Friday, October 23, 2020

கோலாகல நவராத்திரி - 8


                                                

அன்ன வாகனத்தில் கற்பகாம்பாள் 

சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, "ஆற்றங்கரைச் சொற்கிழத்தி" என்று குறிப்பிடுகிறது.

சரஸ்வதி பூஜை :
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.



சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.

               


                

நவராத்திரியின் ஏழாம் நாள் அன்னையை எட்டு வயது குழந்தையாக பாவித்து சாம்பவி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் க்ஷேம விருத்தி ஏற்படும் . இன்றைய ஸ்லோகம் 

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை பரிகீர்த்திதா யஸ்யாஸ்தாம் ஸுகதாந் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம் || 


(மிகுந்த ஒளிமயமான பரமாத்மாவின் இச்சைப்படி எந்த சக்தி திரு உருவங்களைத் தரிக்கின்றதோ அந்த சாம்பவியாகிய சக்தியை வணங்குகிறேன்.) 

                                  

காலராத்ரி துர்க்கா 

அசுரர்களை வதம் செய்து பிரபஞ்சத்தைக் காப்பதற்கு காலராத்ரி தேவி அவதாரம் எடுத்தாள். பரட்டை முடி, கருத்தமேனி, மூன்று கண்கள், கழுதையின் மீது அமர்ந்தவாறு நெருப்பைக் கவசமாகக் கொண்டு கோபமான கோலத்தில் ,காலராத்ரி தேவி காட்சி கொடுக்கிறாள். காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள்

 

இரவு நேரத்தில் இறந்த உடலான சவத்தின் மேல் அமர்ந்து, மின்னல் போன்ற ஒளி வீசும் ஆபரணத்தை அணிந்துகொண்டு, நெருப்பைக் கக்கும் வாயுடன் பவனி வருவாள் என்றும் கூறுவர்சுபாங்கி என்ற மற்றொரு பெயரைக் கொண்ட காலதாத்ரி தேவி தீமைகளை அழித்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்லாசிகள் தந்து அருள் புரிகிறாள்

 

பொன்னிறமான கௌரி (பார்வதி) அசுரர்களை அழிக்க பொன்னிறத்தை மாற்றி கருப்பு வர்ணத்தவளாக காட்சி தருகின்றாள். சும்ப நிசும்பர்களை அழிக்க அன்னை காளியாக தோன்றினாள்.

வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா |

வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ ||

(கழுதை வாகனத்தில் பெரிய உதடுகளுடன், பளபளக்கும் ஆபரணங்கள் அணிந்து பிரகாசமாக பவனி வரும் பயங்கரீ துர்கா என்னுடைய அறியாமையை போக்கட்டும்.)



ஏழாம் நாள்

சப்தமியன்று  -  சரஸ்வதி

மலர்: தாழம்பு

நைவேத்தியம் : எலுமிச்சை சாதம்

நிறம்: நீலம்

கோலம் :  நறுமண மலர்களால்  கோலம்.

ராகம் : பிலஹரி  ராகம்

 ஸ்லோகம் :

ஓம்  வாக்தேவ்யை ச  வித்மஹே  விரிஞ்சி பத்தின்யை ச  தீமஹி |

தன்னோ சரஸ்வதி ப்ரசோதயாத் ||

 

                                                                                                                                           அம்மன் அருள் பெருகும்  . . .

No comments: