Sunday, October 18, 2020

கோலாகல நவராத்திரி - 3

சண்டி தேவி

நவராத்திரி புராணம் :


முன்னொரு சமயம்  வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் அவர். இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும், வரமுனியை எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.

அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான். பிரம்மனும் பிரசன்னமாகி அவனுக்கு காட்சியளித்து என்ன வரம் வேண்டும் என்று வினவ அவனும் எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை அருளினார் பிரம்ம தேவன்.



துர்க்கை அம்மனுக்கு நவரத்ன கவசம்

மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவ பெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்புறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.


அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.


அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.


இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 



நவராத்திரியின் இரண்டாம் நாள் துவிதியையன்று  அன்னையை மூன்று வயது குழந்தையாக பாவித்து  த்ரிமூர்த்தியாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் தனதான்ய வளம் கிட்டும். இன்றைய ஸ்லோகம்


சத்வாதிபிஸ் திரிமூர்த்தியர்த்திர்யா தெளர்ஹி நாதா ஸ்வரூபிணி த்ரிகால வாபினிசக்திஸ் திரிமூர்த்திம் பூஜயாம்யஹம் ||

(சத்துவம் போன்ற குணங்களால், அனைத்து ரூபமாக, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் முக்காலங்களிலும் எந்த சக்தி வியாபித்திருக்கிறதோ அந்த த்ரிமூர்த்த்தியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

* * * * *

                                       

                                                                       


                                                                     ப்ரம்ஹசாரிணி
துர்கா

நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்னையை, இமவான் மகளாக பிறந்து சிவபெருமானை மணம் செய்து கொள்வதற்காக தவம் செய்யும் பருவத்தில் கன்னியாக, யோகினியாக, தபஸ்விணியாக ப்ரும்மசாரிணியாகவும் வழிபடலாம்சாட்சாத் பிரம்மம் ஆன அவளே தவ வடிவாக விளங்கி தவம் இருந்ததால் ப்ரம்ஹசாரிணி எனப் போற்றப் பட்டாள்நீல வடிவினாளாக அதாவது பக்தி வசமானவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

 ததாநாகர பத்மாப்யாம் அக்ஷ மாலா கமண்டலூ |

தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அநுத்தமா ||

என்பது ப்ரம்ஹசாரிணி துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

(தனது தாமரைக் கரங்களில் அக்ஷமாலை, கமண்டலம் தாங்கி சச்சிதானந்த நிலையை அருளும் அன்னை ப்ரஹமசாரிணி அடியேனை காக்கட்டும். )

                                                                               ******


சில அன்பர்கள் அன்னையை உமாவை, சைலேந்திர தனையை  கௌரியை இன்று முருகப்பெருமானின் சக்தியாகிய கௌமாரியாக வழிபடுவர். கௌமாரியின் வாகனம் - மயில், கொடி - சேவல், படை  - வேல் ஆகும். 

 துவிதியையன்று  -  கௌமாரி

மலர்: செவ்வரளி

நைவேத்தியம் : புளியோதரை

நிறம்: பச்சை

கோலம் : கோதுமை மாவினால் கட்டங்கள் கொண்ட கோலம்.

ராகம் : கல்யாணி ராகம்

ஸ்லோகம் :

ஓம் சிகி வாஹனாய வித்மஹே  சக்தி ஹஸ்தாய தீமஹி |

தன்னோ கௌமாரி ப்ரசோதயாத் ||

 

அம்மன் அருள் பெருகும் . . . . 

No comments: