Tuesday, October 20, 2020

கோலாகல நவராத்திரி - 5

 


நவராத்திரியின் நான்காம் நாள் அன்னையை ஐந்து வயது குழந்தையாக பாவித்து ரோகிணி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் கல்வி வளர்ச்சி உண்டாகும்

இன்றைய ஸ்லோகம்

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம ஸஞ்சிதாநிவ யாதேவி ஸர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம் ||  

(எல்லா ஜீவரசிகளின் பாவங்களையும் எந்தச் சக்தியினால் நிவர்த்தி செய்கிறாளோ அந்த சக்தியாகிய ரோகிணியை வணங்குகிறேன்.)

                                               


                                                  

கூஷ்மாண்டா துர்கா

நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை நவதுர்கைகளில் , சூரிய மண்டலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு இந்த புவனம் முழுவதற்கும் வெப்பத்தை வழங்கிக் கொண்டிருக்கும் கூஷ்மாண்டா துர்காவாக வழிபடுகின்றோம். இந்த பிரம்மாண்டம் முழுவதையும் சிருஷ்டிப்பவள் இவளால்தான். கமண்டலம், வில், அம்பு, தாமரை, அமிர்தகலசம், சக்கரம், கதை, ஆகியவைகளை ஏழு கரங்களில் ஏந்தியபடி எட்டாவது கரத்தில் எட்டு சித்திகள், ஒன்பது நிதிகள் அடங்கிய ஜப மாலையோடு, சிம்மத்தை வாகனமாகக் கொண்டு திவ்யமாகக் காட்சி கொடுக்கிறாள் அன்னை. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து அருள் புரிகிறாள். எல்லாவற்றிக்கும் ஆதியாக ஊதா வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா. அன்னை தன் சக்தி முழுவதையும் சூரியனுக்கு அளித்து சிருஷ்டியை துவக்குகிறாள் அன்னை.

ஸுராஸம்பூர்ண கலசம் ருதிராப்லுத மேவசம் |

ததாநா ஹஸ்த பத்மாப்யாம் கூக்ஷ்மாண்டா சுபதாஸ்துமே ||

என்பது கூஷ்மாண்டா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

 ( தனது இரு தாமரைக் கரங்களில் இரத்தம் நிரம்பிய இரு பூரண கலசங்களை ஏந்தி, சிருஷ்டியை ஸ்த்தி சம்ஹாரத்தை தனது கண் இமைப்பில் நடத்தும் கூஷ்மாண்டா தேவி அடியேனுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும். )



நான்காம் நாள்

சதுர்த்தியன்று  -  லட்சுமி

மலர்: ஜாதி மல்லி

நைவேத்தியம் : கதம்ப சாதம்

நிறம்: ஆரஞ்சு

கோலம் : மஞ்சள் அட்சதையினால் படிக்கட்டு அமைப்புக் கோலம்

ராகம் : பைரவி ராகம்

 

ஸ்லோகம் :

ஓம்  பத்மவாஸின்யை ச  வித்மஹே  பத்ம லோசனி ச தீமஹி |

தன்னோ லட்சுமி ப்ரசோதயாத் ||


No comments: