Saturday, September 5, 2020

திருப்பாத தரிசனம் - 37


                                தொண்டை மண்டலத்தின் உபவிடங்கத் தலங்கள்


திருவொற்றியூர் - மாணிக்க  தியாகேசர்  (2)

வடிவுடையம்மன் 

தொண்டை மண்டலத்தின் மூன்று மகா சக்தி தலங்களில் இத்தலம் ஞான சக்தித் தலம் ஆகும். இங்கே எம் அம்மை வடிவுடை நாயகி ஞாசக்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். மற்ற சக்தி தலங்கள் திரு முல்லை வாயிலின் கொடியிடை நாயகி கிரியா சக்தி, மேலூரின் திருவுடை நாயகி இச்சா சக்தி.  "எவரொருவர் பௌர்ணமி அன்று இந்த மூன்று சக்திகளையும் தரிசிக்கின்றார்களோ அவர்களுக்கு எம் அம்மையின் பூரண கடாட்சம் கிட்டும்" என்பது  ஐதீகம். அதுவும் வெள்ளிக் கிழமையன்று பௌர்ணமியும் சேர்ந்து வந்தால் அத்தினத்தில் தரிசிப்பது மிகவும் சிறப்பு.


அம்மைக்கு வட கிழக்கு மூலையில் இங்கே தனிக் கோவில் உள்ளது, அம்பாள் வடிவுடையம்மை, திரிபுர சுந்தரி என்றும் அழைத்து போற்றுகின்றனர் பக்தர்கள்.  தெற்கு நோக்கி  நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள் அன்னை. வள்ளலாருக்கு அவர் அண்ணியைப் போன்ற தோற்றத்தில் வந்து நேரில் உணவளித்த கருணை தெய்வமான, வடிவுடையம்மன் மீது அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் 100 பாடல்களை கொண்ட "வடிவுடை மாணிக்க மாலையை" பாடியுள்ளார்அதில் ஒரு பாடல் இதோ:

அணியே அணி பெறும் ஒற்றித் தியாகர் தன் அன்புறு சற்

குணியே எம் வாழ்க்கை குல தெய்வமே மலைக்கோன் தவமே

பணியேன் பிழை பொறுத்தாட் கொண்ட தெய்வப்பதி கொள் சிந்தா

மணியே என் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே!

எம் அன்னையின் அழகே அழகு அம்மை பெயருக்கு ஏற்ப அழகின் உருவமாகத் திகழ்கின்றாள். நான்கு திருக்கரங்கள் அபய வரத திருக்கரங்களுடன் பக்தர்கள் குறை கேட்கும் விதமாக தலையை வலப்புறம் சாய்த்தவாறு அருள் பாலிக்கிறாள்.  ஈசன் சன்னதியில் அவ்வளவு கூட்டம் இல்லை ஆனால் தாயின் சன்னதியில் கூட்டம் அலை மோதுகின்றது. ஆதி சங்கரர் ஸ்தாபித்த அம்மன் என்பதால் அவர் நியமித்தபடி எம் அம்மையின் கோவிலில் இன்றும் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகளே பூஜை செய்கின்றனர். அம்பாளின் பொலிவான திருமுகத்தை பார்த்து விட்டால் நமது கவலைகள் எல்லாம் பஞ்சாக பறந்து விடும்.

இச்சா சக்தி - கிரியா சக்தி - ஞான சக்தி

வெள்ளிக்கிழமை அன்னையை தரிசனம் செய்வது மிகவும் சிறந்த பலனைத்தரும். இன்றும் வெள்ளிக்கிழமைகளில்  விடியல் காலை விசுவரூப காட்சி காணலாம். அது இன்று நேற்றல்ல தொன்று தொட்டு தொடரும் ஒரு மெய்ஞான காட்சி அதை வடிவுடை அம்மன் விருத்தத்தில் வரும் இப்பாடல் மூலம் அறியலாம்

சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி

சோதியாய் நின்ற உமையே

சுக்கிரவார பெருமையும் கண்டு உனது சேவையும்

சொல்லவும் எளிதாகுமோ ......

வடிவுடையம்மன் மேல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராசரும் ஐந்து கீர்த்தனைகள் பாடியுள்ளார்.  ஞானவடிவாம்பிகே தயாபரி என்று அம்பாளை போற்றியுளார். அதில் வெள்ளிக் கிழமை தரிசனத்தின் சிறப்பைப் பற்றியும் கூறியுள்ளார்.

தொண்டை நாட்டில் சக்தி தலங்கள் அமைந்ததற்கான வரலாறு. பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அப்பாறை வெடித்து மூன்று பாகங்களாக சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விட துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு அருட்காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாள். சிற்பியும் அவ்வாறே மூன்று சிலைகளை வடித்து பிரதிஷ்டை செய்தார். இம்மூன்று அம்பிகையரையும் பௌர்ணமியன்று  காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளில் வழிபடுவது சிறந்த பலனைத்தரும். அன்றைய தினம் மூன்று சன்னதிகளும் நாள் முழுவதும் திறந்திருக்கும்.

காலை திருவுடையம்மனை மஞ்சள் வஸ்திரம் சார்த்தி நெய் தீபம் ஏற்றி, வெற்றிலை பாக்குடன் அர்ச்சனை செய்ய திருவாகிய செல்வம், குழந்தைப்பேறு, தொழில் அபிவிருத்தி உண்டாகும். மதியம்   வடிவுடையம்மனுக்கு  சிவப்பு வஸ்திரம் சார்த்தி வழிபட வாக்கு வன்மை , திறமையான கல்வி அளிப்பாள்.  மாலை கொடியுடையம்மனை பச்சை வஸ்திரம் சார்த்தி வழிபட குழந்தைப்பேறு, திருமணத்தடை நீங்கும், தொழில் சிறக்கும், வீரம், தொழில் ஊக்கம், வெற்றி காரிய தடை நீங்கும்.

வடிவுடையம்மனை வழிபட்டு பேறு பெற்றவர்கள், பிரம்மா, இந்திரன், தும்புரு, நாரதர் மற்றும் வருணன் ஆகியோர். க்ஷயரோகத்தினால் அவதியுற்ற சந்திரனின் நிலை கண்டு அவனது மனைவிகள் 27 நட்சத்திரங்களும் இந்திரனிடம் முறையிட, இந்திராணி வெள்ளி மற்றும் பௌர்ணமி நாளில் வடிவுடையம்மனை வழிபட அறிவுறை அளித்தாள். எனவே அவர்கள் வெள்ளி மற்றும் பௌர்ணமி கூடிய நாளில் அம்மனை வழிபட, அம்மன் சந்திரனின் சாபத்தை நீக்கி, ”பெண்கள் அனைவரும் சமமே!, 27 மனைவிகள் இருந்தும் ஒரு பத்னியை விரும்பியது பாவம், அதனால்தான் உனக்கு தண்டனை என்று கூறி, உன் பத்தினிகளின் விரதமே உன்னைக் காத்தது என்றாள் அம்பிகை. பின்னர் சந்திரன் வேண்டிக்கொண்டபடி பௌர்ணமி மற்றும் வெள்ளி கூடிய நாளில் வழிபடுபவர்களின் துயர் தீர்த்தருளுகின்றாள்.

வாழி நின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
வாழி நின் தாள்மலர் போற்றிநின் தண்ணளி வாழி நின் சீர்
வாழி என் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும் நீ
வாழி என் ஆரூயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே!
 

என்று  வடிவுடை அம்மனிடம் தன்னையே சரணாகதி அடைந்திருக்கிறார் வடலூர் வள்ளல் பெருமான்.

மூவரின் தேவாரப்பாடலும் பெற்ற தலம் திருவொற்றியூர். மொத்தம் 8 பதிகங்கள் உள்ளன. ஐயடிகள் காடவர் கோன் க்ஷேத்திரவெண்பா  பாடியுள்ளார். திருஞான சம்பந்தப்பெருமான் ஒரு பதிகமும், அப்பர் 5 பதிகங்களும், சுந்தரர் 2  பதிகங்களும்  பாடியுள்ளனர்.  அமிழ்தினும் இனிய தமிழால் உயிர் வாழ்வதாக கூறிய முதுபெரும் கவிர் மறைமலை அடிகள் தனக்கேற்பட்ட கொடிய நோயை விலக்க வேண்டி, திருவொற்றியூர் முருகக்கடவுளை வேண்டி அவர் மீது “திருவொற்றியூர்  முருகன் மும்மணிக் கோவை” என்ற பாடல் தொகுப்பினை பாடி நோய் நீங்கப்பெற்றார். அருணகிரிநாதரும் இம்முருகன் மேல் இரண்டு திருப்புகழ் பாடியுள்ளார். தியாகராஜ சுவாமிகள் வடிவுடையம்பாள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியுள்ளார், முத்துசுவாமி தீட்சிதர் ஆதிபுரீஸ்வரம் எனும் ஒரு கீர்த்தனை பாடியுள்ளார். கவி காளமேகம், இரட்டைப் புலவர்கள், பாம்பன் சுவாமிகள், ஸ்ரீ சிதம்பர நாத முனிவர் ஆகியோரும் மற்றும் பல அன்பர்களும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

தொண்டை நாட்டுத் தலங்களுள் திருவொற்றியூரின் தலமரமான மகிழ மரமும், காஞ்சிபுரத்தில் மா மரமும் சிறப்பு பெற்றவை.  மகிழ மரத்தினடியில் எம்பெருமான் தியாகேசர் தன் தோழன் சுந்தரனிடம் ஒரு திருவிளையாடல் நடத்தினார்.  அது என்ன என்று பார்ப்போமா? நாடும் உய்ய நாமுய்ய நம்பி சைவ நன்னெறியின் சீலம் சிறக்கவும், மாதவம் செய்த தென் திசை வளர்ந்திடவும், தீதிலா திருத்தொண்டர் தொகை பாடிடவும் அதன் வழி அடியார்களை போற்றும் பண்பு நெறியினை காட்ட வந்த சுந்தரர், எம் ஐயனாலே நீ எனது அடிமை என்று தடுத்தாட்கொள்ளப்பட்டவர். அவர் திருவாரூரிலே பரவையாரை மணந்திருந்தார். ஒரு சமயம் தல யாத்திரையின் போது  திருவொற்றியூர் வந்து தங்கி இருந்தார்.

அதே சமயம்  ஞாயிறு கிராமத்தை சார்ந்த  சங்கிலி என்ற பெண் திருவொற்றியூரில் ஒரு கன்னி மாடத்தில் தங்கி  தியாகராச பெருமானுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார், அப்பெண் மீது இவருக்கு காதல் பிறந்தது. ஆனால் சங்கிலியாருக்கு மண வாழ்விலே நாட்டம் இல்லாமலிருந்தது, எனவே தம்பிரான் தோழன்,  தம் தோழனாகிய இறைவனிடம் சென்று, "தியாகேசா! நீர் எமக்காக தூது சென்று சங்கிலியின் மனதை மாற்றி எம்மை மணக்க சம்மதிக்க வைக்க வேண்டும் "என்று கோரிக்கை வைத்தார்.

பரம கருணைக் கடலான எம்பெருமான் தனது அன்பனின் வேண்டுகோளை நிராகரிப்பாரா? அவர் அதை ஏற்றுக் கொண்டார். ஆயினும் தன் தொண்டன் ஆருரனுக்கு படிப்பினையை தர விரும்பிய எம் ஐயன் ஒரு திருவிளையாடலையும் அங்கே நடத்தினார். சங்கிலியாரிடம் தூது சென்ற பரமன் அவள் கனவிலே சென்று " சுந்தரன் எனது பரம பக்தன் எனவே நீ அவனை மணந்து கொள்வாயாக " என்று கூறினார்.

அவருக்கு இன்னொரு மனைவி இருக்கின்ற போது "நான் எவ்வாறு அவரை மணந்து கொள்ள முடியும்?" என்று சங்கலி வினவ, எம்பெருமான் நீ சுந்தரரிடமிருந்து அவர் உன்னை பிரிந்து செல்ல மாட்டார் என்று என் சன்னிதானத்தில் சத்தியம் வாங்கிக்கொள் என்று கூறினார்.  இறைவனே கூறும் போது சங்கிலியார் மறுப்பாரா? அவர் கூறியவாரே சுந்தரரிடம் தன்னை எப்போதும் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து தருமாறு கேட்டார்.

பரவையாரை முழுதும் மறக்க முடியாத சுந்தரர், இறைவன் முன் சத்தியம் செய்ய விரும்பாமல், அவரை 'இறைவனே தாங்கள் நான் சத்தியம் செய்யும் போது தங்கள் சன்னிதியில் இருக்க வேண்டாம் திருக்கோவிலில் உள்ள மகிழ மரத்தினில் இருந்து கொள்ளுங்கள்' என்று வேண்ட, இறைவனும் ஒப்புக்கொண்டார். ஆனால் சங்கிலியாரின் கனவிலே சென்று நாளை நாம் சன்னிதியில் இருக்க மாட்டோம் மகிழ மரத்தில் இருப்போம், எனவே நீ மகிழ மரத்தினடியிலே வைத்து சத்தியம் வாங்கிக் கொள் என்று கூறினார்.


சங்கிலி நாச்சியார் உடனுறை சுந்தர மூர்த்தி நாயனார்

மறு நாள் பரவையார் சன்னதியில் வேண்டாம் மகிழ மரத்தடியில் வைத்து சத்தியம் செய்து தாருங்கள் என்று கேட்க உண்மையை அறிந்திருந்த சுந்தரர்  வேறு வழியில்லாமல் மகிழ மரத்தினடியில் வைத்து சங்கிலியாருக்கு, "அவளை பிரியமாட்டேன் அவ்வாறு பிரிந்தால் கண் பார்வை இழப்பேன்" என்று சத்தியம் செய்து கொடுத்தார். பின்னர்  இருவருக்கும் திருமணம் இனிதே நடந்தது. சில வருடம் கழித்து திருவாருர், வீதி விடங்கரின் ஆழித் தேரோட்டத்தை காண விரும்பிய வன்தொண்டர், திருவொற்றியூர் எல்லையைத்தாண்ட அவர் கண் பார்வை பறிபோனது. தோழனே ஆயினும் கூட தவறு செய்தால் தண்டனை பெறுவார் என்பதை இறைவன் இங்கே நடத்தி காட்டினார்.

பின்னர் சுந்தரர் காஞ்சி சென்று கச்சி ஏகம்பனை பாடி வலக்கண் பார்வையும், திருவாரூரிலே தியாகேசரைப்பாடி இடக்கண் பார்வையும் பெற்றார். மாசி மாத பிரம்மோற்சவத்தின் போது மக நட்சத்திரத்தன்று கோவிலின் வடக்கு பக்கம் உள்ள இந்த கற்பக விருட்சமான மகிழ மரத்திற்கு அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் கல்யாண சுந்தரர் பார்வதி அம்பாள் திருக்கல்யாண உற்சவம்  சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

காலையில் கோலாகலமாக திருக்கல்யாணம் டைபெறுகின்றது. மாலை கல்யாண கோலத்தில் சுந்தரரும் சங்கிலியாரும் முன் செல்ல, எம்பெருமான்  அகத்தியருக்கு அன்று அருட்காட்சி கொடுத்த கல்யாண சுந்தரராக பின் செல்கின்றார். இவர்களைத் தொழுதவாறு அறுபத்து இரண்டு நாயன்மார்கள், அகத்தியர் லோபாமுத்திரை, பிரம்மன், விஷ்ணு, அதிகாரநந்தியெம்பருமான் ஆகியோர் எழுந்தருள்கின்றனர். வீதி வலம் முடித்து திருக்கோவிலில் மகிழ மரத்தினடியில்  கல்யாண சுந்தரர்,   சுந்தரருக்கும் சங்கிலியாருக்கும் தரிசனம்  ந்தருளுகின்றார். அன்று நடந்த சபத நிகழ்ச்சி இன்றும் நடத்திக் காட்டப்படுகின்றது. இந்நிகழ்ச்சி மகிழடி சேவை என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

அறுபத்து நாயன்மார்களுள் கலிய நாயனார் வழிபட்ட தலம் இது.  படம்பக்க நாதரின் திருக்கோவிலுக்கு விளக்கிடும் திருப்பணி செய்து வந்தார் கலிய நாயனார்.  தனது அன்பனின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய  எம் ஐயனின் திருவுள்ளத்தால் கலியனார் வறுமை வாய்பட்டார், வறுமையிலும் தனது பணியை  தொடர்ந்து வந்தார் கலியனார். இருந்த செல்வம் எல்லாம் கரைந்து விட, வேறு வழியில்லாமல் தனது மனைவியையே விற்க முயன்றார் , ஆனால் யாரும் அவளை வாங்க முன் வர வில்லை. எனவே ஒரு நாள் விளக்கிட எண்ணையே இல்லாத்தால் "உடலின் உதிரத்தையே விளக்கிலே எண்ணையாக இட்டு விளக்கேற்ற முயன்றார்அப்போது கருணைக்கடலாம் எம்பெருமான் அவருக்கு ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்து அவருக்கு சிவ லோகப் பதவி தந்தருளினார்.  படம்பக்க நாதர்  கருவறை சுற்று மண்டபத்தில் கலிய நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது.

                                            

கல்யாண சுந்தரர்

7ம் நூற்றாண்டில் தொண்டைமான் சக்கரவர்த்தி காளியை  இங்கு வட்டப்பாறை அம்மனாக வழிபட்டார். உக்ர ரூபிணியாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதி சங்கரர் அமைத்த ஸ்ரீசக்ரம் ஒரு வட்டப்பாறையின் கீழே உள்ளதால் அம்மனுக்கு இப்பெயர்.  வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு எதிரே சூளாமணி பைரவருக்குத் தனிகோயில் உள்ளது. ஒரு காலத்தில் இவ்விடத்தில் உயிர்பலிகள் இருந்துள்ளன. ஆதிசங்கரர் இத்தலம் வந்த போது அவற்றை நிறுத்தினார் என்று கூறப்படுகிறது.

கவிச்சக்கரவர்த்தி கம்பர், வடமொழி வால்மீகி இராமாயணத்தை தமிழில் எழுத திருவொற்றியூர் வந்தார். இவர் வட்டப்பாறை அம்மனின் பக்தர். இவர் பகல் முழுவதும் சதுராரன பண்டிதரிடம் இராமாயணத்தை செவி வழியாகக் கேட்டு இரவு முழுவதும் இராமாயணத்தை எழுதுவார். இப்படி எழுதுவதற்கு முன் வட்டப்பாறை அம்மனை வணங்குவார். அம்மனும் தன் பக்தனின் தமிழ்த்தொண்டினை வளரச் செய்ய சாதாரணப்பெண் போல் வந்து தீப்பந்தம் எந்தினார் என்கின்றனர்.

கிழக்கு வெளிப்பிரகாரத்தில் வகிரக சன்னதி, குழந்தையீஸ்வரர் சன்னதி, சித்தி விநாயகர், பால சுப்பிரமணியர் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.  கொடி மரம், பலி பீடம், உயரத்தில் நந்தி தேவர், ஜகந்நாதர், எதிரே சிவ சூரியன், நால்வர், சகஸ்ர லிங்கம் இவருக்குதான் பிரதோஷ காலத்தில் அபிஷேகம் நடைபெறுகின்றது, இராமநாதர் அமிர்த கண்டேஸ்வரர் சன்னதிகள்.  தெற்குப் பிரகாரத்தில் அஸ்வினி முதல் ரேவதி ஈறாக 27 நட்சத்திரங்களுக்குமாக 27 லிங்கங்களை ஒரே நேர் வரிசையில் அமைத்து அதன் முன்னே அருமையான நந்தவனமும் அமைத்துள்ளனர். மேற்கு வெளிப் பிரகாரத்தில் காளி, ஆகாசலிங்கம், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்திநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர்  சன்னதிகள் அமைந்துள்ளன.           

                         

அதிகாரநந்தி தேவர் 

ஆலயத்தின் வடமேற்கு மூலையில் அற்புத கலை நுணுக்கம் மிக்க கற்சிலைகளுடன் கூடிய முன் மண்டபத்துடன் திருவொற்றீஸ்வரர் கோயில் எழிலாக அமைந்துள்ளது. இப்பெருமானுக்குத்தான் நான்கு கால பூஜைகளும் டைபெறுகின்றன. இக்கோவிலின் முன்மண்டபத்தின் தூண்களில் கலை நுணுக்கத்துடன் கூடிய அற்புதமான சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. பிரம்மா-விஷ்ணு, விநாயகர்-முருகர், ஊர்த்துவத்தாண்டவர்–காளி, பட்டினத்து அடிகள்-பத்திரகிரியார், தும்புரு–நாரதர், வியாக்ரபாதர் – பதஞ்சலி, நந்தி–பிருங்கி, என்று எதிரெதிர் தூண்களில் அருமையாக இணையாக அமைத்துள்ளனர். துவாரபாலகர்கள் அழகும் சொல்லி மாளாது. மேலும் பிரம்மாவின் மானச புத்திரர்களும்,  தென்முகக் கடவுளிடம் மௌன உபதேசம் பெற்ற  சனகாதி முனிவர்கள் நால்வரும், தேவாரமும்,  திருவாசகமும் பாடியருளிய சைவ சமயக் குரவர்கள் நால்வரும் பெரிய சிற்பங்களாகவும், சிவ பெருமானின் திருக்கோல வடிவ மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுந்தரர் - சங்கிலி நாச்சியார் ஆகியோரின்  சிறிய சிற்பங்களாகவும் கண்டு களிக்கலாம். சிம்மத்தின் வாயில் இரு கல் வளையங்கள் அக்கால சிற்பிகளின் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.  தியாகராஜர் என்றாலே யோகம் தானே நுழைவாயிலின் கூரையில் ஒரு சூரிய சந்திரர்களுக்கு இடையே மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் உடற்சக்கரங்களின் விளக்கம் அமைத்துக் காட்டப்பட்டுள்ள அழகு கண்டுணரத்தக்கது. சன்னதியின் முகப்பில் திருக்கயிலாயக் காட்சியை கண்டு களிக்கலாம். 

வடக்கு வெளிப் பிரகாரத்தில் நந்தவனேஸ்வரர், நந்தவனம் சூளாமணி, பைரவர் சன்னதி, கல்யாண சுந்தரர் சன்னதி அமைந்துள்ளது. மகிழ மரத்தை சுற்றி இரும்பு கம்பிகளினால் வேலி அமைத்துள்ளனர். அதற்கு அருகில் அழகிய சிற்பங்களுடன் கூடிய தியாகரின் வசந்த மண்டபம் உள்ளது.  வசந்த மண்டபத்தை அடுத்து சுந்தர மூர்த்தியார் மண்டபம் உள்ளது அதில் சுந்தரர் சங்கிலியாருடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தருகின்றார். இன்றும் இம்மண்டபத்தில் பல்வேறு திருமணங்கள் டை பெறுகின்றன. மகிழ மரத்தின் அருகே தியாகப்பெருமானின் திருப்பாதங்களை தரிசிக்கலாம்.

இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் முருகர் குமாரசாமித் தேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

கரியமுகில் போலு மிருளளக பார
     கயல்பொருத வேலின் ...... விழிமாதர்

கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர
     களபமுலை தோய ...... அணையூடே

விரகமது வான மதனகலை யோது
     வெறியனென நாளு ...... முலகோர்கள்

விதரணம தான வகைநகைகள் கூறி
     விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய்

அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
     அவர்கள்புக ழோத ...... புவிமீதே

அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
     அமரர்குல நேச ...... குமரேசா

சிரகரக பாலர் அரிவையொரு பாகர்
     திகழ்கநக மேனி ...... யுடையாளர்

திருவளரு மாதி புரியதனில் மேவு
     ஜெயமுருக தேவர் ...... பெருமாளே

 

என்று அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். இப்பாடலில் திருவொற்றியூரை திரு வளர் அதாவது லட்சுமி கடாட்சம் நிறைந்த ஊர் என்று போற்றியுள்ளார்.  கோவிலின் முன் பக்கம் அமர்ந்து இறைவனை தியானம் செய்வதற்கு ஏற்றார் போல பெரிய மணல் வெளி உள்ளது.

                                                                                      தியாகேசர் தரிசனம் தொடரும் . . . . .

No comments: