காமாக்ஷி அம்மன் - மஹா பெரியவா
நவராத்திரியின் எட்டாம் நாளான இன்று மகா அஷ்டமியாகும் அன்னைக்கு மிகவும் உகந்த நாள் இன்றைய தினம் விரதம் இருப்பது மிகவும் சிறந்தது.
அஷ்ட சரஸ்வதிகள் : வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி .
நமது பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தீமையை நன்மை அழித்து எல்லாரும் சுகமாக விளங்குவதை குறிக்கும் வகையில் நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. ஒன்பது நாட்கள் அம்மன் தவம் இருந்து பத்தாம் நாள் விஜதசமியன்று தீமையாம் மகிஷனை வதம் செய்ததை கொண்டாடுகிறோம். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தசரா என்று சிறப்பாக கொண்டாடிகின்றனர், இங்கு சாமுண்டீஸ்வரி இந்த பத்து நாட்களிலும் போற்றி வணங்கப்படுகின்றாள். கேரளாவில் விஜயதசமியன்று அக்ஷராப்பியாசம் என்று குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை துவக்குகின்றனர். குஜராத்தில் ஒன்பது நாட்களும் இரவு கர்பா என்னும் நடனமாடி அன்னையை வழிபடுகின்றனர். வட நாட்டில் ஒரு சாரார் கடுமையான விரதம் இருந்து அன்னையை நவ துர்காவாக வழிபடுகின்றனர் . ஒரு சாரார் இதை இராம்லீலாவாக , இராமர், இராவணனனை வெற்றி கொண்டதை கொண்டாடுகின்றனர். ஒன்பது நாட்கள் இராமாயணம் பாராயணம் செய்கின்றனர் பத்தாம் நாள் விஜய தசமியன்று, இராவணன், மேகநாதன்( இந்திரஜித்), கும்பகர்ணன் பொம்மைகளை கொளுத்துகின்றனர். வங்காளம் முதலான கிழக்குப் பகுதியில் துர்க்கா பூஜை மிகவும் சிறப்பு. சஷ்டியன்று அன்னை துர்க்கை திருக்கயிலாயம் விடுத்து பூலோகத்திற்கு தன் அன்னை இல்லத்திற்கு தன் மகள்கள் மஹா லக்ஷ்மி மற்றும் மஹா சரஸ்வதி, மகன்கள் கணேசன் மற்றும் கார்த்திகேயன்(முருகர்) மற்றும் கணேசரின் மனைவி அபராஜிதாவுடன் எழுந்தருளி அருள் பாலித்து பூஜையை ஏற்றுக்கொள்கின்றாள். விஜய்தசமியன்று பின்னர் அன்னை திருக்கயிலாயம் திரும்பிச்செல்கின்றாள்.
நவராத்திரியின் போது தேவி மகாத்மியம் என்றும் துர்கா சப்தஸதீ என்றழைக்கபப்டும் ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், லலிதா த்ரிசதீ, அபிராமி அந்தாதி மற்றும் அன்னையின் பல்வேறு தோத்திரங்களை படிப்பது மிகவும் உத்தமம்.
தமிழகத்தில் தசரா திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் தலம் குலசேகரன்பட்டிணம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் ஐயன் ஞான மூக்தீஸ்வரராகவும் அம்பாள் முத்தாரம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். இருவரும் சுயம்பு மூர்த்தங்கள். விஜய தசமியன்று அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்யும் சூர சம்ஹாரம் சிறப்பாக கடற்கரையில் நடைபெறுகின்றது. முத்தாரம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இத்திருவிழாவின் சிறப்பு பக்தர்கள் பல்வேடங்கள் அணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று அம்மனுக்கு செலுத்துவதாகும். பக்தர்கள் காப்புக்கட்டி தங்கள் வீட்டை விடுத்து ஆலயத்தின் அருகில் குடிசை கட்டி ஒரு வேளைப் பச்சரிசி சாதமும், துவையலும் உண்டு விரதமிருக்கின்றனர். பக்தர்கள் என்ன வேடம் அணியவேண்டுமென்று அம்மன் கனவில் வந்து கூறுவதாக ஒரு ஐதீகம் உண்டு. காளி அம்மன் வேடம் அணிவது சிறப்பாக கருதப்படுகின்றது.
