திருவொற்றியூர் - மாணிக்க தியாகேசர் (3)
இத்திருத்தலத்தில் எம் ஐயனின் கருவறை தொண்டை மண்டல அமைப்பான 'கஜ பிருஷ்ட விமானம்' (யானையின் பின் புறம்) என்றழைக்கப்படும் அர்த்த சந்திர அமைப்பில் அமைந்துள்ளது.
மூலவர் பிரகாரத்தில் கலிய நாயனார், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தல விநாயகர் சன்னதிகள் அமைந்துள்ளன. அடுத்து ஆதி சங்கரர் சன்னதி
உள்ளது. ஆச்சாரியரின் நான்கு சீடர்களும் பீடத்தில் உள்ளனர்.
அடுத்து ஏகாதச ருத்ர லிங்கர் சன்னதி. அடுத்து முருகன்
சன்னதி. கோட்டத்தில் மஹாவிஷ்ணு பிரயோக சக்கரத்துடனும், துர்க்கை மகிடன் இல்லாமலும்
தரிசனம் அளிப்பது ஒரு சிறப்பு. மூலஸ்தானத்திற்கு வெளியே அமைந்துள்ள 64கால் மண்டபத்தின் மையத்தில் ஆடற்கரணங்களின் அற்புதமான சிலைகள் அலங்கரிக்கின்றன.
இம்மண்டபத்தில் நடராசப்பெருமானின் சன்னதி அமைந்துள்ளது.
மூலையில் த்வனி சண்டேஸ்வரர் 6 அடி உயரத்தில் கையில் மழுவுடன் கம்பீரமாக தரிசனம்
அளிக்கின்றார்.. ஆடல் வல்லானின் பின்புற
சுவற்றில் ஏகபாத மூர்த்தி சிற்பம் எழிலாக அமைந்துள்ளது.
ஆசையை வென்றால் அனைத்தும் கிடைக்கும்
எனும் தாரக மந்திரத்தை கொண்ட பட்டினத்தார் திருவொற்றியூரில் முக்தி பெற்று உயிரோடு
ஜீவசமாதியானார். காவிரிப்பூம்பட்டிணத்தில் நகரத்து செட்டியார் மரபில் தோன்றிய
இவர், இல்லறவாழ்வில் மகப்பேறு இல்லாமல் மிகவும் வருத்தம் கொண்டு சிவபெருமானை
வேண்டிக்கொண்டதின் பேரில் திருவிடைமருதூர் இறைவனே வளர்ப்பு மகனாக “மருதவாணர்” என்ற
பெயரில் வளர்ந்து வந்தார். ஒரு சமயம் மருதவாணர் கடல் கடந்து வாணிபம் செய்து வீடு
திரும்பிய போது அவர் தனது திருக்கரத்தில் ஒரு காதறுந்த ஊசியும், ஒரு கிழிந்த
ஓலையையும் மட்டுமே கொண்டு வந்தார். அவ்வோலையில் காதறுந்த ஊசியும் வாராது காண் கடை
வழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது.
சிவபெருமானைத்தவிர மற்ற எல்லா
செல்வமும் நிலையற்றது என்ற ஞானம் பெற்று
அனைத்தையும் துறந்து கோவணத்துடன் ஊர் ஊராக சென்று இறைவனைப் போற்றி பாடல்களை
பாடி வந்தார். தன்னைப் பெற்ற தாயார் இறந்த போது பச்சை வாழை மட்டையில் அவரை படுக்க
வைத்து தனது பாடல்களின் மூலம் அவரது ஈமச்சடங்குகளை செய்தார். காசி மன்னனை உண்மை
உணர வைத்தார் அவரும் பத்திரகிரியார் என்று இவரது சீடரானார். இருவரும் பல
தலங்களுக்கு சென்று திருவிடைமருதூரில் இருந்த போது பத்திரகிரியாரும் இறைவனடி
சேர்ந்தார். பட்டினத்தார் தனக்கு எப்போது முக்தி என்று வினவ இறைவன் அவருக்கு ஒரு
பேய்க்கரும்பை அளித்து எத்தலத்தில் இக்கரும்பு இனிக்கின்றதோ அத்தலத்தில் முக்தி
என்றார். திருவொற்றியூர் இறைவனை தரிசித்து வரும் வழியில் பேய்க்கரும்பு இனித்தது.
எனவே அவர் திருவொற்றியூரில் தங்கினார். ஆடி மாதம் உத்திரடாத்தன்று கடற்கரை ஓரத்தில் மீனவ சிறுவர்களுடன் சித்து
விளையாடல்கள் ஆடினார். தன்னை ஒரு இடத்தில் மண்ணில் புதைக்குமாறு செய்து மற்றொரு
இடத்தில் வெளியே வந்தார். இப்படி இருமுறை செய்தார். மூன்றாம் முறையாக புதைத்தபிறகு
அவர் வெளியே வரவில்லை. அவர் புதையுண்ட இடத்தில் சிவலிங்கமாக காட்சி அளித்தார்.
இவர் திருவொற்றியூர் இறைவனைப் போற்றி
28 பாடல்கள் பாடியுள்ளார். இவை 11-ம் திருமுறையில் உள்ளன. பட்டினத்தார் முக்தி
பெற்றதால் இது முக்தித்தலம். அவருடைய ஜீவசமாதி கடற்கரை ஓரத்தில் அமைதியாக காட்சி
தருகின்றது.
ஐயும் தொடர்ந்து விழியும் செருகி அறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்
யான்
செய்யும் திருவொற்றியூருடையீர் திரு நீறும் இட்டு
கையும் தொழப் பண்ணி ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே!
என்று எழுத்தறியும் பெருமானிடம் பட்டினத்தடிகள் வேண்டுகிறார்.
“அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” எனப்போற்றப்படும் இராமலிங்க அடிகள்
பள்ளிப் படிப்பே இல்லாமல் பாடல் இயற்றும் திறமை பெற்றவர். இவர் சிறு வயதிலிருந்தே
ஒற்றியூர் இறைவனை வணங்கி இக்கோவிலில் உள்ள தல விருட்சமாகிய அத்தி மரத்தின் கீழ்
அமர்ந்து தவம் செய்து சிவனருள் பெற்றவர். வள்ளலார் தற்போது தங்கசாலை
என்றழைக்கப்படும் இடத்திலிருந்து தினமும் நடந்து வந்து வடிவுடையம்மனை வணங்கிய பின்
தன் அண்ணியார் வீட்டிற்குச் சென்று உணவருந்துவது வழக்கம். ஒரு நாள் இவர் இவ்வாறு
அன்னையை தரிசித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய போது அண்ணியார் வீட்டை உள் பக்கமாக
பூட்டிக்கொண்டு தூங்கி விட்டார். அடிகளார் தூங்கும் தன்னுடைய அண்ணியை எழுப்ப
மனமில்லாமல், பசியுடன் அப்படியே திண்ணையில் படுத்துக்கொண்டார். அன்பனின் பசியை
பொறுக்காமல் ஸ்ரீவடிவுடையன்னை அவரது அண்ணியாரின் உருவில் வந்து அவருக்கு உணவு
பரிமாறினாள். இவ்வாறு அன்னையில் அருள் பெற்ற வள்ளலார் சுவாமிகள் அம்மனைப் போற்றி
“ஸ்ரீவடிவுடை மாணிக்க மாலை” என 101 பாடல்களையும், ஆதிபுரீஸ்வரரின் மீது
“எழுத்தறியும் பெருமான் மாலை” என்று 31 பாடல்களையும் பாடியுள்ளார்.
வருடம் முழுவதும் திருநாள்தான்
இவ்வாலயத்தில் சித்திரையில் வருடப்பிறப்பு, ஆதி சங்கரர் உற்சவம் மற்றும்
வட்டப்பாறை அம்மன் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. வைகாசியில் தியாகராஜ
சுவாமிக்கு பதினைந்து நாட்கள் வசந்தோற்சவம். ஆனியில் ஆடல் வல்லானுக்கு
ஆனித்திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தன்று திருவொற்றீசருக்கும், வடிவுடையம்மனுக்கும்
சந்தனக் காப்பு விழாவும், அம்மாதத்தில் சுந்தர மூர்த்தி நாயனாருக்கும், கலிய
நாயனாருக்கும் உற்சவம் நடைபெறுகின்றது. ஆவணியில் விநாயகர் சதுர்த்தி மற்றும்
மூலத்தன்று தியாகராஜர் உற்சவம் கண்டருளுகின்றார். புரட்டாசியில் வடிவுடையம்மன்
நவராத்திரி உற்சவம் கண்டருளுகின்றார். விஜய தசமியன்று தியாகேசர் வீதி உற்சவம்
கண்டருளுகின்றார். ஐப்பசியில் அன்னாபிஷேகமும், கந்தர் சஷ்டி லக்ஷார்ச்சனையும்,
பூசத்தன்று திருஞானசம்பந்தர் ஞானப்பால் விழாவும் நடைபெறுகின்றது. கார்த்திகை
பௌர்ணமியன்று கவசம் திறந்து புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம், இரவு தியாகேசர் வீதி
உற்சவம். மார்கழியில் முழு நிலவன்று காலை மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா
தரிசனம், மாலை தியாகேசர் பதினெட்டு நடன உள் உற்சவம். தைப்பூசத்தன்று காலை சந்திரசேகரர் தெப்பம் இரவு தியாகராஜர்
வீதி உற்சவம். மாசிமாதம் பெருந்திருவிழா.
தங்கத்தேரில் வடிவுடையம்மன்
ஒவ்வொரு வருடமும் மாசி மாத முழு நிலவு நாளை
தீர்த்த நாளாகக் கொண்டு பெருந்திருவிழா
நடைபெறுகின்றது. பிரம்மா, நந்தியெம்பெருமான்,
உரோமச முனிவர் ஆகியோருக்காக தியாகேசப்பெருமான் நடனம் ஆடுவது
இத்திருவிழாவின் சிறப்பு. திருவிழாவின் இரண்டாம் நாள் நந்திகேஸ்வரருக்காகவும், ஐந்தாம் நாள் பிரம்மாவிற்காகவும், ஆறாம் நாள் விஷ்ணு
மற்றும் உரோமச முனிவருக்காகவும், திருவிழா நிறைவு நாளான பதினொன்றாம் நாள் உமா தேவியாரின் ஊடலை
தணிக்க பந்தம்பறி நடனமும் ஆடி அருளுகின்றார். அம்மனின் பின்புறம் இருந்து ஐயனின்
நடனத்தை கண்டு களிப்பது அன்பர்களாகிய
நமக்கு பெரும் பேறாகும். ஒன்பதாம்
நாள் கல்யாண சுந்தரர் அகத்தியருக்கு திருக்கல்யாண காட்சி தந்தருளுகின்றார். உடன்
கல்யாண கோலத்தில் சங்கிலியுடன் சுந்தரரும் மற்ற நாயன்மார்களும்
திருக்கல்யாணக்கோலம் கண்டு மகிழ்கின்றனர்.
பட்டினத்தார் மரபில் வந்த
நாட்டுக்கோட்டை நகரத்தார், இத்தலத்தில் தெற்கு மாட வீதியில் ஒரு மண்டபத்தை நிறுவி,
தண்டாயுதபாணி பெயரில் ஆன்மீகப்பணி செய்து வருகின்றனர். மாசிப்பெருவிழாவின் போது
பவளக்கார தெருவிலிருந்து தண்டபாணி தெய்வத்தை எழுந்தருளச்செய்கின்றனர். அவர் ஐந்து
நாட்கள் திருவொற்றியூரில் தங்கியிருக்கும் போது பூஜை நடத்தி அன்னதானம்
செய்கின்றனர்.
மனமெனுந் தோணி பற்றி
மதியெனும் கோலை ஊன்றிச் –
சினமெனுஞ் சரக்கை ஏற்றிச்
செறிகட லோடும் போது
மதனெனும் பாறைதாக்கி
மறியும்போது அறிய வொண்ணாது
உனையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே.
என்று அப்பர் பெருமான் பாடிய
திருவொற்றியூரில் ஆதிபுரீஸ்வரையும், வடிவுடை நாயகியையும், மாணிக்க தியாகரையும் தரிசித்த நாம் அடுத்த
தொண்டை நாட்டின் உபவிடங்கத்தலமான
திருவான்மியூரை தரிசிக்கலாம்.
தியாகேசர் தரிசனம் தொடரும் . . . . .
No comments:
Post a Comment