Friday, October 2, 2020

திருப்பாத தரிசனம் - 40


திருவான்மியூர் ஐதீகம் 

மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் உற்சவர் அம்பாள், ஒன்பது கோணமும் மேவி உறைகின்ற சுக்கிர வார அம்மனாக கண்ணாடி அறையிலே தினமும் நம் அனைவருக்கும் அருட்காட்சி வழங்குகின்றாள். தலையில் கரண்ட மகுடம், பாசம் அங்குசம் தாங்கி அபய வரத திருக்கரங்களுடன் அருள் பாலிக்கின்றாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் திருவிழாக் கோலமாக  திரிபுர சுந்தரி சுக்கிரவார அம்மனாக உட்புறப்பாடு கண்டருளுகிறாள்.  அம்மனின் சௌந்தர்யத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.

அன்னையின் ஆலயத்தின் மஹாமண்டபத்தில் உள்ள  தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர்.  நரம்பு சம்பந்தமான நோய்கள், வறுமை, கடன் முதலியவற்றை நீக்கும் வல்லமை கொண்டவர். சரபேஸ்வரரின் தூணின் பின்புறம் உக்கிர நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.  வெளிப் பிரகாரத்தில் மும்முடி விநாயகர், விஜய விநாயகர், நிறைய பசுக்களை கொண்ட ஒரு பசுமடமும், நாகர் சன்னதியும் அமைந்துள்ளன.

ஆலயத்தின் தெற்கு மூலையில் மடப்பள்ளியை அடுத்துக் காணப்படும் ஸ்ரீவிநாயகர் சன்னதியில் உருவத்தால் மாறுபட்ட மூன்று விநாயகர்கள் அருள் பாலிக்கின்றனர்.

இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமியன்று தியாகராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. மற்றும் பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. வைகாசியில் தியாகேசர் வசந்தோற்சவமும், பௌர்ணமியன்று 18 நடன காட்சியும், வைகாசி  விசாகமும், ஆனியில் ஆனி உத்திரமும், ஆடிப் பூரம் அம்மனுக்கும், ஆவணியில் வினாயகர் சதுர்த்தியும், புரட்டாசியில் நவராத்திரி சமயத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள்  செய்யப்படுகின்றன. ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகமும், கார்த்திகை சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும், கார்த்திகை தீபத்தன்று 18 வகை நடன காட்சியும்,  மார்கழி திருவாதிரையும், திருப்பள்ளியெழுச்சியும், தைப்பூசம், மகா சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பங்குனி பௌர்ணமியை இறுதி நாளாகக் கொண்டு பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.  தியாகராஜ தலம் என்பதால், சோமாஸ்கந்தர் பஞ்சமூர்த்தியாக வலம் வருவதில்லை, சந்திரசேகரரே  பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் திருஉலா வருகின்றார். பஞ்ச மூர்த்திகளில் அம்மையும் தனியாக வலம் வருவதில்லை. தியாகராஜர் இரவு பஞ்சமூர்த்திகள் திருஉலா முடிந்தபின் அம்மையுடன் உலா வருகின்றார்.

காமதேனு  ஈசனை வழிபடும்  சிற்பம் 

முதல் நாள் கொடியேற்றம் இரவில் நடைபெறுவது ஒரு சிறப்பு. கொடியேற்றத்திற்கு தியாகராஜப்பெருமானும், திரிபுரசுந்தரி அம்பாளும் எழுந்தருளுகின்றனர்.  ஒவ்வொரு நாள் வாகனமும் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றோர்களும் உடன் வலம் வருகின்றனர். இரண்டாம் நாள் காலை  சூரிய பிரபையில் காமதேனுக்கு காட்சியளிக்கிறார் எம்பெருமான். மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி வாகனத்தில் சூரியனுக்கு அருள் பாலிக்கின்றார். மாலை சந்திரனுக்கு அருள் பாலிக்கின்றார். இரவில் தியாகேசர் பார்த்த சாரதிக்கு அருளுகின்றார். நான்காம் நாள் காலை பிருங்கி முனிவருக்கு அருள் பாலிக்கின்றார். ஐந்தாம் காலை எமனுக்கு அருள் பாலிக்கின்றார். மாலை ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் பவனி. தியாகேசர் இராமருக்கு அருளுகின்றார். ஆறாம் நாள் காலை இரட்சசுவிற்கு அருளல், இரவு தியாகேசர் இந்திரனுக்கு அருளல், ஏழாம் நாள் காலை திருத்தேரோட்டம் பிரமனுக்கு அருளல், எட்டாம் நாள்  காலை நான்கு மறைகளுக்கு அருளல் மற்றும் பரிவேட்டை விழா நடைபெறுகின்றது. ஒன்பதாம் நாள் மாலை கல்யாண சுந்தரர் திருக்கல்யாணமும், விமானக் காட்சியும், அகத்தியருக்கு கல்யாண கோலம் காட்டிய நிகழ்ச்சியும், வன்னி மர காட்சியும் நடைபெறுகின்றது, பத்தாம் நாள் காலை சந்திரசேகரர் கடலில் தீர்த்தவாரி  கண்டருளுகிறார். இரவு தியாகர் திருக்கல்யாணமும், கொடி இறக்கமும் வான்மீகி முனிவருக்கு 18 வகை நடனக் காட்சி பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றது. எம்பெருமானின் நடனத்தை காணும் கண்கள் பேறு பெற்றவை என்பதில் ஐயம் இல்லை ஐயன் மட்டுமல்ல அம்மையும், காவடி சிந்து,  பாம்பு நடனக் காட்சி தருகின்றாள். பதினோராம் நாள் காலை 4 மணி அளவில் பிரம்மோற்சவத்தின் சிகரமாக தியாகேசர் திரிபுர சுந்தரி அம்மனுக்கு அருள பந்தம்பரி 18 திருநடனக் காட்சி தந்தருளுகின்றார். தான் இருக்கும் போது கங்கையை இறைவன் தலையில் ஏற்றுக்கொண்டதால் அம்மை ஊடல் கொள்ள அம்மையை சமாதானப்படுத்த ஐயன் 18 நடனகாட்சி தந்து அருளுவதாக ஐதீகம்.

கல்லிலே கலை வண்ணம் கண்டார்கள் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது இத்திருக்கோவில், தியாகராஜ மண்டபத்தில் உள்ள  தூண்களில் செதுக்கப்பட்டுள்ள கணபதி, முருகன், தண்டபாணி, ஹனுமன், மற்றும் தூண்களின் மேல் உள்ள பூ வேலைப்பாடுகள் நமது சிந்தையை கவர்கின்றன. தூண்களின் மேல் உள்ள சிங்கங்கள் எழில் பெற செதுக்கப்பட்டுள்ளன, தியாகேசரின் சன்னதியிலும் மூன்று கால்   தூண்களூம் அவற்றில் உள்ள சிங்கங்களில் யானையும் சேர்த்து செதுக்கியிருப்பதும், மேலும் சன்னதியின் முன் சுவற்றில் உள்ள மயில் முருகர் வித்தியாமாக இடக்கரத்தில் வில் ஏந்தி காட்சியளிக்கிறார். மருந்தீசர் சன்னதி முழுவதும் தூண்கள் நிறைந்துள்ளது.  அம்மனின் வெளி மண்டபத்தில் கவின் மிகு சிற்பங்கள் நம்மை உவகை கொள்ள வைக்கின்றன.அவற்றுள் சில தபசு காமாட்சி, சரபேஸ்வரர், நரசிம்மர், குபேரர் மற்றும் சடநட சித்தர் நம் சிந்தையை கவர்கின்றன. குதிரை வீரன் சிலையில் ஐந்து மனிதர்கள் மற்றும் இரண்டு புலிகளுடன் மிக சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது , மேலும் யாழி சிற்பங்கங்களையும் கண்டு களிக்கலாம். கிழக்கு இராஜ கோபுரத்தில் மயில் மேல் முருகன் சிற்பத்தில் மயில் வாயில் ஒரு பாம்பை ஏந்தியிருப்பது ஒரு தத்ரூபம்.

கூரையில் உள்ள ஒரு ஓவியம்

வ்வாலயத்தின் அருகில் சற்று தொலைவில், மகான் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் உள்ளது. மேலும் அம்மா சக்கரை பெண் சித்தர் அதிஷ்டானமும் அருகிலேயே உள்ளது. வெளிப்பிரகாரத்தில் தேவாசரிய மண்டபத்தில் வருடத்தின் அனைத்து நாட்களும் சமயச்சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.  ஒரு ஆன்மீக நூலகமும் உள்ளது.   

       ஓட்டை மாடத்தி லொன்பது வாசலும்

       காட்டில் வேவதன் முன்னங் கழலடி

       நாட்டி  நாண்மலர்   தூவி வலஞ்செயில்     

      வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே

என்று திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற நோய்களையெல்லாம் தீர்த்தருளும் மருந்தீசரையும், ஆடும் அழகர் தியாகேசரையும் அவரது 18 வகை நடனத்தையும், திரிபுரசுந்தரி அம்பாளையும் தரிசிக்க திருவான்மியூர் வாருங்கள். அடுத்து திருக்கச்சூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக பிச்சையெடுத்து உணவிட்ட அமிர்த தியாகேசரை தரிசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.

 

No comments: