Wednesday, April 4, 2018

பங்குனிப் பெருவிழா - 3

திருவான்மியூர் கொடியேற்றம் 



தியாகேசர் -    பாகம் பிரியா(கொண்டி) அம்மை 


சைவத் திருத்தலங்கள், வைணவத் திருத்தலங்கள், முருக திருத்தலங்கள் அனைத்திலும் இந்த பங்குனி உத்திர திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.  "கயிலையே மயிலை, மயிலையே கயிலை" எனப்படும் மயிலாப்பூரில் பத்து நாள் திருவிழா, பத்தாம் நாள்     பௌர்ணமியன்று திருக்கல்யாணம்.  7ம் நூற்றாண்டிலேயே  திருமயிலையில் பங்குனி உத்திர விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டதை இப்பாடலின் முலம் அறியலாம்.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்!

பொருள்: பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட   பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சுரம் என்னும் திருக்கோவிலில் அமர்ந்துள்ள சிவபெருமானது பலி அளிக்கும் விழாவான பங்குனி உத்திர நாளில் நிகழும் ஆரவரமான விழாவைக் காணாது செல்வது முறையோ என்று பாடுகிறார்  ஆளுடையப் பிள்ளைஇந்த திருவிழாவை நாம் அனைவரும் 8ம் நாள் நிகழ்ச்சியான  அறுபத்து மூவர் திருவிழா என்ற பெயரில் நன்றாக அறிவோம்

மேலும் திருவான்மீயூர், வடபழனி வேங்கீஸ்வரம், பூந்தமல்லி, ஒத்தாண்டீஸ்வரர் திருக்கோவில் முதலிய தலங்களிலும் பங்குனி உத்திர விழா 10 நாள் திருவிழாவாகக்     கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரத்திலும் 10 நாள் உற்சவம் பங்குனி உத்திரத்தன்று ஏகாம்பரேஸ்வரர் ஏழவார் குழலி அம்மை (காமாக்ஷியம்மன்) திருக்கல்யாணம். மூலாதாரத்தலமான திருவாரூரிலே பங்குனி உத்திரத்தன்று இடது பாத தரிசனம். முற்காலத்தில் ஆழித்தேரோட்டமும் பங்குனி உத்திரத்தை ஒட்டியே நடந்துள்ளது. பங்குனி உத்திரம் திருவாரூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை இப்பாடலின் மூலம் அறியலாம்.

ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிபத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே!

திருநெல்வேலியில் பட்டாபிஷேகம்திருச்சி  தாயுமானவர் பிரம்மோற்சவம். திருபுவனம், லால்குடி, கங்கை கொண்டான், பரமக்குடி முத்தாலம்மன் உற்சவம். திருமுருகத்தலங்களில் பழனியில் 10 நாள் உற்சவம், திருக்கல்யாணம், திருப்பரங்குன்றத்திலே  திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேகம். கழுகுமலையில் உற்சவம். எல்லா முருகத்தலங்களிலும் பங்குனி உத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. மன்னார்குடி இராஜகோபாலர், திருமழப்பாடி நந்திகேஸ்வரர், மயிலம் முருகன் வள்ளிதிருச்செந்தூர் முருகன் வள்ளி, கும்பகோணம் சக்ரபாணி விஜயவல்லித்தாயார் திருக்கல்யாணம் மற்றும்  பல திருக்கோவில்களில் திருக்கல்யாண வைபவம் ஒரு நாள் நிகழ்ச்சியாக மட்டும் நடைபெறுகின்றது. சைவ திருத்தலங்களில் மட்டுமல்ல வைணவத் தலங்களிலும்  பங்குனி உத்திரம் கல்யாண உற்சவமாக  கொண்டாடப்படுகின்றது. பெரிய கோவில் ஸ்ரீரங்கத்தில் பெருமாள் தாயார் சேர்த்தி வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டும் தான். பார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோவிலிலும் சேர்த்தி உற்சவம் இன்று நடைபெறுகின்றது. நாச்சியார்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் போது கல்கருடசேவையையும், மேல்கோட்டையில்  கருடன் கொண்டு வந்த வைரமுடி சேவையையும் பங்குனியில் காணலாம். திருஇந்தளூரில் பிரம்மோற்சவமும், திருவாலி திருநகரியில் திருமங்கையாழ்வாரின் வேடுபறி உற்சவமும் நடைபெறுகின்றது.

விநாயகப்பெருமான்

தியாகராஜப் பெருமான் 


திருவான்மியூர் தொண்டை மண்டலத்தின் ஒரு  தியாகராஜத்தலம்  என்பதால் பஞ்ச மூர்த்தியாக  எழுந்தருளி அருள் பாலிப்பவர் சந்திரசேகரர் ஆவார். தினமும் காலையிலும், மாலையிலும் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில்  மாடவீதி வலம் வந்து அருளுகின்றார்.  நள்ளிரவில் தியாகராஜரும், திரிபுரி சுந்தரி அம்பாளும்  மாடவீதி வலம் வந்து அருளுகின்றனர்.  கொடியேற்றம் முதல் திருநாள் இரவில் நடைபெறுகின்றது.  கொடியேற்றத்திற்கு  தியாகேசர்  எழுந்தருளுகின்றார். அத்தரிசனத்தை இப்பதிவில் காண்கின்றீர்கள்.











திரிபுரசுந்தரி அம்பாள் 



இடபக்கொடி - அஸ்திரதேவர்


                                                                                                     பங்குனி உத்திர தரிசனம் தொடரும் . . . . 

No comments: