திருக்கச்சூர் - அமிர்த தியாகர்
தொண்டை நாட்டு உபவிடங்கத்திருத்தலங்களில் அடுத்து நாம் தரிசிக்கும் தியாகேசர் திருக்கச்சூர் அமிர்த தியாகேசர் ஆவார். எம்பெருமானது திருப்பெயரான தியாகராஜர் என்னும் பெயர் வருவதற்கான தலம் இது எனலாம். தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்த போது மலை நிற்காமல் சாய்ந்தது. அப்போது திருமால் கூர்ம அவதாரம் எடுத்து அம்மலையை தம் முதுகில் தாங்கச்சென்றார். அதற்கு முன்னர் மலையைத் தாங்கும் வலிமை பெற இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். கச்சபம் என்றால் ஆமை, எனவே இத்தல இறைவன் கச்சபேஸ்வரர் ஆனார் இத்தலமும் திருக்கச்சூர் ஆனது. ஆதி கச்சேபம் என்றும் அழைக்கப்படுகின்றது.பாற்கடலைக் கடையும் போது முதலில்
விடம் வெளியே வந்தது. வலி தாங்க முடியாமல் வாசுகியும் நஞ்சைக் கக்கியது. ஆலமும்
ஆலமும் இணைந்து ஆலாலமாகி சகல ஜீவராசிகளையும் மிரட்டியது. சகல தேவர்களும்
திருக்கயிலை நாதரை சரணடைய அவரும் அனைவரையும் காக்க திருவுள்ளம் கொண்டு தனது
அணுக்கத் தொண்டரான சுந்தரரை அவ்விடத்தை எடுத்து வர அனுப்பினார். சுந்தரரரும்
விடத்தை ஒரு நாவல் போல் ஆக்கி கொண்டு வந்து இறைவனிடம் அளித்தார். எனவே இவர் ஆலால
சுந்தரர் என்று அழைக்கப்பட்டார். பின் ஒரு சமயம் மலர் பறிக்கும் போது அங்கு மலர்
பறித்துக்கொண்டிருந்த அம்பிகையின் சேடிகளைப் பார்த்து மயங்க இறைவன் அவரை
பூலோகத்தில் பிறக்கப் பணித்தார். அவரும்
பூவுலகில் நம்பி ஆருரராக அவதரித்து எம்பெருமான் தோழர் என்று சிறப்புப் பெற்றார்.
பரம கருணாமூர்த்தியான சிவபெருமானும்
அவ்விடத்தை அப்படியே விழுங்கினார், அப்போது ஐயனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும்
உமையம்மை தனது தளிரன்ன கரத்தினால் ஐயனின் கண்டத்தை பிடிக்க அவ்விடம் அங்கேயே
தங்கியது. விடத்தின் வீரியத்தினால் ஐயனின் கழுத்தும் நீல நிறமானது, அவரும்
நீலகண்டர் என்று அழைக்கப்பட்டார். யாவரும் விரும்பாத விடத்தையும் விரும்பி
உண்டதால் ஐயனுன் தியாகராஜர் எனப்போற்றப்பட்டார். பின்னர் தேவர்களும் அசுர்ர்களும்
பாற்கடலைத் தொடர்ந்து கடைய ஐராவதம், உச்ச்சைரவசு, காமதேனு, கற்பக மரம், சிந்தாமணி,
திருமகள் தோன்றினர் பின்னர் நிறைவாக அமிர்தத்துடன் தன்வந்திரி பகவான் தோன்றினார்.
திருமாலின் தந்திரத்தினால் தேவர்கள் மட்டும் அமிர்தத்தை பருகி சாகாவரம் பெற்றனர்.
இவ்வாறு அமிர்தம் பெற திருமால் இத்தலத்தில் வழிபட்டதால் அவருக்கு நடனக் காட்சி
நல்கிய தியாகருக்கு அமிர்த தியாகர் என்று திருநாமம்.
கூர்ம ரூபத்தில் திருமால் வழிபடும் காட்சி
சனகாதி முனிவர்கள் வழிபட்ட தலம். சனகாதி முனிவர்களுக்கு நடராசப்பெருமான் உபதேசம் செய்யும் ஐதீகம் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் திருநாள் கொண்டாடப்படுகின்றது.
இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு
வட்டத்தில் சிங்கபெருமாள் கோவில் எனும் ஊரில் அருகில் அமைந்துள்ளது. திருவாரூர் போல இறைவன் கால் பதித்து நடந்த
தலம். சிவபெருமான்
சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப்
போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இத்தலம்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டித்தலங்களுள் 25 வது
தலம் ஆகும். பசி என்பது ஒரு வகை
பிணி(நோய்) என்பது பெரியோர் வாக்கு. பசி வந்தால்
பத்தும் பறந்து போகும் என்ற பழமொழியும் பசிப்பிணியை
கருத்தில் கொண்டே வழக்கில் உள்ளது. நம் வாழ்வில் என்றும் நமக்கு உணவு கிடைத்து பசியில்லாமல் இருக்க வழிபடவேண்டிய தலம் ஆகும்
இத்தலம். எனவே முதலில் பசிப்பிணியை நீக்கும் அன்னதானத்தின்
சிறப்பைப் பற்றி சிறிது காணலாமா
அன்பர்களே.
பண்டைய
காலத்தில் திருக்கோவிலுக்கு தலயாத்திரையாக செல்பவர்களுக்கு ஆலயங்களில்
உணவளிக்கப்பட்டது. இதனை சட்டிசோறு என கல்வெட்டுகள் குறிப்படுகின்றன.
திருமங்கைமன்னன், இளையான்குடி நாயனார், அமர்நீதி நாயனார், அப்பூதியடிகள், மூர்க்க
நாயனார், கலிகம்ப நாயனார், இடங்கழி நாயனார் ஆகியோர் அடியவர்களுக்கு அன்னம் படைத்து
இறைவனருள் பெற்றவர்கள்.
திருவீழிமிழலையில்
ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்டபோது இறை அருளால் பலி பீடத்தில் வைக்கப்பட்ட பொற்காசினை
எடுத்து அப்பர் பெருமானும், திருஞானசம்பந்தரும் அடியவர்களுக்கு அமுது
படைத்தனர். அனைத்து உயிர்களுக்கும்
அமுதளிக்கும் இறைவனுக்கே அமுது படைத்து மங்காப்புகழ் பெற்றவர்கள் காரைக்கால்
அம்மையார், கண்ணப்ப நாயனார், சிறுத்தொண்டர் மற்றும் அரிவாட்ட நாயனார் ஆவர்.
தனது அடியவர்கள் பசியில்
துன்பப்பட்ட போது இறைவன் தானே உணவு வழங்கிய வரலாறும் உண்டு. திருச்சிக்கு அருகே
உள்ள திருப்பைஞ்ஞீலியில் நாவுக்கரசப்பெருமானுக்கு சிவபெருமான் உணவு பெற்று
அளித்தார். சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்குருகாவூரில் சுந்தரருக்கு இறைவன் அமுதும் நீரும்
அளித்ததால் அவரைப் “பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய்” என்று திருப்பதிகத்தில்
போற்றியுள்ளார். இறைவன் இனி இத்தலத்தில் சுந்தரருக்கு
இரந்து விருந்திட்ட வரலாற்றைக் காணலாம்.
திருக்கழுகுன்றத்திலிருந்து இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு
வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும்
அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து
கண்களை மூடுகிறார். அவருடன் வந்த பரிசனங்கள் இன்னும் வந்து சேரவில்லை
என்பதால் அப்படியே பசியுடன் மண்டபத்தில் படுத்துக்கொண்டிருந்தார்.
சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத்
தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க
நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக்
கண்ட சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல
வீடுகளுக்குச் சென்று பிச்சை பெற்று வந்து உணவு கொடுத்ததாக
அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள
குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர்
மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது
திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின்
கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர். அவரது கருணையை வியந்து
ஒரு பதிகம் பாடி ஈசனை போற்றுகின்றார்,
அதில் ஒரு பாடல்
முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல்
முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்ஆலக் கோயில் அம்மானே.
பொருள் : பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே, தேன் சொரிகின்ற கொன்றை மலரைச் சூடுகின்ற, மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீர் சென்று, முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலை கொள்ளாரோ? என்று அகச்சான்றாக பாடியுள்ளார்.
விருந்திட்ட ஈஸ்வரர்
ஸ்ரீதியாகராஜர் கோயில் என்றும் கச்சபேஸ்வரர் கோயில் என்றும்
அழைக்கப்படும் இவ்வாலயம் ஊரின் மத்தியில்
அமைந்துள்ளது. இக்கோயில்
ஆலக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மற்றொரு கோயில், ஊருக்கு
ஒதுக்குப் புறமாக, ஊரையொட்டி உள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கே சுவாமியின் திருநாமம் மருந்தீஸ்வரர். சுந்தரர்
தமது பதிகத்தில் இம்மலைக்கோவிலையும் சேர்த்துப்பாடியுள்ளார். . இங்கே சிவபெருமான்
ஊருக்கு நடுவிலும் மருந்தீஸ்வரர் மலை அடி வாரத்திலும் கோயில்
கொண்டிருப்பதே சிறப்பானது என்றும் தெய்வாம்சம் நிறைந்த பூமி என்றும்
போற்றுகின்றனர் பக்தர்கள்! ஊர்க்கோவிலின்
மூலவர்:
கச்சபேஸ்வரர், விருந்திட்ட ஈஸ்வரர்
அம்பாள்:
அஞ்சனாட்சியம்மை, மை விழி அம்மன், கன்னி உமையாள்.
தல விருட்சம்
: ஆல்
தீர்த்தம்:
கூர்ம தீர்த்தம்.
பாடியவர்:
சுந்தரர்
விழுதுகள்
இல்லாத கல்லால மரம் தலவிருட்சமாக இருப்பதாலும், நீர் நிலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதாலும்
ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படும் இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரர். இருந்தாலும் இவ்வாலயம் தியாகராஜசுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகிறது.
கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு இராஜ
கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம்
என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்த போது இக்குளத்தை உருவாக்கியதாகக்
கருதப்படுகிறது.
இக்குளத்திற்கு அருகில் ஆலயத்திற்கு வெளியே சுந்தரர்
பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் மூஞ்சூறு மேல் விநாயகர்,
மயில் மேல் முருகர், துவார பாலகர்கள், பிச்சைத்தேவர், ரிஷபாரூட மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவர், வீர
பத்திரர், கருடன், அனுமன், அனுமன் சேவை, காளிங்க நர்த்தனர், கல்கி அவதாரம், ஆமை
வடிவில் மகா விஷ்ணு பூசை செய்யும் சிற்பம்
முதலான அழகிய
சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நெடிதுயர்ந்த
வெளி மதிற்சுவர் அவற்றின் மூலைகளில் நந்தியெம்பெருமான். கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக
உள்ளே சென்றவுடன் எதிரே உள் சுற்றின் மதிலின் மேலே ஆமை வடிவில் மகாவிஷ்ணு சிவனை வழிபடும்
சுதை சிற்பம் நம்மை வரவேற்கிறது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில்
கொடிமரம், விஸ்வரூப நந்தி,
பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. நந்தியெம்பெருமான் ஒரு தனி மண்டபத்தில்
எழுந்தருளியுள்ளார். நட்சத்திர சாளரம் வழியாக இறைவனைப் நோக்குகின்றார். சாளரத்தின் இரு
புறமும் விநாயகரும், வள்ளி தேவசேனை சமேத முருகரும் அருள் பாலிக்கின்றனர். பிரதோஷ தினத்தன்று இப்பெரிய நந்தி தேவருக்கு சிறப்பு
அபிஷேகம் நடைபெறுகின்றது. இவருக்கு நந்தியெம்பெருமானின்
மண்டபத்தின் மேலே மதில் சுவற்றில் ஆடல் வல்லானின் அழகிய சுதை சிற்பத்தைத்
தரிசிக்கின்றோம். பிரதோஷ தினத்தன்று கூர்ம தீர்த்தத்தில் நீராடி
கச்சபேஸ்வரரை தரிசனம் செய்ய எல்லா தோஷங்களும் விலகும், செல்வம், கல்வி, இன்பம் கிட்டும் என்று தல
புராணம் கூறுகின்றது.
தெற்கு
வெளிப் பிரகாரத்தில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தில் அமிர்த தியாகராஜர் சபை உள்ளது. இவர் அமிர்தவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவிறகு இத்தலத்தில் இறைவன் தனது
நடனத்தைக் காட்டி அருளியுள்ளார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை
உருவில் மகாவிஷ்ணு சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம், அனுமன் மற்றும் முனிவர் வழிபடும் சிற்பங்கள் உள்ளன. தூண்களின்
பீடத்தில் யானை சிற்பங்கள் அருமையாக அமைந்துள்ளன.
மேலும் இரு திருநீற்றுத்தூண்களும் அமைத்துள்ளனர். இம்மண்டபத்தின் முகப்பில் பஞ்ச மூர்த்திகளின் சுதை சிற்பத்தை
தரிசிக்கலாம்.
மண்டபத்தில்
உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில்
கருணையே வடிவாக அம்பாள்
அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக் கோவிலாகவே உள்ளது. அஞ்சனம் என்றால் மை எனவே மை விழி அம்மன் என்று
தமிழில் அழக்கின்றனர். அம்பாளுக்கு கண் மலர் சார்த்தி வழி பட கண் சம்பந்தப்பட்ட
நோய்கள் தீரும். அம்பாள் சன்னதிக்கு செல்வதற்கு முன் வலப்பக்கம் ஸ்ரீசக்கரம்
வரைந்துள்ளனர். அமாவாசை அன்று ஸ்ரீசக்கரத்திற்கு தேன் அபிஷேகமும் சிறப்பு
பூசைகளும் நடைபெறுகின்றன.
அம்பாள்
மஹா மண்டபக்கூரையை மீன், விருச்சிகம், கச்சபம், கௌலி, நாகம், சுறா மீன் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. ஐயனின் மஹா
மண்டபக்கூரையில் சக்கரம், தாமரை மற்றும் அஷ்டதிக் பாலகர்கள் தங்கள்
வாகனங்களில் அருள் பாலிக்கும் சிற்பம் அருமையாக அலங்கரிக்கின்றது.
அம்பாள்
சந்நிதி முன் உள்ள மண்டபத்திலிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே
சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார்.
வாயில்கள் எல்லாம் தெற்குப்புறமாக அமைந்துள்ளன. ஐயனுக்கு எதிரே நட்சத்திர சாளரம்,
சாளரத்திற்கு அப்புறம் கயிலாய நந்தியெம்பெருமானை தரிசிக்கின்றோம். திருமாலுக்கு அருளிய இவர் ஓர்
சுயம்பு லிங்கமாவார். ஐயனை தரிசிக்கும் போது மனதில் ஒரு அமைதி. கருவறை அகழி போன்ற அமைப்பு
கொண்டது. கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக்
காணலாம். கருவறை சுற்றில் பின்புறம் ஞானகணபதி, சோலீஸ்வரர், களத்தீஸ்வரர்,
மகேஸ்வரி, மார்கசகா ஈஸ்வரர், நாகலிங்கம், நாகராஜர், இராமநாதர், காசி விஸ்வநாதர்,
வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் ஆகியோரை தரிசிக்கின்றோம். வடக்குச் சுற்றில்
சண்டிகேஸ்வரர் சன்னதியும் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது.
கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா,
துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.
அம்மையப்பரை
வணங்கிய பின் அமிர்த தியாகராஜரை வணங்கி வெளிப்பிரகாரத்தை வலம் வரலாம். தெற்கு
நோக்கி அம்மன் சன்னதிக்கு முன்னர் நட்சத்திர மண்டபத்தில் மேலே அம்மன்
சுதை உருவமாக தரிசிக்கலாம். அம்மன்
சன்னதிக்கு எதிரே நான்கு கால் மண்டபம். இப்பிரகாரம் மிகவும் விலாசமாக உள்ளது. பச்சைப் பசேலென புல்வெளி அருமையாக உள்ளது. பல
மாடுகள் கோவிலின் உள்ளே புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். மரங்களில்
குரங்குகள் தாவுவதைக்
கண்ணுறலாம். கன்னி மூலையில் வேதவிநாயகர் சன்னதி அமைந்துள்ளது. கற்றளியாக
கட்டப்பட்டுள்ள இச்சன்னதியின் முன் மண்டபத்தின் தூண்களிலும், கூரையிலும் அற்புதமான
கற்சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. குறிப்பாக கூரையில் அமைந்துள்ள சிறிய சிற்பங்கள்
மிகவும் நுணுக்கமாக அமைந்துள்ளன. ஆமையாக திருமால்
இத்தல இறைவனை வழிபட்ட வரலாற்றையும் மற்றும் பல அற்புத நடனக்கலைஞர்கள்
சிற்பத்தையும், புக்கொளியூர் அவிநாசியில்
முதலை உண்ட பாலனை இறையருளால் வரச்செய்தது முதலான
சுந்தரர் வரலாறு ஒரு சிற்பத்தொடராக
வடிக்கப்பட்டுள்ளதையும் கண்டு
களிக்கலாம்.
மூலவர்
கச்சபேஸ்வரரின் விமானம் தொண்டை நாட்டுக்குரிய கஜ பிருஷ்ட அமைப்பிலும், தியாகேசர்
விமானம் பிரமிட் அமைப்பிலும் உள்ளது. வடக்கில் கிழக்கு நோக்கிய சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் திருப்புகழ்
வைப்புத்தலம். இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு
திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
அடுத்து விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது.
விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும்
அமைந்துள்ளது. இச்சன்னதிகள் 2009ம் ஆண்டு குடமுழுக்கின் போது புதிதாகக் கட்டப்பட்டதாம். வடக்கு வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய காலபைரவர் சந்நிதியும் இருக்கிறது. இத்தலத்திலுள்ள இப்பைரவர்
மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.
இச்சுற்றில்
நடராஜர் சபை விமானம் மற்றும் அம்பாள் விமானத்தையும் தரிசிக்கலாம். வடகிழக்கு
மூலையில் யாகசாலை அமைந்துள்ளது. கிழக்கு பக்கம் திரும்பினால் நால்வர் சுதை
சிற்பத்தை தரிசிக்கலாம். இத்தல விருட்சமான ஆலமரம் மக
நட்சத்திரத்திற்குரிய மரமாகும், ஆகவே மக நட்சத்திரம்
மற்றும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்தந்த நட்சத்திர நாளன்று இத்தல இறைவனை
வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். கடக இராசியில் பிறந்தவர்கள் வியாழன்று
தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.
ஏயர்கோன்
கலிக்காம நாயனாரும் ஆலக்கோயிலை தரிசித்து
இறைவனின் கருணையை
இரந்துதாங் கொண்டு வந்து
இன்னடிசிலுங் கறியும்
அரந்தை பசி தீர அருந்துவீர் என
அளிப்பப்
பெருந் தகையார் மறையவர் தம் பேர்ருளின் திறம் பேணி
நிரந்த பெரும் காதலினால்
நேர் தொழுது வணங்கினார் என்று பாடியுள்ளார். அது போலவே தனது
அன்பனுக்கு பிச்சையெடுத்து விருந்தளித்த சிவபெருமானின் அளப்பரும் கருணையை அருட்பிரகாச வள்ளலார்
சுவாமிகள்
பசியென்னும்
நெருப்பை அணைப்பதே
மோட்சத்தின்
திறவுகோல்
இன்றொண்டர்
பசியற திருக்கச்சூரின்
மனைதொறும்
இரக்க நடை கொள்ளும் பதம் – என்று வியந்து
பாடியுள்ளார்.
நந்தி தேவர்
இத்தலத்தில் தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றது. மாசி மாதத்தில்
சுந்தரருக்கு விருந்திட்ட விழா சிறப்பாக நடைபெறுகின்றது. பக்தர்கள்
பங்கேற்றுக்கொள்ள வசதியாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
அன்றைய தினம் வெள்ளை யானையில் சுந்தரர் ஆலக்கோவிலில் இருந்து மலைக்கோவிலுக்கு
எழுந்தருகின்றார். சமய சொற்பொழிவுகள், திருமுறை பாராயணம் நிகழ்கின்றன. பின்னர்
பல்லக்கில் சுந்தரர் ஆலக்கோவிலுக்கு திரும்பி வருகின்றார்.
ஆடி சுவாதியன்று
சுந்தரர் குரு பூசை விழா சிறப்பாக நடைபெறுகின்றது. காலையில் விருந்திட்ட
ஈஸ்வரருக்கும், எம்பெருமான் தோழருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பின்னர் வெள்ளை
யானையில் சுந்தரர் எழுந்தருளி திருக்கயிலாயக் காட்சி கண்டருளுகின்றார். இறைவன்
சுந்தரருக்கு அன்னமிட்டதால் அன்று அன்பர்களுக்கு அன்னம் பாலிப்பு சிறப்பாக
நடைபெறுகின்றது.
ஒரு
பிரதோஷத்தன்று இத்தலத்தில் வழிபடும் பாக்கியம் கிட்டியது. முதலில் சன்னதி சுவருக்கு அப்பால் அமைந்துள்ள மஹாநந்திக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. அடுத்து
மூலவர் கச்சபேஸ்வரருக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் மற்றும் பூசை. பின்னர் பிரதோஷ
நாயகர் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலை வலம்
வந்தருளுகிறார். அன்பர்கள் தேவார திருவாசகங்கள் பாராயணம் செய்து உடன் வருகின்றனர்,
நாதஸ்வரம், தவிலின் இன்னிசையுடன் மூன்று முறை வலம் வருகின்றார் எம்பெருமான்,
நிறைவாக அலங்கார தீபாராதனை.
பெருவிழா
சித்திரை மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி நடைபெறுகின்றது. காலை, மாலை சந்திரசேகரர்
புறப்பாடு, இரவில் தியாசேசர் புறப்பாடு சிறப்பாக நடைபெறுகின்றது. தியாகேசர்
பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன், பாரதி, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோருக்கு
தினமும் நடனக் காட்சி தந்தருளுவதாக ஐதீகம். எனவே இதை நடன வினோத பவனி
என்றழைக்கின்றனர். தியாகரும் ஆடும் தியாகேசர் என்று போற்றப்படுகின்றார். முதல் நாள் கொடியேற்றம், மூன்றாம் நாள் காலை
அதிகாரநந்தி சேவை மற்றும் ஐந்தாம் நாள் இரவு ரிஷப வாகன சேவை நடைபெறுகின்றது. ஏழாம்
திருநாள் தேரோட்டம். சித்ரா பௌர்ணமியன்று காலை நடராஜர் உற்சவமும், பகலில்
தீர்த்தவாரியும், இரவு தியாகேசர் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகின்றது.
பதினொன்றாம் திருநாள் இரவு திருவீதி உலா கண்டருளி அதிகாலை நான்கு மணியளவில்
அஞ்சனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி
தியாகேசப்பெருமான் அம்மன் ஊடலைத் தவிர்க்க, பந்தம் பறி உற்சவமாக பதினெட்டு
திருநடனக் காட்சி தந்தருளுகின்றார்.
இவ்வாலயத்தில்.
முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தர
பாண்டியன், வீர பாண்டியன், சம்புவரையர்கள், விருப்பண்ண உடையார், நரசிங்கராயர் ஆகிய
மன்னர்களின் 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் இக்கோவிலுக்கு
அளிக்கப்பட்ட கொடைகள், அமைக்கப்பட்ட நந்தவனங்கள், திருமேனிகள் ஆகியவற்றை
வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் சோழ மண்டலத்து களத்தூர்
கோட்டத்து செங்குன்ற நாட்டு நித்த வினோத நல்லூர்
எனும் திருக்கச்சூர் என்றும் இறைவன் திருஆலக்கோயில் உடைய நாயனார்
என்றும் குறிப்படப்படுகிறார்.
No comments:
Post a Comment