விரையார் கொன்றையினாய்
விடமுண்ட மிடற்றியனே
உரையார் பல்புகழாய் உமை நங்கையோர்
பங்குடையாய்
திரையார் தென் கடல்சூழ் திருவான்மியூர்
உறையும்
அரையா உன்னையல்லால் அடையாது எனது ஆதரவே - என்று திருஞானசம்பந்தர் பாடிய தலம் திருவான்மியூர் ஆகும். இத்தலமும் சென்னையில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள மூன்று பதிகம் பெற்ற தலங்களுள் தென் பகுதியில் அமைந்துள்ளது இத்தலம்.
பிரம்மாவின் வாரிசான பிரதேச குமாரர் வேடுவர்களுடன்
கூடி தீய குணமுடையவராக விளங்கினார்.
ஒரு சமயம் தலைகீழாகத் தவம் செய்யும் ஒரு முனிவரைப் பார்த்து அவரைக் கொல்ல
நினைத்து தோல்வி அடைந்து மனம் மாறி அவர் தவம் முடிக்கும் வரை காத்திருந்து அறிவுரைகள்
கேட்டு கங்கைக்கரையில் தவக்கோலம் பூண்டு
முனிவரானார். அப்போது சத்திய லோகத்தில் பிரம்மா மூலம் இராம காதையை அறிந்த
நாரதர் மூலம் உபதேசம் பெற்று இவ்வுலகுக்கு இராமாயணம் என்னும் இன்னமுதத்தை குயிலாக மாறி கூவி வழங்கிய வால்மீகி முனிவரானார்.
பின்னர் தவம் செய்யும் போது மார்க்கண்டரை சந்தித்து முக்தி அடையும் முறையைக்
கேட்க அவரும் தென் திசை நோக்கி செல். ஒரு புண்ணிய இடத்தில்
"நான் இருக்கிறேன்" என்ற அசரீரி ஒலி
கேட்கும். அவ்விடத்தில் இறைவன் தங்களுக்கு
முக்திப்பேறு அளிப்பார் என்று கூறினார். அவ்வாறே தென் திசை நோக்கி வந்த வால்மீகி முனிவர் கிழக்கு கடற்கரை ஓரத்தில்
நான் இங்கிருக்கிறேன் என்ற ஒலியை கேட்டு
வன்னி மரத்தடியில் சுயம்புவான மூர்த்தியை கண்டெடுத்து வழிபட,
மனம் மகிழ்ந்த இறைவன் தியாகராஜராக அவருக்கு பங்குனி பௌர்ணமியன்று
18 வகை நடன காட்சி தந்தருளினார். அவர் வேண்டிக்கொண்டபடி
பவளக்கொடியாம் உமையம்மையுடன் பக்தர்களுக்கு அருள் புரிய இத்தலத்திலே
கோவில் கொண்டார். வான்மீகி வேண்டிக் கொண்டபடி கோவில் கொண்டதால் அவர் பெயரால் இத்தலம் வான்மியூர்
என்றாயிற்று தேவாரப்பாடல் பெற்றதால் திரு என்னும் அடைமொழியும்
சேர்ந்து திருவான்மீயூராயிற்று.
வசிஷ்ட முனிவர் நடு மண்டலத்தில் விசுவநாதருக்கு
பூஜை செய்ய காமதேனுவின் உதவியை வேண்டினார், காமதேனுவும் நாள் தோறும் அபிஷேகத்திற்கு பாலை சொரிந்து வந்தது. ஒரு நாள் அது மலையிலேயே தங்கி விட்டதால் பூஜை செய்ய முடியாமற் போனதால் அவர் இட்ட சாபத்தால், தனது புனிதத் தன்மை நீங்கி காட்டுப்பசுவாகி, அலைந்து
திரிந்து, பழைய ஞானத்தால்
மருந்தீசரின் திருமேனி மீது தினம் பால் சொரிந்து பாவ விமோசனம் பெற்றது. எனவே இறைவனுக்கு பால் வண்ண நாதர், கோகரந்தீஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு.
காமதேனுவின் குளம்பு பட்ட வடு இன்னும் எம்பெருமானின் திருமேனியில் உள்ளது.
பாலபிஷேகத்தின் போது வடுவை தரிசிக்க இயலும்.
மலையரையன் பொற்பாவை பார்வதி திருக்கல்யாணத்தின்
போது அனைத்து சீவ கோடிகளும் கயிலையில் கூடியதால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது
அப்போது பூமியை சமன் செய்ய வேண்டி தென்
திசை வந்த கும்ப முனி அகத்தியருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் இறைவனை நினைக்க அம்மாதொரு பாகர் உமையம்மையுடன் தோன்றி மருந்தும் அதன் வகைகளையும் கூற அகத்தியரும்
நலம் பெற்றார். எனவே இறைவர் ஒளஷதீஸ்வரர், அதாவது மருந்தீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். மருந்தீசரை
வழிபட்டு அவரின் திருநீறு,
அபிஷேகப் பால் ஆகியவற்றை உண்டு தங்கள் நோய் தீரப்பெற்றோர் ஏராளம்.
எனவே பக்தர்கள் அனைவரும் இறைவனை “திருவான்மியூர் மருந்து” என்று
கொஞ்சியழைக்கின்றனர்.
மந்தமா கியசிந்தை மயக்கறுத்
தந்தமில் குணத்தானை யடைந்து நின்
றெந்தை யீசனென்றேந் திட வல்லிரேல்
வந்துனி ன்றிடும்வான் மியூரீசனே
என்று திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற
வான்மீக நாதர் எழுந்தருளியுள்ள இத்தலம்,
மூர்த்தி, தலம், கீர்த்தி
என்ற மூன்றும் ஒரு சேர அமைந்த தலம். பிறக்க, இறக்க முக்தி அளிக்கும் தலம், நினைத்தாலே வீடு பேறு அளிக்கும்
தலம் என்று தல புராணம் கூறுகின்றது. சிறந்த பிரார்த்தனைத் தலம். திருவல்லிக்கேணி, திருமயிலை, வாலீஸ்வரர்,
கங்காதேஸ்வரர், தாண்டீஸ்வரர் ஆலயங்களின் கல்வெட்டுகளில் திருவான்மியூர் பற்றிய
குறிப்புகள் உள்ளன.
வேத ஆகமப்படி தேவமுனிகள் மூலம் பிரம்மாவால்
அமைக்கப்பெற்ற தலம். பிரம்மாவே திருக்கோவில்,
மாடவீதி, மாடமாளிகைகள், கூட
கோபுரங்கள் திருத்தேர் மற்றும் உற்சவ விக்கிரங்கள் அமைத்து பங்குனி மாதத்தில் ஆண்டுப் பெரு விழா (பிரம்மோற்சவம்) செய்து வழிபட்டார். திருமால், போர் முடித்த பார்த்த சாரதி ஆகியோர் வழிபட்ட தலம்.
இராமர் சீதா பிராட்டியை தேடி வரும் வழியில் இத்தல இறைவனை வழிபட்டு வரம்
பெற்றார். சந்திரன் குரு பத்தினியை சேர்ந்ததால் குரு சாபம் பெற்று
இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டு குரு சாபம் நீங்க பெற்ற தலம். மருந்தீசர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளதால் மாலை சூரியன் பூஜை செய்வதாக ஐதீகம்.
சூரியனும் சந்திரனும் எம்பெருமானை இத்தலத்தில்
பூசிப்பதால் இத்தலத்தில் தனி சூரியன் மற்றும் நவக்கிரக சன்னதி கிடையாது.
இந்திரன் தான் செய்த பாவத்தின் காரணமாக பெற்ற சாபங்கள் நீங்க
இத்தலத்தின் தீர்த்தங்களில் நீராடி
சிவ பூஜை செய்து தனது பாவங்களை போக்கிக் கொண்ட தலம். வேதங்கள் இங்கு சிவபூஜை செய்து புனிதமடைந்தன.
யமன் இங்கு சிவபூஜை செய்து பழி நீங்கப்பெற்றார். குரங்குருவம் பெற்ற இரக்ஷகன் என்பவன்
பிரம்ம லோகத்திலுள்ள கல்யாண தீர்த்தத்தில் மூழ்கியதால் பெண்ணுருவம் பெற்று, இத்தலத்தை அடைந்து ஜென்ம நாசினியில்
மூழ்கிப் பழைய வடிவத்தை பெற்ற தலம்.
பிருங்கி மகரிஷி இப்பெருமானையும் உமையம்மையும்
வழிபட்டு சக்தியை நீக்கி சிவனை மட்டும் வழிபட்ட பாவம்
நீங்கப்பெற்ற தலம். நான்கு வேதங்களும் பூசித்த
வேதபுரீஸ்வரர், அனுமன் பூசித்த லிங்கமும், இந்திரனது
சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரரும், பரத்துவாசர் பூசித்த லிங்கமும் இத்தலத்தில் உள்ளன.
வான்மீகம்’ என்று சொல்லப்படும்
புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மீகியூர்’ என்றானது என ஒரு வரலாறு கூறுகிறது. வால்மீகி
முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில்
இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத்
தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் எனவும், அது இன்றும்
ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே,
ஆலயத்தின் வடக்குப் பிரகாரம் மற்றும் மேற்குப்பிரகாரம் சந்திக்கும் மூலையில்
இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும்
கூறப்படுகிறது.
விரிசடையண்ணல் இங்கே கருவறையில்
சுயம்பு மூர்த்தியாக, அருவுருவமாக காமதேனுவின் குளம்படியின் வடுவுடன் சிறிது வடபுறம் சாய்ந்த நிலையில்
மேற்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார்.
வான்மீகி முனிவருக்கு முக்தி அளித்ததால் இவர் வான்மீக நாதர் என்ற
நாமமும், காமதேனு தன் பாலை சொரிந்து வழிபட்டதால் பால் வண்ண நாதர்,
கோகரந்தீஸ்வரர் என்றும். உலகில் உள்ள நோய்களின் தன்மையையும்,
அவற்றை தீர்க்கக் கூடிய மூலிகைகளின் இயல்புகளையும் அகத்தியருக்கு உபதேசித்ததால்
மருந்தீசர் என்றும், நான்கு வேதங்கள் பூசித்ததால் வேதபுரீசுவரர்
என்றும், பாற்கடலில்
தோன்றிய அமுதத்தால் வானவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டமையால் அமுதீசுவரர்
என்றும் நாமம் ஏற்பட்டது. இவருக்கு பாலாபிஷேகம் மிகவும் விசேஷமானது.
வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர்,
ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர், திரிபுராந்தகர், சித்தநாதர் என வணங்கப்படும் ஈசர் இங்கு `தியாகராஜ
பெருமான்’ என்ற பெயரில் உற்சவராகவும் கொண்டாடப்படுகிறார்.
இவர் ஆடும் தியாகர் என்றழைக்கப்படுகிறார். பௌர்ணமியன்றும், பெருந்திருவிழாக்
காலங்களிலும் இவர் ஆடி வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அதிகாலை கோபூஜையும், அர்த்தஜாம பால் அபிஷேகமும்
இங்கு கண்டு வழிபடத்தக்க பூஜைகள்.
அபிஷேகப்பால் சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இத்தலத்தின் பெருமையை சொல்ல சொல்ல நீளும். ஈசனையும், இறைவியும் ஒரு முறை தரிசிக்கும் போதே குணமளிக்கும் எளிய வைத்தியர்கள். ஒரு முறை வந்து தரிசித்துப் பாருங்கள். அதன் பிறகு அவரே உங்கள் குடும்ப வைத்தியராக மாறி விடும் அதிசயத்தை உணர்வீர்கள்.
உடல் நோயை மட்டுமல்ல பிறவி என்னும் நோயையும் தீர்ப்பவர் மருந்தீஸ்வரர். உயிர்களின் உறக்கத்தைக் களைத்து, அறிவுத் தெளிவை ஏற்படுத்தும் வல்லமை உடையவர் இவர். நவகிரகங்களுக்கு தனிச்சன்னதி இன்மையால் இத்தலம் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீக்கவல்ல கோளிலித் தலமாகும்.
மார்க்கண்டேயர் இத்தலத்தில் தவமிருந்து, வன்னி மரத்தடியில் இறைவன்
இடபாரூடராகக் காட்சி
தந்து வரம் அருளியபடி கிழக்கில் பிறவா வரமளிக்கும் ஜென்மநாசினி, தெற்கில் மனதில் உள்ள கேடு விளைவிக்கும் காமத்தை அகற்றும்
காம நாசினி, மேற்கில் செய்த பாவங்களை
அழிக்கும் பாப நாசினி, வடக்கில் ஞானத்தை நல்கும் ஞானதாயினி, நடுவே மோட்சப்பேறு வழங்கும் மோட்சதாயினி என்னும் ஐந்து தீர்த்தங்கள் அமைந்த
தலம். இவை ஐந்தும் எம்பெருமானின் சடாமுடியில் வீற்றிருக்கும்
கங்கையிலிருந்து தெரித்த ஐந்து துளிகளிலிருந்து உண்டாயின என்பது ஐதீகம். சூரியன், பிரம்மா, யமன்,
பார்த்தசாரதி, இந்திரன், இராமர், சந்திரன் ஆகியோர் இத்தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை
செய்து பாவ விமோசனம் பெற்றனர் என்று தல புராணம் கூறுகின்றது.
வன்னி மரம்
இத்தலத்தின் தல விருட்சமாகும். கோவிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது
இவ்விருட்சம். இம்மரத்தின் அடியில் எம்பெருமான் அகத்தியருக்கு
திருமணக்காட்சியருளினார் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் கல்யாண சுந்தரர்
இம்மரத்தடியில் திருமணக் காட்சி இன்றும் அகத்தியருக்கு அருளுகின்றார். வான்மீகி முனிவர் சுயம்புவான மூர்த்தியை இம்மரத்தடியில் கண்டார் என்பதும் ஐதீகம். வைகாசி வசந்தோற்சவத்தின் போது
18 நடனக் காட்சி வன்னி மரத்தடியில் நடைபெறுகின்றது.
வசந்தோற்சவத்தால் நல்ல மழை பொழியும் என்பது ஐதீகம்.
இத்தலம் மிகவும் பழமையான தலம் புராண வழி
நோக்குமிடத்து
பார்த்தசாரதி, இராமர், வான்மீகி முனிவர்
ஆகியோர் வழிபட்டமையால் அக்காலத்தே இத்தலம் சிறப்புற்று விளங்கியமை தெளிவு. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர்
ஆகியோர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பத்தாம்
நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டுக்கள் அம்மன் கோவில் சுவற்றில் உள்ளன. இறைவன் திருவான்மியூருடைய மகாதேவனென்றும், இவ்வூரை ஜயங்கொண்ட
சோழ மண்டலத்துப் புலியூர் என்றும் குறித்துள்ளனர்.
No comments:
Post a Comment