அன்னைக்கு மிகவும் உகந்த மஹா அஷ்டமிநாளான நவராத்திரியின் எட்டாம் நாள் அன்னையை ஒன்பது வயது குழந்தையாக பாவித்து துர்க்கா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் பயம் நீங்கும் . இன்றைய ஸ்லோகம்
துர்க்காத்ராபதி பக்தம்யாஸ தா துர்க்கார்த்த நாயினீ துர்ஜுஷ்யா
ஸர்வதேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம் ||
(துர்க்கதியைப் போக்குபவளாய், தேவர்களாலும் அறிய முடியாதவளாய் பக்தர்களைக் காப்பவளாய் எந்த சக்தி விளங்குகிறதோ அந்த துர்கா தேவியாகிய சக்தியை வணங்குகிறேன்.) மஹா
அஷ்டமி நாளன்று
அன்னையை நினைத்து
விரதமிருக்க அனைத்து
நன்மைகளும் அவள் அருளால்
சித்தியாகும்.
மஹா கௌரி துர்க்கா
நவராத்திரியின் எட்டாம் நாள் நவதுர்கைகளில் அன்னையை வெள்ளை ரிஷபத்தில் மேலேறி பவனி வரும் மஹா கௌரியாக வழிபடுகின்றோம்.
தூய உள்ளம், பொன்னிற மேனி , வெண்பட்டு ஆடை, ஜொலி ஜொலிக்கும் தங்க நகைகளோடு காட்சி தருபவள் மகா கௌரி. காளையை வாகனமாகக் கொண்டு உடுக்கை சூலத்தோடு காட்சி கொடுக்கும் மகாகௌரியின் மேனி காட்டில் சிவபெருமானை மணக்க தவமிருந்த போது கருத்தது. சிவபெருமான் கௌரியின் மேனியை கங்கையால் சுத்தம் செய்ததாகவும், மீண்டும் மகாகௌரி பொன்னிற மேனியைப் பெற்றதாகவும் கதைகள் சொல்லுகின்றன.
பக்தர்களின் குறைகள் தீர்த்து வைக்கும் மகாகௌரி என்றென்றும் சந்தோசத்தை அள்ளித் தருகிறாள். மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். சந்திரனைப் போன்ற வெண்மை நிறத்தவளாக வணங்கப்படுகின்றாள் மஹா கௌரி. 16 வயது கன்னிகையாக சிவபெருமானை மணப்பதற்கு முன்பான பருவம் இது. மஹா கௌரியை தூயவளாக சிவந்த வர்ணத்தவளாக வழிபடுகின்றோம்.
மஹாகௌரி சுபம் த்த்யாத் மஹாதேவ ப்ரமோத்தா ||
(வெள்ளை ரிஷபத்தில் ஏறி தூய வெள்ளை பட்டாடை உடுத்தி தூயவளாகவும், சிவபெருமானுக்கு எப்போதும் ஆனந்தம் அளிப்பவளுமான மஹா கௌரி துர்க்கா அடியேனுக்கு எல்லா மங்களங்களையும் அருளட்டும்.)
எட்டாம் நாள்
அஷ்டமியன்று - துர்க்கை
மலர்: ரோஜா
நைவேத்தியம் : பாயசம்
நிறம்: இளஞ்சிவப்பு
கோலம் : தாமரைப் பூவைப் போல் கோலம்.
ராகம் : புன்னாகவராளி ராகம்
ஸ்லோகம் :
ஓம் மகிஷ மர்தின்யை வித்மஹே
துர்கா தேவியை தீமஹி |
தன்னோ தேவி ப்ரசோதயாத் ||
No comments:
Post a Comment