜை செய்வதாக ஐதீகம்.

சூரியனும் சந்திரனும் எம்பெருமானை இத்தலத்தில் பூசிப்பதால் இத்தலத்தில் தனி சூரியன் மற்றும்  நவக்கிரக சன்னதி கிடையாது.  இந்திரன் தான் செய்த பாவத்தின் காரணமாக பெற்ற சாபங்கள் நீங்க இத்தலத்தின் தீர்த்தங்களில் நீராடி  சிவ பூஜை செய்து தனது பாவங்களை போக்கிக் கொண்ட தலம்.  வேதங்கள் இங்கு சிவபூஜை செய்து புனிதமடைந்தன. யமன் இங்கு சிவபூஜை செய்து பழி நீங்கப்பெற்றார்.   குரங்குருவம் பெற்ற இரக்ஷகன் என்பவன் பிரம்ம லோகத்திலுள்ள கல்யாண தீர்த்தத்தில் மூழ்கியதால் பெண்ணுருவம் பெற்று,  இத்தலத்தை அடைந்து ஜென்ம நாசினியில் மூழ்கிப் பழைய வடிவத்தை பெற்ற தலம். 

பிருங்கி மகரிஷி இப்பெருமானையும் உமையம்மையும் வழிபட்டு சக்தியை நீக்கி சிவனை மட்டும் வழிபட்ட பாவம்  நீங்கப்பெற்ற தலம். நான்கு வேதங்களும் பூசித்த வேதபுரீஸ்வரர், அனுமன் பூசித்த லிங்கமும், இந்திரனது சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரரும், பரத்துவாசர்  பூசித்த லிங்கமும் இத்தலத்தில் உள்ளன.

வான்மீகம்என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மீகியூர்என்றானது என ஒரு  வரலாறு கூறுகிறது. வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் எனவும், அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே, ஆலயத்தின் வடக்குப் பிரகாரம் மற்றும் மேற்குப்பிரகாரம் சந்திக்கும் மூலையில் இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

திரிபுரசுந்தரி அம்பாள்


விரிசடையண்ணல் இங்கே கருவறையில்  சுயம்பு மூர்த்தியாக, அருவுருவமாக  காமதேனுவின் குளம்படியின் வடுவுடன்  சிறிது வடபுறம் சாய்ந்த நிலையில் மேற்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார்.  வான்மீகி முனிவருக்கு முக்தி அளித்ததால் இவர் வான்மீக நாதர் என்ற நாமமும், காமதேனு தன் பாலை சொரிந்து வழிபட்டதால் பால் வண்ண நாதர், கோகரந்தீஸ்வரர் என்றும். உலகில் உள்ள நோய்களின் தன்மையையும், அவற்றை தீர்க்கக் கூடிய மூலிகைகளின் இயல்புகளையும் அகத்தியருக்கு உபதேசித்ததால் மருந்தீசர் என்றும், நான்கு வேதங்கள் பூசித்ததால் வேதபுரீசுவரர் என்றும்,  பாற்கடலில் தோன்றிய அமுதத்தால் வானவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டமையால் அமுதீசுவரர் என்றும் நாமம் ஏற்பட்டது.  இவருக்கு பாலாபிஷேகம் மிகவும் விசேஷமானது.

வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர்,  திரிபுராந்தகர்,  சித்தநாதர் என வணங்கப்படும் ஈசர் இங்கு `தியாகராஜ பெருமான்என்ற பெயரில் உற்சவராகவும் கொண்டாடப்படுகிறார். இவர் ஆடும் தியாகர் என்றழைக்கப்படுகிறார். பௌர்ணமியன்றும், பெருந்திருவிழாக் காலங்களிலும் இவர் ஆடி வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.  அதிகாலை கோபூஜையும், அர்த்தஜாம பால் அபிஷேகமும் இங்கு கண்டு வழிபடத்தக்க பூஜைகள்.

அபிஷேகப்பால் சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இத்தலத்தின் பெருமையை சொல்ல சொல்ல நீளும். ஈசனையும், இறைவியும் ஒரு முறை தரிசிக்கும் போதே குணமளிக்கும் எளிய வைத்தியர்கள். ஒரு முறை வந்து தரிசித்துப் பாருங்கள். அதன் பிறகு அவரே உங்கள் குடும்ப வைத்தியராக மாறி விடும் அதிசயத்தை உணர்வீர்கள்.


உடல் நோயை மட்டுமல்ல பிறவி என்னும் நோயையும் தீர்ப்பவர் மருந்தீஸ்வரர். உயிர்களின் உறக்கத்தைக் களைத்து, அறிவுத் தெளிவை ஏற்படுத்தும் வல்லமை உடையவர் இவர்.   நவகிரகங்களுக்கு தனிச்சன்னதி இன்மையால் இத்தலம் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீக்கவல்ல கோளிலித் தலமாகும்.

மார்க்கண்டேயர் இத்தலத்தில் தவமிருந்து, வன்னி மரத்தடியில் இறைவன் இடபாரூடராகக்  காட்சி தந்து வரம் அருளியபடி கிழக்கில்  பிறவா வரமளிக்கும் ஜென்மநாசினி,  தெற்கில்  மனதில் உள்ள கேடு விளைவிக்கும் காமத்தை அகற்றும் காம நாசினி, மேற்கில் செய்த பாவங்களை அழிக்கும் பாப நாசினி,  வடக்கில் ஞானத்தை நல்கும் ஞானதாயினி, நடுவே   மோட்சப்பேறு வழங்கும் மோட்சதாயினி  என்னும் ஐந்து தீர்த்தங்கள் அமைந்த தலம். இவை ஐந்தும் எம்பெருமானின் சடாமுடியில் வீற்றிருக்கும் கங்கையிலிருந்து தெரித்த ஐந்து துளிகளிலிருந்து உண்டாயின என்பது ஐதீகம். சூரியன், பிரம்மா, யமன், பார்த்தசாரதி, இந்திரன், இராமர், சந்திரன் ஆகியோர் இத்தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்றனர் என்று தல புராணம் கூறுகின்றது.

வன்னி மரம்  இத்தலத்தின்  தல விருட்சமாகும். கோவிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது இவ்விருட்சம். இம்மரத்தின் அடியில் எம்பெருமான் அகத்தியருக்கு திருமணக்காட்சியருளினார் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் கல்யாண சுந்தரர் இம்மரத்தடியில் திருமணக் காட்சி இன்றும் அகத்தியருக்கு அருளுகின்றார். வான்மீகி முனிவர் சுயம்புவான மூர்த்தியை இம்மரத்தடியில் கண்டார் என்பதும் ஐதீகம்.  வைகாசி வசந்தோற்சவத்தின் போது 18 நடனக் காட்சி வன்னி மரத்தடியில் நடைபெறுகின்றது. வசந்தோற்சவத்தால் நல்ல மழை பொழியும் என்பது ஐதீகம்.

இத்தலம் மிகவும் பழமையான தலம் புராண வழி நோக்குமிடத்து பார்த்தசாரதி, இராமர், வான்மீகி முனிவர் ஆகியோர் வழிபட்டமையால் அக்காலத்தே இத்தலம் சிறப்புற்று விளங்கியமை  தெளிவு. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகியோர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பத்தாம் நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டுக்கள் அம்மன் கோவில் சுவற்றில் உள்ளன. இறைவன் திருவான்மியூருடைய மகாதேவனென்றும், இவ்வூரை ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் என்றும் குறித்துள்ளனர்.

Wednesday, April 4, 2018

பங்குனிப் பெருவிழா - 3

திருவான்மியூர் கொடியேற்றம் 



தியாகேசர் -    பாகம் பிரியா(கொண்டி) அம்மை 


சைவத் திருத்தலங்கள், வைணவத் திருத்தலங்கள், முருக திருத்தலங்கள் அனைத்திலும் இந்த பங்குனி உத்திர திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.  "கயிலையே மயிலை, மயிலையே கயிலை" எனப்படும் மயிலாப்பூரில் பத்து நாள் திருவிழா, பத்தாம் நாள்     பௌர்ணமியன்று திருக்கல்யாணம்.  7ம் நூற்றாண்டிலேயே  திருமயிலையில் பங்குனி உத்திர விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டதை இப்பாடலின் முலம் அறியலாம்.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்!

பொருள்: பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட   பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சுரம் என்னும் திருக்கோவிலில் அமர்ந்துள்ள சிவபெருமானது பலி அளிக்கும் விழாவான பங்குனி உத்திர நாளில் நிகழும் ஆரவரமான விழாவைக் காணாது செல்வது முறையோ என்று பாடுகிறார்  ஆளுடையப் பிள்ளைஇந்த திருவிழாவை நாம் அனைவரும் 8ம் நாள் நிகழ்ச்சியான  அறுபத்து மூவர் திருவிழா என்ற பெயரில் நன்றாக அறிவோம்

மேலும் திருவான்மீயூர், வடபழனி வேங்கீஸ்வரம், பூந்தமல்லி, ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவில் முதலிய தலங்களிலும் பங்குனி உத்திர விழா 10 நாள் திருவிழாவாகக்     கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரத்திலும் 10 நாள் உற்சவம் பங்குனி உத்திரத்தன்று ஏகாம்பரேஸ்வரர் ஏழவார் குழலி அம்மை (காமாக்ஷியம்மன்) திருக்கல்யாணம். மூலாதாரத்தலமான திருவாரூரிலே பங்குனி உத்திரத்தன்று இடது பாத தரிசனம். முற்காலத்தில் ஆழித்தேரோட்டமும் பங்குனி உத்திரத்தை ஒட்டியே நடந்துள்ளது. பங்குனி உத்திரம் திருவாரூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை இப்பாடலின் மூலம் அறியலாம்.

ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிபத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே!

திருநெல்வேலியில் பட்டாபிஷேகம்திருச்சி  தாயுமானவர் பிரம்மோற்சவம். திருபுவனம், லால்குடி, கங்கை கொண்டான், பரமக்குடி முத்தாலம்மன் உற்சவம். திருமுருகத்தலங்களில் பழனியில் 10 நாள் உற்சவம், திருக்கல்யாணம், திருப்பரங்குன்றத்திலே  திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேகம். கழுகுமலையில் உற்சவம். எல்லா முருகத்தலங்களிலும் பங்குனி உத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. மன்னார்குடி இராஜகோபாலர், திருமழப்பாடி நந்திகேஸ்வரர், மயிலம் முருகன் வள்ளிதிருச்செந்தூர் முருகன் வள்ளி, கும்பகோணம் சக்ரபாணி விஜயவல்லித்தாயார் திருக்கல்யாணம் மற்றும்  பல திருக்கோவில்களில் திருக்கல்யாண வைபவம் ஒரு நாள் நிகழ்ச்சியாக மட்டும் நடைபெறுகின்றது. சைவ திருத்தலங்களில் மட்டுமல்ல வைணவத் தலங்களிலும்  பங்குனி உத்திரம் கல்யாண உற்சவமாக  கொண்டாடப்படுகின்றது. பெரிய கோவில் ஸ்ரீரங்கத்தில் பெருமாள் தாயார் சேர்த்தி வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டும் தான். பார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோவிலிலும் சேர்த்தி உற்சவம் இன்று நடைபெறுகின்றது. நாச்சியார்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது கல்கருடசேவையையும், மேல்கோட்டையில்  கருடன் கொண்டு வந்த வைரமுடி சேவையையும் பங்குனியில் காணலாம். திருஇந்தளூரில் பிரம்மோற்சவமும், திருவாலி திருநகரியில் திருமங்கையாழ்வாரின் வேடுபறி உற்சவமும் நடைபெறுகின்றது.

விநாயகப்பெருமான்

தியாகராஜப் பெருமான் 


திருவான்மியூர் தொண்டை மண்டலத்தின் ஒரு  தியாகராஜத்தலம்  என்பதால் பஞ்ச மூர்த்தியாக  எழுந்தருளி அருள் பாலிப்பவர் சந்திரசேகரர் ஆவார். தினமும் காலையிலும், மாலையிலும் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில்  மாடவீதி வலம் வந்து அருளுகின்றார்.  நள்ளிரவில் தியாகராஜரும், திரிபுரி சுந்தரி அம்பாளும்  மாடவீதி வலம் வந்து அருளுகின்றனர்.  கொடியேற்றம் முதல் திருநாள் இரவில் நடைபெறுகின்றது.  கொடியேற்றத்திற்கு  தியாகேசர்  எழுந்தருளுகின்றார். அத்தரிசனத்தை இப்பதிவில் காண்கின்றீர்கள்.











திரிபுரசுந்தரி அம்பாள் 



இடபக்கொடி - அஸ்திரதேவர்


                                                                                                     பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . .